”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”

ayurvedic-medicine

 

குமரிமாவட்டம் பொதுவாக மற்ற இடங்களை விட பசுமையானது. செடிகளின் வகைகள் ஏராளம். ஆகவே இங்கே ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் வர்ம மருத்துவமும் வெட்டு மருத்துவமும் போட்டிபோட்டு வளர்ந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஊருக்கு ஊர் பத்துப்பதினைந்து வைத்தியர்கள் இருப்பார்கள். எந்த சாயாக்கடையிலும் சாயா குடிக்கும் கும்பலில் ஒரு வைத்தியர் இருப்பார். டீக்கனார், மெம்பர்,புலவர் ஆகியோரும் கண்டிப்பாக உண்டு. சர்ச்சில் எந்தப் பொறுப்பு வகித்தாலும் டீக்கனார்தான். ஒரேயொருமுறை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டாலும் வாழ்நாள் முழுக்க மெம்பரே. வில்லுப்பாட்டு தொடர்ச்சியாக கேட்டாலே புலவர்.

வைத்தியர்கள் பொதுவாக வைத்தியத்தை எல்லாப் பேச்சிலும் கலப்பவர்கள்.’எம்ஜியாருக்குக் கருணாநிதி சூடு!’ என்று தினத்தந்தி வாசித்து ‘இவனுகளுக்கு தலைக்கு நல்லா நெல்லிக்காதளம் வைக்கணும் கேட்டேரா?”. ‘குமரிக்கு ரயில்வே வராவிட்டால் போராட்டம் காமராஜ் ஆவேசம்’ — ”அப்பச்சிக்கு வேற சோலி இல்ல. நல்லா காரையிலை போட்டு காலை உழிஞ்சிட்டு சாஞ்சு கெடக்குத பிராயம்லா? இப்ப செண்ணு சொன்னா கிராப்புக்காரி மயிரா மதிப்பா?”. ” கற்பழித்த ஆசாமி கம்பிநீட்டினார்”. ”கடுக்காய அரச்சு கலக்கி நல்லா நாலுநேரம் வீதம் குடிக்க வைச்சா பின்ன தெரியும்லே இவனுகளுக்க கம்பியும் கயறும்…”

ஆகவே எங்களூரில் எல்லாருக்குமே பச்சிலைகள் ‘முறிமருந்துகள்’ தெரிந்திருக்கும். நடைமுறையில் சின்னச்சின்னப் பிரச்சினைகளுக்குப் பச்சிலைகளை நாடுவோம். காயம்பட்டால் தொட்டால்வாடி இலை அல்லது முறிபொருந்தி இலை. உள்ளே அடிபட்டால் வேலிப்பருத்தி. புண்ணுக்கு சோற்றுக்கற்றாழை… பேச்சில் அவ்வப்போது பச்சிலைகள் தலைகாட்டினால் ஒரு இது இருக்கும் என்பது சிறுவர்களாகிய எங்களுக்கே தெரிந்திருந்தது.

எனக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டு அறிவுஜீவியாக ஆக ஆரம்பித்த நாட்களில் இந்தப் பச்சிலைப்பழக்கம் மட்டுப்பட்டது. ஒருமுறை அண்ணாவுடன் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றபோது இது சிக்கலாகியது. [எனக்கு நோய் விசாரிப்புக்குச் செல்வதெல்லாம் பெரிய மனச்சிக்கலைத் தருவன. மொழித்தடுமாற்றம் வேறு. காலில் அடிபட்ட அன்பையன் வைத்தியரைப் பார்த்துவிட்டு வரும்வழியில் தையல்கடை நாகப்பனிடம் ‘அன்பையன் வைத்தியருக்கு துட்டி விசாரிச்சுட்டு வாறோம்’ என்று சொல்லி அங்கேயே அண்ணாவால் அடிக்கப்பெற்றேன்] எங்களைக் கண்டதுமே பேத்தி நோயாளிக்கிழவியைத் தலையணை வைத்துத் தூக்கி அமரச்செய்தாள். கிழவி உற்சாகத்துடன் ”ஒண்ணும் சொல்லாண்டாம் எனக்க மோனே.. இனி இப்டி ஜீவிச்சிட்டு ஒரு காரியமும் இல்ல… போனாப்போரும்…” என்று ஆரம்பிக்க அண்ணா ”அதென்ன பேச்சு அம்மச்சியே… நாங்களெல்லாம் அம்மச்சிய அப்டி விட்டிருவோமா?” என்றார்.

