சாரு நிவேதிதா கோணல் பக்கங்கள் என்கிற பெயரில் இணையத்தில் தொடர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தபோது அவருடைய வாசகனானேன். வாசிப்பு இன்பம் என்பதற்க்கு உதாரணமான கட்டுரைகள் அவை. எந்த விஷயத்தையும் சுவாரஸ்யபடுத்தும் அந்த எழுத்து நடை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து ஸீரோ டிகிரி, எக்ஸிஸ்டென்சிலியசமும் ஃபேன்சி பனியனும் போன்ற அவருடைய நாவல்களின் வழியே சாருவுடனான உறவு ஏற்பட்டது. இரண்டாயிரத்தின் மத்தியில் என்று நினைக்கிறேன். சாரு ஹாட்மெயில் ஐடி மூலம் உரையாட கிடைத்தார். முதலில் எளிதாக ஆரம்பித்தவர் பிறகு நீங்கள் சிற்றிதழ் குறுங்குழுவை சேர்ந்தவரா என்று கேட்டு கிண்டலடித்தார். அந்த காலக்கட்டத்தில் சாருவை டோக்கியோ வரவழைக்க திட்டம் போட்டோம். போட்டோம் என்ன ? வாசிப்பில் இருந்ததே அப்போது நானும் ஜோ என்கிற நண்பனும் தான். எல்லாம் கூடி சாருவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு இந்தியாவிற்க்கு மாற்றலாகிவிட அந்த திட்டம் அப்படி நின்றுவிட்டது. பிறகும் அவருடைய படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவன் என்கிற முறையில் தமிழ் இலக்கியத்தில் அவருடைய பங்கை முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். எழுத்தும் எழுத்தாளனும் பிரிக்க முடியாதபடி பின்னி பிணைந்து புனைவு எது, நிஜமெது என்று அறுதியிட்டு சொல்லிவிடமுடியாதபடி வாசகனை மாயஜாலத்திற்க்குள் ஆழ்த்துவதாக இருப்பது சாரு நிவேதிதாவின் எழுத்து.
மனிதன் சிதறுண்ட ஆளுமைகளின் தொகுப்பாக இருக்கிறான். சிறை கைதியின் புட்டத்துக்குள் லத்தியை சொருகுபவன் தான் வீட்டுக்கு சென்று குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சுகிறான். எனில் இலக்கியம் மட்டும் எப்படி ஒரு ஒட்டுமொத்த உண்மையையோ அல்லது மனிதனையோ வரையறுக்க இயலும். அவ்வகையாகவே சாரு நிவேதிதாவின் படைப்புகள் துண்டுகளாக பிரிந்த ஆன்மாவை கலைடாஸ்கோப்பில் காண்பிக்க முயலுகிறது. நிறங்கள், உருவங்கள் எல்லாம் அங்கு மாறிக்கொண்டேயிருக்கிறது, ஒன்றுடன் ஒன்று முயங்கி பெரிதாகி, சிறிதாகி என மயங்கிபடியே தோன்றும் காட்சிகளில் நிஜம் எது பொய் எது? சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள், வாழ்வுக்கான அர்த்தத்தையோ, ஒட்டுமொத்த தரிசனத்தையோ அடைய முயல்வதல்ல. மாறாக அப்படி ஒரு ஒட்டுமொத்த கோட்பாடோ, உண்மையோ இங்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் எழுத்து அவருடையது. அங்கு புனிதங்களோ, மீறக்கூடாத அறங்களோ இல்லை. சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட பின்பு, ஜெயமோகனின் வாசகர்களிடையே கூட சிலரிடம் ஏற்பட்ட அதிர்வலைகளுக்கு காரணம் இதுவாகவே இருக்ககூடும். இருண்மையும், எதிர்மையுமே பின் நவீனத்துவத்தின் கூறுகள். எனவே, இங்கு இதுவும் இருந்தது, இருக்கிறது.
இந்திய குடும்பங்கள் மாறுதலின் காலக்கட்டத்தில் சிக்கியிருக்கிறது. அதன் தலை நவீன மேற்கத்திய யுகத்திலும் நுழைந்துவிட்டாலும், கால்கள் சென்ற காலக்கட்டத்தின் சிந்தனைமுறையில் கட்டப்பட்டதாக தவித்துக்கொண்டிருக்கிறது. கணவன், மனைவிக்கு இடையேயான திருமண வாழ்க்கை ஒத்துவரவில்லையென்றால், முழுமனதாக பிரிந்துச்செல்வதற்க்கான வெளி இன்னமும் சரிவர உருவாகிவரவில்லை. குழந்தைகள், பெண்ணுக்கான பொருளாதார சுதந்திரம், குடும்ப அமைப்பு பிரிந்துச்செல்வதற்க்கான தடைகளாக நீடிக்கிறது. எனவே தான் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு திருமண மீறல்களும், அதன் விளைவாக வன்முறையும் எங்கும் வியாபித்திருக்கிறது. எனவே தான் எப்படியாவது விட்டு விடுதலையாகிவிட, மெல்ல கொல்லும் விஷங்களை கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எந்த புரிந்துணர்வுமில்லாத இருவரிடையே பாலியல் வாழ்க்கை முழுவதுமாக அற்றுப்போய், குழந்தையென்றும், தியாகமென்றும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு, வெளியில் இணை மனங்களை தேடிச்செல்வதாலும், பாலியல் வேட்கையாலும், அதன் விளைவாக உருவாகும் குற்ற உணர்வு, விரக்தி இவற்றால் அழுத்தப்பட்ட நரகமாக இன்றைய குடும்பங்கள் உருமாறியிருக்கின்றன. உண்மையில் மெல்ல கொல்லும் நஞ்சு இப்படிப்பட்ட உறவுகள் தான்.
மற்றொரு புறம், சேர்ந்துவாழும் குடும்பங்களிலும் அன்பு என்கிற பெயரில் செலுத்தபடும் மறைமுக அதிகாரம் இணையின் சுதந்திரத்தை எல்லா வகையிலும் ரத்து செய்வதாய் அமைந்து குடும்ப அமைப்பை வன்முறை களமாக மாற்றிவைத்திருக்கிறது. இந்தச் சூழலைதான் தனது எழுத்தின் மூலம் சாரு நிவேதிதா அப்பட்டமாய் முன்வைக்கிறார். அவருடைய புனைவும் உண்மையும் மயங்கிய எழுத்து முறை மூலம் வாசகனுக்கு இந்த வலியை அப்படியே கடத்துகிறார். அவருடைய எழுத்துக்கு ஏற்பட்டிருக்கும் வசீகரம் இந்த அப்பட்டத்தன்மை மூலம் உருவானது.
இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிறகுதான் இப்படி இணையம் எல்லோருக்குமான ஒன்றாக மாறியது. எத்தனையோ வசதிகளை இணையம் தந்திருந்தாலும், ஆண் பெண் உறவு மேலும் அபத்தமான ஒன்றாக மாறியது இணையத்தில் தான். சந்திக்கும் வாய்ப்பே இல்லை என்கிறபோது, சேட் என்கிற பெயரில் மாறிமாறி இருவரும் பிம்பங்களை பெருக்கி ஊதினார்கள். சந்திப்பு சாத்தியமில்லை என்பதே ஒரு சுதந்திர வெளியை இருவருக்கும் ஏற்படுத்தி தந்த தையும் மறுக்க இயலாது தான். சாரு மிக நேரடியாக இணையத்தில் நிகழும் போலி நாடகங்களை எழுதினார். கலிஃபோர்னியாவிலிருக்கும் போது தினமும் மூன்று மணி நேரம் அரட்டையடிக்கும் திருமணமான பெண், சென்னை வந்தவுடன் பத்து நிமிடம் கூட பேச நேரமில்லாதவளாக, ஒரு மாதம் இந்தியாவில் செலவழித்து மறுபடியும் ஏர்போர்ட் சென்றவுடன் சாருவுக்கு போன் செய்கிறாள். இந்த அபத்தம் சாருவை கொந்தளிக்க செய்கிறது.
சாருவின் பலமென்று, அவர் வாழ நேர்ந்த களங்களை நான் கருதுவதுண்டு. நாகூரில் இளமையில் வாழ்ந்ததால், அந்த மண்ணுக்கே உரிய பகடியும், சூஃபியசம் மீதான ஈடுபாடும் ஏறக்குறைய அனைத்து படைப்பிலும் எதிரொலிக்கிறது. கூடவே தஞ்சை மண்ணுக்குண்டான பிரத்யோக பாலியல் துணுக்குகள் அவருடைய எழுத்தெங்கும் விரவியிருக்கிறது. டெல்லியில் வாழ்ந்ததால் நாடகம், இசை ரசனை என பல்வேறு கலாச்சாரங்களின் கலவை அவரிடமுண்டு. அதன்மேல் சென்னை மயிலாப்பூருக்குண்டான நடுத்தர மேல் நடுத்தர வாழ்க்கையின் அவல நகைச்சுவை இவையெல்லாம் சேர்ந்தே சாருவின் எழுத்தில் வெளிபடுகிறது.
சிருஷ்டியின் குறியீடாக இருக்கும் யோனிதான் முடிவின்மையின் சூன்யமுமாகவும் ஸீரோ டிகிரியில் இருக்கிறது. கம்யுனிஸ்ட்கள் மீதான கிண்டல், தலைவர் சிலை மீது செருப்பு மாலை, இலக்கியவாதிகள் மீதான எள்ளல், பொன்பரப்பி வங்கி கொள்ளை முயற்சி, என ஸீரோ டிகிரியில் அவர் கைவைக்காத இடமில்லை. ஸீரோ டிகிரியில் புனிதமென்று கருதபடும் எல்லாம் உடைபடுகின்றன. இன்செஸ்ட் உறவுகள், சுய இன்பம், பாலியல் வேட்கை என நீள்கிறது இந்த பட்டியல். ஸீரோ டிகிரிக்கு பிறகுமான நாவல்களும் இந்த விஷயங்களை கொண்டிருப்பினும், ஜெனிக்கான சூர்யாவின் கடிதம் சீரோ டிகிரியை கவித்துவமான இடத்திற்க்கு கொண்டு செல்கிறது. அதிலும்
முந்தின பிறவியில் நீ என் காதலியாய் இருந்தாய்,
அதற்கும் முந்தின பிறவியில் நீ என் தாயாக இருந்தாய் அதற்கும் முந்தின
பிறவியில் நீ என் சாமுண்டி தெய்வமாக இருந்தாய்
எனத் தொடங்கும் கவிதை அதன் உச்சம். ஓரிரு வார்த்தைகளை தவிர்த்துவிட்டு எழுதுவது, நிறுத்தகுறியின்றி எழுதுவது இவையாவும் கவனம் ஈர்க்கும் உத்திகளே தவிர, இவையெல்லாவற்றையும் தாண்டி தான் கொண்டிருக்கும் கவித்துவத்தால் ஸீரோ டிகிரி தமிழில் தனக்குண்டான தவிர்க்க முடியாத இடத்தை அடைந்தது
அதிகார வெறி எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டிவைக்கிறது என்பதை ராஸலீலாவில் விவரிக்கிறார் சாரு. ராஸ லீலா முழுவதுமே அதிகாரத்தை பகடி செய்வதாக, மையத்தை பழித்து விளிம்பை முன்வைப்பதாக இருக்கிறது. சுந்தரேசன் என்னும் தபால்துறை உயரதிகாரி தவறு செய்யும் போஸ்ட்மாஸ்டரை கையும் களவுமாக பிடிக்கிறார். தவறை கண்டுக்கொள்ளாமல் இருக்க, அழகியான போஸ்ட்மாஸ்டரின் மனைவியை கேட்கிறார். எல்லாம் முடிந்தபின்பு அந்த தவறு மூடிமறைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் சாட்சியாக கண்ணாயிரம் பெருமாள் இருக்கிறான். இந்த அநீதியை கண்டு பொங்கவில்லை அவன். அவன் பொங்குவதெல்லாம், தனக்கும்தான் அந்த பெண் மீது ஆசை இருக்கிறது. அதிகாரம் இருப்பதால் நினைத்தவற்றையெல்லாம் அடைகிறானே இந்த அதிகாரி என்று பொருமுகிறான் கண்ணாயிரம் பெருமாள். தவறை தண்டிக்காமல் விட மனைவியை கேட்கும் அதிகாரியுடன், கம்போடியாவில் பல்லாயிரகணக்கான உயிர்களை காவு வாங்கிய போல்பாட்டை ஒப்பிட்டு அடிக்கோடு இடுகையில் அது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.
