ரத்தசாட்சியின் வெற்றி

சினிமாவில் எப்போதுமே சில வழக்கங்கள் உண்டு, அதற்கான காரணங்களும் உண்டு. ஒன்று ஒரு கதை வெற்றிபெற்றால் அதே போல திரும்ப படைப்பது. படையப்பாவின் குட்டிகள் எத்தனை! வெற்றி என்பது முழுக்க முழுக்க நல்லநேரம், அதிருஷ்டம் சார்ந்தது என நம்பி அதை சார்ந்திருக்க முயல்வது.

தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் –  வெந்து தணிந்தது காடு,  பொன்னியின் செல்வன் 1, ரத்தசாட்சி. ஆகவே இவ்விரண்டையும் எதிர்கொள்கிறேன். வெந்து தணிந்தது காடு, ரத்தசாட்சி ஆகியவற்றை அப்படியே திரும்ப எழுதித்தரக் கோருகிறார்கள். (அப்டியே அது போரும் சார். கதையில கொஞ்சம் மாற்றம் இருந்தா போரும், நல்லா போயிடும்). எனக்கு இப்போது நல்ல நேரம் என்று நம்புகிறார்கள். கடைசியில் வெந்து தணிந்தது காடு போல ’அப்படியே’ இன்னொன்று எழுத அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். வேறு வழி?

ரத்தசாட்சிதான் அண்மைக்காலத்தில் ஓடிடியில் நேரடியாக வெளிவந்த, பெரிய ஹீரோ இல்லாத படங்களில் முதன்மையான வெற்றி. உண்மையில் சிறு ஓடிடி படங்கள் அந்த தளங்களின் தொடர்தேவையை நிறைவேற்றுகின்றனவே ஒழிய அதற்கப்பால் கவனிக்கப்படுவதோ, பேசப்படுவதோ இல்லை. ரத்தசாட்சி ஒரு ’பொதுமக்கள் வெற்றி’ யாகவும் ஆகா தளத்திற்கே தமிழகத்தில் அடித்தளத்தை அமைத்து தந்த படமாகவும் ஆகிவிட்டது. அவ்வகையில் அது ஒரு முதன்மை வெற்றி.

பல காரணங்கள். முதன்மையாக ரபீக்கின் இயக்கமும் கண்ணா ரவி, குமரவேல் இருவருடைய நடிப்பும்தான் சுட்டிக்காட்டப்படவேண்டும். அதன் கதையோட்டம் எந்த பரீட்சார்த்த தன்மையும் இல்லாமல் பரபரப்பாகச் செல்கிறது. இறுதி நிகழ்வு நெஞ்சை தாக்குகிறது. ஆகவே மக்களுக்குப் பிடித்திருக்கிறது.

மக்கள் ரசனையும் சோட்டா விமர்சகர் மற்றும் அரசியல் குழுவினர் ரசனையும் எதிரெதிர் திசைகளில் செல்வன. சொல்லப்போனால் இங்கே இவர்கள் சிறப்பாக இருக்கிறது என்றால் அங்கே வசூலில் டப்பா காலி என்றே பொருள்.

ஒரு நண்பர் என்னிடம் ‘இது அப்புவோட கதையா?’ என்றார். நான் எங்குமே வரலாற்றை ஆவணப்படுத்த முயல்வதில்லை. ஆவணம் என்ற சொல்லே இலக்கியத்துக்கு எதிரானது. நான் ஒரு புனைவு யதார்த்தத்தை உருவாக்கவே முயல்வேன். அதன்பொருட்டு கதைமாந்தரை, நிகழ்வை தெளிவாகவே மாற்றியமைப்பேன். அண்மையில் ஒரு சர்வதேச இலக்கியவிழாவில் சொன்னேன். “பொய்யைச் சொல்லி உண்மையை நிலைநாட்டுவதே என் இலக்கியம்’

ஆனால் பொய் அல்ல. மையமாகத் திரளும் உண்மையின் பொருட்டு மாற்றியமைக்கப்பட்ட நேரடி யதார்த்தம் என்று சொல்லலாம். அந்த உண்மை நேரடி உண்மை அல்ல, அதியுண்மை (சூப்பர் ட்ருத்) அதுவே புராணங்களின், நாட்டார்கதைகளின் வழியும்கூட. ரத்தசாட்சி நேரடியாகவே ஒரு வாய்மொழித் தொன்மத்தில் இருந்து உருவானது.

