தமிழ்விக்கியின் உலகம்

தி.ஜானகிராமன் தமிழ்விக்கி

வணக்கம். தங்களின் இணையப் பக்கத்தை தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் வாசிப்பவன் நான் என்றாலும் சமீபமாக அதிகம் ஈர்த்துக் கொண்டது தமிழ் விக்கி.

தமிழ் விக்கி முக்கிய பணி. பெரிய பணி. பெரும் உழைப்பை கேட்கும் பணி என சொல்லியுள்ளீர்கள். அது எத்தனை உண்மை என்பதை வாசிக்கும் போது உணர்கிறேன்.

தமிழ் விக்கி துவங்கப்பட்ட போது அதன் மீது ஈர்ப்பு இல்லை. அது துவங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அதனை வாசிக்க வில்லை. இந்த விலக்கத்திற்கு காரணம் பள்ளிகளில் படித்த வாழ்க்கை வரலாறுகளே. ஒருவர் பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு, பெற்றோர் பெயர் என்ற போக்குடன் ஒருவித சலிப்பை அத்தகைய வரலாறுகள் ஏற்படுத்தி விட்டன. அது போலவே தமிழ் விக்கியும் இருக்குமென மனம் முடிவெடுத்து விட்டது போலும்.

சில நாட்கள் வாசிப்பிற்குப்பின் விக்கியை, விக்கிப்பீடியா வுடன் ஒப்பிடுதல் இயல்பாக ஒருபுறம் நடக்க துவங்கி விட்டது. விக்கியில் பதியப்படும் புகைப்படங்கள் அருமை ரகம். ஒரு ஆளுமையின் அதிகம் புழக்கத்தில் இல்லாத படங்களைப் பார்ப்பது புது சுவை. அச்சுவையை ஒவ்வொரு பதிவிலும் விக்கித் தருகிறது.

தி. ஜா பனியன் துண்டோடு உள்ள படம். சுஜாதா பற்றிய பதிவில் நிறைய படங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பதிவில் அண்ணா அமர்ந்திருக்க மேலே மாலையுடன் இருந்த அண்ணாவின் படம் வழைமையான பழக்கத்திற்கு ஒரு மின் அதிர்ச்சி.

விக்கியில் என்னை அதிகம் கவர்ந்தது உசாத் துணை பகுதி. அந்த நீல வண்ண இணைப்புகளைக் கண்டாலே ஒரு குஷி. முக்கியமான விமர்சனங்களை, பார்வைகளை, பேட்டிகளை, இணையதளங்களை இப்பகுதித் தருகிறது.

தமிழ் விக்கி வாசிக்கத் துவங்கியப் பின்பு விரைவாக அதிகமான தகவல்களை அறிந்து கொண்டதாக உணர்கிறேன். முன்பே தெரிந்து கொண்டதிலும் புதிய தகவல்களை அறிய முடிகிறது. உதாரணம் காண்டேகரை முன் மாதிரியாகக் கொண்டு அகிலன் எழுதினார், போன்றவை. (அகிலன் தமிழ் விக்கி)

மற்றொன்று, ஒரு பதிவிற்கு முன்னதாக தாங்கள் தரும் துவக்கப் பத்தி. இது அந்த பதிவிற்குள் ஈர்க்கும் விதமாக உள்ளது. காட்டாக, பல எழுத்தாளர்களை உருவாக்கிய, இலக்கிய மையமாக விளங்கிய வ. ரா அவர்கள் இன்று பாரதியார் வரலாற்றை எழுதியவர் என்று மட்டுமே அறியப் படுகிறார். இத்தகைய ஈர்ப்பு உத்திகள் மிக அவசியம். புதிய வாசகர்கள் உள்ளே வர, குறிப்பாக இளைஞர்களை வாசிப்பின் பக்கம் கொண்டு வர. (வரா தமிழ் விக்கி)

சுருக்கமாக அழகும் கவர்ச்சியும் அடர்த்தியும் கொண்ட அத்தியாவசியமான இலக்கியப் பணி என தமிழ் விக்கியைக் கூறலாம்.

மாணவர்களுக்கும், உயர்கல்வி நிறவனங்களுக்கும் தமிழ் விக்கி சரியான முறையில் சென்று சேருமாயின் அது பெரிய மாற்றத்தை கொண்டு வரும். மாணாக்கர் சலிப்பில்லாமல் விளையாட்டாக நிறைய கற்றுக் கொள்ள தமிழ் விக்கி நல்லதொரு வாய்ப்பு.

