அன்பின் ஜெ,
வணக்கங்களும் அன்பும்.
“சிவபால் கஞ்ச்”சின் தர்பாரில் சில நாட்கள் புன்னகையும், சிரிப்புமாய் கழிந்தன.
“என்னங்க பாவா சிரிச்சிட்டேயிருக்கீங்க?” – வாசித்துக் கொண்டிருந்த நான், அம்முவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். வாசிப்பின் நேரம் முழுவதும் என்னை அறியாமல், முகம் சிரிப்பில், புன்னைகையில் விரிந்த வண்ணமே இருந்திருக்கிறது. அம்முவிடம் “நீ இந்த நாவல் கண்டிப்பா படிக்கணும் அம்மு” என்றும் அச்சிரிப்பு மாறாமல்தான் சொன்னேன். “தர்பாரி ராகம்” உண்மையிலேயே ஒரு அட்டகாசமான “கேலிக்கூத்து” நாவல்! (நவீன “பிரஹசனம்” வகைமை என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்). ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு வரியையும் புன்னகையில்லாமல் கடக்க முடியவில்லை. சுவாரஸ்யமான வாசிப்பனுபவம்!. அலுவலகத்தில், கிறிஸ்துமஸ் ஏற்றுமதிகளால் பின்னிரவு வரை நீடிக்கும் பணிச்சுமை நேரங்களில், கிடைக்கும் தேநீர் இடைவெளிகளில் கணினி முன் பத்திருபது பக்கங்கள் வாசிக்கலாம் என உட்காரும்போது வாய்விட்டு சிரித்துவிடாமல் இருக்க மிகுந்த பிரயத்தனம் எடுக்க வேண்டி வந்தது. பத்ம பூஷன் ஸ்ரீலால் சுக்லாவின் “தர்பாரி ராகம்” என்னை மிகவும் ஈர்த்துக்கொண்டது.
*
நகரில் வசிக்கும் ரங்கநாத், சரித்திரப் பாடத்தில் எம்.ஏ. பட்டதாரி. இப்போது ஆய்வு மாணவன். படித்துப் படித்துக் களைத்து உடல்நலம் குன்றவே, சிகிச்சையும், ஓய்வும் கொண்டு உடம்பைத் தேற்றுவதற்காக, “சிவபால் கஞ்ச்” கிராமத்தில் குடியிருக்கும் தன் வைத்தியர் மாமா வீட்டிற்கு வருகிறான். வைத்தியர் மஹாராஜ் ஊரில் பெரும்புள்ளி. பல பதவிகளை வகிப்பவர். ஊரின் ஆயுர்வேத வைத்தியசாலையையும், கூட்டுறவு சங்கத்தையும், சங்காமல் வித்யாலத்தையும் துவங்கியவர் அவர்தான். சங்காமல் வித்யாலயம் இப்போது இன்டர்மீடியட் காலேஜாக வளர்ந்திருக்கிறது. வித்யாலயத்தின் மேலாளர், கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர், ஊர்த் தலைவர் அனைத்தும் வைத்தியர்தான். சனீஸ்வரன் என்ற மங்கள் பிரசாத், வைத்தியரின் உதவி ஆள் (பங்கி பானம் தயாரிப்பதில் நிபுணன்).
வைத்தியருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ரூப்பனுக்கு 18 வயது. பள்ளியில் கடந்த மூன்று வருடங்களாக பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். வித்யாலய மாணவர் அமைப்பின் தலைவன். பள்ளி முதல்வரும், ஆசிரியர்களும் கூட அவனிடம் மரியாதை கொண்டிருக்கிறார்கள் (வைத்தியரின் மகன் என்பதால்). இன்னொருவன் பயில்வான் பத்ரி. வயது 16 இருக்கலாம். கிராமத்தின் உடற்பயிற்சிக் கூடத்தில் வஸ்தாதுகளை உருவாக்குபவன். கிராமத்தில் நடக்கும் அடிதடிகளுக்கு அவனும், அவன் சீடர்களும்தான் உதவச் செல்வார்கள்.
துணிக்கடை வைத்திருக்கும், லேவாதேவி தொழில் செய்யும், கல்லூரி நிர்வாகக் கமிட்டியின் உப தலைவர் கயாதீனுக்கு ஒரு மகள். பெயர் பேலா. இருபது வயது அழகி. பேலாவை ரூப்பன் ஒருதலையாக காதலிக்கிறான். ஆனால் பேலாவும், பத்ரியும் காதலிக்கிறார்கள்.
