விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
விஷ்ணுபுரம் விருது 2022 விழாவிற்கு சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு பெங்களூரில் இருந்து வந்து சேர்ந்தேன். Quiz அருமையாக வடிவமைக்கப்பட்டு நடந்துக்கொண்டிருந்தது. கண்டு மகிழ்ந்தேன்.
இரண்டாம் நாள் நிகழ்சிகளுக்கு இடையில் பலரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். நான் கலந்துகொள்ளும் முதல் விழா இது. ஆதலால்.சந்தோஷ், லோகமாதேவி அம்மா, கதிர்முருகன், ஷாகுல் ஹமீது, ஜி.எஸ்.எஸ்.வி நவீன், பெங்களூர் நண்பர்களை சந்தித்தேன். லட்சுமி மணிவண்ணன் அவர்களுடன் ஒரு நீண்ட உரையாடலை செய்ய முடிந்தது. நீங்கள் சொல்வது போல் அவரிடம் தருவதற்கு எப்போதும் இருக்கிறது. பெற்றுக்கொண்டேன். ஆழமான உரையாடல். நிறைவை அளித்தது.

சனிக்கிழமை இரவு தங்கியது மற்ற வாசகர்களுடன் டாக்டர் பங்களாவில். நான் நாகர்கோயில் முத்துராமனுடன் அறையை பகிர்ந்துகொண்டேன். அவருடன் உரையாடியதும் நிறைவை அளித்தது. நீண்ட உரையாடல். இரண்டாம் நாளும் தொடர்ந்தது. அவர் செய்யும் உதவிகளைப் பற்றி கூறினார்.
இரண்டு நாள்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட விழா. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியும் நிறைவும். அமர்வுகள், சாரு அவர்கள் பற்றிய ஆவணப்படம், உங்கள் உரை, உணவு, தங்கும் இடம் அனைத்திலும் ஒரு சிறு குறை கூட இல்லை.
நீங்கள் இரண்டு நாளும் மிக உற்சாகமாக நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே இருந்தீர்கள்.
நாச்சியப்பன்

அன்புள்ள ஜெ,
எட்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டு நாள் கொண்டாட்டங்களிலும் விருது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன். நிறைய மாற்றங்கள். நீங்கள் கூறியிருந்தது போலவே விழா வளர்ந்து கொண்டே தான் போயிருக்கிறது :-). தொடர்ந்து பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளிகளும் வாசகர்களும் கலந்து கொள்வதே இந்நிகழ்ச்சியின் தொடர்ந்த வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம் என்று நினைக்கிறேன்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் அர்ப்பணிப்பு, நான் சொல்வது தேய் வழக்காக தோன்றினாலும், சற்றே பிரமிக்க தான் வைக்கிறது. என்ன, “இந்த பெரிய நிகழ்ச்சி வடிவம்” நீங்கள் பேசுவதை நிறைய கேட்க முடியாததாக ஆக்கி விட்டது.

எட்டு ஆண்டுகள் கழித்த பங்கேற்பு மிகப்பெரும்பாலான பங்கேற்பாளர்களை என்னை விட வயதில் இளையோராக ஆக்கி விட்டது. :-) அந்த வருத்தம் முழுமையாக தீராத நிலையில், நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கேட்ட 2014 ராஜீவன் அவர்களுடனான கலந்துரையாடல் பற்றிய கேள்விக்கு சிறுபிள்ளை தனமான பதில் ஒன்றை கொடுத்து மேலும் வருத்தப்பட்டு கொண்டிருந்த போது :-), அகர முதல்வன் அவர்களை சந்தித்தேன். அவருடனான சற்றேறக்குறைய 1.5 மணி நேர சந்திப்பும் , துளி இயக்கத்து நண்பர்களுடனான உரையாடலும் மிகுந்த மன நிறைவை அளித்தது.
அகர முதல்வன், நான் சந்தித்து உரையாடும் முதல் ஈழத்து (இன்றுவரை நான் இலங்கையின் என்றே சொல்லி வந்திருக்கிறேன்) படைப்பாளி. முதல் நாள் கலந்துரையாடலிலேயே அவரின் நேர்முறை அணுகுமுறையும், அவரின் சத்தமான தொனியும் , அவரின் சரியான தமிழ் உச்சரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தன.

ஓர் ஈழத்து படைப்பாளியிடம் கேட்க எனக்கு பல கேள்விகள் இருந்தன. ஒரு தயக்கமும் இருந்தது.
அந்த தயக்கத்தை அவரின் நட்பார்ந்த குரல் உடைத்தது. 1991 க்கு பிறகு ஈழத்தை பற்றிய என் மனநிலை மிகப்பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களின் மனநிலையை ஓத்தே இருந்தாலும் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்ப சாதனைகள் பலவற்றையும் பற்றி எனக்கு மிகப்பெரிய வியப்பு உண்டு. “குண்டு வீசப்பட்ட மறுநாளே அதே பள்ளிக்கு பரீட்சை எழுத செல்லும் யாழ்ப்பாண தமிழரை” குறித்த்தும் , எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் மேலும் பெரிதாக எழுந்து நிற்பது குறித்தும் அவர் விரிவாக பேசியது என் பல கேள்விகளுக்கு பதிலாக அமைந்தன.
“எனக்கான இடம் இங்கு அகதி தானே” என்ற அவரின் குரல் அத்தனை தருக்கண்களையும் தாண்டி தார்மிகத்தை தொட்டு பார்க்கும். அவரிடம் கேட்க எனக்கு மற்றொரு கேள்வியும் இருந்தது – கேட்கவில்லை. இந்த இளைஞனின் கனவுகளையும் அவர் போன்ற பலலட்ச கணக்கான ஈழ தமிழர்களின் கனவுகளையும் அவர் கூறியது போன்ற நேர்முறை எண்ணங்களும் அதற்கு காரணாமாக அவர் கூறிய மரபின் நீட்சியுமே நிறைவேற்றும் என்ற எண்ணத்துடனும் பிரார்த்தனையுடனும் அவரிடம் விடை பெற்றேன்.
பாலாஜி என்.வி
பெங்களூர்