புனைவு வாசிப்பு குறைந்துள்ளதா?

’தொண்ணூறுகளின் இறுதிகளில் என் ஆர்வம் நாவல்களில் இருந்து அரசியல் மற்றும் சரித்திரத்தின் பக்கம் திரும்பிய போது தமிழ் நாவலும் தன் முகத்தை மெல்ல மெல்ல மாற்றிக்கொள்ளத் துவங்கியது , நவீனத்துவத்தின் காலம் முடிவடைந்துவிட்டதாகச் சொல்லிப் பின்னவீனத்துவப் படைப்பாளிகளைச் சிற்றிதழ்கள் முன்னிறுத்தின . அப்போது வாசிக்கக் கிடைத்த படைப்புகளில் பெரும்பாலானவற்றுடன் என்னால் ஒன்றமுடியவில்லை , நாவல் வாசிப்புப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோனதற்கு எனக்கு அப்போது வாசிக்கக் கிடைத்த சில தமிழ்நாவல்களும் காரணமாக இருக்கலாம் , யாரையும் குறை சொல்வது என் நோக்கமல்ல , என்னைப்போலவே ஏராளமான வாசகர்கள் , தமிழ்நாவல் வாசிக்கும் வழக்கத்திற்கு விடை சொடுத்ததைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இதன் தீவிரம் சற்றே புரியவரும்.’என்கிறார் பா.ராகவன் பின்கதைச்சுருக்கம் நூலில் .

 

[பா.ராகவன்]

ஒரு சமூகத்தில் புனைவு வாசிப்பு என்பது ஒரு இயக்கமாக நிலைநிறுத்தப்படவேண்டும் என்று இன்று நினைக்கிறேன். மெல்லமெல்ல உலகமெங்கும் அபுனைவுகள் வாசிப்பை நிறைத்து வருகின்றன. தமிழிலும் அப்படித்தான் என்பதைக் கிழக்கைப் பார்த்தாலே அறியலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால்கூட நேர் எதிரான நிலை இருந்தது. அபுனைவை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்தது. புனைவு வாசிப்பு ஒரு சமூகத்தை அன்றாட யதார்த்தத்தில் இருந்து மேலே கொண்டு செல்கிறது. கனவு காணச்செய்கிறது. அதன் மூலம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. இலட்சியங்கள், உன்னதங்கள் அனைத்துமே அந்தக் கனவுத்தளத்தைச் சார்ந்தவைதான் என்கிறார் ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=11394

 

ஊட்டியில் இருந்து திரும்பும்போது நண்பர் ஒருவர்,தான் அதிகமும் படிப்பது அபுனைவு மட்டும்தான் , ஜெயமோகனது புனைவுகளை மட்டுமே படிக்கிறேன் , அதுவும் அவரது அபுனைவுகளால் கவரப்பட்டதால் என்றார் . நான் புனைவு ,அபுனைவு இரண்டையும் படிக்கிறேன் , ஆனால் புனைவுதான் என் தேர்வு ,புனைவு வாசிப்பு குறைந்துள்ளதா ?அதற்குப் புரியாமல் எழுதும் போக்குதான் காரணமா ?

அரங்கசாமி

****

அன்புள்ள அரங்கசாமி, புனைவு வாசிப்பு குறைந்துள்ளதா என்றால் ஆம் என்பதே அதற்கான பதில்.  புனைவு வாசிப்பை நிலைநாட்டியாகவேண்டிய கட்டாயம் உள்ளது என்பதும் உண்மை. ஆனால் காரணங்கள் இங்கே சொல்லப்பட்டவையல்ல என்றே எனக்குப்படுகிறது.

சென்றகாலங்களில் வாசிக்கப்பட்ட புனைவை இரு பிரிவாகப் பிரிக்கலாம். இலக்கியம், கேளிக்கை எழுத்து. கேளிக்கைக்காக வாசிப்பது என்பது மெல்ல மெல்ல இல்லாமலாகியது. எழுபது எண்பதுகளில் பெண்கள் நூலகங்களில் இருந்து புத்தகங்கள் கொண்டுவந்து சுழற்சி முறையில் வாசிப்பது பரவலாக இருந்தது. தொடர்கதைத் தொகுப்புகள் மிக அதிகமாகச் சுற்றிவந்தன. அப்போது சினிமா முக்கியமான ஊடகமல்ல. பல ஊர்களில் சினிமா அரங்கு இல்லை. ஒருவர் மாதத்துக்கு ஒரு படம் பார்ப்பதே அதிகம். தொலைக்காட்சி இல்லை. ஆகவே வாசிப்பே ஒரே முக்கியமான கேளிக்கை.அடுத்தபடியாக ரேடியோ. அதன்பின் கிராமியக்கலைகள், கோயில்கலைகள்.

