போகன் -அபூர்வங்களையும், அபத்தங்களையும் காட்சிப்படுத்தும் கலைஞன்

விஜயராகவன் நெறியாள்கையில் போகன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

போகன் சங்கர் என்ற எழுத்தாளரை வகைப்படுத்துவது மிகக் கடினமான செயல். அவர் ஒரு கவிஞரா, கட்டுரையாளரா, சிறுகதை ஆசிரியரா, குறுங்கதைகளின் முக்கியப் புள்ளியா அல்லது விமர்சகரா? இவை அனைத்தும் ஒருங்கிணைந்த கலவை அவர். ஆனால் அவர் கவிஞர் என நவீன தமிழிலக்கியச் சூழலில் அறியப்படுவதால் அதனையே முதன்மையாகக் கொண்டு அவருடைய எழுத்துக்கள் குறித்த வாசிப்புப் பார்வையாக இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

கவிஞர்:

போகனின் கவிதைகளுக்காகவே அவரைப் பின் தொடர்பவர்கள் ஏராளம். போகனின் எழுத்துக்களின் சிறப்பு என நான் கருதுவது அவருடைய சொற்தேர்ச்சி. மிகவும் சிக்கலான கருத்துக்களை விளக்க எளிமையான கவிதை நயமிக்க சொற்களைக் கொண்டு தான் சொல்ல வந்த செய்தியை மிக நேர்த்தியாக வாசகனுக்குக் கடத்தி விடுகிறார். இதை அவரின் நண்பர் சொற்சிக்கனம் எனக் குறிக்கிறார். உதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்வில் எதிர்கொண்ட முக்குணப் பெண்களைப் பற்றிய கவிதையிலுள்ள படிமம் கூற வந்த மிக முக்கியமான கருதுகோளை வாசகனுக்கு எப்படிக் கடத்துகிறது எனப் பார்ப்போம்:

மறைந்து போன வானவில்லைப் பார்க்கச்
சென்ற முட்டாள் சிறுவனைப் போல
நின்றிருந்தேன்.

என்னும் முட்டாள் சிறுவன் படிமம்தவறவிட்ட அரிய தருணத்தை, இழப்பின் துயரை மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறது. மிக அரிதாக ஒரு மனிதனின் வாழ்வில் எதிர்ப்படும் சத்துவத்தின் நிதானம் கொண்ட பிரதிபலன் எதிர்பாராத பெண்ணின் அன்பின் சொற்களை நிகழும் கணத்தில் அதன் அருமையை உணராமல், அவள் மறைந்த சில வருடங்களுக்குப் பிறகு குப்பைக்கூடையில் தேடியலையும் ஒருவனை மறைந்த வானவில்லை விளையாட்டுப் புத்தியால் நிகழ் கணத்தில் தவற விட்டுப் பிறகு பார்க்க முடியாமால் சோர்ந்து, திகைத்து நிற்கும்சிறுவனுக்கு ஒப்பிட்டு காட்டும் கவிதை அழகிய காட்சிப் படிமம். அபூர்வத் தருணங்கள் அரிதாகவே கிடைக்கும் என்பதற்கு இதை விட நல்ல சான்று கிடைக்குமா?

இந்தியத் தொன்மங்களில் இப்பிரபஞ்சத்தின் முதல் சலனம் ஒலி வடிவிலானது என்ற கோட்பாடு உண்டு. பிரபஞ்சத்தின் இறுதி என்பது சலனமின்மையே எனக் கூறுவோரும் உண்டு. மானுட வாழ்வென்பதும் சலனத்தில் (ஒலியில்) தொடங்கி சலனமின்மையில் (மவுனம்) முடியக்கூடியது. இதை கிருஷ்ணனும் சிவனும் என்ற கவிதையில் எழுதியிருக்கிறார்.

கிருஷ்ணனும் சிவனும்.

‘அவன் விடாது
ஒலிக்கும் த்ருபத் இசை”
என்றார் அவர்.
“விடாது என்னை
இசைய வைக்கும்
ஒரு பாடகன்.
ஒவ்வொரு இலையாய்ப்
பார்த்துப் பார்த்துச்
சலசலக்கவைக்கும் காற்று.
கூவியே இரவை விடிய வைக்கும்
பறவை .

மூச்சு முட்டுகிறது எனக்கு.
நெகிழ்ந்து நெகிழ்ந்து
கரைந்து
நான் என்பதே சிறுத்து சிறுத்து இல்லாமல்
போய்விடுவேனோ என்ற பயம்
வந்துவிட்டது எனக்கு.

நான் உன்னிடம் வந்தேன்

அசையாது
வசந்தகால நதியொழுக்கை
சரத் கால வெள்ளப்பெருக்கை
வறள்கால வெறுமையை
உச்சியிலிருந்து
உற்று நோக்கி நிற்கும்
ஆதிக்கல் போல
உன்னிடம் உறைந்திருக்கும்
மவுனம் தேடி…

கல் தெய்வமாவது எப்படி?
என்று
இப்போது புரிகிறது எனக்கு.”

போகனின் கவிதைகளில் பெண் குழந்தைகள் அடிக்கடி வருவார்கள். அவர்கள் இடம்பெறும் கவிதைகளெல்லாம் நெகிழ்ச்சியான தருணங்களை வாசகர்களின் மனதில் விட்டுச் சென்றிருப்பவை. ஊழ் என்னும் பெரு வலி முன்பு தகப்பன் எனும் பாத்திரம் ஏந்திய மனிதனின் இயலாமையையும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத வாழ்வின் அபத்தத்தையும் எரிக் பெர்ன் எனத் தொடங்கும் நீள் கவிதையில் விவரிக்கிறார், கவிதையின் பிற்பாதியை மட்டும் கீழே தருகிறேன். மகள்களைப் பெற்ற அனைத்து தந்தைகளையும் இக்கவிதை நெகிழ்வூட்டக்கூடியது.

எல்லா பாத்திரங்களையும் முயன்றுவிட்டு
இறுதியாக நான் மிகவும் முயன்றேன்
ஒரு நல்ல தகப்பன் பாத்திரம் வகிப்பதற்காகவும்.
ஆனாலும் நான் அறிவேன்
நான் இதையும் மோசமாகச் செய்கிறேன்.

இதை நினைக்கையில் என் கண்கள் பொங்குகின்றன.
ஹரிணி என் மகளே
இந்த பாத்திரத்துக்கு என்னை
ஏன் தேர்ந்தெடுத்தாய்?
உன் அளவுகடந்த கருணையினால்
நீ
நான் உன் கைகளைப் பற்றிச்
சாலைகளைக் கடக்க உதவ அனுமதித்தாய்.

என் மீது நீ வைத்திருக்கும்
தூய நம்பிக்கையை
உன் கண்களில் காணும்போதெல்லாம்
நான் என் நடுக்கத்தை மறைத்துக் கொள்கிறேன்.
இந்தப் பாரத்தால்
என் மனம் தளும்பும்போதெல்லாம்
நான் கோவில்களில் போய்ப் போய் நின்றுகொள்கிறேன்.

அங்கே நிற்கிறது
என்னைப்போலவே
தன் பாத்திரத்தைச்
சரியாகச் செய்யாததொரு தெய்வம்.

உச்சியிலிருந்து உற்று நோக்கும் ஆதிக்கல்லில் உறைந்திருக்கும் மௌனம், தானேற்ற பாத்திரத்தைச் சரியாக செய்யாத தெய்வம் போன்ற வரிகள் வாசகனின் உள்ளத்தில் பல்வேறு வாசிப்புக்கான சாத்தியங்களை வழங்கி மீண்டும் மீண்டும் படிக்குந்தோறும் அவனுக்கு புதிய திறப்புகளை அளிக்கும் முடிவுறாச் சொற்கள்.

கட்டுரையாளர்:

போகன் அவர்களது கட்டுரைகள் அவரது பரந்த வாசிப்பின் விஸ்தீரனத்தைக் காட்டுபவை. எப்பொருளை எடுத்துக்கொண்டாலும் அதில் தனக்கே உரிய புதிய பார்வையுடன் அதன் முழுக்கோணத்தையும் (360°) அணுகுபவர். உதாரணமாக எதுவும் கடந்து போகும் என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையைப் பார்ப்போம். இக்கட்டுரையில் இவ்வாக்கியத்தின் மூலம் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பான பெர்சிய, யூதத் தொன்மங்களில் இருக்கலாம் எனத் தொடங்குபவர் அவ்வாக்கியத்தை பிரபலமாக்கிய எட்வர்ட் பிட்ஜெரால்ட் வழியாக தமிழின் திருக்குறள், திருமந்திர உதாரணங்களைக் கொண்டு நிலையாமையை இது குறிக்கும் என நிறுவுகிறார். அதன் முழுமைப் பொருளை Stocism மற்றும் மார்க்கஸ் அரேலியஸின் படைப்பைச் சுட்டி விளக்குபவர் அது எப்படி தன் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது இரு பிரிவுகளாக விவரிக்கிறார்.
தாரளமயமாக்கலுக்கு முன்பான தென் தமிழக, கேரள வாழ்வின் காத்திருப்புகளை கலாப்ரியா, பாரதிமணி, எம். டி. வாசுதேவன் நாயர், கே. பாலச்சந்தர் படைப்புகளைக் கொண்டு விளக்கி, கிராமங்களில் உறைந்திருந்த காலம் கடப்பதின் பிரக்ஞை இல்லாமலே கடந்ததையும், 1990களுக்குப் பின் அதி வேகமாகக் கடந்து செல்லும் காலத்தினால் மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும், நுகர்வுக் கலாச்சாரம் உண்டாக்கும் நிறைவின்மையையும் காட்டி யுவால் நோவா ஹராரியின் உதாரணம் வழி சிக்கலிருந்து மீள வழிகாட்டி கலாப் பிரியாவின் கவிதை வழியாக இதுவும் பழகிப் போகும் என முடிக்கிறார். 50 வருட வாழ்வை ஒற்றை வாக்கியம் கொண்டு முழுமையாகக் காண்பிக்கிறார். இதுவே போகனின் கட்டுரைகளின் சிறப்பு.

சிறுகதை, குறுங்கதை ஆசிரியர்:

போகனின் குறுங்கதைகளைப் பொருத்தவரையில் கவிதைகளின் நீட்சியே அவை. கவித்துவமான உரைநடை வழியாக இவை குறுங்கதைகளாக பரிமணிப்பதாகத் தோன்றுகிறது. இவற்றைப் பேய்க்கதைகள், பகடிக் கதைகள், உலகியலில் ஈடுபடும் கலைஞனின் அகச் சிக்கல்களைப் பேசும் கதைகள் என மேலோட்டமாகப் பிரிக்கலாம். இக்குறுங்கதைகளின் வழியாக முன்னோடி எழுத்தாளர்களையும் கவர்ந்த பாருக்குட்டி என்ற புனைவுக் கதாபாத்திரம் மிகுந்த பிரபலம். இக்கதாபாத்திரம் ஒரு தேவதை வடிவம் என எண்ணுகிறேன். ஆனால் போகன் யட்சி எனச் சொல்லக்கூடும். ஆணின் பகல் கனவுகளில் தோன்றும் பள்ளியறையில் தாசியாய், உலகியல் வாழ்வில் தோழியாய், நோயுற்ற போது தாதியாய், உளச்சோர்வு அடையும் போது ஊக்கமளிக்கும் ஆசிரியையாய் நேர்மறைப் பண்புகள் மிகுந்த பிரபலமான இப்பாத்திரத்தை அவர் பெரும்பாலான குறுங்கதைகளில் பயன்படுத்தி உள்ளார். கதையின் முக்கியத் தருணங்களை பாருக்குட்டியின் இயல்பான அப்பாவித்தனமான செயல்கள் மற்றும் சொற்கள் வழியாக வாசகனுக்கு எளிதில் புரிய வைத்து விடுவது இக்கதைகளின் பலம். சமீபத்தில் எழுதிய இஷ்டம் கதையில் பாருக்குட்டித் தன் வழக்கமான செயல்களின் வழியாகவே கதை சொல்லியின் தற்கொலை எண்ணத்தைத் தடுக்கிறார்.

கார்வை என்ற கதையில் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும் கதை சொல்லி அவருடைய படைப்புகளின் பெறுமதியை உணராமல் உரையாடிவிட்டு வீடு திரும்பிய பின் விமர்சகர்களால் அவ்வெழுத்தாளரின் சுமாரான படைப்பு எனச் சொல்லப்பட்ட ஒரு நூலை வாசிக்கிறார். அந்நூல் அவரைக் கலங்கடித்து விடுகிறது. குற்றவுணர்வில் எழுத்தாளரைச் சந்தித்தது குறித்தும், அவருடைய படைப்பு குறித்தும் கண்ணீருடன் இரவெல்லாம் உறங்காமல் பாருவிடம் பகிர்ந்து கொள்கிறார். விடிகாலையில் அக்காக் குருவி கூவுகிறது. அப்போது பாரு சொல்கிறாள்:

‘அக்காக்குருவியின் ஆழ்ந்த சோகத்தை கொண்டுவர முடிகிற வாத்தியத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.இல்லையா?’

அவ்வெழுத்தாளரும் சற்றேறக்குறைய அதே போன்ற ஒன்றை சொல்லியிருப்பார். அதை கதைசொல்லி பாருக்குட்டியிடம் சொல்லாத போதும் இரவு முழுதும் நடந்த உரையாடல் வழியாக அவர் சொல்ல வததின் சாரத்தைப் புரிந்து கேள்வியாக்குவது கதையின் தனி அறிதல் தருணம்.கர்மயோக வாழ்வைப் பற்றிய கதையாக பின்வரும் வரிகளுடன் போகன் இக்கதையை முடிக்கிறார்.அக்காக் குருவி யாருக்காகவும் பாடுவதில்லை. அது தன்னையேதான் பாடிப் பாடி அழைத்துக்கொள்கிறது.

மேலும் ஒரு கதையில் திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் “சாச்சா” என்று கை நீட்டும் வட இந்தியச் சிறுமியின் வழியாக பசியின் துயரையும்,”மாப் கரோ சாப்” எனக் குழந்தையின் தாய் தடுப்பதையும் இரவச்சம் என வள்ளுவர் கூறும் விழுமியத்தையும் வட இந்தியப் பெண் வழியாகக் காட்டுவது இந்நிலம் பண்பாடுகள் வழி ஒருங்கிணைந்திருப்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது. வாழ்வின் இறுதிக் கணத்தில் நோயுற்ற குழந்தைகள் பெற்றோரைத் தேற்றுவது, பேருந்தில் நூறு ரூபாய் மதிப்புள்ள விளையாட்டுப் பொருளை வாங்கித் தரத் தயங்கும் தந்தையின் இயலாமையைக் காட்டுவது. ஆனாலும் அவர் இரக்கத்துடன் உதவ முன்வருபவரின் உதவியை ஏற்க மறுப்பது. உதவ முன்வந்தவரும், ஏற்க மறுத்தவரும், சம்பந்தப்பட்டக் குழந்தையின் ஏக்கத்தைப் பார்த்து மருகுவது என நுட்பமான அகச் சிக்கல்களைப் பேசும் அன்றாட தன் வரலாற்றுக் கதைகள் மனிதனின் ஆபூர்வ குணங்களையும், அபத்தமானமான, குற்ற உணர்வுகளையும் ஒருங்கே காட்டுபவை. இவற்றைப் பெரும்பாலும் குறுங்கதை வடிவிலேயே போகன் எழுதுகிறார். ஒரு நாவலுக்கான பேசு பொருள் உள்ள கருவைச் சுருக்கி குறுங்கதையாக மாற்றுகிறார் எனப் பல கதைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதுவே ( சுருங்கச் சொல்லுதலே) போகன் படைப்புகளின் சிறப்பு எனலாம்,

அடுத்து போகனின் சிறுகதைகளில்தான் கதையின் பகைப்புலன், சூழல் சித்திரிப்புகளைப் பற்றிய விரிவான அணுகுமுறையைக் காணலாம். ஆரம்ப காலச் சிறுகதைகளில் சூழல் குறித்து விரிவாக எழுதியவர் சமீபங்களில் கதையின் தேவைக்கு மீறி ஓரிரு சித்தரிப்புகளைச் செய்வதைக் கூட தவிர்க்க முனைகிறார் எனத் தோன்றுகிறது. பூ, சிறுத்தை நடை போன்ற கதைகளில் எழுதப்பட்ட சூழல், களன் பற்றிய சித்தரிப்பை சமீபத்திய பொட்டை, மெல்லுடலிகள் ஆகிய கதைகளில் காண முடியவில்லை. சிறுத்தை நடை கதையில் காட்டும் வால்பாறை மலைப் பின்னணியில் திடீரென மின்மினிகளால் தோன்றும் ஒளி ஓவியம் நாயகன், நாயகி உள்ளங்களில் உருவாக்கும் எண்ணங்களின் மாறுதல் கதையின் போக்கையே மாற்றும். அதே போல் பூ கதையில் அம்மனின் உருவம் வழி கதை மாந்தரில் அகத்தில் உருவாகும் எண்ணத் திறப்புகளை சமீபத்திய கதைகளில் காண முடியவில்லை. நவீன இலக்கியம் மானுடத்தின் குரூரத்தையே ஒளி கூட்டிக் காண்பிக்கிறது என்ற கருதுகோளை போகனின் படைப்புகள் மறுதலிக்கின்றன என்றே தோன்றுகிறது. பொட்டை, மெல்லுடலிகள் ஆகிய கதைகளின் மொழி நடை அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தாலும், கசப்புணர்வை தோற்றுவிப்பதில்லை. மாறாக பொட்டை கையறு நிலையையும், மெல்லுடலிகள் பிரதிபலன் எதிர்பாரத உதவி எனும் மானுடத்தின் மகத்தான விழுமியத்தையுமே காட்டி முடிகிறது.

போகனின் ஒரு சில கதைகளைக் கொண்டு அவர் ஒரு பெண் வெறுப்பாளர் அல்லது ஆணியவாதி என்போர் உண்டு. போகனின் பெண் கதை மாந்தர் பெரும்பாலும் மரபான பெண்கள். முனைந்து பெண்ணியம் பேசும் பெண்களை அவர் காட்டுவதில்லை. யதார்தத்தில் நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் பெண்களே அவரது கதை மாந்தர்கள். கசப்பின் கனிகள் என்று அவர் தன் அன்னையைப் பற்றி எழுதியது மிக அப்பட்டமாக யதார்தத்தைப் பேசுவது மற்றும் சென்ற தலைமுறைப் பெண்களின் மனவோட்டத்தைச் சொல்லும் அழகிய ஆவணம்.

விமர்சகர் :

சுஜாதாவிற்குப் பின் அமெரிக்க வாழ் ஆங்கிலக் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் தமிழில் அதிகம் அறிமுகப்படுத்தியவர் போகன் என்றே நினைக்கிறேன். விக்கிரமாத்தியத்தன் கவிதைகள், எம். கோபால கிருஷ்ணனின் தீர்த்த யாத்திரை, ஜெய மோகனின் பத்து லட்சம் காலடிகள் ஆகிய படைப்புகள் குறித்தும் மற்றும் சாருவின் படைப்புலகு பற்றி சமீபத்தில் எழுதிய விமர்சனம், கொரனோ காலத்தில் காலச்சுவடில் எஸ்.ரா எழுதிய குறுங்கதைகள் பற்றிய பார்வை ஆகியன போகன் விமர்சகராக கூர்ந்து கவனிக்கப் படுகிறார் எனத் தோன்றுகிறது. குமரகுருபரன் விருது விழாவில் விருது பெற்ற கவிஞர்கள் பற்றி அவர் ஆற்றிய உரை, அன்றைய கலந்துரையாடவில் கார்ல் மார்க்ஸ் வீரான் குட்டியிடம் கேட்ட கவிதையின் சமூகக் கடப்பாடு குறித்து போகன் அவரது பேச்சில் கவிதை உள்ளுறையாக தனக்கான ஒரு நீதியைக் கொண்டுள்ளது. நீதியை, உண்மையை அல்லது அறத்தை மறுதலிக்கும் ஒரு விசயம் கவிதையாக நிலைபெறாது என முன்னோடிக் கவிஞர்களின் படைப்புகள் கொண்டு நிறுவியது கவிதை பற்றி சமீப காலத்தில் வெளியான மிக முக்கியமான கருத்து.

சமகாலத்தின் மிக முக்கிய இலக்கியப் படைப்பாளி போகன் சங்கர் என்பதில் ஐயமேதுமில்லை. அவருடைய குளம் போல் நடிக்கும் கடல் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகள்.

தேவதாஸ்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
முந்தைய கட்டுரைதிருவனந்தபுரம் திரைவிழாவில்
அடுத்த கட்டுரையூசுப், கடிதம்