முழுமையான யோகம்

அன்புள்ள ஜெ,

20 வருடங்கள் முன்பு வேதாத்ரி மகரிஷி அவர்களின் காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்டு சில நாட்கள்/வாரங்கள் அவற்றை செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.  நான் முறையாக உடல் சம்பந்தபட்ட ஒரு பயிற்சி வகுப்புக்கு சென்றது அதுவே முதலும் கடைசியுமாகும்.

இயல்பிலே உடற்சிக்கலுக்கு அதிகமாக ஆட்படாமல்,  ஒரளவு உணவு கட்டுப்பாடு, அவ்வப்போது விளையாட்டுகள், உடற்பயிற்சி கூடம் செல்லுதல் மற்றும் இளமை காலம் வழியாக இவ்வளவு காலம் தப்பித்து வந்தேன்.  இயற்கை மருத்துவமுறை பின்பற்ற ஆரம்பித்தபோது, அதற்கு உடற்பயிற்சி தேவையில்லை என முட்டாள் தனமாக புரிந்து கொண்டு, நடைபயிற்சி செய்வதையும் நிறுத்தி விட்டேன்.  6 வருடங்களுக்கு முன்னால் 20 வருட தகவல் தொழில்நுட்பத்துறையில் உட்கார்ந்து பணியாற்றியதின் பரிசாக முதுகு வலி வந்து சேர்ந்தது. கடுமையான அளவுக்கு இல்லாததால் சில உடற்பயிற்சிகளை செய்து சமாளித்து மேலும் சில வருடங்கள் தள்ளி வந்தேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் 25 வருட வேலைக்கு விடை கொடுத்தவுடன், உடலுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து மலையேற்றம், உடற்பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியும் முதுகு பிரச்சினை தீரவில்லை, இந்த நேரத்தில் உங்களுடனான டெக்கான் ட்ராப் பயணத்தில் இது பற்றி பேசும் பொழுது எப்படி அமர வேண்டும், சத்யானந்த யோக மையம் நடத்தும் செளந்தர் (குருஜி) அவர்கள் மூலம் உங்கள் முதுகு வலி பிரச்சினை தீர்ந்ததையும், என்னையும் அவரிடம் செல்ல பரிந்துரைத்ததிலிருந்து    எப்படியாவது அவரை சந்தித்து ஆலோசனை கேட்க வேண்டும் என்று முயன்றும் ஒரு வருடமாக தள்ளி போனது. மனைவிக்கும் பெண்களுக்கான உடல் சிக்கலினால் சிரமங்களில் இருந்தார்.

தங்களுடைய முகாம் பற்றிய அறிவுப்பு வந்ததுமே, உடனே மனைவிக்கும் சேர்த்து முன்பதிவு செய்தேன். அப்படியும் சோதனையாக மழையினால் சில மாதங்கள் தள்ளி போயிற்று.  கடைசியாக சென்ற வாரம் மூன்று நாட்கள் 25 சக நண்பர்களுடன் முகாமில் பங்கேற்று திரும்பிய பிறகு் மிகச் சிறப்பாக உண்ர்கிறேன்.

வாட்ஸப் குழுவில் சேர்ந்தபிறகு பார்த்தால் பெரும்பாலனவர்கள் எனக்கு புதியவர்கள், விஷ்ணுபுரம் நண்பர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்(!!) என்பதால் ஒரு வேளை எல்லோரும் நம்மைப்போல மத்தியவயது தாண்டியவர்கள் போலும் என்று நினைத்து புன்னகைத்து கொண்டேன்.  வியாழன் இரவே சென்று சேர்ந்தோம், குருஜியும் அன்றே வந்தார்,

குருஜி மூன்று நாளும் தன்னை முன்னிறுத்தாமல் அவருடைய குரு பரம்பரை மற்றும் மரபார்ந்த யோகாவை மட்டுமே பேசினார்.  நண்பர்களுடைய வற்புறுத்தலின் பேரில் மட்டுமே தன்னை பற்றி சில நிமிடங்கள் பகிர்ந்து கொண்டார். இயல்பாக எல்லோருடனும் பழகி அவர்களுடைய கேள்விகளுக்கு பொறுமையாகவும் நகைச்சுவையுடனும் பதிலளித்தார்.

அறிமுக வகுப்பில் மரபு சார்ந்த யோகாவிற்கும் மற்ற யோக பயிற்சிகளூக்கும் உள்ள வித்தியாசத்தை விரிவாக அறிமுகம் செய்தார். ஏன் நாமாக இணையத்தில் தேடி செய்யும் மற்ற யோக பயிற்சிகள் பலனிலப்பதில்லை அல்லது சிக்கலை அதிகப்படுத்துகின்றன, பயிற்சியாளருக்கு ஏற்படும் குழப்பங்களையும் சிக்கலையும் கேட்டு தெளிவு பெற ஆசிரியர் ஒருவர் இல்லாததால் ஏற்படும் சிரமங்களையும் பகிர்ந்து கொண்டார்.  சில உடல், மன சிக்கல்களுக்கு மட்டும் யோகாவை பயன்படுத்துவதைவிட ஒரு முழுமையான பயிற்சி எவ்வாறு  உடல், மனம், ஆற்றல் ஆகியவற்றை சீராக வைத்து இனி வேறு சிக்கல்கள் வராமல் தடுப்பதில் பங்காற்றுகிறது என்பதை விளக்கினார்.

ஆயுர்வேத மருத்துவமுறையும் (வாதம், பித்தம், கபம்) யோக மரபும் (உடல், மனம், ஆற்றல்) எப்படி ஒன்றை ஒன்று விவாதித்து நிரப்பிக்கொண்டன என்பதையும் பல தரவுகளுடன் விவரித்தார். ஆயுர்வேதம் வயிற்றையும், யோகம் முதுகெலும்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது கூடுதல் தகவல்.  யோகத்திற்கும் சாங்கிய தரிசனத்திற்கும் உள்ள உறவு, பதஞ்சலி, திருமூலர், யாக்ஞவல்கியர் ஆகியோரின் பங்கு, வேதகாலதிருந்து சுமார் 6000 வருடமாக அறுபடாமல் இன்று வரை தொடரும் மரபு என்று வரலாறு, மரபு சார்ந்த பற்றி ஒரு ஒரு விரிவான வரைபடத்தை அளித்தார்.  உங்களுடைய  தத்துவ வகுப்பில் கலந்து கொண்டதனால் மேலும் தொடர்பு படுத்தி புரிந்து கொள்ள முடிந்தது. ராஜ, கர்ம, ஞான, பக்தி யோகங்களை ஒரு வகுப்பில் விரிவாக விளக்கி இந்த பயிற்சி வகுப்பு ராஜ யோகம், அதற்கு கீழே ஹட யோக கிளையில் சிறு பகுதிதான் என்றார்.

ஆசனப்பயிற்சி மட்டும் செய்ய வந்திருப்பதாக நினைத்து வந்தவர்களுக்கு இந்த வரைபடம்  ஒரு ஆச்சர்யமாக இருந்திருக்கும்.

9 ஆசனப் பயிற்சிகளையும்,  3 மூச்சுப் பயிற்சிகளையும், 2 தியானப்பயிற்சி  முறைகளையும் 3 நாட்களில் அறிமுகம் செய்து, முந்தைய வகுப்பில் செய்த பயிற்சிகளை மறுபடியும் சுருக்கமாக கூறி கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார். மூச்சு மற்றும் தியான பயிற்சிகள் விபாசனா போன்ற தியான வகுப்பு செல்வதற்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கும் என்றார்.

இறுதியாக, நண்பர்கள் எல்லோரையும் தினமும் பயிற்சி செய்ய வலியுறுத்தி, தினமும் குறைந்தது 30 நிமிடம்,  90 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை தொடர்ந்து செய்தால் ஒருவருடைய உடல், மனம், ஆற்றல் சீராக இருந்து முழுமையான/நிறைவான வாழ்க்கை வாழலாம், அடுத்த நிலை செல்வதற்கான் பாதை தானாகவே  திறக்கும் மற்றும் தொடர்ந்து வருகிற வருடங்களில் அடுத்த நிலைக்கான பயிற்சி்யில் சந்திக்கலாம் என்று முடித்தார்.

நம்முடைய வழமை போலவே, வகுப்பில் கற்றது மட்டுமல்லாமல் பயிற்சி இடைவேளை, உணவு கூடத்தில் என்று பார்த்த இடத்தில் எல்லாம் கேட்ட நண்பர்களின் கேள்விகளுக்கு குருஜியின் பதில், விவாதங்கள் வழியாக கற்றது மேலும் பல.

வீடு திருப்பியபிறகு குருஜியின் இணையதளத்தின் மூலமும், அவருடைய குரு மரபு பற்றி மேலும் தெரிந்து கொண்டபிறகு நான் காத்திருந்தது எல்லாம் இந்த சரியான முறையை கற்பதற்க்காகவும் இந்த பந்தம் இந்த முகாமுடன் முடியாமல் என்னுடைய ஆன்மீக பயணத்திற்கு உதவியாக தொடரும் என்று உள்ளுனர்வு சொல்கிறது.

மூன்று நாட்கள் இதமான மலைவாசஸ்தலத்தில் மரபு சார்ந்த யோகப்பயிற்சி பெற்றது என் பேறு, மற்ற நண்பர்களுக்கும் அவ்வாறே என நினைக்கிறேன். என்னை போல நம்முடய நண்பர்களும் இது போன்ற முகாமில் அடிக்கடி கலந்து கொண்டு பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

உங்களுக்கும், குருஜிக்கும் மனமார்ந்த வணக்கம்,  சிறப்பாக நிர்வகித்த அந்தியூர் மணிக்கு நன்றி.

அன்புடன்,

திரு

திருவண்ணாமலை

https://www.jeyamohan.in/173872/

https://www.jeyamohan.in/156241/

அன்புள்ள திரு,

நம் நண்பர்கள், குறிப்பாக இளைஞர்கள், அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது உண்மை. ஏனென்றால் நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதாவது நோய் வந்தால் மட்டுமே ஒரு சிகிழ்ச்சையாக யோகப்பயிற்சிகளைச் செய்யவேண்டும் என நினைக்கிறோம். அது ஒரு மருத்துவமுறை அல்ல, ஒரு வாழ்க்கைமுறை. அந்த வாழ்க்கைமுறையை அதற்குரிய தத்துவப்பின்னணியுடன், அறிவார்ந்த வாழ்க்கை விளக்கங்களுடன் அறிமுகம் செய்ய இன்றுள்ள மிகச்சிலரில் ஒருவர் குருஜி சௌந்தர்.

யோகாசன பயிற்சிகளை ஓரளவு தெரிந்த எவரும் அளிக்கமுடியும். புத்தகம் வாங்கிக்கூட செய்ய முடியும். ஆனால் அதன் தத்துவம் அறிந்து, அதைச்சொல்லித்தரும் ஓர் ஆளுமை- ஒரு குரு – இல்லாமல் கற்பது பெரும்பாலும் நேரவிரயம். அந்த ஆசிரியர் கற்பவரின் வாழ்க்கைப்பிரச்சினை, உளச்சிக்கல்கள் உட்பட எல்லாவற்றுக்கும் ஒரு வழிகாட்டும் தகுதிகொண்டிருக்கவேண்டும்.

ஆகவேதான் சௌந்தர் மேலும் அதிகமான பேருக்கு முறையாகச் சென்று சேரவேண்டுமென விரும்புகிறேன். அதேசமயம் இன்று நிகழும் யோக வகுப்புகள் போல ‘நேரம்கிடைத்தால்’ கொஞ்சம் கற்பது, வேறுவேலை செய்தபடியே ஸூம் செயலியில் கவனிப்பது போன்றவற்றைச் செய்யக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.

முறையாக, அதற்குரிய சூழலுடன், முழுமையான கவனக்குவிப்புடன் அதை அறிமுகம் செய்யவேண்டும். அதைக் கற்பவர்கள் அதற்காக தங்கள் நேரம். பணம் ஆகியவற்றில் சிறிது ஒதுக்குபவர்களாகவும், அதன்பொருட்டு சற்று முயற்சி எடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்களுக்குக் கற்பிப்பதே பயனுள்ளது.

இந்த யோகப்பயிற்சி முகாம்களை மேலும் முன்னெடுக்கவேண்டுமென்னும் எண்ணம் உண்டு. கால்ப்போக்கில்தான் இந்த முயற்சியின் முக்கியத்துவம், இது எத்தனை அரியது என்பது, நம்மவருக்கு புரியும்.

ஜெ

முந்தைய கட்டுரைவடதிருமுல்லைவாயில் புராணம்
அடுத்த கட்டுரைஅரூ சிறுகதைப் போட்டி