 

[லா.ச.ராமாமிருதம்]

கேளிக்கைக்கான வாய்ப்புகள் தொண்ணூறுகளை ஒட்டி விஸ்வரூபம் கொண்டன. தொலைக்காட்சி முக்கியமாக. அதை ஒட்டிக் கேளிக்கைக்காக வாசிப்பதேஇல்லாமலாகியது. ஆறு லட்சம் விற்ற குமுதம் இரண்டு லட்சமாகியது. நாலரை லட்சம் விற்ற விகடன் ஒன்றரைக்கு இறங்கியது. இப்போது இவை என்ன சொல்லிக்கொண்டாலும் மூன்று லட்சம் பிரதிகளுக்குள்தான் விற்கின்றன.

வாசிப்பு என்ற கேளிக்கை மறைந்தபோது கேளிக்கை எழுத்தாளர்களும் மவுசிழந்தனர், அன்று பெரிய நட்சத்திரங்களாக இருந்த இந்துமதி சிவசங்கரி,புஷ்பாதங்கத்துரை,சுஜாதா,பாலகுமாரன் எனப் பலர் சட்டென்று மங்கிக் காணாமலாயினர். வார இதழ்களில் கதைகள் இல்லாமலாகின.

ஆனால் இதைஒட்டி இலக்கிய வாசிப்பு பெருகியதென்பதே உண்மை. தொண்ணூறுகள் வரை இலக்கியப்புனைவுகள் ஒருவருடத்தில் பத்துப் பதினைந்து நூல்களே வெளிவரும். அவையும் 600 பிரதிகளே அச்சிடப்படும். [க்ரியா போன்றவை 300 பிரதிகளே அச்சிட்டன] 400 பிரதிகள் நூலகம் போகும். மீதி 200 பிரதிகள் விற்க ஐந்து வருடம் ஆகும். லா ச ரா , தி ஜா போன்ற நட்சத்திரங்களுக்கே இந்தக்கதிதான். அன்றுவெளிவந்த நூல்கள் எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை மறு அச்சு வந்தன என்று பார்த்தால் இது தெரியும். பல முக்கியமான நூல்கள் முதல்பதிப்பு முடிய எட்டு பத்து வருடங்களாகியிருக்கின்றன.

தமிழில் வணிக எழுத்தின் நட்சத்திரங்களான கல்கியும் சுஜாதாவும்  அன்று தங்களுக்கான  பிரம்மாண்டமான வாசிப்புலகை உருவாக்கிக்கொண்டார்கள்.  ஆனால் இலக்கியமேதைகளான லா.ச.ராமாமிருதமும் அசோகமித்திரனும் உண்மையில் இப்போதுதான் வாசகர்களையே அடைகிறார்கள். அப்படியானால் புனைவுவாசிப்பு மாறியிருக்கிறது என்றே பொருள், குறைந்திருக்கிறது என்றல்ல.

[அசோகமித்திரன்]

அதாவது இலக்கியப்புனைவு வாசிப்பு மிகமிகக் குறைவாகவே இருந்தது. வணிகப்புனைவு வாசிப்பு குறைந்தது,இலக்கியம் கவனம்பெறக் காரணமாக அமைந்தது.சுபமங்களா,இந்தியாடுடே,தினமணி [தமிழ்மணி] இதழ்களின் பங்களிப்பால் இலக்கிய வாசிப்பு பெருகியது. ஒரே வருடத்தில் நூலக உத்தரவு இல்லாமல் 1500 பிரதி விற்ற விஷ்ணுபுரம்,விற்பனையில் தமிழில் ஒரு பெரும் சாதனை. அதற்குக் காரணம் இந்த மாறிய சூழலே. இன்று வருடத்துக்கு இலக்கிய புனைவுகள் 300 நூல்களாவது வருகின்றன. அவை இரண்டுவருடங்களுக்குள் விற்பனையும் ஆகின்றன.

