விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்
அன்பின் ஜெ,
நலம்தானே?
சென்ற மார்ச் மாதத்தில் ஒரு ஞாயிறு இரவு தகடூர் புத்தகப் பேரவை, ஐயா மு. வே அவர்கள் பங்கேற்ற இணைய நிகழ்வொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஐயா எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்ட “இதயம் தொட்ட இலக்கியவாதிகள்” என்ற நூல் அறிமுக நிகழ்வு. தங்கமணி சார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். திருவள்ளுவர் பொத்தக நிலையம் நடத்தும் அறிவுடை நம்பி அவர்கள் அறிமுகம் செய்து பேசினார். புத்தக அறிமுகத்தோடு தனக்கும், தன் அப்பாவுக்கும் மு, வே ஐயாவுடன் இருந்த நெருங்கிய நட்பு பற்றியும் சொன்னார். எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களும், கவிஞர் க.வை. பழனிச்சாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். நம்பியின் அறிமுகத்திலிருந்தும், தொடர்ந்த இரண்டு வாழ்த்துரைகளிலிருந்தும் ஐயாவின் முழுமையான சித்திரம் ஒன்று துலங்கி வந்த சிறப்பான நிகழ்ச்சி அது.
நிகழ்வில் அடுத்ததாக மு. வே ஐயா ஏற்புரை வழங்கினார். இன்னும் ஞாபகத்திலிருக்கும் நல்ல உரை. ஐயாவை பல வருடங்கள் கழித்து பார்க்கிறேன் அந்நிகழ்வில். “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்பது போல நான் சொல்ல வேண்டுமானால் “எல்லாப் புகழும் புத்தகங்களுக்கே” என்பேன் நான்” என்றுதான் உரையை ஆரம்பித்தார் மு. வே ஐயா. புத்தகங்கள் ஒருவர் வாழ்வை என்ன செய்யுமென்பதற்கு தன் 81 வருட வாழ்க்கையே சாட்சி என்றார். புத்தகங்கள் சார்ந்த தன் விருப்பமும் தொழிலும் ஒன்றாய் அமைந்ததே தன் நிறைவான வாழ்க்கைக்கு காரணம் என்றார். கொங்கு மண்டலத்தில் தன் இத்தனை வருட அனுபவத்தில் தான் சந்தித்த சிறந்த வாசகர்கள் சிலரை நினைவு கூர்ந்தார். எல்லோருக்குள்ளும் படிக்கும் ஆர்வம் இருக்கிறது, அதை எப்படித் தூண்டி, புத்தகங்களை நோக்கி அவர்களை ஈர்ப்பது என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது என்றார்.
நான் பழைய நினைவுகளில் ஆழ்ந்தேன். பயணங்களின் போதும், வெளியில் செல்லும்போதும், பெரிய புத்தகக் கடைகள் மட்டுமல்ல, வார, மாத சஞ்சிகைகள் தொங்கும் சின்னப் பெட்டிக் கடைகளைக் கண்டால் கூட ஆசையாய்த்தான் பார்ப்பேன். அந்தப் பித்து ஆரம்பித்தது என் பால்யத்தில் என்பது அம்முவுக்கும் தெரியும். கிராமத்தில் வசந்தா அத்தை, மனோ சித்தப்பா, வெங்கடாஜலபதி பெரியப்பா, கமலா பெரியம்மா, பொட்டுத் தாத்தா, ராஜி அக்கா மற்றும் பல அக்காக்கள் போன்றோரால்தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு அட்டையாய் ஒட்டிக்கொண்டது. வார மாத இதழ்களில் வந்த தொடர்கதைகள், படக் கதைகள் எல்லாமே பைண்ட் செய்யப்பட்டு வசந்தா அத்தை வீட்டில் ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய முதல் மாடியில் இருக்கும். விடுமுறைகளில் காலையில் அங்கே போனால் மாலையில்தான் திரும்புவேன். சாப்பாடு, டீ, காபி எல்லாம் அத்தை வீட்டில்தான். வீடு மந்தையில் இருந்ததால் பலசரக்குக் கடைகள் எல்லாம் பக்கத்தில்தான். வீட்டு வாசல் பக்கத்திலேயே நண்பன் முனீஸ்வரனின் அப்பா காரா சேவு, மிக்ஸர் கடை வைத்திருந்தார். கடைக்குப் போடப்படும் பழைய குமுதம், ஆனந்த விகடன் எல்லாவற்றையும் ஒன்று மாற்றி ஒன்று படிக்க வாங்கி வந்து கொண்டேயிருப்பேன். சென்னம்பட்டி நடுநிலைப் பள்ளியில் படித்தபோது அங்கு தலைமையாசிரியர் ”டேவிட் சுந்தர் சிங்” ரத்னபாலா, பூந்தளிர், பாலமித்ராவை அறிமுகப்படுத்தினார். பள்ளியின் முன்னாலேயே கடை வைத்திருந்த தோழி நாகேஸ்வரியின் அப்பா காமிகஸ் புத்தகங்கள் கடையில் வைத்து நாள் வாடகைக்குத் தந்து கொண்டிருப்பார். ஒன்பதாம் வகுப்பு திருமங்கலம் PKN-க்கு வந்தபிறகு, வாசிப்பு கல்கி, சாண்டில்யன், ராஜேஷ்குமார், சுபா, பி,கே.பி, சுஜாதா, பாலா என்று விரிந்தது.
