முருகபூபதிக்கு இயல்

லெ.முருகபூபதி தமிழ் விக்கி

கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2022 ஆம் ஆண்டுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈழ எழுத்தாளர் லெ.முருகபூபதிக்கு வழங்கப்படுகிறது. முருகபூபதி முதன்மையாக இதழாளர். ஆஸ்திரேலியாவுக்கு குடிபோன பின் இலக்கியச் செயல்பாட்டாளராக தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார். ஈழ இலக்கியவாதிகள் பற்றிய அவருடைய நினைவுக்குறிப்புகள் ஆவணத்தன்மை கொண்டவை. 2009ல் நான் ஆஸ்திரேலியா சென்றபோது அவருடன் தங்கியிருக்கிறேன்

ஜெ

(2022 ஆண்டு இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. (2021ல் விருதுகள் வழங்கப்படாமையால்)  இன்னொரு விருது பாவண்ணனுக்கு இயல் விருதுகள் – 2022 )

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் – 2022

வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது,  கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம்  கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும்.

லெட்சுமணன் முருகபூபதி

தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இலங்கையில் பிறந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்களுக்கு வழங்குகிறது.

1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி பத்திரிகை  ஆசிரிய பீடத்தில்  இவர்  பணியாற்றியபோது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் – மாணவர்  விழாவில் கலந்து கொண்டார்.

1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர்,    தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என எழுதி வெளியிட்டு வருகிறார்.  அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர்,  2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார்.

அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் ஆகியனவற்றின் ஆரம்ப உறுப்பினருமாவார்.

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் 13 யூலை 1951 இல் பிறந்த முருகபூபதி , விவேகானந்த வித்தியாலயத்தில் ( தற்போது விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) தமது ஆரம்ப கல்வியை தொடங்கி பின்னர்,  யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், ( தற்போது கனகரத்தினம்  மத்திய கல்லூரி  )  நீர்கொழும்பு  அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

இவருடைய வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி என்ற ஆவணப்படத்தை 2017 இல் மெல்பேர்ன் எழுத்தாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், வீடியோ கலைஞர் மூர்த்தியும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர்.

இவருடைய சிறுகதை தொகுதிகள் ஏழும், புதின, சிறுவர், பயண இலக்கியம் மூன்றும், கடித இலக்கியம், நேர்காணல் தொகுதி இரண்டும், கட்டுரை தொகுதிகள் பதினாறும் வெளிவந்துள்ளன.

இவர் பெற்ற  இலக்கிய விருதுகள்:

  • சுமையின் பங்காளிகள் – 1975 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதை தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.
  • பறவைகள் –  2002 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.
  • அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018 இல் வழங்கிய வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது.

இதர விருதுகள்:

  • 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினத்தின்போது விக்ரோரியா மாநில டெறபின் மாநகர சபை வழங்கிய சிறந்த பிரஜைக்கான விருது.
  • 2011 ஆம் ஆண்டு விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது.
  • 2022 Aust Tamil TV(  Tamil Linguistics Award ) விருது. 

இவருடைய இலக்கிய, ஊடகத்துறை மற்றும்  தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் சம்பந்தமான சேவைகளைப் பாராட்டி 2022 ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில்  கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.

முந்தைய கட்டுரைஇந்துஞானத்தின் அடித்தளக் கற்கள்
அடுத்த கட்டுரைபனிமான்கள் -லோகமாதேவி