கல்லூரியில் இரண்டு கட்சி உண்டு. துணை முதல்வராக ஆசைப்படும் சரித்திர ஆசிரியர் கன்னா கட்சி. இன்னொன்று முதல்வரின் கட்சி. முதல்வர் வைத்தியரின் ஆதரவு பெற்றவர். இரண்டு தரப்பும் அடிக்கடி மோதிக்கொள்கிறது. கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வருகிறது. வைத்தியர் தன் உதவியாளன் சனீஸ்வரனை ஜெயிக்க வைக்கிறார். பல ஆண்டுகள் நடைபெறாமலிருந்த கல்லூரி நிர்வாகக் குழுவைக் கூட்டி (கன்னா தரப்பின் அழுத்தத்தால்), மேலாளர் பதவிக்கு தேர்தலை அறிவித்து, “பிஸ்டல் மிரட்டல்” வழியைப் பயன்படுத்தி மீண்டும் கல்லூரியின் மேலாளராகிறார் வைத்தியர். கூட்டுறவு சங்கத்தின் தானியக்கிடங்கில் இரண்டு வண்டி கோதுமை மூட்டைகளை பகலிலேயே எடுத்துக்கொண்டு தலைமறைவாகிறார் சங்கத்தின் சூப்பர்வைசர் ராம் ஸ்வரூப். அவ்விஷயம் அரசியல் மட்டத்தில் பெரிதாகி, வைத்தியர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைமை வருகிறது. அடுத்து அப்பதவிக்கு நடக்கும் தேர்தலில் தன் மகன் பயில்வான் பத்ரியை ஜெயிக்க வைக்கிறார். மாஸ்டர் கன்னாவும், அவர் தரப்பும் கல்லூரியிலிருந்து துரத்தப்படுகிறார்கள் (அல்லது அழுத்தம் கொடுக்கப்பட்டு ராஜினாமா செய்யவைக்கப் படுகிறார்கள்).
*
முதல் அத்தியாயத்தின் முதல் காட்சியில் தொடங்கும் அங்கதத்தின் அட்டகாசம் நாவலின் இறுதிவரை தொடர்கிறது.
ரங்கநாத்திற்கு சிவபால் கஞ்ச் செல்ல வேண்டும்; ரயிலைத் தவற விடுகிறான். இன்று ரயில் அவனை ஏமாற்றிவிட்டது. தினமும்போல லோக்கல் பாசஞ்சர் வண்டி இரண்டு மணி நேரம் தாமதித்து வரும் என நினைத்தே அவன் வீட்டிலிருந்து புறப்பட்டான். ஆனால் அது ஒன்னரை மணிநேரம் மட்டுமே தாமதித்து வந்துவிட்டுப் போய்விட்டது.
சாலை வழியாகச் செல்லலாம் என்று முடிவெடுத்து சாலைக்கு வருகிறான். பெட்ரோல் பங்கின் எதிர்புரம் வரிசையாய் கடைகள். பெரும்பாலான கடைகளில் மக்கள் விரும்பிப் பருகும் பானம் இருந்தது. அங்கு விரவி நின்ற தூசி, எண்ணெய்ச் சிக்கு, பலமுறை உபயோகித்த தேயிலைத் தூள், கொதிக்கின்ற தண்ணீர் ஆகியவற்றின் உதவிகொண்டு தயாரித்த அவ்வினிய பானம் தாராளமாய்க் கிடைத்தது. இரவு, பகல், காற்று, மழை, ஈ, கொசு போன்றவற்றின் இடைவிடாத தாக்குதல்களைத் தீரத்துடன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இனிப்புப் பலகாரங்களும் அங்கே இருந்தன.