89-ல் கோவைக்கு வந்தபின்தான் விஜயா பதிப்பகம் அறிமுகமாயிற்று. 94 வரையிலான என் கோவை கல்லூரி வாழ்க்கையின் அந்த நான்கு வருடங்களை சுயபுராணமாய் எழுதினால் அதில் விஜயா பதிப்பகம் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும். பாலாவின் மீதும், தி.ஜா.-வின் மீதும் கொண்ட பெருங்காதலோடு கல்லூரியில் சீனியர் அகிலன் அண்ணாவால் தீவிர இலக்கியமும் அறிமுகமானது ஜேகேயோடு சேர்த்து. புத்தகங்களின் மீதான என் பெரும்பசிக்கு விஜயா பதிப்பகம் அள்ளி அள்ளி தீனி போட்டுக் கொண்டேயிருந்தது. நண்பர்களோடு சைக்கிளில் மருதமலை போனால் அங்கு ஒரு விஜயா பதிப்பகத்தின் கடை. தோழிகளோடு பேரூர் கோவில் போனால் அங்கு ஒரு கடை. காந்திபுரம் போகும்பொழுதெல்லாம் கௌரிசங்கர் முன்னாலிருக்கும் விஜயா பதிப்பகக் கடையில் நுழையாமல் வந்ததில்லை. கல்லூரி வாழ்க்கையில், டவுன் ஹால் மணிக்கூண்டு என்றால் எனக்கு ராஜவீதி விஜயா பதிப்பகம்தான். கூடவே அங்கிருக்கும் பழைய புத்தகக் கடைகளும். 89-ல் விஜயா பதிப்பகத்துடன் அன்று தொடங்கிய பந்தம் இதோ 2021 வரை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 99-ல் அம்முவுடன் திருமணத்திற்குப் பிறகு திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டினுள் இருக்கும் விஜயா பதிப்பகக் கடையும் என் பக்கங்களில் இணைந்து கொண்டது.
இப்போதும் ஊருக்குப் போனால் பல்லடம், திருப்பூர், கோவை என்று சுற்றும்போது புத்தகக் கடைகளுக்குள் நுழையாமல் பயணங்கள் முழுமையடைந்ததே இல்லை. பல்லடத்தில் பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆர்யாஸ் ஹோட்டலுக்கு அருகிலிருக்கும் புத்தகக் கடை, பொள்ளாச்சி ரோடு திருப்பத்தில் சரவண பவனிலிருக்கும் சிறிய கடை என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. ஏனோ புத்தகங்களை மொத்தமாகப் பார்ப்பதும், அதைத் தொட்டு, பிரித்து உணர்வதுமே ஒரு இனிய அனுபவமாக ஆழ்மனதில் பதிந்துவிட்டிருக்கிறது. அது வாசிப்பினால் உண்டான பரவசத்தின் தேடல். விளைவு.
மு. வே ஐயா அவர்கள் இவ்வருட விஷ்ணுபுர விழாவில் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. ஐயாவிற்கு அன்பும், வணக்கங்களும்.
வெங்கி
அ. க. அரவிந்தன்.
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, கமலதேவி
விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்
விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர்