விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா – கடிதம்

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

விஷ்ணுபுரம் வெள்ளிவிழா பதிப்பு வாங்க

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் நாவலின் 25 ஆவது ஆண்டு இது என்பது மனக்கிளர்ச்சியை அளித்த செய்தி. நான் அந்நாவல் வெளிவரும்போது 6 வயதான குழந்தையாக இருந்திருப்பேன். நான் அதை 4 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். விஷ்ணுபுரம் எனக்கு முழுக்க பிடி கிடைத்தது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் என் வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையான நாவல். நான் அதை மீண்டும் வாசிக்கவேண்டுமென நினைத்திருக்கிறேன்.

விஷ்ணுபுரம் எனக்கு என்ன தந்தது? நான் அது வரை மதம், இறைவன் , ஆன்மிகம் எல்லாமே போலியானவை என்று நம்பியிருந்தேன். அல்லது அறிவில்லாதவர்கள் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்று வேண்டிக்கொள்வது என்று நினைத்தேன். விஷ்ணுபுரம் வாசிப்பதற்கு முன் அதில் சந்தேகமே இல்லை. இன்று நினைக்கிறேன் அது எவ்வளவு அசட்டுத்தனமான புரிதல் என்று. அவ்வளவு போலியான அல்லது அசட்டுத்தனமான ஒன்றுக்காக இத்தனை மாபெரும் கோயில்களை கட்டியிருப்பார்களா என்றும் இத்தனை பாடல்களையும் காவியங்களையும் எழுதியிருப்பார்களா என்றும் நான் யோசிக்கவே இல்லை.

விஷ்ணுபுரத்தின் சாராம்சமாக இருப்பது ஞானத்தேடல். ஞானம் என்றால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் என்ன என்றும் அதில் நான் எங்கே எப்படி பொருந்துகிறேன் என்றும் தெரிந்துகொள்வதுதான். எந்த மனிதருக்கும் இந்த கேள்விக்கான விடை தேவை. பலர் பிறர் சொன்ன பதில்களைக்கொண்டு சமாதானம் ஆகிவிடுவார்கள். பாவபுண்ணியம், தெய்வச்செயல் என்றெல்லாம் ஏதோ ஒரு பதில் எல்லாருக்கும் உண்டு. சொந்தமாக சில பதில்களைச் சிலர் தேடுகிறார்கள். அவர்கள்தான் ஆன்மிகத்தேடல்கொண்டவர்கள்.

அந்த ஆன்மிகத்தேடல் எப்படி காலந்தோறும் நடைபெறுகிறது என்று காட்டும் நாவல் விஷ்ணுபுரம். அந்தத் தேடல் வழியாக என்ன என்ன அமைப்புகள் உருவாகி மதங்களாக ஆகின்றன என்று காட்டுகிறது. அதை மீறி புதிய புதிய கேள்விகளுடன் மேலும் மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அதிலுள்ள பாவனைகள், நடிப்புகள் எவ்வளவு. அதற்கும் நம் வாழ்க்கைக்குமான தொடர்புகள் எவ்வளவு சிக்கலானவை. விஷ்ணுபுரம் மனித அறிவு என்பதே இந்த தேடலின் விளைவாக உருவானதுதான் என்று காட்டுகிறது.

விஷ்ணுபுரம் நாவல் 25 ஆம் ஆண்டு கொண்டாடுவதை ஒட்டி ஒரு நல்ல விழாவோ கருத்தரங்கமோ எல்லாம் ஏற்பாடு செய்திருக்கவேண்டும். நீங்கள் அதைச் செய்யவேண்டும் என விரும்புகிறேன். அவசியமான பணி அது.

நா. கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

எங்கள் அமைப்பின் நெறிகளில் ஒன்று என் நூல்களுக்காக எதையும் செய்வதில்லை என்பது. அது நான் நன்கொடை பெறுவதன் அடிப்படையான நேர்மையை இல்லாமலாக்கிவிடும் செயல். எல்லா விழாக்களும் பிற படைப்பாளிகளுக்காகத்தான்.

விஷ்ணுபுரம் விழாவில் என் பிரியத்திற்குரிய நண்பர் ராம்குமார் இ.ஆ.ப(மேகலாய) விஷ்ணுபுரம் வெள்ளிவிழா பதிப்பை வெளியிட சமீரன் (கோவை ஆட்சியர்) பெற்றுக்கொண்டார். முற்றிலும் சாதாரணமாக, சாப்பிடும் இடத்தில் நடந்தது அது. அதுவே ஒரு விழாதான்

ஜெ

விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா

முந்தைய கட்டுரைதனிவழிப் பயணி – வெளியீடு
அடுத்த கட்டுரைஅருளவதாரம்