எழுத்தை வாழ்வாக கொண்டாலும், லெளகீகத்திற்க்காக குமாஸ்தவாக பணியாற்றும் ஒரு கலைஞனின் அன்றாடம் என்பது எலிப்பொறியில் சிக்கிக்கொண்ட அவஸ்தையாகதானே இருக்க இயலும்? அதுவே கண்ணாயிரம் பெருமாளுக்கும் நிகழ்கிறது. அப்படி நரகத்தில் உழன்றுக்கொண்டு எழுதிய படைப்பை ”நான்தான் எழுதிக்கொடுத்தேன்” என்று நண்பன் சொன்னால் மொத்த வாழ்வும் அர்த்தமில்லாது போகிறது. அவனுடைய இத்தனை வருட வாழ்க்கையும் கண்ணெதிரே மறுக்கபடுகிறது. அதை தாங்க இயலாது உடைகளை கழட்டி எறிந்துவிட்டு ஓடும் அந்த பித்த நிலையை, ஷேக்ஸ்பியரின் கிங் லியர், தன்னுடைய மகள்களின் துரோகம் தாங்காது அடையும் பித்த நிலையுடன் ஒப்பிடுகையில் நாவல் வேறொரு இடத்திற்க்கு தாவுகிறது. இப்படி சாரு அடிகோடிடும் இடங்கள் வாசகனின் உழைப்பை கோருபவை. அப்படி தேடலில் ஈடுபடும்போதே வாசகன் சாருவின் படைப்பிலிருந்து அடையக்கூடியவையும் அதிகமாகிறது.
புனைவாக இருந்தாலும் அபுனைவாக இருந்தாலும் சாரு பாத்திரங்களுக்கு வைக்ககூடிய பெயர்கள் பகடியின் உச்சமாக இருக்கும். ராஸ லீலா நாயகனின் பெயர் கண்ணாயிரம் பெருமாள். இந்திரனுடைய பெயரை சூட்டிக்கொண்டு பாலியல் வெக்கையில் தவிப்பவன் அவன். அதே கதையில் வரும் கண்ணாயிரம் பெருமாளின் பெண் உயரதிகாரிக்கு பெயர் இந்திராணி என்று சூட்டியிருப்பார். ஒன்பதாம் நூற்றாண்டில் செத்த மூளை, முனியாண்டி, நேநோ, ஃபங்குலா என ஒவ்வொன்றும் பாத்திரத்தின் தன்மையை பெயரிலேயே கொண்டிருப்பவை. உடனடியாக ஒரு புன்னகையை நம்மிடம் தொற்ற வைப்பவை.
புனைவை போலவே கவனம் ஈர்த்தவை சாரு நிவேதிதாவின் அபுனைவு கட்டுரைகள். ஈழப்போர் முடிவில் தமிழினம் தகித்துக்கொண்டிருந்த சூழலில் வன்முறையின் தோல்வி என்று பேசாபொருள் பேச துணிந்தவை அவை. நக்சல்பாரிகளின் போராட்டம் பற்றி எந்த கவனமுமின்றி காட்சிகளின் சுவாரஸ்யத்திற்க்காக மையகருத்தை கண்டுக்கொள்ளாமல் விட்ட குருதிபுனல் படத்திற்க்கு சாரு நிவேதிதா எழுதிய விமர்சனம் மிக முக்கியமானது. அங்காடி தெரு படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது திரையரங்கம் இடிந்து தலைமேல் விழுந்துவிடுமோ என்று பயந்துக்கொண்டே படம் பார்த்தேன் என்கிற வரிகளை புன்னகை இல்லாமல் கடக்க முடியாது. பிம்பங்களை கட்டுடைப்பது என்பதை தொடர்ந்து சாரு செய்கிறார். மற்றவர்களை பற்றி மட்டுமல்ல, தன்னுடைய பிம்பத்தையும் தானே உருவாக்கி அதை கட்டுடைத்து மீளவும் உருவாக்கி எனத் தொடர்கிறார், நித்யானந்தாவின் ஆன்மிகத்தை பற்றுதல், பைங்கிளி எழுத்தாளரை திடீரென்று உலக இலக்கியமென்று பிரசுரித்தல் போன்ற பிழைகளும் அதன் ஒரு பகுதியாகவே கொள்ள நேரிடுகிறது.
வாழ்வை பணயம் வைத்து எழுதப்பட்டவை என்று சாரு சொல்லிக்கொள்கிற வரிகள் அப்படியொன்றும் போலியானவை அல்ல. தன்னுடைய தாய் தந்தை, குடும்பம், உறவுகள் என எல்லாவற்றையும் பற்றி வெளிப்படையாக எழுதுவது என்பது லெளகீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சாத்தியமான ஒன்று அல்ல. சமயங்களில் அது நண்பர்களை, உறவுகளை காவு வாங்கும் பலிகளம் தான். ஒருவகையில் அது பலிச்சோறுதான். ஆனால் தன்னுடைய படைப்பின் பொருட்டு அதை முயலகூடியவராக சாரு நிவேதிதா இருக்கிறார்.
தேகம் புத்தகம் வெளியீட்டின்போது சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மிஷ்கினுடைய பேச்சின் காரணமாக, சாரு நிவேதிதா தொடர்ந்து மிஷ்கினை விமர்சித்து கட்டுரைகளாக எழுதியிருந்தார். சில வருடங்கள் கழிந்து மிஷ்கின் உடனான ஒரு இரவு உரையாடலில் இது பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, மிஷ்கின் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். ஒரு வருட காலம் ஏறக்குறைய தினமும் இரவு சாருவும் மிஷ்கினும், மிஷ்கினுடைய அலுவலகத்தில் சந்தித்து அதிகாலை வரை உரையாடல், இசை என கொண்டாடி வந்தனர். திடீரென்று ஒரு நாள், அந்த வீட்டை காலிசெய்யும்படி ஆகிவிடுகிறது. எல்லா புத்தகங்களையும் புதிய முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அன்றிரவு கடைசியாக இருவரும் அந்த பழைய வீட்டில் குடிக்கிறார்கள். அதிகாலை இரண்டு மணி அளவில் இருவரும் வெளியே வந்து நிற்கிறார்கள். இனி இந்த வீடு இல்லை. தெருவில் அனாதையாக சுற்றித் திரியும் நாய் சாருவின் காலடியில் வந்து நிற்கிறது. தினமும் இரவில் அங்கு வரும் சாரு, அந்த நாயிற்கு ஏதேனும் உணவிடுவது வழக்கம். குனிந்து நாயை தூக்கிய சாரு மடியில் வைத்துக்கொண்டு ”இனிமே உனக்கு யாருடா சோறு போடுவா?” என்று கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறார். ”அப்படி ஒரு மனிதன் சாரு. அந்த சாருவைதான் நான் நினைவில் வைத்திருக்கிறேன். என்னைத் திட்டி எழுதியதை அல்ல”, என்று சொன்னார் மிஷ்கின். அதே சாரு , தனது அவ்வா சிறுகதையில் தெரு நாயின் தொல்லை தாங்காது, அதன் மேல் வெந்நீரை கொட்டும் குரூரத்தையும் எழுதியிருப்பார். இந்த முரணையும், இருமையையும் சேர்த்தே சாருவின் படைப்புகளை புரிந்துக்கொள்ளமுடியும்.
விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ரா.செந்தில்குமார்.
ரா.செந்தில்குமார் தமிழ் விக்கி