சாரு பற்றி, லட்சுமி சரவணக்குமார்

 

’சர்வாதிகார ஆட்சியின் முக்கிய அம்சங்கள் : அதிகாரம், வன்முறை.  தந்தை வழிச் சமூகமும் லிங்க மையவாதமும்  இதே போன்றதுதான் என்று பார்த்தோம். அது வேட்கையையும் திளைப்பையும் கண்கானிக்கிறது; தடை செய்கிறது; மொழியைத் தணிக்கை செய்கிறது. இதைத்தான் sexual and textual suppression என்கிறார்கள். இதை மீறுவதே க்றிஸ்டினாவின் எழுத்து. இதுதான் போர்னோவின் அரசியல். இவ்வகை எழுத்தே transgressive writing என்பது.’

கிறிஸ்டினா பெரி ரோஸி குறித்த கட்டுரையொன்றில் சாரு இப்படிக் குறிப்பிடுகிறார். பெரி ரோஸியின் எழுத்துகள் குறித்து அவர் எழுதியிருப்பது அப்படியே  தமிழ் சூழலில் அவருக்கும் அவரது எழுத்துகளுக்கும் பொருத்தும்.  நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழில் தனக்கென தனித்த போக்கையும் வேறு யாரும் முயன்று பார்க்காத மீறல்களையும் எழுதிக் கொண்டிருப்பவர்  சாரு நிவேதிதா.   பேச விழையாதவற்றின் மீதும் அருவருப்பானவையென ஒதுக்கித் தள்ளப்பட்டவற்றின் மீதும் தமிழ்  இலக்கிய உலகம் பெரும் விலக்கம் கொண்டிருந்த சூழலில் சாரு  அவற்றின் அழகியலையும்  கலை மதிப்பையும் தனது படைப்புகளில் அழுத்தமாய் பதிவு செய்தார். அப்படி பதிவு செய்ததற்காக இன்று வரையிலும் புறக்கணிக்கப்படுகிறவராகவும் இருக்கிறார்.  ஆனால் தன்னை நோக்கி வரும் வசைகளையும் தாக்குதல்களையும் ஒருபோதும் அவர் பொருட்படுத்தியதில்லை.  எழுத வந்த காலத்தில் எத்தனை தீவிரமாக இயங்கினாரோ அதே தீவிரத்தோடு இன்றளவும் இயங்கி வருகிறார் என்பது வியக்கத்தக்கது.

1984 ம் வருடம் என்று நினைக்கிறேன், மதுரையில் நடந்த நாடக விழாவில் சாருவின் ரெண்டாம் ஆட்டம் என்னும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே  பெரும் சலசலப்புகள் உருவாகி பார்வையாளர் வரிசையிலிருந்தவர்கள் நாடகத்தைப் பாதியிலேயே நிறுத்தும்படி கூச்சலிட்டதோடு சாருவையும் அவரோடு இருந்தவர்களையும் தாக்கத் துவங்கிவிட்டார்கள்.  அப்படித் தாக்கியவர்களில் பலரும் தீவிர இலக்கிய வாசிப்பு கொண்டவர்கள் என்பதோடு அரசியல் இயக்கங்களில் பங்காற்றிக் கொண்டிருந்தவர்கள்.   அந்த நிகழ்வில் அவரை தாக்கியதன் மூலம் பெரிதாய் சாதித்து விட்டதாய் நினைத்தவர்கள் எவரும் இன்று என்னவானார்கள் தெரியவில்லை. காலம் கலைஞனை ஒருபோதும் கைவிடுவதில்லை.  பொது சமூகத்தின் மனதை தொந்தரவு செய்வதுதான் ஒரு  கலைஞனின் அடிப்படை  குணம்.

’அறிவுப் பரவல் இரண்டு வகையான அடக்குமுறைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பார் ஃபூக்கோ. சிலவற்றை அறிவுப் புலத்திலிருந்து அகற்றுவது என்பது ஒன்று. ஒரு சில ஒழுங்குகளை அறிவினூடாகத் திணிப்பது மற்றொன்று. பண்பாடு என்கிற ஆயுதத்தின் மூலம் உடல் சார்ந்த அறிவு, உடலைப் பேசும் உரிமை, பாலியல் தேர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது சமூகம். அதன்மூலம் எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுள்ள குடிமகன், மகள் தயாரிக்கப்படுகின்றனர். ’ என ஒரு கட்டுரையில் அ.மார்க்ஸ்  எழுதுகிறார். சாருவின் எழுத்துகள் சமூகத்தின் மீது திணிக்கப்படும் இந்த ஒழுங்குகளுக்கு எதிராகவே   இயங்கி வருவதால்தான் அவர் தொடர்ந்து இங்கு புறக்கணிக்கப்படுகிறவராய் இருந்திருக்கிறார். அவருக்கென பெரும் வாசகப்பரப்பு இருக்கின்ற பொழுதும் இந்த நாற்பதாண்டுகளில் அவருக்கு எத்தனை விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று தேடிப் பார்த்தோமானால் ஒரு கை விரல்களுக்குள் அடங்கிவிடும். தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான விருதுகள் குறித்தும் அவற்றிற்குப் பின்னாலிருக்கும் அரசியல் குறித்தும் அவர்  கடந்த பல வருடங்களாகவே நிறைய எழுதியிருக்கிறார். எழுத்தையும் எழுத்தாளனையும்  இரண்டாம்பட்சமாக பொருட்படுத்தக் கூடியவையாகவே பெரும்பாலான இலக்கிய அமைப்புகள் இருப்பதால் அவர்களுக்கு  விருதுகள் என்பது எழுத்தாளர்களின் ஒழுக்கம்,  தனிப்பட்ட வாழ்வு இவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடியதாக  இருக்கிறது.

ஒரு எழுத்தாளன் தனது முன்னோடிகளின் எழுத்திலிருந்து மட்டுமல்ல, வாழ்விலிருந்தும் தான் தன்னை உருவாக்கிக் கொள்கிறான். அந்த வகையில் நான் எழுத வந்த இந்த பதினாறு வருடங்களில் எனக்கான படைப்பு மனத்தையும் வாழ்வதற்கான பெரும் நம்பிக்கைகளையும் எனது முன்னோடிகளிடமிருந்தே நான் பெற்று வந்திருக்கிறேன்.   தமிழின்  முக்கிய எழுத்தாளர்கள் ஒவ்வொருவருமே எனக்கு அந்த   வகையில் ஆசான்கள் தான். இன்றைக்கிருக்கும் தகவல் தொடர்பு வசதிகள் பத்துப் பதினைந்து வருடங்களுக்குமுன் குறைவாக இருந்தது  என் தலைமுறையினருக்குக் கிடைத்த ஒருவகை அதிர்ஸ்டம்தான். ஒவ்வொரு எழுத்தாளரையும் தேடிச் சென்று சந்தித்ததும் உரையாடியதும் இன்றைக்கு நினைத்துப் பார்க்கையில் பெறுமதியானவையாய்த் தோன்றுகின்றன.

சாருவை வாசிக்கத் துவங்கியபோது எனக்கு பதினைந்து வயதிருக்கலாம். சின்னஞ்சிறிய நகரமொன்றில் உலகை எதிர்கொள்வதற்கான துணிவோ தெளிவோ இல்லாத  அந்த நாட்களில் வறுமையின் காரணமாய் கடுமையான தாழ்மையுணர்ச்சி கொண்டவனாய் இருந்தவனுக்கு இலக்கியம்  பெரும் துணையாய் அமைந்தது.  இடைவிடாத வாசிப்பு முதலிலில் எனக்குத் தந்தது தன்னுணர்ச்சியையும் நம்பிக்கையையும்தான். உலகை எழுத்தாளர்களின் கண்களின் வழியாய்க் காணத் துவங்கியபோது நானும் எனக்கான புதிய கனவுகளை உருவாக்கிக் கொள்ளத் துவங்கினேன்.

