விஷ்ணுபுரம் விருதுவிழா 2022, கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

விஷ்ணுபுரம் விழா 2022

எழுத்தாளர் ஜெ.மோ அவர்களுக்கு,

நலமறிய ஆவல் வணக்கம், என் பெயர் ஹரிராமகிருஷ்ணன் நான் முதுகலை இயற்பியல் முடித்து CSIR NET, GATE போன்ற போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறேன். கடந்த சனி ஞாயிறு அன்று நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்குபெற்றேன். எனக்கு புது விதமான அனுபவத்தை ஏற்படுத்தியது. அதை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.

முதலில் நான் என் வாசிப்பு அனுபவத்தை உங்களிடம் சொல்கிறேன். என் தந்தை மூலமே புத்தகம் வாசிப்பு அனுபவம் தொடங்கியது. ராஜேஷ்குமார், சுபா , பட்டுக்கோட்டை பிரபாகரன் என்று தொடங்கி, பாலகுமாரன், சு.வெங்கடேசன் , என்று போய் பிறகு ஜெயகாந்தன், கி.ரா, காதுகள் வெங்கடேசன், அசோகமித்திரன். தி.ஜா என்று இப்போது பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமானவர் சுனில் கிருஷ்ணன் அண்ணா தான். அவரின் அறிமுகம், மரப்பாச்சி இலக்கிய வட்டம் கூடுகை இவை தான் என் வாசிப்பு பாதையை மாற்றியது. அதற்கு முன்பு வரை எனக்கு இலக்கியத்தில் இவ்வளவு படைப்புகள் இருக்கு என்று தெரியாது. தங்களை எனக்கு சினிமா வசனகர்த்தாவாகவும், சில சிறுகதைகள், நாவல்களின் ஆசிரியராகவும், அப்ப அப்ப சர்ச்சைகளில் சிக்கி கொள்பவராக , சர்ச்சையை உருவாக்குபவராக மட்டுமே தெரியும். சுனில் அண்ணா பரிந்துரைத்த உங்களின் சில சிறுகதைகள், சில நாவல்களை வாசித்த பிறகு உங்கள் மீதுள்ள அபிப்பிராயம் மாறியது.

இந்த சமயத்தில் தான் சுனில் அண்ணா விஷ்ணுபுரம் செல்வோமா என்று அழைத்தார். மறுமொழி ஏதும் சொல்லாமல் சம்மதித்தேன். அப்போது இருந்தே ஒரு ஆர்வம், ஒரு பரபரப்பு எனக்குள் தொற்றிக்கொண்டது. 16.12.2022 இரவு கோயம்பத்தூர் பேருந்து ஏறியபோது அது இன்னும் அதிகமானது.

சனிக்கிழமை காலை டிபன் உண்ணும் போது எனக்கு நேரே ஒரு பெரும் கூட்டத்திற்கு நடுவே உங்களை பார்த்ததும் எப்படி உங்களிடம் பேச ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம், பயம் எழுந்தது.ஒரு காதலன் காதலியிடம் தன் காதலை சொல்லும் முன்பு எப்படி அவனுடைய இதயத்துடிப்பு அவனுக்கு கேட்குமோ அவ்வாறு உங்களிடம் பேச பின்னாடியே அலைந்த போது எனக்கு என் இதயத்துடிப்பு கேட்டது பிறகு அங்கு வந்த பிச்சை என்ற நண்பர் தைரியம் அளிக்க உங்களிடம் வந்து பேசினேன், புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். பிறகு என் பயம் சென்றது. அதன்பின் 5,6, முறை உங்களிடம் வந்து பேசிவிட்டேன்.

சரி இப்போ விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு வருவோம். விஷ்ணுபுரம் பல புது அனுபவங்களை எனக்குள் ஏற்ப்படுத்தியது. பொதுவாக இலக்கியக்கூட்டம் என்று வைத்தால் எங்க ஊர் பக்கம் யாரும் வர மாட்டார்கள். ஆனால் இங்கு வந்த கூட்டத்தை பார்த்தும் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. வாசிப்பை நேசிக்கும் கூட்டம் இவ்வளவு இருக்கா என்று எனக்குள் ஒரு வியப்பை அளித்தது.

