விஷ்ணுபுரம் விருது விழா கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

முதல் நாள் ராஜஸ்தான் அரங்கில் நுழையும் போது படிக்கட்டில் நின்று ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார் ஜெ. கீழே இறங்க எத்தனித்துக் கொண்டிருந்தவரை மரியாதை கலந்த பணிவோடும் உள்ளக்கிளர்ச்சியோடும் நின்று  நோக்கிக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து செல்லும்போது என்னைப் பார்த்து புன்னகையுடன் “வாங்க” என்பதுபோல் தலை அசைத்தார். திரும்பி அவரை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முகத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருந்த பெருங்கனிவை உணர்ந்தேன். ஓடிச்சென்று கட்டியணைக்கத் தோன்றியது.

முதல்நாள் அமர்வில் கமலதேவி மற்றும் அகரமுதல்வன் அமர்வுகள் உச்சங்களாக இருந்தன.  கமலதேவியும் கார்த்திக் புகழேந்தியும் எவ்வளவு பெரும் வாசிப்பாளர்கள் என்பதை அறிய முடிந்தது. ஈரோடு கிருஷ்ணனின் துள்ளல் கேள்விகளின் ரசிகன் நான்.

சாருவை முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருடைய தளத்தை தினமும் வாசிக்கிறேன். தனக்கான தண்ணீர்த் தேவை பற்றி எழுதியிருந்தார். அவர் இருக்கை அருகில் தண்ணீர் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பத்தாவது நிமிடத்தில் ஒரு நண்பர் சிறிய தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்தார். மகிழ்ச்சி.

இடைவேளையில் சாரு வெளியில் பேசிக்கொண்டிருந்தார். நான் கீழே சென்று டீ குடித்துவிட்டு வந்தபோதும் அதே இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். ஒருவேளை கீழே டீ இருப்பது அவருக்குத் தெரியவில்லையோ என்று நினைத்தேன். சரி, நாமே கொண்டுவந்து கொடுக்கலாம் என்று நினைத்து, அவரின் மிக அருகில் நின்று கொண்டிருந்த பௌன்ஸர் அருணின் தோளைத்தொட்டு, “சார் டீ குடிப்பாரா?” என்றேன். “டீ குடிக்க மாட்டார், காபி சொல்லியிருக்கோம். அதுக்காக வெயிட்டிங்” என்றார். சாருவிடம் நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன்.

அகரமுதல்வன் சைவ இலக்கியங்கள் அவர் வாழ்வில், எழுத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அழகாக விளக்கினார். “நான் சிவ பதியங்களைக் கேட்டு வளர்ந்தவன், எனக்கு அவநம்பிக்கை இருக்க முடியாது, வராது, வர முடியாது,”.

கேள்விகள் கேட்கும்போது சிலர் ஒரே மூச்சில் இரண்டு கேள்விகளைக் கேட்கிறார்கள். இரண்டு கேள்விகளையும் நினைவில் வைத்து பதில் சொல்ல முடிவதில்லை. பெரும்பாலும் ஒரு கேள்விக்கான பதிலே வருகிறது. ஒரு வாய்ப்பில் ஒரு கேள்வி மட்டுமே என்பதைக் கடைபிடித்தால் நேரம் மிச்சமாவதுடன், மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிட்டும்.

எப்போதும் போல திருமண விருந்துக்கு சற்றும் குறைவில்லாத விருந்து. மூன்று வேளையும் விருந்து என்பது சற்றே வியப்படையச் செய்தது.அகரமுதல்வனின் “மாபெரும் தாய்”, பாவண்ணனின் “பொம்மைகள்” புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். விஜயா வேலாயுதம், கனிஷ்கா மற்றும் மேரியுடனான அமர்வுகள் பதிப்புலகம் பற்றிய புரிதல்களைத் தந்தன.

சாருவுடனான அமர்வு தீவிரமானதாகவும் செறிவாகவும் இருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் கறாரான ஒழுங்கைக் கடைபிடிப்பவர். தான் எப்படி விழிப்புடன் தனது எழுத்தின் கட்டமைப்பை, முறையை உருவாக்குகிறேன் என்பதை விளக்கினார். சீலே சென்று மாட்டிறைச்சி உண்ண முடியாமல் பட்டினி கிடந்த சாரு, பசு எனக்குத் தாய் மாதிரி, தாயை எப்படி உண்பது என்றார். சாருவால் உண்ண முடியாத அந்த உணவை வெளிநாடுகளில் தான் விரும்பி உண்பதை ஜெ குறிப்பிட்டார்.

ஜெவின் உரை சாருவின் இலக்கியத்தை, அவர் எழுத்தின் நோக்கத்தை, அவசியத்தை ஆழமாக புரிந்துகொள்ள உதவியது.தி அவுட்சைடர் மிகப்பிரமாதம். இளம் வயதிலேயே சாரு எவ்வளவு பெரிய வாசிப்பு வெறியனாக இருந்திருக்கிறார்.

சாருவை இனிமேல் தான் நான் வாசிக்க வேண்டும். ஸீரோ டிகிரியை இரண்டு முறை தொடங்கி உள்நுழைய இயலாமல் நிறுத்தி விட்டேன். மிலரப்பா கட்டிய வீட்டை இடிக்கச் சொன்ன போகரைப் போல நான் கட்டிய வீட்டை இடிக்க சாரு தயாராக இருக்கிறார். இடிக்கக் தயாராக வேண்டியது நான் தான்.கர்மா என்ற தலைப்பில் சாரு எழுதியிருந்த மிலரப்பா பற்றிய இரண்டு கட்டுரைகளைத் தேடி வாசித்து விட்டேன்.

சாருவின் விருது விழா ஒரு வரலாற்று நிகழ்வு. “வரலாறு நிகழும் போது அங்கே இருக்கும் ஈ கூட வரலாற்றில் இடம் பெறும்” என்பதை மேற்கோள் காட்டினார் விஜயா வேலாயுதம் அவர்கள். ஒரு ஈயாக நானும் இந்த தமிழிலக்கிய வரலாற்றுத் தருணத்தில் பங்கெடுத்த நிறைவு.

வாழ்வின் தீவிரமான இரண்டு நாட்கள். விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

சக்தி பிரகாஷ்.

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழா ஒரு மறக்கமுடியாத நினைவு. நான் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் ஒரு சம்பிரதாயத்தன்மை இருக்கும். பேச்சுக்களில் கண்டெண்ட் கூட சம்பிரதாயமானதாகவே இருக்கும். புதிசாக ஒன்றுமே காதில் விழாது. ஆனால் அதேசமயம் ஒரு வித ஒழுங்கும் இருக்காது. இஷ்டப்படி தொடங்குவார்கள். நீட்டி நீட்டி செல்வார்கள். என்ன பேசுகிறார்கள் என்பதிலும் கட்டுப்பாடு இருக்காது.

மாறாக விஷ்ணுபுரம் அரங்குகள் மிகமிக கறாராக திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் பேசப்பட்ட கண்டெண்ட் பல திசைகளிலும் சுதந்திரமகா சென்றது. ஏராளமான விஷயம். ஈழவரலாறு, தொன்மம், தனிநபருக்கும் இலக்கியத்துக்குமான உறவு, ஐடி உலகம் எல்லாமே பேசப்பட்டது. எதுவுமே மேலோட்டமான பேச்சு இல்லை. மிக மிக ஆழமான விவாதங்கள். தமிழக இலக்கியச் சூழலில் இன்னொரு இலக்கிய களம் இதைப்போல கிடையாது.

அரங்கில் கார்த்திக் பாலசுப்ரமணியம், கார்த்திக் புகழேந்தி ரெண்டுபேரும் கொஞ்சம் தடுமாறினார்கள். Hearsay எல்லாம் மேடையிலே சொல்லக்கூடாது. ஏனென்றால் அதை மறுக்க அங்கே ஆளில்லை என்றால் அது அவதூறாக ஆகிவிடும். பதில்களை சமாளிக்க நினைக்கக்கூடாது. முடிந்தவரை நேர்மையாகச் சொல்லவேண்டும். கமலதேவி நினைத்ததை விட தெளிவாகவும் உறுதியாகவும் பேசினார். அகரமுதல்வன் , அ.வெண்ணிலா ரெண்டுபேரும் உறுதியாக பேசினர். அவர்களுக்கு நல்ல மேடை அனுபவம் உண்டு என நினைக்கிறேன்.

விழாவில் அருணாச்சலப்பிரதேச கவிஞர் மமங் தாய் பேச்சு ஆச்சரியமாக இருந்தது. இங்கே கேட்கப்பட்ட பல கேள்விகளை அவர் இதற்கு முன் வழக்கமான சர்வதேச விழாகளீல் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவருடைய ஒரு கதாபாத்திரம் சமவெளி கதாபாத்திரம்போல யோசிக்கிறதே என்ற கேள்விக்கு அவர் ஆமாம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் முதலில் அந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். இப்படி கூர்ந்து வாசிப்பவர்கள் அதிகமாக இலக்கிய விழாக்களுக்கு வருவதில்லை.

சிறந்த விழா. பாராட்டுக்கள்

எஸ். சிவராஜ் ஆனந்த்

முந்தைய கட்டுரைமேடையுரை பயிற்சி முகாம்
அடுத்த கட்டுரைபெர்சே