விரியும் கனவுகள்- விஷ்ணுபுரம் 2022

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா முடிந்த மறுநாள் வழக்கமான நான் அந்திவரை இருப்பேன். அது ஓர் இலக்கியக் கொண்டாட்டமாக இருக்கும். இம்முறை முன்னரே கிளம்பவேண்டியிருந்தது. அது பலருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஏ.வி.மணிகண்டன் புகைப்பட – ஓவியக்கலை பற்றி நிகழ்த்திய வகுப்பு அளவுக்கே விரிவான உரையாடல் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என்றனர்.

ஏ.வி.மணிகண்டன் சர்வதேச அளவில் அறியப்படும் கலைநிபுணர். அவருடனான ஓர் உரையாடல் என்பது நம் சூழலில் எளிதாக அமைவது அல்ல. நான் எண்ணும் ஒரு கலாச்சார மையம் என்பது அவ்வண்ணம் எல்லா கலைகளும் ஒருங்கிணையும் ஓர் இடம்தான். திரைப்படம், இசை, ஓவியம் என அனைத்தும் ஒன்றை ஒன்று வளப்படுத்தும் ஒரு கூட்டு உரையாடல் நிகழும் புள்ளி.

விஷ்ணுபுரம் அமைப்பின் நிகழ்வுகளின் உச்ச சாதனையாக நான் எண்ணுவது ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் கவனம். இரவில் எந்நேரம் வந்திறங்கினாலும் எங்கள் விருந்தினர்களை ஒருவர் நேரில் சென்றழைத்து தங்கவைப்பார். ஒருபோதும் அதை ஓர் ஊழியர் செய்ய மாட்டார். ஒரு நல்ல வாசகர்தான் செய்வார். பலசமயம் எழுத்தாளர்கள் சந்திக்கும் முதல் தீவிர வாசகரே அவராகத்தான் இருப்பார்.

அதன்பின் முழுநிகழ்வுக்குப் பின்னர் ஒவ்வொருவரையாக வழியனுப்பி வைப்போம். அதுவும் இலக்கியவாசகர்கள் செய்வதே. விஷ்ணுபுரம் விழாவில் இருந்து கடைசியாகச் சென்றவர் தேவதேவன். அவருடைய ரயில் தாமதமாகியது. 19 ஆம் தேதி நள்ளிரவில் அவர் கிளம்பினார். அது வரை மூன்று நண்பர்கள் அவருடன் இருந்தனர். என்ன செய்தீர்கள் என்று கேட்டேன். அவரை ஓவியர் ஜெயராம் ரயில்நிலையத்தில் வைத்தே ஓர் ஓவியம் தீட்டினார் என்றனர்.

விஷ்ணுபுரம் விருதுவிழா 2010ல் தொடங்கப்பட்ட காலம் முதல் தேவதேவன் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கு தொடக்ககால விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் அமைப்பின் ஏறத்தாழ எல்லா நிகழ்வுகளிலும் அவர் இருப்பார். பெரும்பாலும் ஒரு மௌனப்பங்களிப்பாளராக. ஆனால் அவருக்கென ஒரு சிறு வட்டம் இங்குண்டு.

அவர்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அவர்களும் பெரும்பாலும் அவரைப்போலவே கொஞ்சம் ஒதுங்கியவர்கள். அவரை ஒரு வகையான மறைஞானி என கருதுபவர்கள். எழுத்தாளர், கவிஞர் என வேறெவரையும் பொருட்படுத்தாதவர்களும்கூட. அவர்கள் வட்டத்திற்குள் ஒரு தனி வட்டம். அவர்களை நாடியே அவர் வருகிறார். ஆனால் பேசிக்கொள்கிறார்களா என்றால் அதுவும் பெரிதாக இல்லை.

சாரு நிவேதிதா திரும்பிச்செல்ல விமானம் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஸீரோ டிகிரி ஸ்ரீராமும் காயத்ரியும் செல்லும் வண்டியில் பேசியபடியே திரும்பிவர விரும்பினார். மீனாம்பிகை, ஷாகுல், லெ.ரா.வைரவன், சுஷீல்குமார் ஆகியோர் அறைக்குச் சென்று அவரை வழியனுப்பி வைத்தனர்.

அதேபோல ஒவ்வொரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுக்கும் அவர்களுக்கான வாசகர்கள், சிலர் ரசிகர்கள், உள்ளனர். நாஞ்சில்நாடனுக்கு ஒரு குழு உள்ளது. லக்ஷ்மி மணிவண்ணனுக்கு என ஒரு கூட்டம். அண்மைக்காலமாக போகன் சங்கருக்கு. ஒரு நிகழ்வு முடிந்ததுமே இயல்பாக பாலில் உப்பு விழுந்ததுபோல பிரிந்துவிடுகிறார்கள்.

எல்லா ஆண்டும் குக்கூ- தன்னறம் – நூற்பு அணியின் பங்களிப்பு உண்டு. வாசலில் மலர்க்கோலம் போடுவது உட்பட. நுழைவாயில் கடையும் அவர்களுடையதுதான். இந்த ஆண்டு அவர்கள் நித்ய சைதன்ய யதி படம்போட்ட நாள்காட்டி ஒன்றை வெளியிட்டிருந்தனர். நண்பர் கொள்ளு நதீமின் சீர்மை பதிப்பக அரங்கும் அருகில்தான்.

ஒவ்வொன்றிலும் அந்தக் கவனம் இருந்தது. சிங்கப்பூர் சித்ரா “ஒரு இலக்கிய விழாவிலே இப்டி விருந்து போடுவீங்கன்னு எதிர்பார்க்கலை” என்றார். விருந்தினர்களான கனிஷ்கா குப்தா, மேரி தெரசி குர்கலங், மமங் தாய் மூவருமே அந்த விழாவில் இருந்த இளைஞர்களைப் பற்றித்தான் சொன்னார்கள். இத்தனை தீவிரமான இளைஞர்கூட்டம் இன்று இந்திய மொழிகளில் இலக்கிய அரங்குகளில் தென்படுவதே இல்லை.

ஒவ்வொரு விவாத அரங்கிலும் ஐநூறுபேர் திரண்டு அமர்ந்திருந்தனர். வழக்கமாக இலக்கிய அரங்குகளில் வெளியேதான் கூடிநின்று பேசிக்கொண்டிருப்பார்கள். அது ஒரு மோஸ்தராகவே ஆகிவிட்டது. ஆனால் விஷ்ணுபுரம் அரங்கில் அப்படி வெளியே நின்ற ஒருசிலர் நடுவயது கடந்த பழைய ஆட்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலக்கியச்சூழலில் பெரிதாக ஏதும் செய்யாமலேயே ஆண்டுகளை கடந்து வந்தவர்கள்.

அரங்கில் தெரிந்த அந்த ஆர்வம், அங்கே சம்பிரதாயமாக ஏதும் நிகழவில்லை என்பதனால் உருவாவது. விவாதம் எளிதாக தளம் மாறி வரலாற்றாய்வு, இலக்கியக் கோட்பாடு, ஈழ இலக்கியச் சூழல் என்று சென்றுகொண்டே இருந்தது. ஒரு மணிநேரம் என்பது மிகவிரைவாக ஓடிச்செல்ல அடுத்த அரங்கு தொடங்கியது.

விழாவில் சாரு நிவேதிதா பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுதியாகிய ‘தனிவழிப் பயணி’ வெளியிடப்பட்டது. 11 ஆம் தேதிவரை கையில் கிடைத்த கட்டுரைகளே அதில் இடம்பெற முடிந்தது. 12 அச்சுக்குப்போய் 15 மாலை நூல் தயாராகிவிட்டது. ஆனால் 18 ஆம் தேதிவரை கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. என்னுடைய கட்டுரை நூலில்தான் இடம்பெற்றிருக்கிறது.

இக்கட்டுரைகள் தன்னிச்சையான வாசக எதிர்வினைகளாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தேன். ஏனென்றால் இலக்கியப்படைப்பு கோரும் வாசிப்பு என்பது அதுவே. கல்வித்துறை சார்ந்து, அல்லது அரசியல் சார்ந்து, அல்லது போலிக்கோட்பாடுகளைச்சார்ந்து செய்யப்படும் ‘மூச்சுப்பிடிப்பு விமர்சனங்கள்’ மேல் எனக்கு கடும் ஒவ்வாமையே இன்று உள்ளது. அவை முதன்மையாக படைப்பை, படைப்பாளியை நோக்கிய மேட்டிமைநோக்கை கொண்டிருக்கின்றன. தனக்கு தெரிந்த, தான் படித்த எல்லாவற்றையும் கொண்டு வந்து சம்பந்தமே இல்லாமல் இலக்கியப்படைப்பின் மேல் போடுபவன் உண்மையில் மிகப்பெரிய அவமதிப்பு ஒன்றை நிகழ்த்துகிறான்.

விமர்சகன் முதன்மையாக வாசகனாக இருக்கவேண்டும், வாசகன் என்பவன் இலக்கியப்படைப்பின்மேல் வாழ்க்கை சார்ந்த உரையாடல் ஒன்றை அந்தரங்கமாக நிகழ்த்திக்கொள்பவன், ஆசிரியனுடன் தன் நுண்ணுணர்வால் உரையாடுபவன். அத்தகைய வாசகன் எப்படி பயிற்சியற்ற மொழியில் எழுதினாலும் ஆசிரியனுக்கு அவனிடம் பேச, அறிய ஏதோ ஒன்று உள்ளது. படைப்பின் அழகியலையோ ஆன்மிகத்தையோ அறியமுடியாத போலியறிவுப் பாவனையாளர்கள் படைப்பை தாக்கும் வைரஸ்கள்.

அந்த வகை கிருமிகள் ஐரோப்பிய இலக்கியத்தை ஏறத்தாழ அழித்துவிட்டன என்று நினைக்கிறேன். அதை நான் சொல்லும்போது ஐரோப்பிய படைப்பிலக்கியவாதிகள் மட்டுமல்ல, இலக்கிய ஆய்வாளர்கள்கூட இன்று துயருடன் ஆமோதிக்கிறார்கள். அது இங்கே நிகழக்கூடாது. இங்கே இலக்கிய விமர்சனம் முதன்மையாக வாசிப்பின் தீவிரத்திலேயே வேர்விட்டிருந்தது. வாசகனிடமிருந்தே உண்மையான ஏற்பும் மறுப்பும் வந்தன. இனியும் அவ்வாறே நிகழவேண்டும்.

டிசம்பர் 18 சாரு நிவேதிதாவின் பிறந்த நாளாகவும் அமைந்துவிட்டது. மேடையிலேயே ஒரு கேக் வெட்டி அதை கொண்டாடினோம். சாரு நிவேதிதா தன் வாழ்நாள் முழுக்க உடனிருந்தவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமாக தன் உரையை ஆக்கிக்கொண்டது மிக இயல்பான செயலாக இருந்தது.

இன்று, விஷ்ணுபுரம் விருதுவிழாக்களுக்கு ஒரு செயல்திட்டம், ஒரு கட்டமைப்பு இயல்பாகவே உருவாகி வந்துவிட்டது. வெவ்வேறு சந்திப்புகள் வழியாக பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், அவரவர் பணியைச் சிறப்பாகச் செய்தல், தனிப்பட்ட பெருமைகள் கொள்ளாதிருத்தல் என இன்றியமையாத எல்லா இயல்புகளும் இன்று அமைந்துவிட்டிருக்கின்றன. பயிற்றுவிக்கப்பட்டு எவரும் இவற்றை அடைய முடியாது. செயல்களைச் செம்மையாகச் செய்யும்போது உருவாகும் கூட்டு மனநிறைவை அடைந்தால் இயல்பாக அந்த பண்புகள் உருவாகிவிடும்.

என்னுடைய பெருமிதம் என்பது இலக்கியம் என்னும் இலட்சியவாதம் இதைச் செய்ய வைக்கிறது என்பதே. இங்கே மதம் சார்ந்து மட்டுமே இத்தகைய ஒரு இலட்சியவாதம் உருவாகும். அரசியல் சார்ந்து ஒரு கூட்டான உத்வேகம் இருக்கும், ஆனால் அதில் இலட்சியவாதம் இருக்காது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லாபங்கள், அதற்கான திட்டங்கள் இருக்கும். ஆகவே உள்ளூர கடும் பூசலும் ஓடிக்கொண்டிருக்கும்.

