படையல் சிறுகதை முன்னரே படித்த ஒன்றுதான் ஆனால் இன்று வெற்றிராஜா வின் படையல் எனும் புதையல் கட்டுரையை படித்து மீண்டும் ஒருமுறை படித்தேன். வாழ்வின் / படைப்பின் பல ரகசியங்களைக் கூறுகிறதோ என்றும் மீண்டும் மீண்டும் படித்து புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும் என்றும் எண்ணம் வந்தது.
முக்கியமாக வெற்றிராஜா கூறும் ” நம் எண்ணங்களை சீராக்கி வாழ்வையே மாற்றவல்ல படைப்புகளை பொழிந்து கொண்டேயிருக்கும் மகத்தான கலைஞன் ஜெயமோகனுக்கு இன்றைய சமூகமும் நாளைய சமூகமும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஜெயமோகனை கொண்டாடுதல் என்பது நமது முன்னோர்கள் தவறவிட்ட பாரதியை, புதுமைபித்தனை கொண்டாடுவதும் கூட. ஆகவே படையலையும் படைத்தவனையும் கொண்டாடுவோம்.”
நாங்கள் மனப்பூர்வமாக உங்களை கொண்டாடுகிறோம் உங்கள் மேல் மதிப்பும் அன்பும் கொண்டு இருக்கிறோம் . ஆனால் இது போதுமானதா என்று புரியவில்லை . கம்பன் , வள்ளுவர் போன்ற பழந் தமிழ் படைப்பாளிகளுக்கு கிடைத்த பெயரும் புகழும் சென்ற நூற்றாண்டுப் படைப்பாளிகளுக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் நமக்கு உண்டு. தமிழ் சமூகமும் வாசகர்களும் அரசும் மீண்டும் அதை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வாசகர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் உங்களுக்கு மன நிறைவைத் தருகிறதா ?
அன்புடன்
நாரா சிதம்பரம்
புதுக்கோட்டை
அன்புள்ள சிதம்பரம்,
வெவ்வேறு தருணங்களில் இத்தகைய உணர்ச்சிகரமான கடிதங்கள் எனக்கு வருவதுண்டு. அவை என்னை சற்று தயங்கச் செய்த காலம் இருந்தது. இன்று அத்தயக்கம் இல்லை. இந்த நெகிழ்வு எனக்கானது அல்ல, என் கலைக்கானது என்று இப்போது உணர்கிறேன்.
ஓர் எழுத்தாளனை வாசிக்கையில், அவன் படைப்பு நம் ஆத்மாவை தொடும்போது, உருவாகும் அணுக்கம் வேறெவரிடமும் உருவாவதில்லை. இதை உண்மையான இலக்கிய அனுபவம் உடைய ஒருவர் உடனே புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு ஒன்று வாழ்வில் நிகழாதவர்கள் எத்தனை விளக்கினாலும் கொள்ள முடியாது.
அவ்வாறு புரிந்துகொள்ளாதவர்கள் தங்கள் எல்லைக்குள் நின்றுவிடுபவர்கள் என்றால் பிரச்சினையில்லை. அவர்கள் இலக்கியம் பற்றி பேசுவார்கள் என்றால் இந்த அந்தரங்கமான உறவை உணரமுடியாமல் அதை தாக்கிக்கொண்டே இருப்பார்கள். ஏளனம் என தொடங்கி எரிச்சல், வசை என முடியும் அது. பெரும்பாலும் இலக்கியத்தில் இருந்து தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த, தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் அரசியல் தரப்புகளையோ கொள்கைகளையோ மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள் இவர்களில் முதல்வகை. வெவ்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து கற்றவற்றை இலக்கியம் மீது போட்டு ஆய்வுசெய்ய மட்டுமே அறிந்த கல்வித்துறையாளர்கள் இரண்டாம் வகை. அவர்கள் அனுதாபத்திற்குரிய எளிய உள்ளங்கள் மட்டுமே.
கற்றல் வழியாக உருவாகும் உறவே இவ்வுலகில் இதுவரை மானுடர் ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொள்ளும் உறவுகளில் மகத்தானது. பெற்றோர், துணைவி, குடும்பம் என உருவாகும் எல்லா உறவும் இரண்டாம்நிலையில் உள்ளதே. இன்று சாக்ரடீஸ் பிளேட்டோ அரிஸ்டாடில் என்றே நாம் அறிகிறோம். அவர்களின் பெற்றோரை அல்ல.
