காடு,கடிதம்

இனிய ஜெ,

காடு சில வருடங்களுக்கு பிறகு இரண்டாம் முறையாக வாசித்தேன். முதல்முறை முடித்த போது எழுந்த உணர்வெலுச்சியின் நினைவுகளும் அஜிதனின் மைத்ரி நாவலில் காடு தான் மைத்ரியின் தொடக்கம் எனும் போது, இரண்டாம் முறை வாசிக்க தூண்டியது. ஒரு புத்தன் நாகரீக மனிதனாக வாழும் வாழ்க்கையை பெரும்பாலோர் இங்கு வாழ்கின்றனர், கிரிதரன் உட்பட. நீலியே கிரிதரனை புத்தனாக்க முயல்கிறாள்.

இது வளரும் பருவத்தில், நம்மிடம் உள்ள கள்ளம் கபடமற்ற மன நிலை, எப்படி இம்மானிட கட்டாய உறவாலுடலினால், சிறிது சிறிதாக அகங்காரம் பேருருவமாகி அதையே உண்மையென்று நினைத்து வாழ்கிறோம், எப்படி அலைக்கழிக்க படுகிறோம், என்ற அனுபத்தை நாவல் தருகிறது. “எல்லாரும் செய்ற தப்புதான். அகங்காரம். உன்னைப் பத்தியே நினைக்கிறது. மத்தவங்க உன்னை பேணனும்னு நினைக்கிறது” என்று அய்யர், கிரிதனுடன் கூறும்போது, வாசிப்பனுபவம் காட்டாறு போல் ஓடுகிறது.

காட்டின் கட்டற்ற மனமே இயற்கையான மனித மனம். ஆனால் அவனின் அகங்காரத்தால், அதனிடம் போரிடுகிறான். செயற்கையாகி, வெல்ல முயல்கிறான். தன் சொந்த வீட்டிற்கு செல்ல முடியாத அகங்காரத்தின் விசை அவனை மீண்டும் மீண்டும் சோர்வுகுள்ளாக்குகிறது. தன் சொந்த வீட்டில் இருக்க முடியும் என்பதையே நீலி, கிரிதரனிடம், சொல்லாமல் சொல்கிறாள். கடைசியில் தோல்வியுற்று, உடைந்து, கிரிதரனின் உள்ளே, அழுகிறாள்.

நாடாரின் வாழ்க்கை ஒரு பத்தியில் நாவல் விரியும்போது, நாகரிக மனிதனின் வாழ்ந்த/வாழும் வாழ்க்கை மற்றும் மனித தேடலின் சாரம் அனுபவமாகிறது. நாடார் கம்பராமணத்தில் மூழ்கிவிட்டார். எப்பேர்ப்பட்ட ஆத்மா! ஒரு தீங்கு அதில் கிடையாது. மனித துக்கத்தின் ஆழத்தை கம்பராமணத்தில் மூலம் அறிந்தவர். வயல்களில் சாணி பொறுக்கி விற்று படித்து தமிழாசிரியர் ஆனவர். நன்றாக உழைத்து சம்பாதித்தார். பிள்ளைகளை கரையேற்றினார். ஒரு பைசா வீணடித்தவரவல்ல. இருந்தாலும் அவர் மனைவிக்கு அவரைப் பிடிக்கவில்லை. புழுவினும் கேவலம். யார் யாரை புரிந்து கொண்டிருக்கிறார்கள்? என்னை புரிந்து கொள் என்னை புரிந்து கொள் என்று மன்றாடுகிறார்கள். யார் மனதிலாவது அவர்கள் அன்றி பிறர் இருக்கிறார்களா? தெரியவில்லை. ஒன்றுமே கூறமுடியவில்லை.

மனிதர்களை பற்றி திட்டவட்டமாக ஏதேனும் சொல்லக்கூடிய அளவுக்கு முதிர்ந்த மனிதர் யாரேனும் உண்டா இந்த பிரபஞ்சத்தில்? மனிதர்களிடையே வாழ்ந்து மனிதர்களைப் பார்க்குமளவு விலகி இருந்தவர்? காட்டாளன் குட்டப்பனின் எளிமையான வாழ்க்கைக்கு போக முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், நாவலில் சங்க இலக்கியமும் அய்யரின் அறிதலும், என் அறிதலை மீண்டும் மீண்டும் நினைவூட்டி, என்றோ முழுமைப்படுத்தும் என்ற உணர்வு, மூன்றாம் முறை வாசிக்க தூண்டும் என நினைக்கிறேன்.

ஜானகிராமன்

முந்தைய கட்டுரைபஷீரின் பால்யகால சகி -சக்திவேல்
அடுத்த கட்டுரைஆரணி குப்புசாமி முதலியார்