டோட்டோ சான் – கடிதம்

டோட்டோ சான் – வாங்க

அன்பின் ஜெ,

வணக்கங்களும் அன்பும். டெட்சுகோவின் “டோட்டோ சான்” வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்த “ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு” நூலின் வாசிப்பனுபவம் மனதில் நிழலாடியது. பதினைந்து வருடங்களுக்கு முன் உங்களின் எழுத்துகள் பரிச்சயமான சமயத்தில் அவ்வெழுத்தின் ஆன்மாவோடு என் மனதை அண்மைப்படுத்தி பிரியம் கொள்ள வைத்ததில், “சைதன்யாவின் சிந்தனை மரபு”க்கு, ஒரு தந்தையன்பின் நுண்ணிய அவதானிப்புகளுக்கு பெரும்பங்கு உண்டு.

கோயபாஷியின் “உனக்குத் தெரியுமா? நீ உண்மையிலேயே நல்ல குழந்தை…” என்ற குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இயலுக்கு மூன்று வயதாகும்போது, ஓசூரில் ரயில்வே ஸ்டேஷன் எதிர்ப்புறம் நேரு நகரில் குடியிருந்தோம். இயலை பள்ளியில் சேர்ப்பது பற்றி நானும், அம்முவும் யோசிக்க ஆரம்பித்தோம். ஆரம்பப் பள்ளிக்கு அப்போது 2005/06-ல், ஓசூரில் இரண்டு பள்ளிகள் பிரசித்தம். சிப்காட் அருகில் இருந்த செயின்ட் ஜோசப்பும், பாகலூர் ரோட்டில் இருந்த மகரிஷி வித்யா மந்திரின் பாலர் பள்ளியும். தொரப்பள்ளி மஞ்சுஸ்ரீயில் என் உடன் பணிபுரிந்த நண்பன் குணாவின் பெண் செயின்ட் ஜோசப்பில் இரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். இயலையும் எல்.கே.ஜி அட்மிஷனுக்கு அங்கேயே சேர்க்கலாமா என்று யோசித்து, தூரம் கருதி தயங்கினோம். மகரிஷி பாலர் பள்ளி ஏற்கனவே எனக்கு அறிமுகமான வளாகம். சில வருடங்களுக்கு முன் நானும், மிஸ்ராவும் அங்குதான் தியான வகுப்புகளுக்கு சென்று “ஆழ்நிலை தியான”த்தை பயின்றோம். மகரிஷி பள்ளி என்று முடிவெடுத்து விண்ணப்பம் அளித்து, நேர்காணல் தேதி வந்தது.

இயல் சரளமாய் பேசக்கூடிய சிறுமிதான். பல பாடல்களையும், எண்களையும், பொருட்களின் பெயர்களையும், ஒன்றிரண்டு கணக்கு வாய்ப்பாடுகளையும் அம்மு இயலுக்கு கற்றுக் கொடுத்திருந்தார். கதைகளும் சொல்வார் இயல். நேர்காணல் தேதியில் பள்ளிக்குச் சென்று, முதல் மாடியில் அறைக்கு வெளியே உட்கார்ந்திருக்கும்போது, அம்மு இயலிடம் கேள்விகளுக்கு எப்படி எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நேர்காணல் அறைக்குள் நுழையும் வரை சகஜமாய் பேசிக் கொண்டிருந்த இயல், உள்ளே நுழைந்ததும் வாய்மூடிக் கொண்டார். உட்கார்ந்திருந்த இரண்டு ஆசிரியர்கள் கேட்ட பொதுவான எளிய கேள்விகளுக்குக் கூட (அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி பெயர் என்ன?) இயல் வாய் திறக்கவில்லை. ஆசிரியர்கள் பத்து நிமிடம் எப்படி எப்படியோ முயன்று பார்த்தார்கள். அம்முவும் முயற்சித்தார். ஏதும் பலனில்லை. அம்முவிற்கு மிக வருத்தம். நான் இயலின் முகத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

வீட்டுக்கு திரும்பி வந்ததும் மீண்டும் இயல்பாகி விட்டார் இயல். எனக்கு மிகுந்த ஆச்சர்யம். அட்மிஷன் கிடைத்து, பள்ளியில் முதல் நாள் இயலை விட்டுவர அம்முதான் சென்றிருந்தார். வகுப்பிற்குள் சென்று உட்கார்ந்து, புன்னகையுடன் சுற்றிலும் அழுதுகொண்டிருக்கும்  குழந்தைகளை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார் இயல். ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த அம்முவின் கண்களில்தான் கண்ணீர்.

“டோட்டோ-சான்” வாசிப்பின் போது இயல்தான் மனம் முழுவதும் நிறைந்திருந்தார். மனம் நெகிழ்ந்து கொண்டேயிருந்தது. இயல் சென்னை கல்லூரியில் சேர்ந்த பிறகு, முதல்முறையாக இயல், அம்மு இல்லாமல் தனித்து பயணித்த சமயத்தில், “பத்திரம்டா…பத்திரம்டா” என்று இங்கு கென்யாவிலிருந்து வாட்ஸப் உரையாடலின்போது சொல்லிக்கொண்டிருந்தேன். இயல் சிரித்துக்கொண்டே “நான் என்ன இன்னும் சின்னக் குழந்தையா? ஐ வில் மேனேஜ்-பா” என்றார். யோசித்துப் பார்த்தால், இயல் இன்னும் மூன்றிலிருந்து ஏழெட்டு வயது குழந்தையாகத்தான் மனதில் பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பெண் குழந்தைகள் தந்தைகளின் மனதில் சிறுமிப் பிராயத்திற்கு மேல் வளர்வதேயில்லை என்பது உண்மைதானோ?

தன் “டோமோயி” பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்காக தன் அம்மாவுடன் வந்திருக்கும் ஏழு வயது டோட்டோ-சானை ஒரு நாற்காலியில் அமரவைத்து, தானும் ஒரு நாற்காலியை அருகில் இழுத்த்துப்போட்டு அமர்ந்துகொண்டு அவளிடம் “இனி எனக்கு உன்னைப்பற்றிய  எல்லாவற்றையும் சொல். நீ பேச விரும்புகிற எதைப்பற்றி வேண்டுமானாலும் என்னிடம் சொல்” என்கிறார் தலைமையாசிரியர் சோசாகு கோபயாஷி. டோட்டோ-சானுக்கு ஒரே ஆனந்தம். பேச ஆரம்பித்தவள் நிறுத்தவேயில்லை. மதிய உணவு இடைவேளை வரை கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் பேசியிருக்கிறாள். அத்தனை நேரமும் அமைதியாய் புன்னகைத்தவாறு அவள் பேசுவதை ஆர்வமாய் கேட்கிறார் கோபயாஷி.

தனக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப்போன “டோமோயி” பள்ளியில் டோட்டோ-சானின் முதல் நாள் இப்படித்தான் துவங்குகிறது. அதன்பின் அக்கனவுப் பள்ளியில், அதன் தனித்துவமான கற்பிக்கும் மாதிரிகளில், அன்புச்சூழலில், அற்புதமான அந்த ஆரம்பப்பள்ளி வருடங்கள்தான் டோட்டோ-சானின் ஆளுமையை சிறப்பாக வளர்த்தெடுக்கின்றன. அவளை மட்டுமல்ல, அவளைப்போல மற்ற மாணவர்களையும் அவரவர் துறைகளில் பண்பான, வெற்றிகரமான, அறிவிற் சிறந்த ஆளுமைகளாக உயர்வதற்கான அடிப்படை கல்வியையும், கற்றலையும், அனுபவப் பயிற்சியையும் “டோமோயி”யின் சூழல்தான் அளிக்கிறது.

தான் படித்த ஆரம்பப் பள்ளியின் அன்பின் தலைமையாசிரியருக்கு, ஒரு மாணவியின் எத்தனை மகத்தான காணிக்கை இந்நூல்!. இதைவிட தன் நன்றியை, நெகிழ்வை, அன்பை எப்படி வெளிப்படுத்திவிட முடியும்!. என் மனம் இந்நூலின் பக்கங்கள் முழுவதும் பரவசப் பட்டுக்கொண்டே இருந்தது. அபாரமான வாசிப்பனுபவத்தைத் தந்தது. நேர்மறையின் வசீகரத்தில், பிரியத்தின் சாரலில் மனம் நனைந்து கிடந்தது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் தவறவிடக் கூடாத நூல். (நூலில் டோட்டோ-சான், கோயபாஷிக்கு இணையாக எனக்குப் பிடித்த கதாபாத்திரம் டோட்டோ-சானின் அம்மா). புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னும், வாசித்ததற்குப் பின்னும் மனம் சிறிதேனும் அசைந்திருக்கும்.

நூலில் எனக்குப் பிடித்த அத்தியாயங்கள்/காட்சிகள் பல. குறிப்பாக, “அதை நன்றாக மெல்லுங்கள்” பாடல், பள்ளி நடைகள், நாங்கள் விளையாடிக்கொண்டு மட்டும்தான் இருந்தோம், விவசாய ஆசிரியர், திறந்த வெளிச் சமையல், நீ உண்மையிலேயே நல்ல பெண், ஊனமுற்றோருக்கு ஆறுதல், ஜெர்மன் ஷெப்பர்ட் ராக்கி வரும் எல்லா அத்தியாயங்களும், தேநீர் விருந்து…. டெட்சுகோவைப் பற்றி இணையத்தில் தேடி மேலும் வாசித்தேன். கோயபாஷி பற்றி நூலிலேயே சிறப்பான அறிமுகம் தந்திருக்கிறார் டெட்சு.

குழந்தைகள் அருகிலிருந்தால் நாம் மௌனமாகி விடவேண்டும் என்று தோன்றுகிறது. நமக்கு கற்றுக்கொடுப்பதற்கு அவர்களிடம்தான் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன!. அவர்களின் மீதான பிரிய அவதானிப்புகளின் ஏதேனும் ஒரு கணத்தில் எல்லையற்றதின் விஸ்வரூப தரிசனம் காணும் பாக்கியம் வாய்த்துவிடக்கூடும்.

வெங்கி

“டோட்டோ-சான், ஜன்னலில் ஒரு சிறுமி” – டெட்சுகோ குரோயாநாகி

ஜப்பானிய மூலம்: “Madogiwa no Totto-chan”

ஆங்கிலத்தில்: Dorothy Britton – “Totto-Chan, The Little Girl at The Window”

தமிழில்: அ. வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்

ஓவியங்கள்: சிஹிரோ இவாஸாகி

தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்-7
அடுத்த கட்டுரைவாழ்வின் பாடம்- கடிதம்