விஷ்ணுபுரம் விழா,கடிதம்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

அன்புள்ள ஜெ

கடந்த வெள்ளியிரவு ரயிலேறி சனிக்கிழமையன்று விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். மீண்டும் நேற்றிரவு இரயிலில் பயணித்து இன்று செவ்வாய் காலை வீடு திரும்பியாயிற்று. என் வாழ்நாளில் மேற்கொண்ட முதல் பெரிய பயணம் இதுவே. நாம் ஒரு பயணத்தை செய்திருக்கிறோம் என்ற உணர்வு செல்லும் உள்ள நிலக்காட்சிகள் மனதில் பதிவதால் நிகழ்வது. இப்பயணமோ இரவு ரயிலில் தூக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதால் விஷ்ணுபுரம் விழா கனவு போல இருக்கிறது. இனிய கனவொன்றின் மகிழ்வையும் ஊக்கத்தையும் கலைதலினால் வரும் சிறு துக்கத்தையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது.

சனிக்கிழமை காலையில் அறைக்கு சென்று கிளம்பி நேராக விஜயபாரதி அண்ணா அவர்கள் மட்டுறுத்திய கார்த்திக் பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் அமர்வுக்கு வந்து சேர்ந்தேன். பாலசுப்ரமணியம் அவர்களின் படைப்புகளை படிக்க இயலவில்லை. நான் இறுதி நேரத்தில் ராச லீலாவை வாசித்து முடித்துவிட்டு நட்சத்திரவாசிகள் வாசிக்கலாம் என போட்ட கணக்கு தவறிவிட்டது. எனவே அவரது அமர்வை கவனிப்பதில் சிரமம் இருக்குமென நினைத்திருந்தேன். அப்படி எதுவும் நிகழவில்லை. அவரது படைப்புலகு சார்ந்து சில குறிப்பிட்ட விஷயங்களை அவர் எழுதும் ஐடி களம் சார்ந்து எழுந்த வினாக்களால் உள்சென்ற அமைய முடிந்தது.

பாலசுப்ரமணியத்தின் படைப்பில் ஏன் அடிப்படை வினாக்கள் எழுப்பப்படுவதில்லை என்று ரம்யா அக்கா எழுப்பிய கேள்விக்கு, தன்னை பாதிப்பவற்றையே தான் முடிகிறதென்றும். தான் அதிகமும் மிக சிறிய அன்றாட விஷயங்களாலேயே சீண்டப்படும் ஆளுமை கொண்டவன் என்றும் பதிலளித்தார். இக்கேள்வியை தொடர்ந்து அவரது நட்சத்திர வாசிகள் நாவல் ஐடி துறையை ஒரு காலக்கட்டத்து தமிழ் சூழலை குறியீட்டு ரீதியாக ஒட்டுமொத்தமாக பதிலளிக்குமா என்ற உங்களது கேள்விக்கு ஆம் என நம்புவதாக சொன்னார்.

நட்சத்திர வாசிகள் நாவலின் உருவாக்கம் குறித்து அவர் பேசியது, அடுத்த தலைமுறை இளம்படைப்பாளிகளுக்கான ஒரு படிப்பினை என்றே கொள்ள முடியும். மின்னணு தொழில்நுட்ப துறை குறித்து முன்னர் வெளிவந்த நாவல்களை வாசிக்காது எழுதிய முதல் பிரதியில் ஏறத்தாழ முக்கால் வாசி பகுதிகள் தன் முன்னோடி எழுத்தாளரை ஒத்திருந்தது என்று குறிப்பிட்டார். மேலும் ஐடி துறையில் கிடைக்கும் பணி நிறைவு அனுபவம் குறித்த அவரது புரிதல்கள், புதிதான துறையொன்று தமிழ் கதையுலகத்தில் நுழையும் போது அவர் கையாளும் கலைச்சொற்களுக்கான மொழியாக்கம் சார்ந்த செயல்களின் தன்மை சார்ந்து விவாதம் சிறப்பாக அமைந்தது. இது தவிர தனது நாவல்களில் ஏன் பாலியல் விஷயங்கள், கிளப்கள் பதிவாகவில்லை என்ற வினாக்களுக்கு தான் அத்தகைய அனுபவங்கள் எதையும் காணவில்லை என்று சொல்லியிருந்தார்.