டிரக் ஒன்று சாலையில் நின்று கொண்டிருக்கிறது. டிரைவரும், கிளீனரும் ஒரு கடையின் எதிரே நின்று தேநீர் பருகிக்கொண்டிருக்கின்றனர். டிரைவர் கண்ணால் கடைக்காரியையும் பருகிக் கொண்டிருந்தான். சிவபால் கஞ்ச் போகுமா என்று கேட்டு ரங்கநாத் டிரக்கில் ஏறிக்கொள்கிறான். கடாபுடா ஓசையுடன் டிரக் புறப்பட்டது. நகரத்தின் கோணல் மாணலான வளைவுகளிலிருந்து விடுபட்டதும் சற்றுத் தூரத்தில் நேரான, சீரான, சந்தடியற்ற பாதை வந்துவிட்டது. இங்கேதான் முதல்முறையாக டிரைவர் டாப் கியரைப் பிரயோகித்தான். ஆனால் அது நழுவி நழுவி நியூட்ரலில் விழலாயிற்று. நூறு கஜ தூரம் செல்வதற்குள் கியர் நழுவிவிடும். ஆக்ஸிலேட்டரை மிதித்ததும் டிரக்கின் கர்புர் ஓசை அதிகரித்து வேகம் குறைந்துவிடும். இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த ரங்கநாத் “டிரைவர் சார்! உங்க கியர் நம்ம நாட்டு அரசாங்கம் போல்தான் இருக்கிறது. எத்தனை முறை டாப்கியரில் போட்டாலும் அது இரண்டு கஜ தூரம் சென்றதுமே நழுவி தன் பழைய இருப்பிடத்திற்கு வந்துவிடுகிறதே” என்கிறான். டிரைவர் ரங்கநாத்திடம் “ஐயா, இப்பொழுது என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்க, ரங்கநாத் அவனிடம் “சும்மாதான், வரலாற்றில் எம்.ஏ. முடித்துவிட்டு திண்ணையைத் தேய்த்துக் கொண்டிருக்கிறேன். இங்கிலீஸிலே இதைத்தான் “ரிசர்ச்” என்று சொல்லுகிறார்கள்” என்கிறான்.
பின்னாலிருந்து செக்கிங்கிற்கு வரும் ஸ்டேஷன் வாகன் ஹார்ன் அடித்து டிரக்கை நிறுத்தச் சொல்கிறது. ஸ்டேஷன் வாகனிலிருந்து அதிகாரி போன்ற தோரணையுடன் ஒரு பியூனும், பியூன் போலிருந்த ஒரு அதிகாரியும் இறங்குகின்றனர்.
இப்படி ஆரம்பிக்கிறது நாவல். தொடர்ந்து நாவல் முழுவதும் ஆயிரம் வாலா சரவெடிபோல் வெடித்துக்கொண்டேயிருக்கிறது!. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அங்கதம் தெறிக்கிறது.
சிவபால் கஞ்ச்சின் போலீஸ் ஸ்டேஷன் வர்ணனை, அபின் வியாபாரி ராமாதீனின் கதை, தாசில்தார் அலுவலகத்தில் ஒரு நகல் வாங்குவதற்காக மாதக்கணக்கில் போராடும் நொண்டியின் கதை, தேர்தலில் வெற்றிபெறுவதற்கான மூன்று வழிகளின் விவரிப்பு (ராம்நகர் வழி, நேவாதா வழி, மஹிபால்பூர் முறை), கயாதீனின் வீட்டில் திருடும் திருடன் ஜோக்நாத்தின் (வைத்தியரின் ஆள்) வழக்கு விசாரணை நீதிமன்றக் காட்சிகள், பொய்ச்சாட்சி ஸ்பெஷலிஸ்ட் பண்டிதர் ராதேலால், அவரின் சீடப் பிள்ளை பைஜ்நாத்தின் கதை… அனைத்தையும் விரிந்த புன்னகையுடன்தான் வாசித்தேன்.
*
இந்த குப்பை பத்திரிகைகளில் (இக்காலத்திற்கு “இந்த குப்பை யு டியூப் சேனல்களில்” என்றும் சேர்த்துக் கொள்ளலாம்) பெரும்பாலும் கோர்ட் விவகாரங்கள், நோட்டீஸுகள், தெருவிலே நடக்கும் சம்பவங்கள் ஆகியவையே இடம்பெற்றன. கூடவே, இந்தப் பத்திரிகைகளில் ஏதாவதொரு சர்க்கார் அதிகாரியின், நடிகையின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றிய அவலங்கள் வெளிவந்தன. பேட்டியைப் போல் ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், மதுப் புட்டிகள், பெண் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், நோட்டுக் கற்றைகள், ஊழல், லஞ்சம், சூதாட்டம் பற்றி விவரமாகக் கூறுவது போல் இது எழுதப்பட்டிருக்கும். இந்தக் குப்பைப் பத்திரிகைகளை கோர்ட் மற்றும் அதிகாரிகள் வட்டத்தில் மிக்கக் கவனத்துடன் படித்தார்கள். அதோடு இம்மாதிரிப் பத்திரிகைகளால் விளையும் ஆபத்தைக் குறித்தும் விவாதித்தார்கள்
இரவு கிட்டத்தட்ட ஒன்பது மணி இருக்கும். ஆனால் எங்கும் சந்தடி அடங்கவில்லை. தாலுக்கா ஆபீஸுக்கு முன்னால் வெற்றிலை பாக்குக் கடையில் பாட்டரியில் இயங்கும் ரேடியோ இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. திரைப்படப் பாடல்களிலிருந்து, “ஆசைகள், காதலனே, அழகிய மந்திரவாதியே, உன் பார்வை, என் லட்சியம், நீ எங்கே!, நெஞ்சம், மது, நெஞ்சோடு அணைத்துக்கொள், புன்சிரிப்பு, நெருப்பு, வாழ்க்கை, சாவு, இரக்கமற்றவனே, சித்திரம், வெண்நிலவு, வானம், இன்பக் கனவு, போதை…” ஆகிய சொற்கள் புத்தெழுச்சியின் செய்தியைப் பரப்ப முற்றிலும் பொருத்தமானவை என்ற முறையில் சராமாரியாக வந்து விழுந்துகொண்டிருந்தன
கார்த்திகைப் பௌர்ணமி அன்று சிவபால் கஞ்சிலிருந்து சுமார் ஐந்து மைல் தூரத்தில் திருவிழா நடக்கும். அது ஒரு காடு. காட்டினிடையேயுள்ள குன்றின்மீது தேவியின் ஓர் ஆலயம் உண்டு. அதைச் சுற்றிலும் நாலாப் பக்கமும் பழைய கட்டடத்தின் இடிபாடுகளைக் காணலாம். கருவேல மரம், காட்டு மணத்தக்காளி, இலந்தை மரங்கள் ஆகியவை புதர்களாக மண்டிக் கிடக்கும். மேடும், பள்ளமும், ஏற்றமும், இறக்கமுமான பூமி. முயலிலிருந்து ஓநாய் வரை, சோளக்கதிர் திருடனிலிருந்து வழிப்பறிக் கொள்ளைக்காரன் வரை இந்தக் காடுகளிலே எளிதாக ஒளிந்துகொள்ள முடியும். அக்கம்பக்கத்துக் கிராமங்களில் உள்ளத்தளவில் ஏற்படும் காதல் உறவுகளின் விளக்கத்தை இந்தக்காட்டில் உடலளவில் காணலாம்
பங்கி பானம் தயாரிப்பு இருக்கிறதே, அது ஒரு தனிக் கலை, தனிக் கவிதை!, தனிச் சாமார்த்தியம், தனித் திறமை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியே இலையை வாயில் போட்டு மென்று சுவைத்துத் தண்ணீரைக் குடித்தாலே நல்ல போதை வந்து விடும். ஆனால் போதை ஏற்றிக்கொள்ள இந்த முறை மிக்க மலிவான சாதாரண முறையாகக் கருதப்படும். இலையுடன், பாதாம், பிஸ்தா, குல்கந்து, பால், பாலாடை போன்றவற்றைக் கலந்து தயாரிக்கும் பானம் மிக உயர்ந்தது. கல்லும் குழவியும் தேயத்தேய ஓட்டி ஓட்டி அரைத்துக் கலக்கிவிட்டு, குடிப்பதற்கு முன்னர், படைத்தவனைக் குறித்து இரண்டொரு ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டு, நிகழ்ச்சியைத் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தாமல் அதற்கு ஒரு பொதுப்படையான அமைப்பையும் தரவேண்டும், அதில்தான் இதன் சிறப்பே உள்ளது
அரசியல் சாசனம் அமலுக்கு வந்தபின் சிவபால் கஞ்சில் மேடை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு “காந்தி சதுக்கம்” என்று பெயரிட்டனர். இன்னுங்கூடச் சிலருக்கு நினைவிருக்கலாம், காந்தி என்பவர் பாரத நாட்டில் பிறந்தவர், இந்த மண்ணிலே தோன்றியவர். அவருடைய அஸ்திகளுடன் அவருடைய கொள்கைகளையும் திரிவேணி சங்கமத்தில் கரைத்தபின், அந்த மகானின் நினைவாக இனி பெரிய கட்டடங்களும், சதுக்கங்களும் எழுப்பப்படும் என்று முடிவெடுத்தபின் சிவபால் கஞ்சில் “காந்தி சதுக்கம்” தோன்றியது
*
“தர்பாரி ராகம்” நாவல் ஹார்ட் காப்பி இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை ஜெ. NBT, மீள்பதிப்பை அவசியம் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால், வேறு பதிப்பகங்களாவது உரிமம் வாங்கி பதிப்பைக் கொண்டு வரலாம். ஏனென்றால் “தர்பாரி ராகம்” நிகழகாலத்தின் நாவல்.
வெங்கி
“தர்பாரி ராகம்” நாவல் – ஸ்ரீலால் சுக்ல
இந்தி மூலம்: Raag Darbari
தமிழில்: சரஸ்வதி ராம்நாத்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு