பார்வதி குமாரமங்கலமும் கிருஷ்ணனும்:கடிதங்கள்

ஜெ..
டாக்டர் சுப்பராயன் கொங்கு வேளாளர் சமூகம் என்று என் பெற்றோர்கள் கூறியதுண்டு.(உண்மையா?) அதன் காரணமாகவே டாக்டர் சுப்பராயன், பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், ரங்கராஜன் குமாரமங்கலம் முதலியவ்ர்கள் மீது வீட்டில் ஒரு பெரிய மரியாதை உண்டு – அதுவும் பார்வதி கிருஷ்ணனை என் அம்மா ஒரு கடவுள் போல் குறிப்பிடுவார்கள்.

 

பெரிய பணக்காரக் குடும்பம்- அவர்கள் சாதாரண மனிதர்களுக்காக சொத்தையும், சுகத்தையும் துறந்து, களத்தில் இறங்கி உழைத்தார்கள் என்னும் செய்தி ஒரு நெகிழ்ச்சியான நல்ல நிகழ்வாக கல்வியறிவேயில்லாத என் பெற்றோர்களால் எனக்குச் சொல்லப் பட்டிருக்கிறது. மிக அழகான காதல் கதை. லட்சியவாதமும் காதலும் சேர்வதுதான் எவ்வளவு அழகு? ஜேகேயின் ‘ஈஸ்வர் அல்லா தேரே நாம்’ நினைவுக்கு வருகிறது. இதை மணிரத்னம் ஒரு சினிமாவாக எடுத்தால் எப்படி இருக்கும் என்று மனதுள் ஒரு சுகமான கற்பனை விரிகிறது
இதே போல் கல்லிடைக் குறிச்சி ரயில் நிலையத்தின் எதிரில் ஒரு பெரிய பங்களா உண்டு – சில காலம் வேலை நிமித்தமாக அங்கே வாழ்ந்திருந்தோம் – அதுவும் ஒரு புகழ் பெற்ற, பழைய (நல்ல) பெண் அரசியல்வாதி ஒருவரின் வீடு என்று சொன்னார்கள் – அந்தக் காலகட்டத்தில் இருந்த ஒரு அலட்சிய பாவத்தில் அந்தச் சரித்திரத்தைக் கேட்டுக் கொள்ள மறந்து விட்டேன் – இப்போது வருத்தமாக இருக்கிறது.

என் குழந்தைகளுக்குச் சொல்ல இன்னும் ஒரு கதை கிடைத்திருக்கிறது – நன்றி.

பாலா

அன்புள்ள பாலா

மாயை என்றால் என்ன? நிகழ்காலம்தான் பெரிய மாயை என்று படுகிறது. நிகழ்காலம் வல்லமை மிக்கது.  நாம் நம் கண்முன் அலையடிக்கும் நிகழ்காலத்தில் நாம் சென்றகாலத்தை மறந்துவிடுகிறோம். நிகழ்காலம் என்றுமே சாஸ்வதமானது என்று கற்பனை செய்து கொள்கிறோம்.

தமிழகத்தில் பொதுவுடைமைத் தலைவர்கள்தான் சீக்கிரமாக மறக்கப்படுகிறார்கள் என்று எனக்குப் படுகிறது. ஏனென்றால் பிற தலைவர்கள் தங்கள் சாதியடையாளத்தை திட்டவட்டமாக பேணிக்கொண்டவர்கள். பதிலுக்கு அச்சாதிகள் அவர்களை தங்கள் சாதிப்பிதாமகர்களாக, சாதிஅடையாளங்களாக பேணுகின்றன. ஆனால் பல பொதுவுடைமைத் தலைவர்கள் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ பணியாற்றியவர்கள். என்.கெ.கிருஷ்ணன், வி.பி.சிந்தன் போல…

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்
 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான என். கே. கிருஷ்ணன் அவர்களின் சுயசரிதை தமிழில் வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது.  இதுபற்றி எழுதியதற்கு நன்றி.
 