சிறிய தேநீர் இடைவெளிக்கு பிறகு அடுத்து கமலதேவியின் அமர்வு ரம்யா அக்கா மட்டுறுத்துநராக செயல்பட தொடங்கியது. கமலதேவி தன் படைப்புகளின் மைய இழையாக அன்பே இருப்பதாக குறிப்பிடுகிறார். உங்கள் படைப்புலகில் ஏன் இருள் சார்ந்த விஷயங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்ற கேள்விக்கு தான் அன்பில்லாத இருளிலிருந்தே எழுத தொடங்குவதாகவும் ஆனால் அன்புள்ள இடத்திற்கு வந்து சேர்வதாகவும் கூறியிருந்தார். அந்த அமர்வில் ஆரம்பத்தில் கமலதேவி பேச தொடங்கிய போது சாந்தமான ஒருவரின் குரல் போலிருந்தது.

ஆனால் அவர் கண்ணிவைத்த கேள்விகளை எதிர் கொண்ட விதத்தில் அவருக்குள்ளிருந்த துடுக்குத்தனமும் சாமர்த்தியமும் கொண்ட ஒருவர் எழுந்து வந்தார். குறிப்பாக நீங்கள் மனித மையத்தை வலியுறுத்தும் உங்களுடைய எழுத்துகளை பெண்களுக்கு எதிரான எழுத்து என்று கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் காணமுடிந்தது. அவர் அன்பை நிலையானதாக நினைக்கிறாரா என்ற என் கேள்விக்கு நெகிழ்வானது என்று தான் கருதுவதாக பதிலளித்தார். ஒட்டுமொத்தத்ததில் கமலதேவியின் அமர்வு சுவரசியமான ஒன்றாக அமைந்தது.

மதிய உணவு இடைவெளிக்கு பிறகு நண்பன் விக்னேஷ் ஹரிஹரன் மட்டுறுத்த அகரமுதல்வன் அவர்களின் அமர்வு தொடங்கியது. இன்று தீவிரமாக எழுதி கொண்டிருக்கும் ஈழத்தின் இளம்படைப்பாளியான அவரது இவ்வருடத்தியே அமர்வுகளில் சிறப்பான ஒன்று. அவரது படைப்புகளில் பிரதிபலிக்கும் ஓங்கியெழும் சத்தத்தின் தன்மை அந்த அமர்விலும் பிரதிபலித்தது. அது நேர்மையாக இருந்தது எவருக்கும் துறுத்தலை கொடுக்கவில்லை.

அவரது படைப்புலகின் சத்தத்தை தான் பிறந்து வளர்ந்த வாழ்க்கை சூழலில் இருந்து பெற்று கொண்டதாக குறிப்பிட்டார். மேலும் நவீன தமிழிலக்கியம் கூறும் குறைத்து தன்மைக்கு மாற்றாக படைப்பில் வெளிப்படும் சத்தமும் ஒருமுறையாக இருக்கலாம் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். சத்தம் என்பது அவர் படைப்புகளில் போர் பிரச்சாரம் போல் ஒலிக்கிறதே என்ற தங்கள் கேள்விக்கு தான் எப்போதும் போருக்கு எதிரானவன் மட்டுமே. தன்னுடைய சத்தமெல்லாம் போரால் நிகழ்ந்த மானுட அவலத்திற்கான குரல் என்றார்.

உங்களைஎந்த மரபின், எவரின் தொடர்ச்சியாக வரையறுத்து கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு தன்னை நவீன இலக்கிய ஆசிரியர்களின் தொடர்ச்சியாக கருதமால் தமிழ் சைவத்தின் நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகரின் வழித்தோன்றலாக கருதுகிறேன் என்றார். நவீன தமிழிலக்கியமென்றால் பிரமிளை முன்னிறுத்துவேன் என்றார். தன்னை எப்போதும் முதன்மையாக ஒரு சைவனாகவே உணர்வதாக சொன்னார். இழந்து போன அவரின் நிலம் குறித்து காவிய நாவலொன்றை எழுதும் திட்டம் உள்ளதா என்ற உங்கள் கேள்விக்கு ஆம் என்றும் அதற்கு தன்னை தயார்படுத்தி கொண்டுவருவதாகவும் கூறியிருந்தார்.

அடுத்த அமர்வில் மணவாளன் அவர்கள் மட்டுறுத்த மொழிப்பெயர்பாளர் குளச்சல் மு.யூசுப் பங்கேற்றார். தனது பின்தங்கிய வாழ்க்கை சூழலில் இருந்து வாசிப்பின் மேலான தீரா ஆர்வத்தை பகிர்ந்து கொண்டார். அதற்கு உதாரணமாக மலையாளமும் ஆங்கிலமும் படிக்க தெரியாத போதே அம்மொழிகளில் வரும் இதழ்களை வாங்கி தன் சேகரிப்பில் வைத்திருந்ததை கூறிப்பிட்டார். தமிழ் இலக்கியத்திற்கான யூசுப்பின் முதன்மை பங்களிப்பு பஷீரின் நாவல்களே. அம்மொழியாக்கம் குறித்த கேள்விகள், அப்பணியில் ஈடுபட விரும்புபவர்களுக்கும் வாசகர்களுக்கும் அறிதலானவை.

உதாரணமாக மொழியாக்கத்தில் ஒரு கலாச்சாரத்தில் இருந்து மற்றொன்றிற்கு கொண்டு வரும்போது என்னென்ன மாற்றங்களை மேற்கொள்கிறீர்கள் என்ற விக்னேஷின் கேள்விக்கு தான் மாற்றங்களை செய்வதில்லை என்றும் மாறாக முடிந்தவரை பொருத்தமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து இணை வைக்கிறேன் என்றார். இம்மாதிரியான பதில்களை கூர்ந்து கவனித்து உள்வாங்கி கொள்ளுதலின் அவசியம் உள்ளது. மேலெழுந்தவாரியாக மாற்றமும் இணை வைத்தலும் என்று தோன்றலாம். ஆனால் மாற்றம் என்று கொள்கையில் மனம் இயல்பாகவே தனக்கு சாதகமான வடிவத்தில் பிறமொழி படைப்பை வளைத்து மொழியாக்கம் செய்யும் தன்மையை பெற்று விடுகிறது என்று கொண்டால் நன்று.

அவர் கையாளும் அரபு சொற்களை குறித்து பேசுகையில் முடிந்தவரை தான் தமிழ் சொற்களையே கையாள்வதாகவும் அவற்றை சங்கத்தமிழில் இருந்து கொணர்வதால் சற்று வித்தியாசமாக தோன்றுவதாக கூறினார். மொழியாக்கத்திற்கான படைப்புகளை தேர்வு செய்தல் குறித்து சொல்லுகையில் தன்னுடையது புறவயமான அளவுகள் இல்லையென்றும் இதுவரையிலான தன் வாசிப்பு ரசனையிலான அகத்தேர்வே என்று முன்மொழிந்தார்.

திருடன் மணியன் பிள்ளை போன்ற நூல்களை ஏன் மொழிப்பெயர்கிறீர்கள் என்று வினவிய போது அவை தான் கனவில் மட்டுமே செய்யும் செயல்களை பார்க்கும் பரவசத்தை அளிப்பதால் செய்கிறேன் என்றார். மலையாளத்தின் முக்கிய ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை மொழியாக்கம் செய்வது குறித்த தங்கள் கேள்விக்கு அவை தனக்கு மறக்கவில்லை என்றும் அவற்றை செய்யும் திட்டம் உள்ளது என்றும் கூறினார்.

மாலை தேநீர் இடைவெளிக்கு பிறகு கார்த்திக் புகழேந்தி அவர்களின் அமர்வு புதுவை தாமரைக்கண்ணன் மட்டுறுத்த தொடங்கியது. புகழேந்தியின் அமர்வில் முக்கியமாக என்னை கவர்ந்தது, தனக்கு இருக்கும் ஊசலாட்டங்களை வெளிப்படையாக முன்வைத்தமை. இதற்கு சான்றாக அவரது கதைகளில் கதைச்சொல்லலுக்கு நிகராகவே தெரிந்த தகவல்கள் அனைத்தையும் கொட்டிவிடும் தன்மை மிகுந்து இருக்கிறேதே என்ற ரம்யா அக்காவின் கேள்விக்கு ஆம் தன்னிடம் தொடர்ச்சியாக அந்த ஊசலாட்டம் இருக்கிறது என்றும் முன்பை விட இப்போதும் கட்டுப்படுத்தி ஒழுங்காக்கியும் வருகிறேன் என்று சொன்னார். அதே போல வற்றாநதி தொகுப்பு குறித்து எழுந்த கேள்வியின் போது தான் எழுத வந்த பின்புலத்தை பகிர்ந்துகொண்டார்.

2011 ஆம் ஆண்டு வாக்கில் தான் எழுத தொடங்கிய காலத்தில் ஏடிம் இயந்திர காவலர் பணியில் இருந்ததையும் அப்போது தனக்கு முறையான இலக்கிய பரிச்சியம் இல்லாத காலக்கட்டமாதலால் பொது ரசனை கதைகளை எழுதி வந்ததையும் அது தன் வளர்ச்சியில் வேகத்தடையாக அமைந்ததையும் குறிப்பிட்டார். நாட்டுப்புற இலக்கியம் மற்றும் கள ஆய்வுகளில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்திற்கான காரணங்களை வினவியபோது இயல்பாகவே சிறு வயதில் தனக்கு கதை கேட்பதன் மீதான ஆர்வம் இருந்ததால் அத்துறை பக்கம் சென்றதாகவும் ஆனால் அதை அதி தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அவருடைய சிந்தனை இடதுசாரி குரல் ஒலிக்கிறதே என்ற வினாவிற்கு தனக்கு அரசியலியக்கங்கள் வழி அச்சிந்தனை அமையவில்லை என்று சொன்னார். வாழ்க்கையில் இருந்து அவர் பெற்றுக்கொண்ட பார்வைகள் தன்னை இடதுசாரி சிந்தனை கொண்டவனாக வெளிக்காட்டுகின்றன என்றார்.

அமர்வின் இறுதி கேள்வியாக ராஜகோபாலன் சார், கி.ரா அவரது வாழ்வில் செலுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார். ஆய்வாளர் கழனியூரன் அவர்களின் வீட்டில் தனக்கு கிடைத்த வேலையின் அவரது மிகப்பெரும் நூலகத்தை பயன்படுத்தி கொள்ள கிடைத்த வாய்ப்பு மறக்க முடியாதது. அங்கே தான் முதன்முதலில் கதைசொல்லி இதழை வாசித்தேன். கழனீயூரன் அவர்கள் கி.ரா விடம் பேசி அவ்விதழை மீள கொண்டு வர ஏற்பாடு செய்தார். அப்பணிக்கு தனக்கு கிடைத்தது பெரும் அறிதலை தந்தது. முதன்மையாக தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளை படிக்கும் வாய்ப்பும் அவர்களை நேரில் சென்று சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது. இக்காலத்திலேயே எனக்கு கி.ரா வுடன் நெருக்கம் ஏற்பட்டது. தாத்தா தான் இன்றுள்ள தன் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார் என்று சொல்ல வேண்டும். அவரிடமிருந்து தான் தனக்கு முறையான இலக்கிய பரிச்சியம் ஏற்பட்டது என்று தன் நன்றியுணர்வை மேடையில் நினைவுகூர்ந்தார்.

அன்றைய நாளின் இறுதி அமர்வு யோகேஸ்வரன் அண்ணா மட்டுறுத்த மூத்த பெண்ணெழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களுடன் நிறைவுற்றது.

வெண்ணிலா அவர்களின் அமர்வு பெரிதும் அபுனைவும் புனைவும் சார்ந்த கேள்விகளலான சுவாரசியம் நிறைந்த ஒன்றாக அமைந்தது. அவரது படைப்பில் புனைவுக்கு நிகராகவே அபுனைவு சார்ந்தும் பெரும்பகுதி வந்துள்ளது பதிப்பு பணியில் அனந்தரங்கம்பிள்ளையின் டைரி குறிப்புகளை பதிப்பித்தது குறிப்பிடத்தக்கது.

போகன் சங்கர் சார், கங்காபுரத்தில் வரும் ஹிரண்ய கர்ப்பம் என்ற சடங்கின் அர்த்தத்தை எப்படி நேரெதிராக மாற்றலாம் என்ற கேள்வியை எழுப்பினார். அதனை தொடர்ந்து நீங்களும் டி.டி.கோசம்பியின் ஆய்வுகளை சுட்டிக்காட்டி ஹிரண்ய கர்ப்பம் என்பது பாரம்பரியமாக மறுபிறப்பு இன்மைக்காக செய்யப்படுவது, சென்ற நூற்றாண்டு வரைக்கும் கூட திருவனந்தபுரத்தில் நடைப்பெற்றதை சுட்டி காட்டினீர்கள். இந்நிலையில் அதை எப்படி மாற்றலாம் என்ற கேள்விக்கு முழுமை ஏற்பை தருமளவு பதில் அமையவில்லை. அந்த அமர்வின் சூடான ஒருபகுதியான இருந்தது.

இது தவிர, அவர் தற்போது எழுதி கொண்டிருக்கும் நீரதிகாரம் குறித்து சொன்னவை, அபுனைவுகளை வாசிக்கவோ எழுதவோ சுவரசியமான வழிமுறைகளை எடுத்து காட்டின. முதன்மையாக அத்தொடர் பெரியார் அணை பற்றிய தகவல்களால் நிரம்பியது என்றாலும் அதன் உருவாக்கத்தில் பங்கு கொண்ட வாழ்க்கை பின்னணியை ஆய்வு செய்து எழுதுவதன் ஊடாக முழுமை பார்வையை அடைய முடிகிறது.

புனைவாசிரியன் புனைவல்லாத விஷயங்களை அணுகும் போது கைக்கொள்ளும் முறையாக அதனை பார்க்கலாம். தேவதாசிகளின் வாழ்க்கை முறை நாயக்கர்கள் காலத்திலேயே சரிவடைய தொடங்கியது என்று கூற காரணத்தை வினவுகையில் நாயக்கர் காலத்திலேயே ராஜதாசி என்ற முறை உருவாகியதை கோடிட்டு காட்டினார். வெண்ணிலா அவர்களின் களம் பெரிதும் தரவுகள் மேல் வரலாற்று குறிப்புகளை கொண்டு புனைவுகளையும் ஆய்வுகளையும் நிகழ்த்துவதால் தகவல் சார்ந்த தன்மை கொண்டிருந்தது.

இரவுணவுக்கு பின் செந்தில் சாரின் வினாடி வினா போட்டி தொடங்கியது. முதலில் அது கொஞ்சம் தீவிரமும் இறுக்கமும் நிறைந்ததாக இருக்கும் என்று கற்பனை இருந்தது. ஆனால் விஷ்ணுபுரம் அமைப்பின் எந்த தீவிரமும் பெருங்கொண்டாட்டமாகவே நிகழும் என்பதற்கு அந்நிகழ்வு ஒரு உதாரணம். என்னால் இரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தது ஆச்சர்யம் தான். இரண்டும் எளியவை என்பதே காரணம். பெரும்பாலான கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் விடைகள் வந்த வண்ணம் இருந்தன. கடினமான கேள்விகளும் சில நிமிடங்களில் தீர்க்கப்பட்டு விட்டன. அற்புதமான இரவு போட்டியாக அமைந்தது.

மறுநாள் காலை குவிஸ் செந்தில் சார் மொழிப்பெயர்ப்பாளராகவும் மட்டுறுத்துனராகவும் செயல்பட இலக்கிய முகவர் கனிஷ்கா குப்தாவும் கலச்சார செயல்பாட்டளர் மேரி தெரசி குர்கலங்கும் பங்குபெற்ற அமர்வு நடந்தது. இந்திய அளவிலான இலக்கிய மொழியாக்கங்கள் ஆங்கிலத்தில் எவ்வாறு பதிப்பிக்க படுகின்றன என்பது குறித்த அறிமுக அமர்வாக இருந்தது. இன்று பெரும் பதிப்பகங்களுக்கு மாற்றாக சிறிய பதிப்பகங்களும் எழுந்து வருவது பதிப்பு வாய்ப்புகளை அதிகரித்துள்ளன. நல்ல இலக்கிய பிரதிகளை தேர்ந்தெடுத்து பதிப்பகங்களிடம் கொண்டு சேர்க்க இலக்கிய முகவர்களின் பங்கு இன்றியமையாததாக மாறியுள்ளது.

இலக்கிய முகவரின் வருமானம் என்பது எழுத்தாளரின் ராயல்டியில் இருந்தே பெறப்படுகிறது. எனவே எழுத்தாளருக்கும் முகவருக்குமான சிறப்பாக அமைய வேண்டியுள்ளது. பொதுவான சந்தேகத்திற்கு மாறாக இலக்கிய முகவர்கள் எழுத்தாளர்களுக்கு சார்பானவர்கள். ஏனெனில் அது நீடித்த வளர்ச்சியின் குறியீடாக அமைகிறது. இவற்றை கனிஷ்கா அவர்களின் பேச்சின் சாரம்சமாக தொகுக்கலாம். இது தவிர பதிப்பு பணியில் ஏற்பாடும் வெவ்வேறு பட்ட சந்தேகங்கள் குறித்து அவ்வமர்வு மிக சுவராசியமாக அமைந்தன. கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் இருந்தன. ஆங்கிலம் ஒரு தடையாக அமையவில்லை. மொழிப்பெயர்ப்பும் நன்றாக இருந்தன.

அடுத்த அமர்வு இந்திய ஆட்சி பணியிலிருக்கும் ராம் அவர்கள் மட்டுறுத்த சிறப்பு விருந்தினர் மமங் தாய் பங்கேற்றார். அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளரான மமங் தாய் தான் இந்திய ஆட்சி பணிக்கு தேர்வான காலக்கட்டத்தை குறித்து பேச தொடங்கினார். அவர் இந்திய ஆட்சி பணிக்கு தேர்வான காலத்தில் தென்கிழக்கு மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இந்திய ஆட்சி பணி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று அதனுடைய முக்கியத்துவம் எங்களுக்கு புரிந்திருக்கவில்லை. எனவே அவ்வேலையை விட்டுவிட்டு இதழாளராக பணிபுரிய தொடங்கிவிட்டேன். இன்று ஒருவர் அப்படி ஆட்சி பணியில் இருந்தால் அதை விடாமல் அதன் சலுகைகளை பயன்படுத்தி கொண்டு முன்னேறவே அறிவுறுத்துவேன் என்று ராம் அவர்களை சுட்டிக்காட்டினார். மமங் தாய் அவர்களை அறிமுகப்படுத்துகையில் ராம் அவர்களும் இதுகுறித்து குறிப்பிட்டிருந்தார். இதன் பின் கேள்விகள் எழ தொடங்கின.

லோகமாதேவி டீச்சர் மமங் தாய் அவர்களின் படைப்புகளில் வெளிப்படும் இயற்கை குறித்த அவதானிப்புகள் பழங்குடி தாவரவியலில் சிறப்பு பட்டம் பெற்று பணியாற்றி வரும் பேராசிரியையாக தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் அது குறித்த அவரது பார்வைகளை பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார். இதழாளராக மாறவில்லை என்றாலும் தானும் தாவரவியலாளராக மாறியிருப்பேன் என்று கூறிய மமங் தாய் தன் சொந்த ஊருக்கு செல்கையினூடாக இயற்கையுடன் தன்னை பிணைத்து கொண்ட விதத்தை கூறினார்.

அருணாச்சல பிரதேசத்தில் குறிப்பாக பென்சாங்கை மையப்படுத்தி எழுதுவது குறித்த கேள்விக்கு தான் முதலில் அருணாச்சலம் என்று குறிப்பிட்டே எழுதியதாகவும் பின்னர் பதிப்பாளர் அதன் தனித்தன்மை குறித்து வினவிய போது பென்சாங் என்றும் குறிப்பிட்டார். மேலும் பென்சாங்கில் தான் எழுதுவது தன்னுடைய ஆதி குடியை குறித்தே. அருணாச்சலம் முழுக்க பல்வேறுபட்ட மக்கள் உறுதியான இணைப்பு பாலங்கள் தனித்தனி இனங்களாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். அவரது எழுத்தின் கச்சா பொருட்களை பற்றி கூறுகையில் தன் கிராமத்து உறவினர்களுடனான உறவும் பயணங்களுமே என்று குறிப்பிட்டார்.

மேலும் தன்னுடைய பார்வை வெளியிலிருந்து உள்சென்று பார்ப்பவரின் கோணமாகவே உள்ளார். இது தவிர அண்டை நாடுகளால் சூழப்பட்டு இருப்பது குறித்து வினவப்படுகையில் அதன் அரசியல் நிலையின்மைகளால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வருத்தத்தையும் குறிப்பிட்டார். அப்புறம் அவர்கள் மாநிலத்தில் செய்யப்படும் இலக்கிய விழாக்கள், மொழி வளர்ச்சிக்கான காரணங்கள் என மமங் தாய் அவர்களின் அமர்வு சிறப்பாக நிறைவுற்றது.

மதிய இடைவெளிக்கு நீங்கள் மட்டுறுத்த சாரு நிவேதிதா அவர்களின் அமர்வு தொடங்கியது. இன்றைய பதிவில் நீங்கள் எழுதியது போலவே சாருவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பிசிறில்லாத கேள்விகளால் சிறப்பாக நடைப்பெற்றது அவ்வமர்வு. சாரு அவரின் படைப்புகளின் மொழி போலவே பட்டும்படாமலும் சுற்றி வளைத்து குழப்பமூட்டும் வகையில் பதிலளித்த படி இருந்தார். அவர் இவ்வகை படைப்பிற்கு வருவதற்கான காரணம் என்ன என்று வினவுகையில் அது தன்னை குறித்த ஆவணப்படத்தில் உள்ளது என்று சொன்னவர் அதோடு விடாது இக்கேள்விக்கு என்னை விட ஜெயமோகனே நல்ல பதில் கொடுப்பார் என்றார்.