எக்ஸிடென்சியலிசமும் ஃபேன்ஸி பனியனும் துவங்கி  ஸீரோ டிகிரி, ராஸலீலா, எக்ஸைல், தேகம் என  அவரது நாவல்களும் அவரது சிறுகதைகளும்    வாசகனின் சமநிலையைக் குலைக்கக் கூடியவை.  வாழ்வு  குறித்தும் தத்துவங்கள் குறித்தும் நமக்கிருக்கும் இருக்கும் ஒழுங்குகளை குலைப்பதோடு விளிம்பின் கொண்டாட்டங்களை பிரதானப்படுத்துவதாய் அமைகின்றன. தமிழில் அனேக நாவல்கள் குடும்பம் என்ற அமைப்பினைச் சுற்றியேதான் இன்றளவும் எழுதப்படுகின்றன. சாருவின்  எழுத்துகள் குடும்பம் என்ற அமைப்பு தனிமனிதனின் மீது நிகழ்த்தும் வன்முறைகளுக்கு எதிரானதாக இருக்கின்றன.   மிக முக்கியமாய் நடுத்தர வர்க்கத்து வாழ்வு  ஒரு மனிதனை எந்தவிதமான அரசியல் நிலைப்பாடுகளும் அற்றவனாய் மாற்றிவிட்டிருப்பதை அவரது கதைகளில் நாம்  காணமுடியும்.

‘எதார்த்தம் பற்றிய கருத்தியல் அல்லது மாயப்புனைவு சார்ந்த வீரியம் குறித்த கருத்தியலைக் கைவிட்டாலொழிய – ஆண்பால் மேன்மை ஒரு பிறப்புரிமை என்று பிடித்துத் தொங்குவதை ஒரேயடியாகக் கைவிட்டாலொழிய, எல்லாவிதமான ஒடுக்குமுறை அமைப்புக்களும் செயல்படுவது தொடரும்.’ இதற்குக் காரணம்: முதன்மையான மானிட சந்தர்ப்ப சூழலில் அவை பெற்றுள்ள தருக்க ரீதியான உணர்ச்சிகரமான சம்மதமாகும். நவீன மனிதன் ஒற்றைக் குரலுக்கு எதிரானவனாய் இருக்க வேண்டியது அவசியம்.    நான் லீனியர் முறையில் கதை சொல்லும் போது வெவ்வேறு குரல்களை பதிவு செய்வதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. ஆனால் நான் லீனியர் எழுத்துமுறை என்பது வேடிக்கையாக செய்து பார்க்கக் கூடிய ஒன்றல்ல.  அது கலையாக கை கூடி வர, தேர்ந்த வாசிப்பும் நுண்ணுனர்வும் அவசியமாகிறது. கோபி கிருஷ்ணனின் உள்ளேயிருந்த சில குரல்கள் நாவல் தழிழில்  இந்த வகை  எழுத்துக்கான ஒரு  துவக்கப்புள்ளி என்று கொண்டால் சாருவின் நாவல்கள்  இதில் உச்சமான வாசிப்பனுவத்தைத் தரக்கூடியவை.  “வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு ஒரு வேறுபட்ட சிந்தனை வேண்டும். இச்சிந்தனை தருக்கமும் மறுப்பும் அற்றது. பன்மையை வரவேற்பது. அங்கீரிக்கப்பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது.ஒப்புதல் உள்ளது, அதே சமயத்தில தனிப்படுத்துவதை உபகரணமாக கொண்டது.பாண்டித்திய விதிகளுக்குள் கட்டுப்படாது தீர்வில்லாத கேள்விகளை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை.’ என பின் நவீனத்தும் குறித்து ஃபூக்கோ குறிப்பிடுவதைக் கொண்டு சாருவின் எழுத்துகளை நாம் மதிப்பிட்டால் பன்மையை வரவேற்பதன் முக்கியத்துவம் பிடிபடும்.

சாரு தனது முன்னோடிகளாகக் குறிப்பிடும் ழார் பத்தாய், ஜெனே, சார்த்தர் இவர்களை கொஞ்சமே கொஞ்சமாய் வாசித்தாலும் அவர்களின் எழுத்துக்களை வாசிப்பதில் எத்தனை திவீரம் காட்டியிருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். சாருவின் புனைவுகளில் வரும் முனியாண்டி நமக்கு ஜெனேயின் அர்மாண்டை பல சமயங்களில் நினைவுபடுத்துகிறான். முனியாண்டியும் அர்மாண்டும் வெவ்வேறு நிலத்தில் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த ஒரே மனிதர்கள். ஜெனேயின் திருடனுடைய குறிப்பு புத்தகம் நாவலில் வரும் அர்மாண்ட் தனது எல்லாவிதமான கீழ்மைகளுக்கு இடையில் மிகவும் புராதனமானவனாக, ஒரு கனவானை விட மிகவும் தருக்கப்பூர்வமானவனாக இருக்கிறான்; மரியாதைக்குரிய பூர்ஷ்வா வைவிட மிகவும் நேர்மையானவனாகவும், நேரடியாகவும் நடந்து கொள்ளுகிறான். பூர்ஷ்வாவின் (நடுத்தர வணிக வர்க்கம்) உண்மையான நம்பிக்கைகளை எஜமானத்துவம் பற்றிய மாயையின் பொருட்டு அனுபவிக்கிறான்.