இது ஏன் இவ்வாறு இருந்துகொண்டிருக்கிறது? மனிதனுக்குள் அறிதலுக்கான பெரும்விழைவு உள்ளே பொறிக்கப்பட்டுள்ளது. அறிதலின்போது மட்டுமே அவன் அடையும் நிகரற்ற இன்பம் ஒன்று உண்டு. அறிவின்பமே மனிதனை விலங்குகளில் இருந்து பிரித்தது. மானுடக்கலாச்சாரமே அவ்வாறு உருவானதுதான். அந்த அடிப்படை இல்லையேல் மானுடமே இல்லை. இங்கே மானுடம் இவ்வண்ணம் திகழ்வதற்கான ஆணை அறிவின்பம் எனும் வடிவில் மானுடனுக்குள் என்றோ எவ்விதமோ வந்து சேர்ந்தது
அந்த அறிவின்பத்தால்தான் ஆசிரியனும் மாணவனும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்புவியில் இருக்கும் முதன்மையான விசை ஒன்றால் அவர்களின் உறவு நிகழ்கிறது. பிறப்புத்தொடர்ச்சியை உருவாக்கும் பொருட்டு மானுடனுள் பொறிக்கப்பட்டுள்ள காமமும், குழந்தைப்பற்றும், தன்னலமும் எல்லாமே அதற்கு அடுத்த நிலையில் இருப்பவைதான்.
ஆசிரியனுக்கு அடுத்த உயர்படியில் இருப்பது தெய்வம் மட்டுமே. தெய்வம் எனும்போது பிரபஞ்சசாரமான ஒன்று எனக் கொள்ளலாம். இங்கனைத்திலும் நாம் உணரும் ஒன்று. ஒரு மலருடன், காலையொளியுடன், விரிவானுடன், நதியுடன் நம்மை இணைக்கும் பேருணர்வாக அது நம்மில் நிகழ்கிறது. நம்மை கடந்து நாம் அறியும் ஒன்று.
எழுத்தாளனை ஆசிரியன் என்றே நம் மரபு சொல்லிவருகிறது. இலக்கியம் எப்படி எந்நிலையில் நிகழ்ந்தாலும் கற்பித்தல் என்னும் அடிப்படையை விட்டு அது விலகவே முடியாது. ஆனால் இலக்கியம் கற்பிக்கும் விதம் வேறு. அவ்வகையிலேயே பிற ஞானங்களில் இருந்து அது வேறுபடுகிறது. பிற ஞானங்களை அளிக்கும் ஆசிரியர்கள் போதனை வழியாக கற்பிக்கிறார்கள். அவர்கள் கடந்து சென்றவற்றை நமக்கு அளிக்கிறார்கள். அவர்கள் கற்பிப்பனவற்றில் இருந்து வெளியே அவர்கள் இருக்கிறார்கள்.
இலக்கியம் போதிப்பதில்லை, அது ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் காட்டி அதை வாசகன் வாழச்செய்கிறது. வாசகன் கற்பன அனைத்தும் அவனே வாழ்ந்து அறிவன. ஆகவே அவை அவனுடைய ஞானங்களே. புனைவிலக்கியத்தை எழுதுபவனை அவ்வெழுத்தினுள் நாம் கண்டடைகிறோம். அவனுடன் வாழ்கிறோம். ஆகவே அவனும் நம்முடன் ஓர் உரையாடலில் இருப்பதாக எண்ணுகிறோம். கற்பிக்கும் ஆசிரியனிடம் உருவாகும் மதிப்பு மிக்க விலகல் பலசமயம் இலக்கிய ஆசிரியனிடம் உருவாவதில்லை. அணுக்கமும் நெகிழ்வுமான உறவே உருவாகிறது. நம் துயரங்களைப் பகிர்ந்துகொண்ட, நம் இன்பங்களில் உடனிருந்த, நம்முடன் வாழ்ந்த ஒருவருடன் நாம் கொள்ளும் உறவு போன்றது அது.
அந்த உறவு வழியாகவே இலக்கியத்தை உண்மையில் உணர்ந்தறிய முடியும். அந்த உறவு கொள்பவர்களுக்காகவே இலக்கியம் எழுதப்படுகிறது. இலக்கியத்தில் இருந்து அரசியலை அடைவது என்றால், இலக்கியத்தை ஓர் செத்த உடலென ஆய்வு செய்வது என்றால் அந்த உறவு இருக்கலாகாது. அந்த உறவு அரசியலாய்வு அல்லது கல்வித்துறை ஆய்வுக்குரிய விலக்கத்தை இல்லாமலாக்கிவிடும்.
ஆகவே அவ்விரு தரப்பினரும் இலக்கியவாதியுடன் வாசகன் உணர்வுநெருக்கம் கொள்ளலாகாது, இலக்கியவாதியுடன் விலக்கம் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் பொதுவாகவே வாசிப்புக்குரிய ஓர் இலக்கணமாக மிக அசட்டுத்தனமாக சொல்லிக்கொண்டிருந்தனர். பத்தாண்டுகள் ஒலித்த அந்தக்குரல் இன்று மதிப்பிழந்துவிட்டது.