இப்படியாக அவரது பாணி தொடர்ந்தது. இதேபோல உங்களுடைய ஔரங்கசீப் நாவலின் பார்வையில் மட்டும் ஒரு ஒருங்கிணைவு தன்மை உள்ளதே என்ற கேள்விக்கு நினைவில் குறித்து கொண்டேன், தளத்தில் எழுதுகிறேன் என்று விட்டார். உங்கள் படைப்பில் தாக்கத்தை செலுத்திய தமிழ் படைப்பாளிகள் என்ற வினாவுக்கு ஓரிரவு தேவைப்படும் பதிலளிக்க என்றார். அவரது படைப்புகளின் கட்டமைப்பு குறித்து வினவுகையில் அதன் உள்ளோட்டம் நனவிலியாலும் திருத்தம் பிரக்ஞையுடனும் மேற்கொள்ளப்படுகிறது என்றார். சாருவின் அமர்வு சாருவிய பதில்களாலும் ஜெ விய கேள்விகளாலும் சிறப்புற அமைந்தது என்றால் இது ஒரு சாருவிய பாணியிலான வரியாக அமைந்து விடுகிறது.

இந்த அமர்வுகளில் இளம் படைப்பாளிக்களுக்கான அமர்வுகளில் அளிக்கப்பட்ட சில பதில்கள் விழாவிற்கு முன்னதாக தளத்தில் வெளியான விஷால் ராஜா அவர்களின் கட்டுரையின் விமர்சனங்களுக்கு சான்று கொடுப்பது போல் இருந்தன. இவ்விடத்தில் அது குறித்து விவாதிக்க இயலாது. ஆனால் அவ்விமர்சன கட்டுரையின் மேலான விவாதங்கள் நிக்ழ்வது அவசியம் என்று மட்டும் படுகிறது. (இடைவெளியும் தொடர்ச்சியும்- விஷால் ராஜா )

அடுத்து ஐந்தரை மணி அளவில் சாரு நிவேதிதா குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. அன்றைய நிகழ்விலேயே சாரு அப்பட உருவாக்கத்தின் இறுதி நேர நெருக்கடியை பற்றி கூறி கொண்டே இருந்தார். சாருவின் நண்பர்களால் எடுக்கப்பட்ட படம், அவரின் படைப்புலகை கச்சிதமாக பிரதிபலிப்பதாக அமைந்தது. சில விடுபடல்கள் இருந்தன. அவை சீர்மை செய்யப்பட்டு வெளியிடப்படும் என அராத்து சாருவின் தளத்தில் எழுதியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். மற்றபடிக்கு சாருவின் ஆவணப்படம் அவரை போல இருந்தது.

ஆவணப்பட திரையிடலுக்கு பின் விழா நிகழ்வு விரைவாக தொடங்கியது. சாரு குறித்த உரைகளை இங்கே சொல்ல அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஒரு தமிழ் இலக்கிய வாசகனாக ஸ்ருதி டிவி கபிலன் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். இத்தகைய ஒவ்வொரு விழாவின் உரையும் தமிழிலக்கியத்திற்கு ஒரு பெருங்கொடை.

விழாவிற்கு பின் இறுதியாக மேடை புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்பாவிடம் அடம்பிடித்து கூட்டி வர சொல்லி எடுத்து கொண்டேன். பின்னர் வெவ்வேறு நண்பர்களை சந்திக்க முடிந்தது. சந்திக்க நினைத்து தவறியவர்களும் உண்டு. விஷ்ணுபுரம் விருது விழாக்களில் இரவு கொண்டாட்டமான உங்கள் பேச்சை கேட்க வர இயலவில்லை. மறுநாள் ஜெ இருப்பார் என்று நினைத்தது தவறாக போய்விட்டது. இல்லையெனில் அன்றிரவே நானும் வந்து சேர்ந்திருப்பேன். நீங்கள் காலையில் கிளம்பும் செய்தியை கேட்டப்பின் என் தங்கும் அறை வரை ஒலித்த நண்பர்களின் சிரிப்பொலி ஏக்கத்தை வரவழைத்தது. அடுத்த முறை தவற விடக்கூடாது என முடிவு.