நான் என்றும் கனவுகண்டது இலக்கியத்திற்கு அவ்வாறு ஒரு மனநிலை அமையவேண்டும் என்பது. (இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் என க.நா.சு கனவு கண்டதும் அதுவே)  அது தமிழ்ச்சூழலில் அமைவதில்லை என்பதை கண்டிருக்கிறேன். எப்போதும் ஓர் இலட்சியவாத மனநிலையில் ததும்பிக் கொண்டிருப்பவர்கள் உண்டு. அவர்களால் பெருமுயற்சிகள் தொடங்கப்பட்டதும் உண்டு. அவை வெவ்வேறு காரணங்களால் தோற்கடிக்கப்படுகின்றன.

மிகச்சிறந்த உதாரணம், பவா செல்லத்துரை. 90’களில் அவரால் திருவண்ணாமலையில் முன்னெடுக்கப்பட்ட கலையிலக்கிய இரவு அப்படிப்பட்ட ஒரு முயற்சி. அன்றிருந்த கொண்டாட்டம், பரவசம் எல்லாம் எனக்கு இன்றும் நினைவுள்ளது. ஆனால் சில ஆண்டுகளிலேயே அரசியலால் அது கைப்பற்றப்பட்டது. அரசியல் பூசல்களால் அது தோற்கடிக்கப்பட்டு இன்று நினைவாக மாறிவிட்டது. பவா சோர்வுறாதவர். இன்றுவரை அவர் தனிமனிதராக திருவண்ணாமலையில் அந்த கனவை தக்கவைத்திருக்கிறார்.

சுந்தர ராமசாமிக்கு அக்கனவு இருந்தது. அவர் எடுத்த முயற்சிகள் அவர் இருந்தவரைத்தான் வெற்றி பெற்றன. அவர் இருந்தபோது நிகழ்ந்த தமிழினி 2000 ஒரு வரலாற்று நிகழ்வு. அவருக்குப்பின் அம்முயற்சி சரிவுற்றமைக்குக் காரணம் அவரிடமிருந்த பெருந்தன்மை, அனைவருக்கும் உரியவராக இருக்கும் தன்மை பின்பு இல்லாமலானது என நினைக்கிறேன்.

இங்குள்ள சிற்றிதழ்கள், இலக்கிய அமைப்புகள் எல்லாமே ஒரு கனவைப் பகிர்ந்துகொள்ளும் சிறு குழுவினரால் தொடங்கப்படுகின்றன. மிக மிக விரைவாக அவை உடைகின்றன. பூசலிடும் தரப்புகளாகி செயலிழக்கின்றன. அது ஏன் என பல ஆண்டுகள் கூர்ந்து கவனித்திருக்கிறேன். என் கண்டடைதல்கள் சில உண்டு.

விஜய் சூரியன்

வீழ்த்தும் காரணிகளில் முதன்மையானது அரசியல் சார்பு. அரசியல் சார்பு பூசலையே உருவாக்கும். முதலில் அந்த அரசியலுக்கு எதிரானவர்களுடன் பூசலை உருவாக்கும். பின்னர் உட்பூசல்களை உருவாக்கும். இதை தவிர்க்கவே முடியாது. ஆகவே விஷ்ணுபுரம் அமைப்பை பொறுத்தவரை முழுக்க முழுக்க இலக்கிய- பண்பாட்டு இயக்கமாகவே இதை முன்னெடுக்கிறோம். இதில் அரசியல் இல்லை. அரசியல் விவாதங்களுக்கே இடமில்லை. விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒருவருக்கொருவர்  அரசியல் விவாதிப்பதையே நாங்கள் ஏற்பதில்லை. அவரவர் அரசியல் அவரவருக்கு. இங்கு இடமில்லை.