ஒரு இணைப்பிற்குள் சென்று விட்டால் இணைப்பிலிருந்து இணைப்பிற்கென நம்மை அழைத்துச் செல்ல விக்கியின் உள்ளே நீல வண்ண வார்த்தைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் தேர்ந்த அபுனைவை வாசித்த அனுபவத்தையும் புனைவு ஒன்றை கடந்து வந்த அனுபவத்தையும் தருகிறது தமிழ் விக்கி

கருப்பங்கிளார் ராமசாமி புலவர் எங்கள் ஊர்க்காரர். அவரை கூடுதல் தகவல்களோடு நெருக்கமாக்கி விட்டது விக்கி. தமிழ் விக்கி வாசகர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டிய அட்சயப் பாத்திரம். நன்றி

முத்தரசு, வேதாரண்யம்

***

அன்புள்ள முத்தரசு,

நண்பர்களிடம் நான் கோருவது ஒன்றுண்டு படிக்கவில்லை என்றாலும் தமிழ் விக்கி பதிவுகளுக்கு ஒரு கிளிக் ஆவது அளியுங்கள், நீங்கள் அளிக்கத்தக்க குறைந்தபட்ச பங்களிப்பு அதுதான். ஏனென்றால் எந்த கலைக்களஞ்சியமும் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுவதன் வழியாகவே வாழ்கிறது. ஆனால் அதைக்கூட மூளைச்சோம்பல் கொண்ட பலர் செய்வதில்லை. எச்செயலையும் தகுதியான சிலரை நம்பியே செய்வது என் வழக்கம் என்பதனால் சோர்வுமில்லை.

தமிழ் விக்கி போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தை ஏன் வாசிக்கவேண்டும்? முதல் விஷயம் நாம் பல செய்திகளை அரைகுறையாகவே அறிந்திருப்போம். வேறு நூல்களின் போக்கில் ஒரு குறிப்பாக, உரையாடல்களில் ஒரு வரியாக. அந்தச் செய்திகளை முழுமையாக அறிவதென்பது சரியாக உள்ளிணைப்பு கொடுக்கப்பட்ட ஒரு கலைக்களஞ்சியம் வழியாகவே இயல்வது. தமிழ் விக்கியில் டி.கெ.சிதம்பரநாத முதலியார் என்னும் பதிவை படிக்கும் ஒருவர் அதில் உள்ள இணைப்புகள் வழியாக சென்ற நூற்றாண்டில் திருநெல்வேலியை மையமாக்கி உருவான ஓர் அறிவியக்கத்தையே வாசிக்க முடியும். அ.சீனிவாசராகவன், எஸ்.வையாபுரிப்பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கல்கி, மீ.ப.சோமு , மு.அருணாசலம் என அந்த வலை விரிந்தபடியே செல்லும்.

அதேபோல எத்தனையோ புள்ளிகள் உள்ளன. வட்டுக்கோட்டை குருமடம் ஓர் உதாரணம். சூளை சோமசுந்தர நாயகர் இன்னொரு உதாரணம். பாண்டித்துரைத் தேவர் இன்னொரு உதாரணம். அந்த வாசிப்பு எந்த நூல்வாசிப்பை விடவும் கூர்மையானது. வெறும் தரவுகளாக அவை இந்த கலைக்களஞ்சியத்தில் அளிக்கப்படவில்லை என்பதை வாசகர் காணலாம். துல்லியமான நடையில் இனிய வாசிப்பனுபவமாகவே அமைந்துள்ளன

இன்னொருவகையிலும் வாசிக்கலாம். தேடல் பகுதியில் ஓர் ஆளுமையை தேடி அவரைப்பற்றிய குறிப்புகள் வரும் எல்லா பதிவுகளையும் படிக்கலம. உ.வே.சாமிநாதையர் பற்றிய பதிவுகளை அவ்வாறு வாசிப்பவர் அடையும் வாழ்க்கைச்சித்திரமும் வரலாற்றுச் சித்திரமும் விரிவானவை. அவ்வாறு வாசிக்கும் ஒரு தலைமுறையை நம்பியே தமிழ்விக்கி உருவாகிக்கொண்டிருக்கிறது

இன்று தமிழ் விக்கியின் பங்களிப்பு என்ன என்பது தெளிவாகவே புலப்படத் தொடங்கிவிட்டிருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் முன்பு போல இன்றி சற்று மேம்பட்டுள்ளன. தமிழ் விக்கி மறக்கப்பட்டுவிட்ட படைப்பாளிகளை மீண்டும் பேசுபொருளாக்குகிறது. உதாரணமாக கிருபா சத்தியநாதன் எழுதிய கமலா ‘கமலம்’ என்ற தலைப்பில் மலர் புக்ஸ் வெளியீடாக வந்துள்ளது. ம.பெ.சீனிவாசனின் ஆழ்வார்களும் தமிழ் மரபும் என்னும் நூல் கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. டி.எஸ்.சொக்கலிங்கத்தின் பேரன் ‘ஆண்டாள்’ சொக்கலிங்கம் தமிழ் விக்கி பதிவின் வழியாக தன் தாத்தாவின் முழுமையான பங்களிப்பை அறிந்துகொண்டதாகவும், அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கவிருப்பதாகவும் சொன்னார். இன்னும் பல நிகழும்.

ஜெ

***

முந்தைய கட்டுரைகுகநாதீஸ்வரர்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: பி.வி.டோஷி