அழகியல் விலக்கம் என ஒன்று உண்டு. அது முற்றிலும் வேறானது. வாழ்க்கையை நேரடியாக அப்படியே இலக்கியத்துடன் சம்பந்தப்படுத்துவது இலக்கியப்படைப்பை அறிய தடையாக ஆகும் என்னும் கருத்து அது. உதாரணமாக, உங்களுக்கு ஒரு காதல்தோல்வி உள்ளது. ஆகவே காதல்தோல்வி பற்றிய எந்த கதையும் உங்களை கண்கலங்கச் செய்யலாம். அது இலக்கிய வாசிப்பு அல்ல. இலக்கியவாசிப்புக்கு அழகியல்சார்ந்த ஒரு விலக்கம் தேவை. இலக்கியப்படைப்பை அது இலக்கியப்படைப்பு என்னும் எண்ணத்துடன், அதன் அழகியலை அறியும் அளவுக்கு தனிப்பட்ட விலக்கத்துடன் வாசிக்கும் நிலை அது.
இலக்கியவாதியிடம் வாசகன் கொள்ளும் உணர்ச்சிகரமான உறவு மிகமிக தூய்மையானது என நான் நினைக்கிறேன். அது நான் என் உளம்கவர்ந்த ஆசிரியர்களுடன் கொண்டுள்ள உறவில் இருந்து நான் அடைந்த முடிவு. அதை குறைத்துரைக்கும் அசட்டுக்கூற்றுக்களை எல்லாம் எவ்வகையிலும் நான் பொருட்படுத்துவதில்லை. அந்த உறவு என்னை அந்த ஆசிரியரை மிகமிக அணுகிப் பார்க்கச் செய்கிறது. அந்த ஆசிரியரின் எழுத்துக்களின் ஆழங்களுக்கு மிக எளிதாகச் செல்ல வைக்கிறது.
இதை நீங்களே பார்க்கலாம். எளிய ஆனால் உணர்வுரீதியாக படைப்பாளியுடன் உறவுள்ள ஒரு வாசகர் ஒரு படைப்பைப் பற்றிச் சொல்லும் அசலான, ஆழமான கருத்துக்களை விமர்சகர் என்றும் ஆய்வாளர் என்றும் சொல்லிக்கொள்பவர்களால் கூறமுடிவதில்லை. அவர்களிடமிருந்து நல்ல வாசகன் கற்க ஒரு வரிகூட இருப்பதில்லை. காரணம் அந்த அணுக்கம்தான். ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான அன்புதான் ஞானத்தின் ஊடகம் என்பார்கள். அதுவே இங்கும்.
ஆக, ஓர் ஆசிரியனுக்கு வாசகன் செய்யவேண்டியது என்னவாக இருக்கமுடியும்? அவனை முழுதறிவதுதான். அவனை தொடர்ந்து அணுகுவதுதான். அவன் எழுதிய எல்லாவற்றையும் வாசிப்பதுதான். அவனுடைய வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் தானும் உரியவன் ஆவதுதான். அவன் சரிவுகளையும் இருட்டுகளையும்கூட அறிவதுதான். என் வாசகர்களிடம் நான் எதிர்பார்ப்பது அதையே. உணர்வுரீதியாக உடனிருப்பது.
அதற்கப்பால், நான் தமிழின் சூழல் காரணமாக ஓர் அமைப்பாளனாக, ஒருங்கிணைப்பாளனாக செயல்படவேண்டியிருக்கிறது. தமிழிலக்கியத்தை ஒட்டுமொத்தமாக முன்வைப்பவனாக ஆகியிருக்கிறேன். அதற்கான செயல்களில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறேன். ஒரு வாசகன் வாசிப்பதற்கு அப்பால் எனக்காகச் செய்யக்கூடுவது அச்செயல்களிலும் உடனிருப்பதுதான்.
நான் எழுதவந்தபோது தமிழ்ச்சூழல் ஆயிரம் வாசகர்களுக்குமேல் இல்லாத ஒரு குறுங்குழுவாக இருந்தது. நான் சிற்றிதழ்களிலேயே எழுதிவந்தேன். ஆகவே எனக்கு எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்கவில்லை. அந்நிலையில் இருந்து இன்று வந்திருக்கும் தொலைவைப் பார்த்தால் எனக்கு மிகச்சிறந்த வாசகர்களும், என் காரியங்களுடன் உடன் நிற்கும் அற்புதமான நண்பர்களும் அமைந்துள்ளனர் என்றே நினைக்கிறேன். ஆகவே கௌரவிக்கப்பட்டவனாக, ஏற்கப்பட்டவனாகவே உணர்கிறேன். நிறைவுடனேயே இருக்கிறேன்.
ஜெ