இலக்கியத்தில் பாலியலையும் மீறலையும் எழுதும் போது வாசிப்பவருக்கு அது என்னவிதமான அனுபவத்தைத் தருகிறது என்கிற கேள்வியும் குழப்பமும் பெரும்பாலனவர்களுக்கு வருவதுண்டு. இச்சையைத் தூண்டும்படியான ஒன்றை ஒரு எழுத்தாளன் ஏன் எழுத வேண்டுமென்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்புகிறார்கள். கலை படைப்புகளில் அழகுணர்ச்சியை எதிர்கொள்வது குறித்து காண்ட் என்னும் அறிஞர் நமக்கு  சில விளக்கங்களைத் தருகிறார்.  அழகால் இன்புறுவது, வேறுவிதமான இன்பங்களிலிருந்து தனித்தன்மை கொண்டது.  என் தோட்டத்திலிருக்கும் பழுத்த ஸ்ட்ராபெரி களிப்பூட்டும்  சிவந்த நிறத்துடனும், மிருதுத்தன்மையுடனும்,  நல்ல மணத்துடனும் இருப்பதால் அதை என் வாயில் போட்டுக் கொண்டேனென்றால் என்  இரசனை மாசுபட்டதாகும். நம் எதிர்வினை அசிரத்தையானதாக இருக்கவேண்டும், அதன் குறிக்கோள் அது உருவாக்கும் இன்ப உணர்வுகளிலிருந்து தனித்து இயங்குவதாக இருக்க வேண்டும் என காண்ட் நினைக்கிறார். இத்தாலிய ஓவியர் போட்டிசெல்லியின் வீனசை ஒரு கவர்ச்சிப் பாவையாக நினைத்து ஒரு பார்வையாளர் காம இச்சையோடு எதிர்வினை செய்தால் அவர் அவளை அழகுக்காக ரசிக்கவில்லை.  உண்மையில் அவ்விடத்தில் அழகோடுள்ள அழகியல் முறையான உணர்வு அறுந்துபோகிறது. இலக்கியத்தில் எழுதப்படும் இச்சைகளை எதிர்கொள்வதற்கும் நாம் இந்த விதிகளை பொருத்திப் பார்த்துக் கொள்வது நல்லது. ’நமக்கு அளிக்கப்பட்டுள்ள அழகியல் கோட்பாடுகள்  அனைத்தும் உடலையும், உடல் சார்ந்த இச்சைகளையும் விலக்கி வைத்து, அதன்மூலம் மனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன. முழு முற்றான அதிகாரத்தை நிறுவுகின்றன. ’  என தனது எரோட்டிசம் நூலில் ழார் பத்தாய் எழுதுகிறார். ஒரு நல்ல வாசகன் எல்லா விதமான படைப்புகளையும் வாசிக்கக் கூடியவனாகவும் அதனைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவனாகவும் இருக்க வேண்டும்.

புனைவுகள், அ புனைவுகள், மொழிபெயர்ப்புகள் என சாரு தான் தேர்ந்தெடுக்கும் எல்லாவற்றிலும் ஒரு தனித்துவத்துவமுண்டு.   இசை குறித்து அவர் எழுதின  ஒவ்வொரு கட்டுரையுமே முக்கியமானது. கெளத சித்தார்த்தன் உன்னதம் துவங்கியபோது அதன் முதல் இதழில் இசை குறித்து சாரு எழுதிய கட்டுரை ஒரு மகத்தான வாசிப்பனுபவம்.  கலகம் காதல் இசை,  தீராக்காதலி இரண்டும் தமிழில் இசை குறித்து எழுதப்பட்ட மகத்தான நூல்கள்.  நவீன இலக்கிய வாசகன் குறிப்பிட்டதொரு புள்ளியில் அடங்கி விடாமல் பரந்துபட்ட அறிவைப் பெற விழைகிறான். இசை சினிமா அரசியல் இலக்கியம் வரலாறு எல்லாவற்றைக் குறித்தும் அவனுக்கு அக்கறை இருக்கிறது. சாரு இத்தனை வருட காலம் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருவதற்கு அவர் இந்த எல்லா வகைமைகளிலும் இடையறாது எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கியமான காரணம்.

மொழியை விருப்பமானதொரு மிருகம் போல் பழக்குதல் அத்தனை எளிதில்லை. புனைவெழுத்தாளனுக்கு அவன் மொழியே அவனது உடலாக வேண்டும். நல்ல கதை சொல்லிகளுக்கும் கூட கதைமொழியில் சிக்கல் ஏற்படுவதுண்டு. போலவே, எதைச் சொல்லலாம் எதைச் சொல்ல வேண்டாமென்கிறத் தேர்விலும் குழப்பமிருக்கும். சாருவின் எழுத்து ஒரு வாசகனுக்கு எதை வேண்டுமானாலும் சுவாரஸ்யமாய்ச் சொல்லலாமென உணர்த்தக் கூடியதொன்று.

உயிர்மை இதழ் துவங்கப்பட்ட காலகட்டம் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதெனக் கருதுகிறேன். சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ் ப்ரேம் என தமிழின் அத்தனை ஜாம்பவான்களும் தொடர்ச்சியாக அந்த இதழ்களில் எழுதிய கட்டுரைகள்  முக்கியமானவை.  கலை இலக்கியம் குறித்தும் அரசியல் குறித்தும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளின் வழியாகத்தான்  எழுத்தை ஒரு வாழ்வாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்கிற விருப்பம் எனக்குள் உருவானது.  முதல் சிறுகதையிலிருந்து நான்  எல்லோராலும் கவனிக்கப்பட்டவன் என்கிற மகிழ்ச்சி எப்போதும்  எனக்குண்டு. சாரு அப்படி எனது சிறுகதையை வாசித்துவிட்டுத்தான் முதல்முறையாக என்னை அழைத்துப் பேசினார். 2007 ம் வருடத்தின் இறுதி நாட்களில் மதுரைக்கும் சென்னைக்குமாய் அலைந்து கொண்டிருந்தவனுக்கு சென்னையில் நிரந்தரமாகத் தங்கிவிடலாமென்கிற நம்பிக்கையை  உருவாக்கியவர்களில் சாருவும் ஒருவர்.  தன்னை சந்திக்க வருகிறவர்களை சாருவைப் போல் உபசரிக்கும் இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் இதுவரையிலும் சந்தித்ததில்லை. கதைகளுக்கான உலகை தேர்ந்தெடுப்பதில் மட்டுமில்லாமல் வாழ்வை நிறைவாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டதுண்டு. ஒரு எழுத்தாளன் எத்தனை குழப்பமானவனாக இருந்தாலும் அவன் எந்தவிதமான அரசியல் நிலைப்பாடு கொண்டவனாய் இருந்தாலும் தன்னள்வில் தனக்கு நேர்மையானவனாக இருக்க வேண்டியது அவசியம். சாருவின் எழுத்துக்கள் அவரோடு சில புள்ளிகளில் இணையவும் சில புள்ளிகளில் நம்மை விலக்கவும் செய்யக்கூடியது. அந்த இணைவும் விலகலுமாகவே அவரை ஏற்றுக் கொள்ளவேண்டியது அவசியமெனப் படுகிறது.  மனிதர்களை அவர்களின் அத்தனை பிசிறுகளோடும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேர்வுகள் என்பதுதான் பரிணாமத்தின் இயல்பு.  கலை குறித்த  சாருவின் நிலைப்பாடுகள், அரசியல் இவற்றோடு சில சமயங்களில் என்னால் உடன்பட முடியாமல் போவதுண்டு. அதற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக எழுதியதுமுண்டு. ஆனால் ஒருபோதும் அது அவரின் மீதான வெறுபாய் மாறியதில்லை. சாருவை என்றில்லை ஒரு எழுத்தாளனாக என்னால் இன்னொரு எழுத்தாளனை ஒருபோதும் வெறுக்க முடியாது.

 

 

 

 

முந்தைய கட்டுரைநட்சத்திரவாசிகள், ஒரு வாசிப்பு
அடுத்த கட்டுரைதிருவனந்தபுரம் திரைவிழாவில்