விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
அன்புள்ள ஜெ,
தமிழகத்தின் மாபெரும் இலக்கிய கொண்டாட்டமாக விஷ்ணுபுரம் விருது விழா அமைந்துள்ளது. கடந்த முறை முதன் முறையாக விழாவில் பங்கேற்றேன். அதே பேரார்வத்துடன் இந்த ஆண்டும் கலந்து கொள்ள முடிவுசெய்தேன். 18 காலை கோவை வந்தவுடனேயே உங்களை சந்திக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் இருந்தேன். காலை 7 மணிக்கெல்லாம் மண்டபத்திற்கு வந்தேன் . அங்குள்ள வாயிற்காவலர் நீங்கள் உங்கள் படைபரிவாரத்தோடு தேநீர் நிலையம் சென்றுள்ளதை சொன்னார்.
உங்கள் அருகமர்ந்து உங்கள் உரையாடலை கேட்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. நான் பல்கலைக்கழக பட்டம் பெற்றவன் ஆயினும் கற்றது மிக சொற்பம்.உங்கள் வாசகன் ஆனபின்பு தான் உண்மையான கல்வியே தொடங்கியது போன்று உள்ளது. உங்கள் தளத்தை தினமும் பார்த்து கற்று உங்களின் தொலைதூர கல்வி மாணவனாக ஆனேன். ஆனால் உங்கள் அருகமர்ந்து நேரடி கற்றலில் ஈடுபட அன்று தான் வாய்ப்பு வந்தது. நீங்கள் அப்போது 3 நிமிடங்களில் ஒரு உரையை எப்படி கச்சிதமாக நிகழ்த்துவது என்பது பற்றி கூறிக் கொண்டிருந்தீர்கள். அ.முத்துலிங்கம் அவர்கள் “ஒரு பல்கலைக்கழகம் செய்வதை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று உங்களைப் பற்றி சொன்னது எவ்வளவு உண்மை என்பதை அந்த கணம் புரிந்து கொண்டேன்.
அடுத்தடுத்து அமர்வுகளில் மமங்தாய் மற்றும் சாருவின் அமர்வுகள் மிக அற்புதமாக அமைந்தது. சாருவிடம் அவர் கியூபாவிலிருந்து வெளிவரும் அரசு இலக்கிய இதழான ” கிராண்மா”( லத்தீன் அமெரிக்க இலக்கியம்) இதழ் குறித்து கேட்க நினைத்தேன்.அவர் அந்த இதழை பெற வேண்டி பிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதியதாகவும் அதன் பின் தொடர்ச்சியாக தனக்கு வருவதாகவும் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். ஆதலால் அது குறித்து கேட்க நினைத்தேன்.ஆனால் எல்லோரும் அவருடைய நாவல் குறித்து மிக உள்ளார்ந்து கேட்கும் போது இது சற்று தட்டையாக அமையுமோ என தயங்கி கேட்காமல் விட்டேன்.விழா இடைவேளையில் உங்களின் ” பனிமனிதன்” புத்தகத்தை என் மகள் லக்ஷனாதேவிக்கு வாங்கினேன்.உங்கள் கையொப்பம் இட்டு என்னை பற்றியும் எனது இலக்கிய சேனல் குறித்தும் நீங்கள் சொன்ன வார்த்தைகள் கனவிலும் கற்கண்டாக இனிப்பவை. விழா ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டாக ஆகிவருவது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. உங்களுக்கும் ஒருங்கிணைக்கும் அனைத்து விஷ்ணு புரம் விழா குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பேட்டியை நமது தளத்தில் போட்டிருந்தீர்கள்.அந்த பேட்டியில் கடைசி கேள்வியாக உங்கள் பார்வையில் ideal reader யார்? என்ற கேள்விக்கு ” நான் பார்த்த ideal reader என்று “செல்வராஜ்” என என் பெயரைக் குறிப்பிட்டு “திசையெட்டும் தமிழ்” என்ற என் சேனல் மூலம் நான் புத்தக அறிமுகம் செய்வது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.(இது குறித்து அ.முத்துலிங்கம் ஐயா என்னிடம் தொலைபேசி வழி முன்பே பேசினார்) இவை அனைத்தும் உங்கள் அணுக்க வாசகன் எனும் நிலையில் நான் அடைந்த பேறுகள். மனமார்ந்த நன்றி ஜெ.
அன்புடன்,
செல்வா,
பட்டுக்கோட்டை.
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விழாவில் இரண்டு நாட்களும் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சியான தருணம். இந்த முறை உங்களிடம் நீலம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினேன். என் பெயர் கேட்டு எழுதி தந்தீர்கள். பொதுவாக kindle-ல் படிக்கலாமா என்று தெளிவு படுத்திக் கொண்டேன். விழாவில் எனக்கு பிடித்தது அதன் நேர கட்டுப்பாடு மற்றும் கச்சிதமான ஒழுங்கமைப்பு. தங்குமிடம் மற்றும் உணவு உபசரிப்பு அருமையாக இருந்தது. ஓர் இடத்தின் அத்தனை பேரும் ஒத்த மனநிலையுடன் இருப்பது மிக அபூர்வம். மிக தீவிரமான இலக்கிய வாசகர் கூட்டம்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக நன்றாக இருந்தது.
அன்பும் நன்றியும்.
ஸ்ரீதரன்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முழுநேரமும் அரங்கம் நிறைந்திருந்தது. ஓர் இளம் எழுத்தாளர் தன் முதல் வாசகர் சந்திப்பில் 600 பேர் அமர்ந்து பார்ப்பதை கண்டால் அவருடைய நம்பிக்கை எந்த அளவுக்கு பெருகும் என நினைத்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரிடமும் மிகக்கூர்மையான கேள்விகள் வந்தன. அவர்களின் படைப்புகளைக் கூர்ந்து வாசித்து எழுப்பப்பட்ட கேள்விகள். அவர்கள் இதேபோல இன்னொரு அவையை சந்திக்க இன்னும் நீண்டநாட்களாகும் என்பதுதான் பிரச்சினை.
நான் தமிழகத்தில் நிகழும் பல இலக்கிய அமர்வுகளை பார்த்தவன். அவை எப்படி நிகழுமென தெரியும். ஆழ்ந்த வாசிப்பும், விவாதமும் மிக அரிதானவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. அகரமுதல்வனும் வெண்ணிலாவும் கமலதேவியும் தன்னம்பிக்கையுடன் பேசினர். கார்த்திக் புகழேந்தியும் கார்த்திக் பாலசுப்ரமணியனும் கொஞ்சம் தயங்கி பேசினர். அதெல்லாமே அவர்கலின் இயல்பை ஒட்டியவையாக அழகான உரையடல்களாக அமைந்தன. மூத்த எழுத்தாளர்கள் அத்தனைபேரை அரங்கிலே பார்த்தது இனிய அனுபவம்.
சிவக்குமார்