என்.கே. கிருஷ்ணன் அவர்களை என் அத்திம்பேருக்கு (அத்தையின் கணவர்) உறவினர் என்ற முறையில் என் சிறுபிராயத்தில் கண்டிருக்கிறேன்.  என் அத்தை குடும்பத்தார் திருச்சூரில் வசித்தவர் என்பதால் அங்கே விடுமுறைக்குச் சென்ற போது என். கே. கிருஷ்ணன் அவர்களிடம் பேசியுமிருக்கிறேன்.  குடும்ப நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவிட்டுப் போய்விடுவார்.  ஒருமுறை அவரைப் பார்த்துப்பேசியபோது என் கையில் இருந்தது விக்டர் ஹூகோவின் நாவல் – abrridged version – இருந்தது. இதையா  படிக்கிறாயா என்று என்னிடம் திரும்பத்திரும்பக் கேட்டார். அப்போது எனக்குச் சுமார் பதினான்கு வயதிருக்கலாம். 
 
நான்கைந்தாண்டுகளில் எல்லாம் மாறின. இளைஞனானேன்.  இடதுசாரி லயிப்பு ஏற்பட்டது. ஆனால் சிபிஐ கட்சி நெருக்கடி நிலையை ஆதரித்தது. சிபிஎம், மாவோயிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சித் தொடர்புகள் ஏற்பட்டன. ஏறகனவே திராவிட இயக்கச் சார்புநிலையும் இருந்தது.  அவசரநிலையை எதிர்த்து சிலபல வேலைகளைச் செய்ததால் காவல்துறை வீடுதேடி வந்துவிட்டது. சில நாள் தலைமறைவாகலாமா என்று யோசித்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. தேர்தலில் சிபிஐ கட்சி காங்கிரஸை ஆதரித்து தோல்விகண்டது. புதிய ஆட்சி வந்தபிறகு நானும் நண்பர்கள் சிலரும் முதன்முறையாக் டில்லி சென்றோம். ஜெயப்பிரகாஷ் நாராயணன், இ. எம். எஸ். எல்லோரையும் நேரில் கண்டோம். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட பிர்லா மாளிகைக் காம்பவுண்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களிலும் உறங்கினோம்.

சிபிஐ கட்சி அலுவலகத்துக்கும் போனோம். அப்போது அந்தக்கட்சி யாவற்றையும் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்தது. என். கே. கிருஷ்ணன், பி. கெ. வாசுதேவன் நாயர் ஆகியோர் இருந்தனர். எங்க்ளை மனதார வரவேற்றனர். நெருக்கடி நிலையை எதிர்த்த இளைஞர்கள் என்பதால் எங்களுடன் அரைமணி நேரத்துக்கும் மேல் பேசி, நாங்கள் கோபத்துடன் கூறியதைப் பொறுமையாக இருவரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எங்களில் ஒருவர் கேரளத்தைச் சார்ந்தவர். நெருக்கடி நிலையில் கோழிக்கோடு பொறியியல் கல்லூரி மாணவர் ராஜனின் கொலை தொடர்பாக, கருணாகரன் நீதிமன்றத்தில் உண்மைக்குப் புறம்பாகக் கூறியதால் முதல்வர் பதவி விலகிய தருணமது, ப்டுகொலை நடந்தது, சிபிஐ கட்சியின் அச்சுதமேனன் முதல்வராக இருந்தபோது. கருணாகரன் உள்துறை-அமைச்சர், நிழல்முதல்வர்.

இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களுடைய அரசியல் அனுபவத்தின் தீவிரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நாங்கள் பெற்றிருக்கவில்லை – ஆனால் நாங்கள் சொல்வதை நிதானமாகக் கேட்டார்கள்.. தேநீர் அருந்தினோம் எல்லோரும்.

 
விடைபெறும்போது நான் கிருஷ்ணன் அவர்களிடம் முன்பு உறவுரீதியாகச் சந்தித்ததை ஒரு நிமிஷம் கூறினேன். நிரம்ப ஆச்சரியப்பட்டார். அன்னிக்கு விக்டர் ஹூகோ படித்த பையனா இது! பி.கெ.வி.-யிடம் சொல்லிச்சொல்லிச் சிரித்தார். அடுத்த ஆண்டே பி. கெ. வி. கேரள முதல்வராகிவிட்டார்.
 