குறிப்பாக வினாடி வினா பகுதி. என் வாழ்விலே ஒரு பரிசை கூட வாங்காத என் முதல் வினாடி வினா போட்டி. இவ்வளவு நுட்பமாக கேள்விகளை உருவாக்க முடியுமா இலக்கியத்தில் என்று வியக்க செய்தது. விஷ்ணுபுரத்தில் நடந்த அமர்வுகளில் சில எழுத்தாளர்களின் சில படைப்புக்களை தான் நான் வாசித்து உள்ளேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த அமர்வுகள் என்றால் ம்மங் தய், கமலதேவி, முகமது யூசுப், கார்த்திக் புகழேந்தி இவர்களின் அமர்வுகள். பதிப்பாளர் விஜய வேலாயுதம் அவர்களின் அமர்வு மூலம் பதிப்பாளர்களின் வலி, மற்றும் வேதனையை அறிய முடிந்தது. புத்தகத்தின் மீது உள்ள தீராத காதல் தான் அவரை இன்னும் இயங்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

நிறைவாக சாரு அவர்களின் அமர்வு மற்றும் நிகழ்வுகள். Quite unexpected அவரின் ஓவ்வொரு பதிலும் ஒவ்வொரு வெடி தான். அதனைக்கும் மேலாக அங்கு காண்பித்த ஆவணப்படம். இப்படி பட்ட ஒரு ஆவணப்படத்தை நான் இதற்கு முன் கண்டது இல்லை இனிமேலும் பார்ப்பேனா என்றும் தெரியவில்லை. சாருவின் ஔரங்கசீப் மற்றும் zero degree நாவலை மட்டுமே படித்துள்ளேன். இந்த விழாவுக்கு பிறகு அவருடைய மற்ற சில நாவல்களை படிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். விழாவுக்கு வந்தவர்களில் மிகவும் குறைந்த வாசிப்பு அனுபவம் கொண்டவன் நானாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விழா முடிந்த பிறகு நாம்ம என்னடா வாசிக்கிறோம் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நாம இன்னும் நிறைய வாசிக்கனும் என்ற ஆர்வம் பிறந்தது.

பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் 20-க்கும் மேல் நண்பர்கள் ஆனார்கள். வாசிப்புடன் நிற்காமல் எழுதவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.இந்த விழா முடிந்து பேருந்தில் பயணிக்கும் போது எனக்கு ஒரு கேள்வி பிறந்தது. கரிசல் வாழ்வியலை கி.ரா, பூமணி சொல்லியிருக்கிறார்கள். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் வாழ்வியலை தோப்பில் மீரான், தாங்கள் என்று பலர் பேசி இருக்கிறீங்க. இப்படி ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் இருக்கும் போது, நம் செட்டிநாடு வாழ்வியலை சொல்ல யாரு இருக்கா என்ற கேள்வி தோன்றி, சுனில் அண்ணாவிடம் கேட்டேன். அதற்கு அவர் சொல்லிக்கொள்ளும் அளவு பெரிய எழுத்தாளர்கள் யாரும் இல்லை அதுக்கு தான் மரப்பாச்சி இலக்கிய வட்டம் தொடங்கி இருக்கு, நீங்க எல்லாம் எழுத ஆரம்பித்து தான் அந்த குறையை போக்க வேண்டும் என்றார். அப்பொழுது தான் நாமும் எழுதினால் என்ன என்ற கேள்வி எனக்குள் தோன்றியது.

நான் போட்டி தேர்வுக்கு தயாராகி வருவதால் வாசிக்க நேரம் குறைவாகவே கிடைக்கிறது. IISC, NIT, அல்லதுCUTN போன்ற பெரிய கல்வி நிலையத்தில் PHD-யில் சேர்ந்து ஆராய்ச்சியாளனாக ஆக வேண்டும் என்பது என் இலட்சியம். இப்போது இதனுடன் சேர்த்து புத்தகம் வாசிக்க வேண்டும் , எழுத வேண்டும் என்ற எண்ணமும் பிறந்துள்ளது. கண்டிப்பாக அது நிறைவேறும் என்ற உறுதியுடன் உங்கள் பதில் மற்றும் ஆசிர்வாதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்

உங்கள் அன்பு வாசகன்

சி.ஹரிராமகிருஷ்ணன்

அன்புள்ள ஹரி

போட்டித்தேர்வுக்கு வாசிப்பது இலக்கியவாசிப்பு இரண்டும் முரண்படாமல் பார்த்துக்கொள்ளவும். இப்போதைக்கு குறைந்த அளவுக்கு, ஒரு வாரத்திற்கு சில மணிநேரம் என்னும் அளவில் இலக்கியவாசிப்பு போதும். போட்டித்தேர்வுக்கான வாசிப்பு உடன் நிகழட்டும்.

ஆனால் ஒன்று சொல்வேன். போட்டித்தேர்வுக்கான பாடங்களையே எழுதுங்கள். விரிவாக. அது உங்கள் எழுத்துநடையை மேம்படுத்தும், போட்டித்தேர்வுக்கும் உதவும். போட்டித்தேர்வின் எல்லா விஷயங்களையும் எழுதிக்கொண்டே இருங்கள். பின்னாளில், ஒரு வேலையும் இடமும் உறுதியான பின் விரிவாக எழுதமுடியும்

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைசாகித்ய அக்காதமி, யானை டாக்டர்
அடுத்த கட்டுரைமாம்பழக் கவிசிங்கராயர்