அடுத்த நாள் குஜராத்தி சமாஜில் தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைக்கு நண்பகல் வரைக்கும் ஏவி மணிகண்டன் அவர்கள் நிகழ்த்திய புகைப்பட கலை குறித்த உரை சிறப்பாக அமைந்தது. புகைப்பட கலைக்கும் ஓவிய கலைக்குமான தொடர்புகள், ஒன்று மற்றொன்றை பாதித்த விதம், ஒரு கலை அணுகுவதற்கான கலச்சார பின்னணியும் அதன் மூலம் கிடைக்கும் கலையனுபவமும் என்று விரிவாக்க அமைந்தது. மதிய பிறகு நண்பர்களை சந்தித்து பேசியவாறு அவரவர் நேரத்திற்கு ஏற்றவாறு கிளம்பி சென்றோம்.

இந்த பயணம் இத்தனை இனிமையாக சாத்தியப்பட்டது என் அப்பாவிற்கு முதற்பொறுப்பு உண்டு. அவருக்கு என் நன்றிகள் சொன்னால் அது பொருத்தமற்றது. அவர் மகிழும் வண்ணம் சிறப்புற என்னை தகவமைத்து கொள்வதே அவருக்கு என் நன்றியாக இருக்கும். எல்லா பிள்ளைகளை போலவே எனக்கும் அப்பாவின் சிந்தனையோட்டத்துடன் மன விலக்கம் உண்டு. ஆனாலும் அவரே என் அடித்தளம். அங்கிருந்தே நான் எழுந்து பறக்கும் தூரங்கள் சாத்தியப்படுகிறது. மேலும் என் அம்மாவும் தம்பியும் முக்கியமானவர்கள். அப்பாவின் தயக்கத்தை களைய எனக்கு பெரிதும் பக்கபலமாக இருப்பது அம்மாவின் சொற்கள். குடும்பத்தில் இருந்து பெற்று கொண்டே இருக்கிறேன். அவர்களுக்கு என்று எதையாவது என்னால் கொடுக்க முடியுமெனில் அறிவில் ஒளி கொள்ளுதல் மட்டுமே.

அடுத்ததாக நண்பர்களின் அன்பும் உதவியும் நன்றிக்குரியவை. முதலாவதாக தளத்தில் வந்த என் கடிதத்தை பார்த்துவிட்டு பயணத்திற்கான விதை நட்டவர் கணேஷ் பெரியசாமி அண்ணா. அவரது ஊக்கத்தின் அடிப்படையிலேயே வீட்டில் இப்பேச்சை எடுத்தேன். வீட்டில் சம்மதம் கிடைத்த பின்னரும் ரயில் பயண செலவும் கிண்டிலில் விருந்தினர்களின் நூலை வாங்கி தந்தும் உதவினார். அவருக்கு என் நன்றிகள்.

உடன் வந்த நண்பர்களான விக்னேஷ், கமலநாதன்,விஜயபாரதி அண்ணாக்களுக்கு நன்றி. இரண்டு நாட்களுக்கும் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து காலையில் ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வந்த ஆனந்த அண்ணாவிற்கு அன்பும் நன்றியும், புத்தகங்கள் வாங்கி கொடுத்த மனோபாரதி அக்கா மற்றும் புதுவை உமா வாசகர் அவர்களுக்கும் நன்றிகள். சாருவின் தனிவழி பயணி கட்டுரை தொகுப்பை எனக்கென எடுத்து வந்திருந்த ரம்யா அக்காவிற்கு அன்பு.

சக்திவேல்

இப்படியாக என் நன்றி பட்டியலை சொல்ல வேண்டுமென்றால் அதுவே ஒரு பக்கத்திற்கு சென்று விடும். எனவே இங்கே நிறுத்தி கொள்ளலாம். விஷ்ணுபுரம் அமைப்பாளர்களுக்கு நன்றிகள். சிறப்பான தங்குமிடமும் உணவும் அருமை. இத்தகைய கனவு விழா ஒன்றிற்கான மைய விசையாக இருக்கும் உங்களுக்கு அன்பும் நன்றியும். உங்கள் மாணவனாக என் அர்ப்பணிப்பை வழங்குகிறேன் ஜெ.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைஇவான் கார்த்திக் எழுதிய ‘பவதுக்கம்’
அடுத்த கட்டுரைஜி.நாகராஜன்