
லோகி நினைவுகள் மதிப்பீடுகள் வாங்க
(லோகிததாஸ் 2004ல் கஸ்தூரிமான் படத்தை தமிழில் எடுக்கத் தொடங்கிய காலத்தில் அவரை நான் எடுத்த பேட்டி. ’திரை’’ இதழில் 2005 ல் வெளியாகியது. அண்மையில் அந்த இதழில் இப்பேட்டியை கண்டெடுத்து நண்பர் எஸ்.ஜே.சிவசங்கர் அனுப்பியிருந்தார்)
ஏ.கே.லோகிததாஸ் என்றறியப்படும் ஏ.கருணாகரன் லோகிததாஸ் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பல்லுறுத்தி என்ற கிராமத்தில் பிறந்தார். வணிக சினிமா என்றும் மக்களுக்கான சினிமா என்றும் சொல்லிக்கொண்டு கோமாளித்தனங்களையும், கேளிக்கை லீலைகளையும் திரைப்படமாக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் இவர் முற்றிலும் மாறுபட்டவர். எம்.டி.வாசுதேவன் நாயர், பத்மராஜன் போன்ற மேதைகளின் வரிசையில் ஒரு திரைக்கதையாசிரியராக திரைத்துறைக்குள் நுழைந்தார். திரைத்துறைக்குள் வருவதற்கு முன்னரே ஒரு தீவிர நாடகாசிரியராக இயங்கிக் கொண்டிருந்தார். ‘’ சிந்து நதி சாந்தமாய் ஒழுந்நு ‘’ என்கிற முதல் நாடகத்திலேயே மிகச்சிறந்த நாடகாசிரியருக்கான (1985) மாநில விருதைப் பெற்றார்.
கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற ‘’தனியாவர்த்தனம்’’, ‘’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’’, ‘’மகாயானம்’’, ‘’மிருகயா’’, ‘’கமலதளம்’’, ‘’தசரதம்’’, ‘’கிரீடம்’’ என்று நீண்டு செல்லும் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களின் கதை, திரைக்கதை, வசனகர்த்தாவும் ஆவார். 1997 ஆம் வருடம் ‘’ பூதக்கண்ணாடி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இம்முதல் படத்திலேயே சிறந்த புதுமுக இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார். மனித உறவுகளைப் பற்றிய மிக நுட்பமானப் பார்வையும் பல கோணங்களிலும் கதைப் பாத்திரங்கள் பற்றி ஆராயும் திறனும் கொண்ட இவர் மனசாஸ்திரம் பயின்ற ஒரு கலைஞராக மதிக்கப்பட்டு வருகிறார். பல முக்கிய பத்திரிகைகளின் பருவ இதழ்களில் சிறுகதைகளும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய திரைக்கதைகளுக்கு பெரும் தூண்டுதலாக இருந்த மனிதர்களைப் பற்றியும் சம்பவங்கள் பற்றியும் இவர் எழுதிய புத்தகம் ஒன்றும் ‘கதையுட காணாப்புறங்கள்’’ என்கிற பெயரில் கரண்ட் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது மலையாளத்தில் வெற்றிபெற்ற ’கஸ்தூரிமான்’’ திரைப்படத்தை தற்போது தமிழில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.
ஜெயமோகன்: திரைப்படத்தை உங்கள் ஊடகமாகக் கொள்ள என்ன காரணம்? எப்படி அந்த ஆர்வம் ஏற்பட்டது?
லோகிததாஸ்: திரைப்படம் என் ஊடகமாக ஆனது மிகவும் பிந்தித்தான். முதன்முதலாய் நான் கண்டுகொண்ட ஊடகம் இலக்கியம். மிகச்சிறிய வயதிலேயே எழுத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சொல்லப்போனால் வாசிப்பை விடவும் முன்னதாகவே எழுத்து என்னிடம் வந்துவிட்டது.
ஜெயமோகன்: ஆமாம் பெரும்பாலும் அது அப்படித்தான்…
லோகிததாஸ்: ஒவ்வொரு குழந்தையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முனைகிறது. தன் இருப்பை நிறுவிக்கொள்ள முனைகிறது. அதன் இயல்புக்கும் திறமைக்கும் அது வாழும் சூழலுக்கும் ஏற்ப ஒரு வழிமுறையை கண்டடைகிறது. இசை , விளையாட்டு, படிப்பு இப்படி நான் கண்டடைந்தது எழுத்தை. மிகச்சிறிய வயதிலேயே என் துக்கங்களையும் கண்ணீரையும் எழுதும்போது எனக்கு ஒரு அபூர்வமான வலிமை உருவாவதைக் கண்டுகொண்டேன். எழுதும்போது அந்தத் துக்கங்களை நான் வெல்வதுபோல்..அவை என்னைத் தொடமுடியாது விலகுவதுபோல்…
ஜெயமோகன்: உங்கள் இளமைப் பருவம் துயர் மிக்கது என்று தெரியும்.
லோகிததாஸ்: ஆமாம்..சிறுவயதிலேயே தந்தை எங்களை விட்டுப் போனார். பசித்து அனாதையாக வளர்ந்தேன். உறவினர் வீடுகள்தோறும் மாறிமாறித் தங்கி வாழ்ந்தேன். அப்போது எனக்கு எழுத்து பெரும் துணையாக இருந்தது. அடிப்படையில் நான் இலக்கியவாதி. இலக்கியம்தான் என் ஊடகம். என் இலக்கியத்துக்கு ஊடகமாக சினிமா உள்ளது. அதே சமயம் எனக்கு வெறும் எழுத்து போதுமானதாக இருக்கவில்லை. எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. நான் எழுதுபவற்றையெல்லாம் இயல்பாகவே மனதுக்குள் நடித்துக் கொண்டிருந்தேன். மெல்ல நான் நடிப்புக்குரிய வகையில் எழுத ஆரம்பித்தேன். அவை நாடக வடிவுக்குப் பொருத்தமாக ஆயின. என் பதினெட்டு வயதில் முதல் நாடகத்தை எழுதினேன். இருபத்திரெண்டு வயதுக்குள் கேரளம் முழுக்க கவனிக்கப்பட்ட நாடக ஆசிரியரானேன். திரைக்கதை எழுத வாய்ப்பு வந்தது. 1985ல் என் முதல் படம் ‘தனியாவர்த்தனம்’’ வெளிவந்தது. சிபிமலையில் இயக்குநர். அது நாடகமாக என் மனதுக்குள் உருக்கொண்ட கரு. நான் நாடகத்தை ஒரு அடிப்படைக் கலையாகக் கருதுகிறேன். இலக்கியத்தை விடவும் என் மொழியை விடவும் புராதனமான கலை நடிப்பு. எல்லா உயிர்களும் நடிக்கின்றன. நடிப்பு மிகமிக அடிப்படையான ஒரு விஷயம்.
ஜெயமோகன்: ஆமாம். ’காட்ஸ் மஸ்ட் பி கிரேசி’’ படத்தில் புஷ்மேன் வகை மனிதர்கள் தங்கள் வேட்டை அனுபவங்களை நடித்துக் காண்பிக்கும் காட்சி இருந்தது. அவர்கள் மொழி இன்றும் மொழியாகாத வெறும் ஒலிதான்..
லோகிததாஸ்: எல்லோரும் நடிகர்கள்தான். வாயால் பேசுவதுபோல் நாம் ஒவ்வொரு கணமும் உடலாலும் பேசிக்கொண்டே இருக்கிறோம். நம் மனத்தை ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறோம் . வளர வளர உடல் பற்றிய பிரக்ஞை அதிகமாகிறது. அந்த சுய உணர்வு நடிப்புக்குத் தடையாக ஆகிறது. ஒன்று கவனித்திருக்கிறேன். புத்திசாலிகளை விட சற்று மந்தமானவர்களை நடிக்க வைப்பது எளிது. இளம்வயதில் நடிப்பாற்றல் அனைவரிடமும் இயல்பாக இருக்கிறது.
ஜெயமோகன்: நாடகத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவு என்ன?
லோகிததாஸ்: நடிக்கப்படும் இலக்கியமே நாடகம். ஏதோ ஒரு காலத்தில் நடிப்பும் இலக்கியமும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். இன்று உலக இலக்கியத்தில் நமக்குக் கிடைக்கும் பேரிலியக்கியங்களில் கணிசமானவை நாடகங்கள்தான். கிரேக்க நாடகங்கள், சம்ஸ்கிருத நாடகங்கள்…
ஜெயமோகன்: பழைய தமிழ் மரபை வைத்துச் சொல்லப்போனால் இங்கு கவிதை, இசை, நாடகம் மூன்றும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாக இருந்தன. கவிஞன் பாடி ஆடி தன் கலையை நிகழ்த்தினான். சங்கப் பாடல்கள் அனைத்தும் நிகழ்த்துக் கலைக்கான பதங்கள்தான் என்றே நான் கருதுகிறேன். திணை துறைப் பிரிவினைகள் எல்லாம் ஆட்டப்பிரகாரங்கள்.
லோகிததாஸ்: இன்னும் முக்கியமாக ஒன்று உண்டு; ரசங்கள். இலக்கியமும் சரி நாடகமும் சரி ரசங்களை உருவாக்குவதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.