ஆக இலக்கியவாசிப்பு குறையவில்லை, பலமடங்கு கூடியிருக்கிறது. வணிகப்புனைவு குறைந்துவிட்டது இலக்கியப் புனைவு பெரும் எண்ணிக்கையில் வரமுடியாது. வரவேண்டுமென்றால் பெரிய கலாச்சார மாறுதல்கள் நிகழவேண்டும். ஆகவே அது ஓர் எல்லைக்குள்தான் உள்ளது. ஆனால் பிரசுர உலகம் வளர்கிறது. நூல்கள் தேவைப்படுகின்றன. அந்த இடத்தைஅபுனைவுகள் நிறைக்கின்றன. ஆகவே அபுனைவுகள் கொஞ்சம் அதிகரித்தன.

[சுஜாதா]

ஒரு வாசகன் தரமற்ற புனைவை விடத் தகவல்களைச் சொல்லும் அபுனைவுகளை விரும்புவான் என நான் நினைக்கிறேன். மேலும் 90கள் முதல் உருவான உலகமயமாக்கம் நமக்கு உலகை நோக்கிய கவனத்தை உருவாக்கியது. உலகத்தை அறியும் விழைவு,அபுனைவுகள் மீதான பிரியத்தை அதிகரித்தது. ஆனாலும் அபுனைவுகள் இன்றும் சதவீத அளவில் குறைவே. கிழக்கை வைத்துச் சொல்லக்கூடாது. கவிதா அல்லது வானதி அல்லது கலைஞன் போட்ட அபுனைவுகள் எவ்வளவு? பத்து சதவீதம் கூட இருக்காது.

[கல்கி]

நமக்கு இன்னும் நல்ல அபுனைவுகள் உருவாகவில்லை. சாக்ரடீஸ் பற்றித் தமிழில் எத்தனை நூல்கள் உள்ளன என்று ஒருமுறை சச்சிதானந்தன் கேட்டார். நான் இரண்டு நூல்கள் என்றேன். [பிரேமா பிரசுரத்தின் அறிமுக நூல், சாமிநாதசர்மா எழுதிய நூல்] ஆனால் இருபது நூல் இருந்தாகவேண்டும் என்றார் சச்சிதானந்தன். எல்லாப் பருவத்தினருக்கும் எல்லாக் கோணங்களிலும் எழுதப்பட்ட நூல்கள்.

இந்தக் காலகட்டத்தை உருவாக்கிய மேதைகள் கார்ல் மார்கஸ் முதல் ஹாக்கின்ஸ் வரை எவரைப்பற்றியும் அசலான நல்ல நூல் தமிழில் இல்லை. ஆம், நாம் இன்னும் அபுனைவு எழுதவே ஆரம்பிக்கவில்லை. இன்னும் நூறுமடங்கு நூல்கள் நமக்குத் தேவை. நல்ல அபுனைவுகள்,புனைவுக்கு உதவிகரமானவையே. அவை புனைவுவாசிப்பை இல்லாமலாக்குவதில்லை. புனைவுக்கான மனநிலையே வேறு.

கேளிக்கைக்கான எழுத்து இந்த இடைவெளிக்குப்பின் திரும்பி வரும் என்றே நான் நினைக்கிறேன். அது இனிமேல் இதழ்களை நம்பி இருக்காது, அவ்வளவுதான். கேளிக்கை வாசிப்புக்கு ஒரு சமூக தேவை உள்ளது.  கேளிக்கைபுனைவுகள் வாசிப்பு என்ற இயக்கத்தை சமூகத்தில் நிலைநிறுத்துகின்றன.  அதனூடாகவே இலக்கியத்திற்கும் வாசகர்கள் வருவார்கள். கேளிக்கைபுனைவு முற்றிலும் அற்றுப்போனால் இலக்கியமும் தன் இடத்தை இழக்கலாம்.

ஆகவே தரமான கேளிக்கை எழுத்தை இலக்கியத்திற்கான படிக்கட்டுகளாகக் கொள்ளலாம்.தமிழில் அதற்கான தேவை உள்ளது.

 

ஜெ

குழும விவாதத்தில் இருந்து

முந்தைய கட்டுரைசென்னை பற்றி…
அடுத்த கட்டுரைராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்?