பத்மவியூகம் வாங்க
பத்மவியூகம் மின்னூல் வாங்க
1987 என நினைவு, பி.கே.பாலகிருஷ்ணனை அவர் வழக்கமாக அமரும் உதாரசிரோமணி சாலையில் அமைந்த மதுக்கடையில் சந்தித்தபோது இனி நான் உறங்கலாமா பற்றிய விவாதம் எழுந்தது. அந்நாவல் அளித்த புகழின் உச்சியில் அவர் அப்போது இருந்தார். மது அருந்துவதை நிறுத்திவிட்டாலும் நண்பர்களைச் சந்திக்க வந்துகொண்டிருந்தார்.
நான் கேட்டேன், ‘இனி நான் உறங்கலாமா நாவலில் கர்ணனை முன்னிறுத்த அர்ஜுனனை கொஞ்சம் கீழிறக்கிவிட்டீர்கள் அல்லவா? என்னதான் இருந்தாலும் அர்ஜுனன் அல்லவா யோகி? அவனுக்குத்தானே கீதை சொல்லப்பட்டது?”
பி.கே.பாலகிருஷ்ணன் சொன்னார். “உண்மை, ஆனால் எல்லா கதாபாத்திரத்திற்கும் நியாயம் செய்யவேண்டும் என்றால் மகாபாரதத்தை முழுமையாக எழுதவேண்டும்”
நான் சற்று துடுக்காக “நான் எழுதுகிறேன்” என்றேன்.
நான் சொன்னது பாதி வேடிக்கையாக. ஆனால் பி.கே.பாலகிருஷ்ணன் என்னை தழுவி “நீ எழுதுடா… உன்னால் முடியும். ஒன்றுமில்லையென்றாலும் நாமெல்லாம் திருவிதாங்கூர்காரர்கள்” என்றார்.
அது ஓர் ஆணை. அதை ஒரு கனவாக எடுத்துக்கொண்டேன். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள். அது வரை ஒவ்வொரு நாளும் இந்த எண்ணம் என்னுள் கனன்றுகொண்டிருந்தது. மகாபாரத நூல்களை சேகரித்தேன். இந்து புராணங்கள், அறநூல்கள் என வாங்கிச்சேர்த்து படித்துக்கொண்டே இருந்தேன். மகாபாரதம் நிகழ்ந்த நிலங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டேன்.
நடுவே இந்தச் சிறுகதைகளை எழுதினேன். 1988ல் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் திசைகளின் நடுவே என்னும் கதை வெளியாகியது. நான் எழுதிய முதல் மகாபாரதக் கதை. அதுவே என் முதல் சிறுகதை தொகுதியின் தலைப்புக்கதையும்.
அதன்பின் பல கதைகள். பத்மவியூகம் மனுஷ்யபுத்திரன் ஆசிரியராக இருந்த காலச்சுவடு இதழில் 1996ல் வெளிவந்தது. இந்தக்கதைகள் நான் மெல்ல மெல்ல மகாபாரதத்தை உள்வாங்கிக் கொள்வதன் தடையங்கள். அந்த மாபெரும் கதையை இன்றைய வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்ள இக்கதைகள் வழியாக முயல்கிறேன். பத்மவியூகமே உதாரணம், அதன் உண்மையான களம் போரில் பாழ்பட்ட இலங்கை. விதவைகளின் நிலம்.
இக்கதைகளை நூலாக்கிய சொல்புதிது பதிப்பகம் கடலூர் சீனுவுக்கும் இப்போது மறுபதிப்பாக கொண்டுவரும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி
ஜெ