ஒடுக்கப்பட்ட அனைவருக்குமாகக் கனியும் ஓர் உள்ளம் நோக்கி அந்த கதை செல்கிறது. அந்த ஒடுக்கப்பட்டோரில் புரட்சியாளனை ஆயுதமேந்தி கொல்லவருபவனும் உண்டு. அவனும் சுரண்டப்பட்டு, அவமதிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டவனே. அதை உணரும் மனவிரிவுதான் மெய்யான மெய்யான புரட்சிகரம். அந்த மெய்நிலை வழியாகவே புரட்சியாளன் பலியாடாக அன்றி ரத்தசாட்சியாக ஆகிறான். கிறிஸ்துவின் சிலுவையேற்றத்துடன் இணையும் காட்சியமைப்புகள் வழி ரஃபீக் சொல்ல வருவது அதைத்தான்.

“அப்படியெல்லாம் நக்சலைட்டுகள் போலீஸுக்காக இரங்க மாட்டார்கள். இது கொச்சைப்படுத்துவது என்று சொல்கிறார்களே” என விஷ்ணுபுரம் விழாவில் ஓர் இளைஞர் கேட்டார்.

“யார் சொல்கிறார்கள்?” என்று நான் கேட்டேன்.

அவர் சிலர் பெயர்களைச் சொன்னார். “இவர்களுக்கு நக்சலைட்டுகளைப் பற்றி என்ன தெரியும்? இவர்கள் சினிமா பார்த்து கற்றுக்கொண்டவர்கள். சினிமாவேவிலேயே கூட நுட்பங்களும் உள்ளடுக்குகளும் பிடிகிடைக்காத அளவுக்கு மோட்டாவான ஆட்கள். சும்மா சில்லறை தொழில்கள் செய்து உயர்நடுத்தர வாழ்க்கைக்குள் பொருந்திக்கொண்டு முகநூலில் பாவலா காட்டும் பாமரர்கள். அவர்களுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களின் கற்பனைக்கே அப்பாற்பட்டது இது” என்றேன்

நான் இடதுசாரி இயக்கங்களை நன்கு அறிந்தவன். அதன் முதன்மை தலைவர்களில் ஒருவராக இருந்த சோதிப்பிரகாசம் என் அணுக்கமான நண்பராக இருந்தார். அவர் சொன்னவற்றின் வழியாக ஒரு முழுநாவலே எழுதும் எண்ணம் இருந்தது. ஒன்றை மட்டும் சொல்கிறேன். சோதிப்பிரகாசத்தின் தலைவராக இருந்த கோதண்டராமன் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். எதற்காக என அவரே எழுதியிருக்கிறார். சிறையில் கடைநிலை ஊழியர்களான காவலர்கள் உயரதிகாரிகளால் அவமதிக்கப்படுவதற்கு எதிராக நீதிகேட்டு.

“இணைய அசடுகள்தான் இன்று இலக்கியம் சினிமா எல்லாவற்றுக்குமே எதிரிகள். ஆனால் சினிமா ஒரு மாஸ்மீடியா. அது அவர்களை தூசாகவே எண்ணும். அதேசமயம் இலக்கியம் அவர்களால் அழிக்கப்பட்டுவிட வாய்ப்புண்டு. கவனமாக இருங்கள்” என்று மட்டும் சொன்னேன்.

அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் ரத்தசாட்சி !

முந்தைய கட்டுரைசாகித்ய அக்காதமி விருதுகள்
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கம் பேட்டி