இரண்டு, ஆணவச்சிக்கல்கள்.  பெரும்பாலான தனிப்பட்ட  இலக்கிய விவாதங்களுக்கு பின்னாலிருப்பது வெறும் ஆணவம். தன்னை முன்வைக்கும் முனைப்பு. தனி உரையாடல்களில் மிகக்கடுமையான கருத்துக்களைச் சொல்பவர்கள் உள்ளீடற்றவர்கள், கவனயாசகர்கள் என்றே உணர்ந்திருக்கிறேன். பலசமயம் கருத்தால் ஓர் அரங்கில் கவனம் பெற முடியாதவர்களின் உத்தி என்பது கலைத்து கவனம் பெறுவது

இலக்கிய விவாதத்தில் கறாரான பார்வைக்கு இடமுண்டு. ஆனால் அதை எழுத்தில், முறையான வாசிப்புடன் முன்வைக்கவேண்டுமே ஒழிய ஒருவரிடம் நேரில் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. எழுதவந்தமைக்காகவே ஒருவர் அவமானங்களைச் சந்திக்கவேண்டியதில்லை. கறாரான இலக்கிய விமர்சனம், உதாரணமாக விஷால்ராஜா எழுதியது (இடைவெளியும் தொடர்ச்சியும்- விஷால் ராஜா) போன்ற அணுகுமுறைகள், என்றும் இலக்கியச்சூழலில் மதிக்கப்படுபவை.

ஆகவே, நான் இது எந்நிலையிலும் இனிய, நட்பார்ந்த உரையாடலுக்கான களமாகவே இருக்கவேண்டும் என்ற உறுதியைக் கொண்டிருக்கிறேன். இங்கு வந்துசெல்லும் ஒரு வாசகர் தன்னைப்போல பல வாசகர்கள் இருக்கிறார்கள் என உணரவேண்டும். இலக்கிய இயக்கத்தின் ஒரு பகுதியாக தன்னை கருதிக்கொள்ள வேண்டும். அந்த இயக்கத்தில்தான் எழுத்தாளன் எனும் ஆளுமையும் இருக்கிறார், அவரும் தன் சகப்பயணிதான் என அறிய வேண்டும். அந்த தன்னுணர்வை உருவாக்குவதே முதன்மையாக இந்த விழாக்களின் நோக்கம்.

இத்தகைய விழாக்கள் ஏன் தேவையாகின்றன என்பதை நான் என் தொழிற்சங்கப் பின்னணியில் இருந்தே உணர்ந்தேன். தொழிற்சங்கம் என்பது உலகியல்சார்ந்த ஒரு செயல்பாடு, ஆகவே பூசல்களும் சலிப்பும் தவிர்க்க முடியாதவை. அது ஓர் அமைப்பு மட்டுமே. ஆண்டுதோறும் நிகழும் மாநில, தேசிய மாநாடுகளே அதை ஓர் உணர்வுசார்ந்த இயக்கமாக ஆக்குகின்றன. நம்மைப்போன்றவர்களை நாம் கண்கூடாகப் பார்ப்பது, உரையாடுவது, உடன்பழகுவது.

விஷ்ணுபுரம் விழா முடிந்தபின் மேடையில் விஷ்ணுபுரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகைப்படத்திற்காக வரும்படி அழைப்போம். ஆனால் இங்கே உறுப்பினர் என எவரும் இல்லை. எந்த பொறுப்பாளரும் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட நூறுபேர் மேடைக்கு வருகிறார்கள். அவர்கள் இதை உரிமைகொள்கிறார்கள். நாங்கள் சந்தித்தே இராதவர்கள் மேடைக்கு வந்துள்ளனர். தயங்கி ஓரமாக நின்றுள்ளனர். அவர்கள் பின்னர் மையசெயல்பாட்டாளர்களாக ஆகியிருக்கின்றனர்.

இன்று இது ஒரு தாய் அமைப்பு. இதில் இருந்து ஆண்டுதோறும் புதிய அமைப்புகள் தோன்றி செயல்வேகம் கொள்கின்றன. இந்த 2022 ஆண்டில் உருவான மூன்று அமைப்புகள் தமிழ் விக்கி, நீலி மின்னிதழ் மற்றும் மொழியாக்கத்துக்கான மொழி அமைப்பு. அடுத்த ஆண்டுமுதல் பெண்களுக்கான நூல்களை வெளியிடும் நீலி பதிப்பகம் ஒன்றை தொடங்க ரம்யா திட்டமிட்டிருக்கிறார். இன்னும் கனவுகள் விரியும்.

புகைப்படங்கள் ஆனந்த்குமார் இணைப்பு

முந்தைய கட்டுரைதமிழ்விரோதிகளின் பட்டியலில் ஓர் இடம்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு வாசிப்பரங்கம்