1992-93-ம் ஆண்டுக்காலத்தில் டில்லிக்கு சில மாதங்கள் என்னை மாற்றிவிட்டார்கள். அப்போது முதிர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதை, அவர்கள் பற்றி வாசிப்பதை நிறையச் செய்தேன். இப்படித்தான் சிபிஐ கட்சிக்காரர்கள் எனக்கு என். கே. கிருஷ்ணனின் Testament of Faith சுயசரிதையைத் தந்தார்கள். அவர்களிடம் அவர் என் உறவினர் என்பதைக் கூறவில்லை. அதைப் படித்து அந்த வாழ்க்கையில் அப்படியே லயித்துவிட்டேன்! நெருக்கடி நிலையை அதீதமாகக் கட்சிக்குள் ஆதரித்தவர் தோழர் என்.கே. என்பது எனக்குப் புதிராகவே இருந்தது. அதே சமயம் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சிகள் கவிழும் போது இந்தப்புத்தகம் வெளிவந்ததில் தனித்த் சோகம் உண்டு என்றும் நினைத்தேன்.

பிறகு சென்னையில் பணியாற்றியபோது பார்வதி கிருஷ்ணன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. மறைந்த இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராகப் பணியேற்றிருந்த காலம். சென்னையில் கட்சி அலுவலகம் பாலன் இல்லத்தில் வைத்துச் சந்தித்தோம். அந்த வீடு – ரவிசங்கரின் சகோதரர் நாட்டியக்கலைஞர் உதயசங்கர்  கட்சிக்கு அளித்த வீடு – பற்றி பார்வதி கிருஷ்ணன் பேசிவந்தார். அந்தவீட்டில் வைத்து அடிக்கடி என். கே. கிருஷ்ணனும் தாமும் சந்தித்ததைக் கோடி காட்டினார்.

பத்தாண்டுகள் போயின. பி.கெ.வி. லண்டனுக்குப் பயணமாக வந்தார். அப்போது நான் பணியாற்றிய பிபிசியில் வைத்து அவரைச் சந்தித்தேன்.  தோழர் என்.கே.-வுடன் அவரைச் சந்தித்த அந்த டில்லி நாள் பற்றி மெல்ல நினைவுபடுத்தினேன்.  ஒரு நாளைக்கு நூறுபேர் வரை சந்திக்கும் அவருக்கு விக்டர் ஹூகோ புத்தகம் என்றவுடன் சட்டென்று தெரிந்தது. ‘அன்று மாலை எங்கோ போக வேண்டியிருந்தது. என். கே. நீங்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கலாம் என்று முடிவுசெய்துவிட்டார்…’ என்று சிரித்தார்.

என்.கே. பற்றிப் பேசிக்கொண்டே வந்தபோது, இறுதியாக ஒன்றை அவரிடம் கூறினேன். ‘என்.கே. மாத்திரமல்ல. நீங்களும் எனக்கு உறவுதான். அதாவது கோட்டயம் அருகே என் துணைவியாரின் குடும்பத்தைச்  சேர்ந்தவர்தான் நீங்களும்’ என்றேன்.

‘வாருங்கள், புத்தகக்கடைக்குப் போகலாம்’ என்றார், பி.கெ.வாசுதேவன் நாயர்.

‘எதற்கு?’

‘எனக்காக அந்த விக்டர் ஹூகோவின் நாவலை வாங்கித்தாருங்கள். என்.கே. இங்கு லண்டனில்தான் கணிதம் பயின்றார். அப்போது இந்த நாவலை வாசித்திருக்கவேண்டும். ஒருவேளை அதை வாசித்துத்தான் கம்யூனிசத்துக்கே வந்திருக்கலாம். அவர் நினைவாக என்னுடன் எடுத்துப்போகிறேன்’ என்றார்.

நாகார்ஜுனன்

http://nagarjunan.blogspot.com/2009/02/blog-post_19.html

அன்புள்ள நாகார்ஜ்ஜுனன்

உங்கள் கடிதம் கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்டேன். கிருஷ்ணன் அவர்களை நீங்கள் அறிவீர்கள் என்பது பெரிய விஷயம். அவரைப் போன்று நீங்கள் சந்தித்தவர்களைப் பற்றி நீங்கள் விரிவாகவே எழுதலாம். மிகையில்லாமல் நாம் சந்தித்தவர்களைப் பற்றி எழுதும் பழக்கம் நம்மிடையே குறைவு. ஒருவர் இறந்ததும் சம்பிரதாயமான ‘நல்லவர் வல்லவர்’ ரக குறிப்புகளும் மேடைப்பேச்சுகளுமே இங்கே கிடைக்கின்றன. உதாரணமாக சுந்தர ராமசாமி இறந்தபோது வந்த எதிர்வினைகள். பெரும்பாலானவை ‘அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா, என்னை நன்றாக உபசரிப்பார். ரசனை மிக்கவர், என் எழுத்துக்களைப் பாராட்டுவார்’ என்ற வகை நினைவுகள்.

பலரைப்பற்றி நினைவுகளே குறைவு.  உதாரணமாக தமிழ் ஒளி பற்றி ஜெயகாந்தன் எழுதாவிட்டால் ஒரு பதிவுகூட எஞ்சியிருக்காது. நானறிந்தவரை பொதுவுடைமை முன்னோடிகளைப் பற்றி நல்ல பதிவுகள் இல்லை. வி.பி.சிந்தன், பாலதண்டாயுதம், கோதண்டராமன் போன்ற பலரைப்பற்றி எழுதப்படவை மிகவும் குறைவு.

நெடுநாள் இதழியல் தளத்தில் பணியாற்றிய உங்களைப் போன்றவர்கள் நிறையவே எழுத முடியும்

ஜெ

நன்றி ஜெ. நிச்சயம் எழுதுகிறேன். என். கெ. பற்றியே இன்னும் எழுதலாம்.

கிருத்திகா பற்றி – அந்த நிமிடம் அவரை முத்தமிட விரும்பினேன்..

நாகார்ஜுனன்

**
அன்புள்ள ஜெயமோகன்
என்.கெ.கிருஷ்ண-பார்வதி குமார மங்கலம் கதையை நான் சிறுவயது முதலே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இத்தனை விரிவாக வாசித்தது இல்லை. அந்த சுயசரிதையை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பெரும் தியாகங்களைச் செய்பவர்களை எண்ணி நாம் கண்கலங்குகிறோம். ஆனால் அவர்கள் தங்கள் இயலான ஒன்றைத்தான் செய்திருக்கிறார்கள் என்று நான் நினைப்பது உண்டு. அவர்கள் வேறுமாதிரி இருந்திருக்க முடியாது. பார்வதியும் கிருஷ்ணனும் பங்களாவில் சுகமாக இருக்க முடியுமா என்ன?
அவர்களின் காவியம் போன்ற வாழ்க்கையை வாசித்து மனம் நிறைந்தது. எத்தனை உன்னதமான மனிதர்கள். அவர்கள் எல்லாம் அரசியல் செய்த ஒரு நாட்டில் இன்று யாரெல்லாம் அரசியல் செய்கிறார்கள்!  நியாயம் என்ற ஒன்றையே அறியாத மனிதர்கள், சொத்து சேர்ப்பதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவர்கள் அல்லவா இப்போது எங்கும் நிறைந்திருக்கிறார்கள்
இளங்குமரன்
திருப்பூர் [தமிழாக்கம்]
அன்புள்ள இளங்குமரன்
கோவையில் தன் வழக்கமான தொகுதியில் பார்வதி குமாரமங்கலம் ஓர் திமுக அல்லது அதிமுக அரசியல்வாதியை எதிர்த்துப் போட்டியிட்டால் யார் வெல்வர்கள்? மக்களின் மனம் மாறிவிட்டிருக்கிறது. அவர்களின் அன்றாட அயோக்கியத்தனத்தை அங்கீகரிக்கும் அயோக்கியர்கள்தான் இப்போது அவர்களுக்குத்தேவைப்படுகிறார்கள்
ஜெ
முந்தைய கட்டுரைநான் கடவுள் : சில கேள்விகள் 2
அடுத்த கட்டுரைஏ.ஆர்.ரஹ்மான்,ரஸூல் பூக்குட்டி