ஜெயமோகன்: பாலு மகேந்திரா , மீரா கதிரவன் மொழிபெயர்த்த ‘பெருவழியம்பலம்’ ( பி. பத்மராஜன்) திரைக்கதைக்கான முன்னுரையில் ஒரு விஷயம் கூறுகிறார். திரைகதை என்பது ஓர் இலக்கிய வடிவம் அல்ல அது வாசிப்புக்கு உரியதல்ல, அது இயக்குநருக்கான குறிப்புகள் மட்டும்தான் என்று.
லோகிததாஸ்: அது ஒரு கோணம். நான் வாதாட விரும்பவில்லை. நான் கூறுவது என் கோணத்தை. என் வாசிப்பு மூலமும் என் படைபனுபவம் மூலமும் கிடைத்த அறிதலை. திரைக்கதை கண்டிப்பாக ஓர் இலக்கிய வடிவமே. வளர்ந்துவரும் இலக்கிய வடிவம் அது. திரைகதை இலக்கியமல்ல என்றால் நாடகமும் இலக்கியமில்லை அல்லவா? ஷேக்ஸ்பியர் படிப்பதற்காக எழுதவில்லை. நடிப்பதற்காகத்தானே எழுதினார்? இசைப்பாடல்கள் (கீர்த்தனை) பாடுவதற்காக எழுதப்படுகின்றன. அவையும் இலக்கியங்கள்தானே? இலக்கியம்தான் அடிப்படை.
ஜெயமோகன்: எனக்கு மிகப்பிடித்தமான இயக்குநர் இங்மர் பர்க்மான் அவரது ‘ஏழாவது முத்திரை’ திரைக்கதை, மொழி சார்ந்தது அல்ல. காட்சிப் படிமங்களால் ஆனது. ஆனால் அதைப் படிக்கும்போது இலக்கியமாகவே அனுபவமாகிறது. நம் கற்பனையில் உண்மையில் அந்தப் படிமத்தையும் விட மகத்தான சினிமா ஒன்று விரிகிறது.
லோகிததாஸ்: மனத்தால் நடித்து அகக்கண்ணால் கண்டு விரிவடையச் செய்ய முடிகிறது என்பதாலேயே நாடகம் மிகச்சிறந்த கலையாக ஆகிறது. நம் கண்முன் மனிதர்கள் வருகிறார்கள். வாழ்க்கையை நாம் நேரடியாகப் பார்க்கிறோம். திரைக்கதையும் அப்படித்தான்.
ஜெயமோகன்: ஆனால் திரைக்கதை சினிமா ஊடகத்தின் தேவைக்கு உட்பட்டே இயங்கமுடியும். அந்த எல்லைகள் அதற்குத் தடைதானே?
லோகிததாஸ்: சரி .நாடகத்திற்கு அதன் வெளி ( space ) பெரிய எல்லைதானே? அது ஒரு சதுரத்திற்குள் நடந்தாக வேண்டுமே? அனால் மிகப் பெரிய நாடகாசிரியர்கள் அந்த இயல்பையே அந்த வடிவத்தின் பலமாக மாற்றிக் கொண்டார்கள். ஒரு இடத்தில், ஒரு புள்ளியில் வாழ்வின் அனைத்து முரண்பாடுகளும் வந்து மோதித் துடிக்கும்படிச் செய்தார்கள். “ நாடகாந்தம் கவித்துவம் “ என்ற சொல்லாட்சி உருவானதே. அதே போலத்தான் திரைகதை. திரைகதை அனைத்தையும் காட்டியாக வேண்டும். அது யோசிக்க முடியாது. அது தியானிக்க முடியாது. அது காட்ட வேண்டும். ஆனால் அதுவே அதன் பலம். வாழ்கையின் முரண்களை, புதிர்களை, துக்கங்களை, சந்தோஷங்களை மிகச் சிறந்த திரைகதையாசிரியர்கள் காட்டியிருக்கிறார்கள். திரைகதை எப்படி இலக்கியமாக ஆகிறது தெரியுமா? நாம் வாசிக்கும்போது நமது கற்பனையில்தான் அனைத்தும் நிகழ்கிறது என்பதால்தான்.
ஜெயமோகன்: இங்கே வரும் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் இதுதான். மலையாளத்தில் ஆரம்ப காலம் முதல் எழுத்தாளர்கள்தான் திரைக்கதை எழுதினார்கள். ஆரம்பகாலப் படமான “ நீலக்குயில்”க்கு உதூப் எழுதினார். தகழி சிவசங்கரப்பிள்ளை, வைக்கம்முகமதுபஷீர், எஸ்.கெ.பொற்றேகாட், பாறப்புறத்து, செ.சுரேந்திரன். என்று மலையாள சினிமாவின் இயல்பை முதல்தரப் படைப்பாளிகள்தான் தீர்மானித்தார்கள்.
லோகிததாஸ்: கவனியுங்கள் இவர்கள் சினிமாவை மொழியை நோக்கிக் கொண்டு செல்லவில்லை. அதை ஒரு காட்சிக் கலையாக வளர்த்தெடுத்தார்கள். தோப்பில் பாசி, எஸ்.எல்.புரம் சதானந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர், பி.பத்மாராஜன் என்று இன்றுவரை அந்த வரிசை நீள்கிறது. பத்மாராஜனும் எம்.டியும் இலக்கியவாதிகளாக புகழ்பெற்ற பிறகு திரைக்கதை எழுத வந்தார்கள். மிகமிக காட்சித்தன்மை கொண்ட திரைக்கதைகள் அவர்கள் எழுதியவை. இலக்கியப் படைப்புகளாகவும் இன்று அவை அங்கீகாரம் பெற்றுள்ளன. இதே போல இந்நூற்றாண்டு இலக்கியத்தை சினிமா போன்ற காட்சிக்கலைகளும் பெரிதும் பாதித்துள்ளன.
ஜெயமோகன்: ஒரு கதைக்கான தொடக்கம் எப்படி வருகிறது?
லோகிததாஸ்: எப்படி ஒரு சிறுகதைக்கு, ஒரு நாவலுக்கு , ஒரு ஓவியத்திற்கு தொடக்கம் வருகிறதோ அப்படி. ஒருபோதும் ஒரு கலைப்படைப்பு யோசித்து திட்டமிட்டு உருவாக்கப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மனத்தில் ஒரு மின்னல் போல ஒரு தூண்டல் ஏற்படுகிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
என்னுடைய அனுபவம் இப்படி. அது மழை கறுத்து இருண்டு மூடி நிற்பதுபோல. இதோ பெய்யும் என்று தோன்றும். சில சமயம் பெய்யாமலேயே போகும். எப்போது ஏன் பெய்கிறது என்று கூறவே முடியாது. ஒரு கணத்தில் சட்டென்று ஆரம்பித்து விடுகிறது. முதலில் துளிகள் பிறகு பெருமழை.
ஜெயமோகன்: திரைக்கதையின் தொடக்கம் எப்போதும் ஒரு கதாபாத்திரம்தான் என்று கூறப்படுவது உண்டு .
லோகிததாஸ்: கண்டிப்பாக , அது முக்கியம்தான், ஒரு நாடகம் அல்லது திரைகதை என்பது வாழ்கையின் ஒரு பகுதி. யாருடைய வாழ்கை என்ற கேள்வி உடனே முளைத்து விடுகிறது. ஆகவே கதாபாத்திரம் என்பது திரைக்கதையின் முக்கியமான தொடக்கப்புள்ளி. அதே சமயம் ஒரு முரண்பாட்டுமுனை, ஒரு அடிப்படையான கேள்விகூட திரைக்கதையின் தொடக்காமாக இருக்கமுடியும். தனியாவர்த்தனம், கிரீடம், போன்ற திரைக்கதைகளில் மையக் கதாபாத்திரம்தான் தொடக்கம்.‘பாதேயம்‘, ‘எதிர்ப்புறங்கள் ‘ போன்றவற்றிற்கு மைய முரண்தான் தொடக்கம்.
ஜெயமோகன்: ஒரு கருது அல்லது அவதானிப்பு அப்படி தொடக்கமாக அமைந்ததுண்டா?
லோகிததாஸ்: அபூர்வமாக அப்படி அமையலாம். என்னுடைய திரைக்கதைகளில் ஜாதகம் அப்படிப்பட்டது. சோதிட நம்பிக்கையைப் பற்றிய ஒரு விமரிசனம் அது. இன்னொரு விஷயம் உண்டு. ஒரு திரைகதை ஏதேனும் வடிவில் தொடங்குவதற்கு வெகுகாலம் முன்பே அதன் விதை நம் மனதுக்குள் விழுந்துவிடுகிறது. அங்கே அது முளைத்து தன் இருப்பைத் தெரிவிக்கிறது. படைப்புக்கான தவிப்பு, அல்லது நிம்மதி இன்மை அங்கேயே தொடங்கிவிடுகிறது. உண்மையான தொடக்கம் அதுதான்.
உதாரணமாக, நான் இயக்கிய முதல் படமான ‘பூதக்கண்ணாடி’ . சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதைப் பற்றிய செய்தி ஒன்று என் மனதுக்குள் எப்போதோ புகுந்தது. நாட்கணக்கில் அது என்னை தொந்தரவு செய்தது. குறிப்பாக ஒரு போட்டோ . பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஒரு சிறுமியின் புத்தகப்பையின் படம் அது. புத்தகங்கள் சிதறி, சோற்று டப்பா திறந்து சிந்தி.. அந்த அவஸ்தை என்னில் உச்சம் கண்டபோது நான் கண்டுகொண்டேன். அச்சம்பவத்தை நான் ஒரு தந்தையின் கண்ணால்தான் பார்கிறேன் என்று! அந்தக் கோணத்தை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரமாக வித்யாதரன் உருவாகி வந்தான். அவனுக்கு சமகால வாழ்க்கையைப் பற்றி பதற்றமும் பயமும் அதிகம். ஆனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த கோழை அவன். ஆகவே அவன் மனம் சிதைகிறது. பிளக்கிறது. அவனுடைய பார்வைகள் வழியாக அந்த பிரச்சினையை நான் ஆராய்ந்தேன்.
ஜெயமோகன்: நான் ஒரு நாவல் எழுதினால் முழு வேகத்துடன் அதை எழுதிவிடுவேன். பிறகுதான் அதை என் எடிடர்களுடன் விவாதிப்பேன். ஆனால் இங்கே திரைக்கதைகள் கரு நிலையிலேயே விவாதிக்கப் படுகின்றன. படிப்படியாக உருவாக்கப்படுகின்றன.
லோகிததாஸ்: என்னுடைய திரைக்கதைகள் நீங்கள் நாவல் எழுதுவது போலவே உருவாக்கப் படுகின்றன. நான் எப்போதும் விவாதிப்பதைத் தவிர்ப்பவன் . எழுதிய பிறகு இயக்குநரிடம் நடிகர்களிடம் விவாதிப்பேன். கதைக் கருவை விவாதித்து உருவாக்கவோ வளர்க்கவோ முடியாது. அது செயற்கையான கதையைத்தான் உருவாக்கும்.
ஜெயமோகன்: எப்போதாவது விவாதித்திருக்கிறீர்களா?
லோகிததாஸ்: ஒருமுறை முயன்று பார்த்தேன். ‘விசாரணை’ என்ற என் திரைக்கதை ஓர் இடத்தில் முட்டி முன்னகராமல் நின்று விட்டது. ஒரு விஷயம் தெரிந்தது. கதை விவாதத்தில் அதுதான் முக்கியமான சிக்கல் . நாம் ஒரு கருவைச் சொல்லும்போது அது கேட்பவர்களில் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வகையான உணர்வுகளையும் எண்ணங்களையும் உருவாக்குகிறது. அதன்பிறகு விவாதம் என்பது கண்ணைக் கட்டிக் கொண்டு சண்டை போடுவது போலத்தான். அந்தக் கருவை நான் முழுமையாக உணர்வுரீதியாகவும் கதையளவிலும் விரிவுபடுத்தி முன்வைத்தால்தான் என் தரப்பு அவர்களிடம் போய்ச்சேர முடியும். திரைக்கதையின் சில தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி மட்டுமே நாம் பிறரிடம் விவாதிக்க முடியும்.
ஜெயமோகன்: ஆனால் இங்கே இன்னும் விவாதம் மூலமே உருவாகிறது…
லோகிததாஸ்: இங்கே சினிமா பல்வேறு கேளிக்கைகளை ஒரு விஷயத்திற்குள் இணைக்க முயல்வதாகவே உள்ளது. திரைகதை அவையனைத்தையும் இணைக்கும் ஓர் அமைப்பு .அதை படிப்படியாக விவாதித்து உருவாக்கலாம். அதற்க்கு சில வழிமுறைகள் உருவாகியும் உள்ளன.
ஜெயமோகன்: தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் , தேவர் ஃபிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் கதை இலாகா வைத்திருந்தன. கதை விவாதம் என்பது அங்கிருந்து உருவாகி வந்தது என்று எண்ணுகிறேன். ஹாலிவுட் படங்கள் கூட கதை இலாகாக்கள் மூலம் உருவாக்கப் படுகின்றன.
லோகிததாஸ்: பல சமயம் வெளியே இருந்து எடுத்த கதையைத்தான் அப்படி விவாதித்து விரிவுபடுத்துகிறார்கள். கதையின் ஆன்மாவை அப்படி விவாதித்து உருவாக்கி விட முடியாது . இதில் எனக்கு சந்தேகமே இல்லை.
ஜெயமோகன்: விவாதித்தோமென்றால் உருவானது என்னவாக இருக்கும்?
