பகல்களுக்கு அப்பால்

இரவு மின்னூல் வாங்க

இரவு நாவல் வாங்க

இரவு வாங்க

என்னுடைய நாவல்களில் மிக அதிகமாக வாசிக்கப்பட்டவற்றில் ஒன்று இரவு. அது அளவில் சிறியதென்பது ஒரு காரணம். தொடக்கநிலை வாசகர்கள் அதைப் படிக்க முடியுமென்பது இன்னொரு காரணம். தொடக்கநிலை வாசகர்கள் முற்றிலும் புதிய ஒரு நிலப்பரப்பில், புதிய வாழ்க்கைச்சூழலில் அமைந்த நூல்களை எளிதில் உட்புகுந்து உணர்வதில்லை. அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த, அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற, உலகம் புனைவில் இருக்கையிலேயே அவர்களால் அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது. அத்தகைய ஒரு படைப்பு இரவு.

இன்றைய இளைஞர்களின் மிக முக்கியமான சிக்கலென்பது தூக்கமின்மை. பகலிரவுகள் மயங்குதல். இன்று இணையமும் சமூக வலைத்தளங்களும் வந்தபிறகு பெரும்பாலானவர்கள் இரவில் வாழத்தொடங்கியிருக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு கிழக்கத்தியனுக்கும் கனவென அமைந்த அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் நமது பகல்கள்தான் இரவுகள். உலகம் ஒருங்கிணையும்போது எது ஆற்றல் மிகுந்ததோ அங்கு நோக்கி மற்ற பகுதிகள் சென்று சேர்கின்றன. துயிலின்மை, அதன் குற்றஉணர்வு என அலைக்கழிபவர்களுக்கு இரவு நாவல் ஏதோ ஒருவகையில் நம்பிக்கையும், ஆறுதலையும் அளிப்பது போல் இருக்கிறதா?

ஆனால் இரவு துயிலின்மையைப்பற்றிய நாவல் அல்ல. இது இரவின் அழகைப் பற்றியது. இருளைப்பற்றியது. ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் பகலின் ஆழ்மனம் இரவு என்றால் இரவின் ஆழ்மனம் எதுவாக இருக்கும் என்பதே இந்நாவலின் வினா. ஆழ்மனதில் வாழ்வது என்பது ஒவ்வொருவருடைய கனவு தான். கனவு, கற்பனை அனைத்துமே இரவில்தான் நிகழ்கின்றன. யோக இரவு என்று அதை தொல்நூல்கள் கூறுகின்றன. அகவிழிப்பின் பொழுது அது. ‘பிற உயிர்கள் துயிலும்போது யோகி விழித்திருக்கிறான்’ என்னும் கீதை வரியின் பொருள் அதுவே. வேதத்தின் ராத்திரி சூக்தம் இரவு எனும் தெய்வத்தை, விண்மீன்களைச் சூடி விரிந்திருக்கும் முழுமையை விதந்து பாராட்டுகிறது.

என்றுமிருப்பது பிரபஞ்ச இரவு. பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியிருப்பது இரவு. பகல் அதிலொரு துளி வெளிச்சப்பொட்டு மட்டுமே. அதிலிருந்து முடிவிலாத இருளை நோக்கி செல்லும் பாதை. அந்த இருளில் மனிதர்கள் வாழ முடியுமா ?அவர்களால் அங்கு தாக்குப்பிடிக்க முடிவது எந்த அளவு வரை? ஆனால் அச்சமூட்டுவதாயினும், அறிந்த அனைத்தையுமே உடைத்து வெட்ட வெளிக்கு கொண்டு சென்று நிறுத்துவதாயினும், பெரும் பித்தென ஆட்கொள்வதாயினும் இரவை அறிந்த ஒருவனால் இரவிலிருந்து வெளிவர முடிவதில்லை. அதன் கொல்லும் வசீகரத்தையே அவன் மீண்டும் நாடுகிறான். கொடுந்தெய்வங்களை உபாசிப்பவர்கள் ஒருபோதும் அதை விட்டு விலகுவதில்லை என்பது போல.

ஏனெனில் நம்முடைய அன்றாடம் சலிப்பூட்டுவது. பகல் என வெறிச்சிட்டு விரிந்து கிடப்பது. இரவு நமக்கென நாமே உருவாக்கிக்கொள்வது. நமக்குப் பிரியமானவை மட்டுமே துலங்கி, பிற அனைத்தும் மறைந்து, மாயம் என நிகழ்வது. இரவு ஒரு பெரும் விளையாடல். அதில் இறங்கிவிட்டவன் கரையேற இயலாது. இந்நாவல் இரவு என்பதை ஆழுள்ளம் என,  முடிவிலி என விரித்துச் செல்கிறது. அதன் ஆழத்தின் நஞ்சை ,இரக்கமற்ற பிரம்மாண்டத்தை காட்டி முடிகிறது. எதிர்மறையாக இது முடியும் என்று எழுதும்போது கூட நான் எண்ணியிருந்தேன். ஆனால் அவ்வாறன்றி வேறொரு வகையில் இது முடிந்தது எனக்கே நான் அளித்துக்கொண்ட ஓர் ஆறுதலாக அமைந்தது.

இந்த நாவல் முதல் வாசிப்பில் ஒரு பரபரப்பூட்டும் கதை என அறிந்தவர்கள் இன்னொரு முறை வாசிக்கையில் வேறு நுட்பங்களைக் கண்டடையக்கூடும். பழைய எதார்த்தவாத நாவல்களின் சலிப்பூட்டும் நிதானம் அற்றது இது. கனவும் ,கற்பனையின் பெருக்கும் ,நிகழ்வுகளின் தொடரும் என தீவிரமான ஈடுபாட்டுடன் வாசிக்க உகந்தது. அதன் உச்சத்தில் பல்வேறு நிகழ்வுகளை அது புரட்டி புரட்டி தேடுகிறது. ஒவ்வொரு கணத்திலும் மனித உள்ளத்தின் விசித்திரமான சாத்தியங்களை காட்டி வாசகனை புதிய தளங்களுக்கு நகர்த்துகிறது. இன்னும் சில காலம் இதன் விந்தைகள் இவ்வண்ணமே ஒளிமயங்காமல் இருக்குமென்றே நான் எண்ணுகிறேன்.

இந்நாவலை என் தளத்தில் தொடராக வெளியிட்டேன். பின்னர் தமிழினி இதை நூலாக்கியது. தமிழினி வசந்தகுமாருக்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் என்னுடைய நன்றிகள்.

ஜெ

டிசம்பர், 2022

(விஷ்ணுபுரம் வெளியீடாக பிரசுரமாகும் இரவு நாவலின் புதிய பதிப்பின் முன்னுரை)

முந்தைய கட்டுரைகமலா பத்மநாபன்
அடுத்த கட்டுரைம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்- கடிதங்கள்