‘சபாஷ்! சரியான பதில்!’ என்ற முகபாவனையுடன் பாட்டி திரும்பி ‘அப்ப நீ?’ என என்னைப்பார்த்தாள்.நான் அசட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தேன். அரைநிமிடம் பொறுத்தபின் பாட்டி எனக்கு ”என்ன சொல்லுகது? எல்லாம் கண்டாச்சு. வேண்டப்பட்டவிக எல்லாம் போயாச்சு…இனி இங்கிண ஆரு கெடக்கா?”என்று ஒரு பந்தைப் போட்டுத்தந்தாள். நான் அதைத் தவறவிட்டு அண்ணாவைப்பார்த்தேன். அவர் முகத்தில் பலவித சைகைகள். ஒன்றும் புரியவில்லை. கிழவி ‘ஆருலே இவன்?’ என்ற மாதிரி வாயை அழுத்தி அண்ணாவை அரைக்கணம் பார்த்துவிட்டு ”வெறுதே பூமிக்குப் பாரம்…அல்லாம என்ன?” என்று மிக எளிதான ஒன்றை எனக்குப் போட்டுத்தர நான் அண்ணாவைப் புரிந்துகொண்டு பதிலளித்தேன், ”பின்னே அல்லாம?”.

அண்ணா திரும்பும் வழியிலேயே என்னை அடிக்கமுற்பட்டார். நான் கண்ணீருடன் ”நான் இப்ப என்ன சொன்னேன்? நான் வரமாட்டேன்னு அப்பமே சொன்னேனே?”என்றேன். ”டேய் கூமுட்ட நாயே, ஒரு ஆளைப்பாக்கப்போனா நாம ஆறுதலா நாலு வார்த்தை சொல்லணும் இல்லடா?” ”எப்டி?” ”வெளங்கும்….. டே, ஆறுதலாட்டுடே, மயிரே. ‘இப்பம் கொள்ளாமா? செரியாப்போயிரும். மருந்து சாப்பிடுங்க’- எண்ணெல்லாம். நீ இனி நான் போற எடத்தில வந்து என்ன சொல்லுகேண்ணு பாரு… எந்த நேரத்திலே பெத்தாளோ உன்னையெல்லாம்…”

கவனித்த போது குழப்பம். ஒரு நோயாளி ”நல்லா சோறு எறங்கல்ல கேட்டேளா?” என்று சொல்லும்போது என்ன சொல்லவேண்டும்? அண்ணா ஒரு இடத்தில் ”சோறு என்ன சோறு? மனசு இருக்குல்லா?” என்றார். இன்னொரு இடத்தில் ”இனி ஒரு பத்துநாளு கழிஞ்சா கோழி திங்கலாமே…டீக்கனாரு சமாதானப்படணும்” என்றார். ”வாதத்துக்க உபத்திரவம் மக்கா” என்று கிழம் சொல்லும்போது ” வாற தைக்குள்ள சரியாப்போயிடும்” என்றேன் ஒருமுறை. அதெப்படிச் சொல்லலாம் என்று அண்ணா வீடுவரை திட்டினார். கிழவர்களுக்கு வரும் வாதம் சிதையில்தான் போகுமாம். அதனால்தான் நேசமணி ஆசான் நான் அப்படிச் சொன்னதும் முகம் வெளுத்தாரா? அடப்பாவமே.

கடைசியில் கண்டுகொண்டேன். எளியவழி கைமருத்துவம் சொல்வதுதான். ”ஒரு மாதிரி ஒரு வலிவு….சுவாசம் கிட்டல்ல”என்று கிழவி சொன்னால் அண்ணா அனுதாபத்துடன் ”…ஈருள்ளிய நல்லா நசுக்கி கொஞ்சம் சுக்கும் உப்பும் வச்சு கடிச்சுத் தின்னா ஒரு ஆசுவாசம் கிட்டுமே” என்பார். அவள் ”…எல்லாம் பாத்தாச்சு பிள்ளே” என்று திருப்தியுடன் சொல்வாள். நிஜமாகவே ஈருள்ளி மூச்சுத்திணறலுக்கு மருந்தா? ஆனால் அண்ணாவிடம் கேட்க முடியாது.

எங்களூர்க்காரர்கள் யதார்த்தவாதிகள். ”என்ன அம்மாச்சா? நல்லாருக்கியளா? என்ன, யாத்திரயா?” என்று வழியில் நலம் விசாரித்தால் ”நல்லா இருக்கேன் பிள்ள”என்று சொல்பவர்கள் அருமை. கண் பட்டுவிடுமென்ற அச்சமும் உண்டு. ”என்னத்த சொல்லுகது? இண்ணா கெடக்கோம், கஞ்சியும் பற்றும் குடிச்சிட்டு…சீவன் போகல்ல” என்பதே வழக்கம். ”ஏன், என்ன செய்யுது?” என்று கேட்காமல் போனால் மரியாதை இல்லை. ”என்னண்ணு சொல்லுகது? நாலஞ்சுநாளாட்டு ஒருமாதிரி ஏப்பம் கேறிவருது…ங்கேவ்வ்வ்…” என்று அவர் சொல்லும்போது ‘வாளை சீசனில ஏப்பம் வரலேண்ணா குசுல்லா வரும்’ என்று எண்ணினாலும் ”குறே இஞ்சி எடுத்து உப்பு வச்சி சதைச்சு இத்திரி மிளகும் மஞ்சப்பொடியும் சேத்து சவைச்சரைச்சு விழுங்கப்பிடாதா? கேக்குமே? ”என்று கேட்பதே மரியாதை. அப்படிச்சொன்ன அன்பையன் வைத்தியரிடம் நான் ”கேக்குமா வைத்தியரே?” என்றேன். ”கேக்கும், சீவனை” என்றார்.

என் அறிதல்களை நான் தொகுத்துக் கொண்டேன். வயிறு தொடர்பான எந்த நோய்க்கும் இஞ்சி, உப்பு இரண்டையும் அடிப்படையாக வைத்து மண்ணில் முளைக்கும் எதையும் சேர்க்கலாம். சளிமூச்சுத்திணறலுக்கு சுக்கு, குருமிளகுடன் எதுவும். தலைவலி கழுத்துவலி வகையறாக்களுக்கு நெல்லிக்காய் அடிப்படை. கைவலிகால்வலிக்கு அப்படி விதிகள் இல்லை, அப்போது ஞாபகம் வருவது எதுவும்.

ஆரம்பத்தில் கிழங்கள் நோயைச் சொல்ல ஆரம்பித்ததுமே என் மூளை நான்குகால் பாய்ச்சலில் ஓடும். இது வயிறா நெஞ்சா தலையா? பல கிழங்களுக்கு அப்படி தெளிவும் இருப்பதில்லை ”…எல்லாம் தாழைமுக்கு சாத்தாதான் கேக்கணும் பிள்ளே, வயத்தில ஒரு உருளு கேறும்போ நெஞ்சில ஒருவேதன வரும் பாரு அப்பம் கேறி தலையில ஒரு பெருப்பு…என்ன சொல்லுகதுக்கு?” ஆனால் சீக்கிரமே தேறிவிட்டேன். ”அம்மச்சி ஒண்ணு கொண்டும் கவலைப்படப்பிடாது. இம்பிடு சுக்கெடுத்து நல்லா அரச்சு உப்புசேத்து…”

அதிலும் சிக்கல்கள் வந்தன. அண்ணா சில பாடங்கள் சொன்னார். அஞ்சறைப்பெட்டியில் இருக்கக் கூடிய பொருட்களாகவே சொல்லவேண்டும். ‘காராம்பசுவின் பாலில் சர்ப்பகந்தி இலையைப் போட்டு நன்றாகக் காய்ச்சி…’ என்றெல்லாம் சொல்லிவிடக்கூடாது. கைமருத்துவம் என்பது அடிக்கடி கையில் சிக்கும் பொருட்களினாலான மருத்துவம். அதேசமயம் சும்மா உப்பும் மிளகும் புளியும் சேர்த்து அரைத்து என்று துவையல் அரைக்கும் பக்குவத்தையெல்லாம் சொன்னால் அது மருந்தாகவும் காதுக்கு ஒலிக்காது. ஒரு மருந்து மட்டும் சற்றே வித்தியாசமாக இருக்கவேண்டும். கடுக்காய், தானிக்காய், குறுந்தோட்டி வேர், சோற்றுக்கற்றாழை, சீனமுட்டிக்கிழங்கு இப்படி…

ஆனாலும் எனக்கு ஒரு உதறல் இருந்தது. யாராவது சுடச்சுடப்போய் செய்து பார்த்துவிட்டால்? ”போடா மடையா, ஒரு கெளவியாவது நாட்டு மருந்து திண்ணு பாத்திருக்கியா? மரச்சீனி சீரணமாகல்லேண்ணாகூடப் பெரிய குப்பிய எடுத்திட்டு கம்பவுண்டர் கலக்கிக் குடுக்குற சாயத்தண்ணிக்குப் போய் நிப்பாளுக. ‘லாக்கிட்டரே, ஊசி போடுங்க லாக்கிட்டரே’ண்ணு கெஞ்சுறாளுக…” அது உண்மை. குறிப்பாக ஊசி என்பது எங்களூரில் ஒரு சஞ்சீவி போல. மருமகள் திட்டினால் ‘ஒருமாதிரி ஒரு இது, லாக்கிட்டரே’ என்று சொல்லி கிழவிகள் போய் ஏசுவடியான் கம்பவுண்டரிடம் [அவர் போலி கம்பவுண்டர் என்பார்கள்] ஊசி போட்டு வருவார்கள்.

ஆகவே நான் துணிந்துவிட்டேன். யார் எது சொன்னாலும் அனுதாபத்துடன் கைமருத்துவம்– இருகைகளாலும். நாளடைவில் யோசிக்கவே வேண்டியதில்லை என்ற நிலை ஏற்பட்டது. சொல்லி விடைபெற்றபின் அந்த மருந்துக் கலவையை எண்ணி ‘பரவால்லியே..நிஜம்மாவே இது மருந்து போல வேலைசெய்யுமா என்ன?’ என்று சிந்தித்து நடப்பேன். மருந்து வேலைசெய்து அதற்கு நான் உரிமம் பெற்று கோடீஸ்வரனாக ஆவது பற்றிய பகல்கனவுகள் சுகமாக இருக்கும்.

சிலசமயம் என் வாயில் சரஸ்வதியே — அஸ்வினி தேவர்களோ?– வருவதுண்டு. ”இல்ல, இதாரு ஆசானோ? எங்க? காலத்தே கெளம்பியாச்சே” என்று நான் உற்சாகமாக நலம்விசாரிக்கையில் கைநடுங்க கண்மேல் பாலமிட்டுக் கூர்ந்து நோக்கி ”ஸாசம் கிட்டப்பளுதில்ல ஏமானே” என்று சொன்ன முண்டன் ஆசானிடம் ”அய்யோ…அப்டி விடப்பிடாதுல்லா? நல்லா மருந்து பாக்கணும்… சுக்கு இடிச்சுப் பிழிஞ்சு நாலு குருமிளகும் பொடிச்சு சேத்து ஒரு கரண்டி மண்ணெண்ணையும் விட்டு குடிச்சா ஒருமாதிரி இருக்கும்லா?”என்று சொல்லிவிட்டு நான் கடந்து சென்றபோது இந்த மண்ணெண்ணையை ஏன் சேர்த்தேன் என்று ஆழமாக சிந்தித்தேன். மூச்சுக்கு எளிதில் ஆவியாகும் பொருள் தேவை எனறா?

கிடைத்துவிட்டது. புல்லெண்ணையைத் தண்ணீரில் விட்டு அதில் குருமிளகு போட்டு ஆவிபிடிக்கும் பழக்கம் என் பாட்டிக்கு உண்டு. புல் எண்ணை எப்படியோ நாக்கில் மண்ணெண்ணை ஆகிவிட்டது. ஆனால் அதுவும் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. வேறு ஆளிடம் சொல்லலாமோ? ஆனால் இனி இப்படி பூரண தன்மய பாவத்துடன் சொல்ல முடியுமா? வேகமாகச் சொன்னால் எல்லாம் சரியாகப்போய்விடும். நாட்டுமருந்து சொல்லும்போது நடுவே கமா போடக்கூடாது. கிளம்பினால் முடித்துவிடவேண்டுமென்பது ஒரு பாடம்

எட்டுநாள் கழிந்து முண்டனாசானின் பேத்தி செல்லம்மை என் அம்மாவிடம் சொன்னதைக் கேட்டு சற்றே அதிர்ந்துபோனேன். ”இப்பம் மண்ணெண்ணை விட்டாக்கும் குடிச்சியது. நாலஞ்சுநாளாட்டு நல்ல தெளிச்சி உண்டு கேட்டியளா அம்மிணி? பின்ன, நிதம் ஒரு கோரு மண்எண்ணை வேணும். சவம் போட்டு, இனி எம்பிடுநாள் கெடக்கும்ணு நானும் ஒண்ணும் சொல்லுகதில்ல”

ஒவ்வொருநாளும் ஆசானின் மரணச்செய்திக்காக காத்திருந்தேன். அவரது பதினாறடியந்திரத்தில் எனக்கு சோறு விக்குவதைப்பற்றி கற்பனைசெய்தேன். ஆசானுக்கு அந்த வைத்தியத்தை சொன்னது நான்தான் என்று ஞாபகமிருக்க நியாயமில்லை. எதிரே வருபவர் கோமணம் அணிந்திருந்தால் மட்டுமே தான் கோமணம் அணிந்திருக்கிறோமா என்று குனிந்து பார்ப்பவர் அவர். ஆனால் அணையப்போகும் திரி ஆளி எரிந்தால் என்ன செய்ய முடியும்?

மதில்மேல் தேங்காயாக ஒவ்வொருநாளும் வாழ்ந்திருந்த ஆசான் நான் ஊரைவிட்டு வரும்வரையில் கிண் கிண் என்று இருந்தார் என்று சொன்னால் நம்பவேண்டும். ஆறுமாதம் கழிந்தபோது என் அச்சம் விலகியது. உண்மையிலேயே மண்எண்ணைக்கு ஏதோ மருத்துவகுணம் இருக்கிறது என இப்போது உறுதியாக நம்புகிறேன். சும்மாவா அதைக் கிருஷ்ணாயில் என்றார்கள். கிருஷ்ண கிருபையால் மேலும் ஏழுவருடம் வாழ்ந்து எண்பத்தெட்டு வயதில் ஆசான் சாகும்போது பேரன்பேத்திகள் கூடி ”வாறப்பல்லாம் மண்ணெண்ணை வேணும்ணு கேப்பியே அப்பூ.. இப்ப மண்ணெண்ணையோட வந்திருக்கேன் எனக்க அப்பூ…போயிட்டியே..”என்றுதான் கதறியிருப்பார்கள்.

இந்த அதிநவீன மருத்துவ யுகத்திலும் கைமருத்துவம் சொல்லும் வழக்கம் நம்மிடையே பரவலாக இருக்கிறது. இன்றுகாலையில்கூட ஒருவர் நான் காலையில் சாப்பிடவில்லை என்பதை நோய் என எடுத்துக் கொண்டு ”மோரில் காயத்த விட்டுக் கலக்கிக் கொஞ்சம் உப்பும் போட்டு…” என்று விரிவாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.நம் உடல்நலத்தில் உலகுக்கு அக்கறை இருக்கிறது.மேலும் மண்ணெண்ணை போல சில கண்டுபிடிப்புகளுக்கு அதில் வாய்ப்பும் இருக்கிறது. உதாரணமாக இதை உங்களால் வேகமாகப் படிக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் வேப்பம்பூ எடுத்து லேசாக வறுத்து உப்பு சேர்த்து….

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 25, 2010 

முந்தைய கட்டுரைகுரல்தொகை
அடுத்த கட்டுரைஇரு விருதுகள்