லோகிததாஸ்: மிகவும் புத்திசாலிகள் விவாதிக்கிறார்கள் என்று வைப்போம். பல நல்ல இடங்கள் உருவாகும். ஆனால் அவை ஒரே உணர்ச்சியால் ஒரு பார்வையால் இணைக்கப்பட்டிருக்காது. திரைக்கதையில் ஒருமை இருக்காது.
ஜெயமோகன்: சினிமாவில் எதை விவாதிப்பீர்கள்?
லோகிததாஸ்: சினிமா என்பது ஒரு கூட்டான கலை அதில் நடிப்பு, இசை, புகைப்படக்கலை, எனப் பல கலைகள் உள்ளளன. இந்தக் கலைகளை நாம் பலருடன் விவாதித்துத்தான் உருவாக்க முடியும். நான் கூறுவது திரைக்கதையை. அது ஒரு தனிமனிதனின் படைப்பு. இசையும் கலையும் எல்லாம் அப்படித்தான். இசையில் என்ன தேவை என்று இயக்குநர் இளையராஜாவிடம் கோரமுடியும். பிறகு அது இளையராஜாவின் இசைதான்.
ஜெயமோகன்: பூதக்கண்ணாடி பற்றிச் சொன்னீர்கள். அந்தப் படத்தில் அந்தப் படிமம் மிகவும் புகழ்பெற்றது. வாட்ச் ரிப்பேர் பார்க்கும் வித்யாதரன் ஒரு கண்ணில் பூதக்கண்ணாடி அணிந்திருக்கிறான். மறு கண் சாதாரணம். இரு பார்வையும் அவரிடம் உள்ளது. படிமங்களை நீங்கள் எப்படித் தேர்வு செய்கிறீர்கள்.
லோகிததாஸ்: நான் பொதுவாக படிமங்களைத் தனித்து நிற்கும்படி பயன்படுத்துவனல்ல. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைக்கதையில், காட்சியமைப்பில் ‘செலுத்தப்படும்’ படிமங்கள் படைப்பை பலவீனமாக்குகின்றன. பூதக்கண்ணாடி எடுக்க கதை எழுதிக்கொண்டிருந்த நாட்களில் நான் ஒரு முறை ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்குள் மழைக்கு ஒதுங்கினேன். அங்கே வாட்ச் ரிப்பேர் செய்பவர் வேலை செய்தபடியே என்னிடம் பேசினார். சட்டென்று அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. சகஜ வாழ்வைப் பார்க்கும் ஒரு கண். அதிநுண்ணிய உலகைப் பார்க்கும் இன்னொரு கண். அதுதான் வித்யாதரனின் இயல்பு என்று பட்டது.
அதே சமயம் அந்த படிமத்தை நான் திணிக்கவில்லை. வாட்ச் ரிப்பேர் செய்வது வித்யாதரனின் தொழில், அவ்வளவுதான். நீங்கள் மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களை அளிக்காவிட்டால் அது ஒரு தகவல் மட்டுமே. பூதக்கண்ணாடியில் வித்யாதரன் சாலையில் போகும்போது வழிமறிக்கும் அத பாம்பு . அது வேண்டுமென்றால் காமத்தின் குறியீடு. ஒடுக்கப்பட்ட காமத்தை அது குறிக்கிறது. அப்படி பொருள் தராதவர்களைப் பொறுத்த மட்டில் அது சாதரணமான பாம்பு. அவனுடைய பயங்கொள்ளித்தனத்தைக் காட்டுவதற்காக உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் . ஒரு சினிமாவில் எல்லாமே குறியீடுதான். குறியீடாகத் தனியாக ஏதும் இருக்கக் கூடாது.
ஜெயமோகன்: ஏன்?
லோகிததாஸ்: ஏனெனில் காட்சிக்கலை என்பது நேரடியாக மனதைப் பாதிக்கும் ஊடகம். சிந்தனையைப் பாதித்து அதன்வழியாக மனதைப் பாதிப்பதல்ல. அது மனத்தைக் கவர்ந்து அதன் வழியாகச் சிந்தனையைப் பாதிப்பது. எந்தக் காட்சிககலையானாலும் அது நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. நாமை அதில் ஆழ்ந்து போக வைக்கிறது. ஆகவேதான் காட்சிக்கலை என்பது எல்லாக் காலத்திலும் எளிய மக்களின் ஊடகமாக இருந்து வந்துள்ளது. அது தேர்வு செய்யப்பட்ட சிறுபான்மையினருக்கு உரியதல்ல. அறிஞர்களுக்கும் பயிற்சி உடையவர்களுக்கும் உரியதல்ல. காட்சிக்கலையில் அம்மாதிரி செயற்கையான படிமங்களைப் புகுத்தினால் அனுபவத்தில் ஒருமை சிதறும். அதில் ரசிகன் ஈடுபட முடியாமலாகும்.
ஜெயமோகன்: லோஹி.. இதை ஒரு கோட்பாடாகவே சொல்லி வருகிறீர்கள். நல்ல திரைப்படம் என்பது எளிய மக்களும் பார்த்து ரசிப்பதாக இருக்கவேண்டும் என்றும் திரைப்படம் ஒரு வெகுஜனக் கலை என்பதையும்.
லோகிததாஸ்: ஆமாம்.. அதை நான் உறுதியாகவே நம்புகிறேன். தகுதியான சிலருக்காக நடத்தப்படும் பல கலைகள் உள்ளன. உதாரணம் சங்கீதம். சினிமா அப்படி அல்ல . சினிமா முழுக்க முழுக்க காட்சிக் கலை சரசரவென்று கண்ணில் ஓடும் காட்சிகளினால் ஆன கலை . சினிமாவை நிறுத்தி நிறுத்தி ரசிக்க முடியாது. இரண்டரை மணிநேரம் லயித்து பார்த்தாக வேண்டும். ஆகவே சினிமா இரண்டரை மணிநேரம் நம்மை லயிப்பிக்க வேண்டும்.
நான் யாருக்காகக் கதை சொல்லுகிறேன்? சாயங்காலம் வேலை முடிந்து கைகால்களை சேறுபோகக் கழுவி மண்வெட்டியைச் சாத்திவிட்டு வந்து அமரும் விவசாயிக்காக. அவனுடைய அறிவுத்திறன் குறைவு என்றோ பழுதுபட்டது என்றோ நான் நம்பவில்லை. அவனுடைய அற உணர்வு நம் அனைவருடைய அற உணர்வையும் விடவும் எவ்வளவோ மடங்கு மேலானது. அவனை நம்பி என் கதையைச் சொல்லுகிறேன். நான் இன்றுவரைத் தரக்குறைவான எதையும் எழுதியதில்லை. என் படங்கள் அடைந்து வரும் தொடர் வெற்றி அவன் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் உறுதிப் படுத்துகிறது.
ஜெயமோகன்: லோஹி .. அப்படியானால் நான் இப்படிக் கேட்கக் கூடாது ? கோடிக்கணக்கான மக்கள் பார்த்து ரசிக்கும் வணிகப் படங்கள்தான் நல்லப் படங்களா?
லோகிததாஸ்: இல்லை .நான் என் மதிப்பீடுகளில் ஒன்றைத்தான் சொல்லியிருக்கிறேன். ‘வினோதம்’ ‘வித்தியாப்பியாசம்’ ( கேளிக்கை, கற்பித்தல்) நம்மை ஈர்த்து தன்னில் ஈடுபட வைக்கவேண்டிய வலிமை கலைக்கு இருந்தாக வேண்டும். இது முதல் தேவை. அடுத்தபடியாக அதற்கு கற்பிக்கும் பண்பு இருக்க வேண்டும். மூளைக்குள் கற்பித்தலைச் சொல்லவில்லை. ஆத்மாவுக்கு கற்பித்தலைப் பற்றி சொல்கிறேன். நல்ல கலை மனதைப் பண்படுத்தும். நல்ல கலையின் நோக்கமே மனதைப் பண்படுத்துவதுதான். நம்மை ஈர்த்து ஆழமான அனுபவத்தை அளித்து நம்மை மேம்படுத்துவது எதுவோ அதுவே சிறந்த கலை .கலையனுபவம் உருவாவதில்லை. அறிவு சார்ந்த அனுபவம் மட்டுமே உருவாகிறது. அம்மாதிரி பரிசோதனை முயற்சிகளை நான் குறைகூற மாட்டேன். அதெல்லாம் தேவைதான். பரிசோதனைகள் பல புதிய சாத்தியங்களைத் திறக்கின்றன. ஆனால் கலை ரசிக்கப்படும் விதம் எப்போதும் ஒன்றுதான்.
ஜெயமோகன்: அது என்ன?
லோகிததாஸ்: கலையனுபவம் என்பது எப்போதும் ஒருவகை தியான அனுபவம் . ஒருவன் தன்னுள் ஆழ்ந்து தன்னை அறிந்து அனுபவித்து அமர்ந்திருக்கிறான். இசை, ஓவியம், நாடகம், சினிமா எல்லாமே அப்படித்தான். சங்கீதத்திலேயே நம்மை தியானத்தில் ஆழ்த்தும் இசையும் உண்டு ,கணக்கு வழக்காக உள்ள இசையும் உண்டு. யோசித்துப் பாருங்கள் இந்த நிமிடம் தமிழகம் முழுக்க எத்தனை திரையரங்குகளில் எத்தனை லட்சம் மக்கள் தங்களை மறந்து ஒருவருக்கொருவர் ஒன்றாகி ஒரே மனதாக அமர்ந்திருக்கிறார்கள் என்று ! எத்தனை மகத்தான விஷயம் அது. ஒரு நல்ல சினிமா அவனை எந்தெந்த மன உச்சங்களுக்கு கொண்டு செல்கிறது. அங்கே அவன் நீதியை, அழகை மட்டுமே நாடுகிறான்.
திரையரங்கில் ரசிகனின் மனம் கருணையால் நிரம்பியிருக்கிறது. பெருந்தன்மையால் விரிந்திருக்கிறது. உயர்ந்த விஷயங்களுடன் அவன் சட்டென்று இணைந்து கொள்கிறான். நல்லவர்களுடன் தன்னை அடையாளம் காண்கிறான். சிறிய அநீதியைக் கூட அவன் அங்கே ஏற்பதில்லை. ஒரு குற்றவாளி தண்டிக்கபடாமல் விடப்பட்டால் அந்தப் படம் ஓடாது. அங்கே வந்து அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் யோக்கியமானவர்கள் அல்ல .அவர்களுள் மோசடிக்காரர்கள் , குற்றவாளிகள், கோழைகள் இருக்கலாம் . அங்கே அந்த இருளில் அவர்களின் மனங்கள் உருகி ஒன்றாகி உச்சம் நோக்கி நகர்கின்றன. அது பெரிய தியானம். சினிமாவை இகழும் அறிவுஜீவிகள் நம் சமூக மனத்திற்கு சினிமா அளிக்கும் இந்தப் பெரும் பங்களிப்பைப் பற்றி அறிவதில்லை.
ஜெயமோகன்: அப்படியானால் சினிமா மீண்டும் மீண்டும் நீதியை, கருணையை, அன்பைப் பற்றித்தானே பேச முடியும்?
லோகிததாஸ்: அதைப்பற்றி மட்டும்தான் பேச வேண்டும். நூற்றாண்டுகளாக அதைப் பற்றிதான் பேசி வந்திருக்கிறது. இனியும் அதைப்பற்றித்தான் பேசும் .
ஜெயமோகன்: மீண்டும் மீண்டும் ?
லோகிததாஸ்: ஆமாம் மீண்டும் மீண்டும் ஓயாமல். ஏனென்றால் நீதியும், கருணையும், அறமும் மனிதனின் அடிப்படை இயல்புகள் அல்ல. மனிதனுக்குள் இருப்பது காமமும், குரோதமும் , போகமும் மட்டும்தான். இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் வலியுறுத்திக் கொண்டிருந்தால் மட்டும்தான் மனிதனின் பண்பாட்டின் அடிப்படைகளான நல்லுணர்வுகள் நிற்க முடியும். ஒரு போர் அல்லது பஞ்சம் வந்தால் எத்தனை சீக்கிரம் இந்த உணர்வுகள் அழிந்து மிருகம் வெளிவருகிறது என்று பாருங்கள். எத்தனை சீக்கிரமாக மனிதனைக் கட்டவிழ்த்து விட்டுவிட முடிகிறது! ஆகவே கலைஞன் மீண்டும் மீண்டும் அறம் கருணை அன்பு என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இலக்கியமும் நாடகக்கலையும் உருவாக்கும் உலகம் என்பது என்ன? கருணையும் அறமும் மேலோங்கிய ஒரு கற்பனை உலகம் அதை நிஜம் போல அவை நிகழ்த்திக் காட்டுகின்றன. இந்த மூர்க்கமான உலகிலிருந்து மக்களை சில மணிநேரம் அங்கே போய் வாழ வைக்கின்றன. அதன் மூலம் அவனை மகிழ்விக்கின்றன. அவனை இளைப்பாற்றுகின்றன. நம்பிக்கையூட்டுகின்றன.
இப்படிப் பார்க்கும்போது நல்ல சினிமாவுக்கும் மோசமான சினிமாவுக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாகிறது .நல்ல சினிமா மனிதனுக்குள் அவன் இயல்பில் இல்லாத நல்லுணர்வுகளை உருவாக்க முயல்கிறது. அதற்குத் தன் கலையைப் பயன்படுத்துகிறது. அது உருவாக்குவதே தியான நிலை. மாறாக மோசமான சினிமா மனித மனத்தில் உறையும் இயல்பான மிருக உணர்வுகளைத் தூண்டுகிறது. அது உருவாக்கும் ஈர்ப்பு நேர் எதிரானது அது தியான நிலையை உருவாக்குவதில்லை. அது உருவாக்குவது கொந்தளிப்பைத்தான்.
(தொடரும்)