விஷ்ணுபுரம் விழா 2022 கடிதங்கள்

அன்பு ஜெ,

வணக்கம்.நலம் விழைகிறேன்.

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழா தான் நான் கலந்து கொண்ட முதல் இலக்கியநிகழ்வு. என் முதல் மேடையும் கூட. முதல் நூலான சக்யை வெளியீட்டிற்கு மட்டுமே சென்னைக்கு சென்றேன்.

முதல் நாள் காலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்கொள்வதே எனக்கு சவாலாக இருந்தது. என்னுடன் வந்த தங்கை ‘திருதிருன்னு முழிக்காத’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

வழக்கம் போல எனக்கு நிறைய கவனக்குறைவுகள் இருந்தன. குறிப்பாக தேவதேவன் அய்யா தன் அலைபேசியிலிருந்து எனக்கு மிஸ்டு கால் தந்து வாட்ஸ்ஆப்பை திறக்கச்சொன்னார். அவரே சரியாக செய்தப்பின்னும் நான் தடுமாறிக்கொண்டிருந்தேன். எழுத்தாளர் சிவா அருகில் இருந்து என்ன பண்றீங்க? என்று சிரித்தார். அவரும் அவர் மனைவியும் எங்களுடனே இருந்தார்கள். இந்த மாதிரியான முதல் கூட்டத்தில் நட்பின் துணை மறக்க முடியாத வாழ்நாள் நினைவாக இருக்கும்.

என்னை நெறிப்படுத்திய ரம்யா பழகுவதற்கு எளியவர். எழுத்தாளர் நவீனை தான் முதன்முதலாக சந்தித்தேன். என்னை அழைத்து செல்ல மனைவியுடன் வந்திருந்தார். இவர்களின் துணை இந்த விழாவை எளிதாக கையாள உதவியது.

இந்த விழாவில் நான் முதன்முதலாக சந்தித்த மூத்த எழுத்தாளர்களின் வரிசை நீண்டது. அவர்களுக்கு அவர்களாக வந்து பேசுவதில் எந்தத் தடையும் இல்லை. இது இலக்கியம் அளிக்கும் மனவிசாலம். அவர்கள் நம் இயல்பை எளிதாக புரிந்து கொள்கிறார்கள்.  வாசகர்களும் இனிமையானவர்கள். இளம்வாசகி காயத்ரி எனக்கு ஒரு பேனாவை அன்புடனும் தயக்கத்துடனும் அளித்தார். எழுதுபவர்களுக்கு பேனா அளிப்பது என்பது அழகான அன்புப்பகிர்தல்.

என்னால் தன்னியல்பாக கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியும் என்று நானே தெரிந்து கொண்டேன். இதுவரை எந்த மேடையிலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசியதில்லை. முதல் புத்தக வெளியீடு முடிந்து திரும்பும் போது, சென்னையின் இரவில் மேடையில் சரியாக பேசமுடியாததையே நினைத்துக்கொண்டிருந்தேன். முதல்புத்தக வெளியீட்டின் மகிழ்வு இல்லாமல் போயிருந்தது. அப்போதும் தங்கை ஐந்து நிமிடம் என்றாலும் சரியாகத்தான் பேசினாய் என்றாள்.

விஷ்ணுபுரம் விழா முடிந்து ஜனசதாப்தியில் திரும்பும் போது மனம் அமைதியாக கடந்து செல்லும் பசுமையை,காவிரியை பார்த்துக்கொண்டிருந்தது. நான் விரும்புவது இந்த மன சஞ்சலமின்மையை தான். ஒரு சிட்டுக்குருவி ஒரு மரக்கிளையில் தன் இயல்பை மறந்து ‘சிவனே’ என்று அமர்ந்திருப்பதை போன்றது. எழுதத்தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில் நான் அகஅளவில் வெகுவாக மாறியிருக்கிறேன் என்பதை இந்த விழா எனக்கே சொல்லியிருக்கிறது. எனக்கு இலக்கியம் எத்தனையோ விஷயங்களை அளித்திருக்கிறது. என் இயல்பு தெரிந்து இலக்கியத்தை நம்பியே அய்யா புத்தகங்களை என் கைகளில் தந்திருக்கிறார்.

நான் வெளியில் செல்வது அரிது. ஒரு சொல்லை மீற முடியாமல்தான் விழாவிற்கு வந்தேன். அந்த சொல்லிற்கு எப்போதும் என் அன்பு.

அன்புடன்,

கமலதேவி

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழாவுக்கு 2012ல் வந்திருந்தேன். இப்போது பத்தாண்டுகளுக்குப் பிறகு வருகிறேன். இப்போதைய விழா மிகச்சிறப்பாக வளர்ந்துவிட்டிருக்கிறது. மிகமிக நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு இலக்கியத் திருவிழா மாதிரியே இருக்கிறது. இன்று தமிழிலக்கியத்திற்கு இடமுள்ள ஒரே இலக்கியத் திருவிழா இதுதான் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் நடந்த ஆங்கில இலக்கிய விழாவனா ஹிந்து லிட் ஃபெஸ்டும் நின்றுவிட்டது. ஸ்பான்ஸர்கள் இல்லாமல்.

ஆனால் 2012 ல் இருந்த அதே ஸ்பிரிட் இப்போதும் உள்ளது. அன்றும் ஊக்கமாக இளைஞர்கள் அலைந்துகொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் இலக்கியப்பேச்சுகளாக இருந்தது. இன்றைக்கும் அதைத்தான் பார்க்கிறேன். அதே வேகம். மெக்கானிக்கலாக எதுவுமே இல்லை. ஏராளமான துடிப்பன இளைஞர்கள். புதிய புதிய எழுத்தாளர்கள். நாஞ்சில்நாடன், தேவதேவன், தேவிபாரதி, சு.வேணுகோபால் போன்ற சீனியர்களுடன் அவர்கள் உரையாடிக்கொண்டே இருந்தார்கள். மிகச்சிறப்பான நிகழ்வு. என் வாழ்த்துக்கள்

எஸ்.தேவநாராயணன்

முந்தைய கட்டுரைதர்பாரி ராகம்- வெங்கி
அடுத்த கட்டுரைவடதிருமுல்லைவாயில் புராணம்