பொன்னிறப்பாதையில் இருக்கும் கட்டுரைகள் எல்லாமே வெவ்வேறு தருணங்களில் என் வாசகர்களுடனான உரையாடல் வழியாக உருவானவை. இத்தகைய வாய்ப்பு சென்ற தலைமுறையில் எழுத்தாளர்களுக்கு அமைந்ததில்லை. இதை இயல்வதாக்கியது இணையம். ஒவ்வொரு நாளும் கடிதங்கள் பெறுகிறேன். பதில் எழுதுகிறேன். என் எழுத்துலகை இந்த உரையாடல் வலுவாக்கியது. சமகாலத்தன்மையையும் நடைமுறைத்தன்மையையும் அளித்தது. நான் எழுதுபவை செவ்வியல் படைப்புகள். பெருங்கனவுகள். இந்த உரையாடல் அவற்றை மண்ணில் வேரூன்றி நிலைகொள்ளச் செய்தது.
இவை அறிவுரைகள் அல்ல. அறிவுரைகள் என்பவை அறிந்தவிந்த ஒருவன் அறியாதோருக்குச் சொல்பவை. இவை அனுபவப்பகிர்வுகள் மட்டுமே.நான் கடந்துவந்த வாழ்க்கையையும், அதில் நான் அறிந்தவற்றையும் இதில் பகிர்ந்துகொள்கிறேன். அது இந்த வாசகர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வதற்கு நிகரான எதிர்வினை மட்டுமே.
நான் கடுந்துயரின், தனிமையின் ,அவநம்பிக்கையின் இருளில் இருந்து ஒளியை என்னுள் இருந்து கண்டுகொண்டேன், என்னை உருவாக்கிக் கொண்டேன். நான் கண்டடைந்த ஒளியைப்பற்றியே இந்நூலில் பேசுகிறேன். நானடைந்த துயரை, தனிமையை, அவநம்பிக்கையை தாங்களும் அடைந்தவர்களுக்காக. அவர்களுக்கு அது உதவியது என்று அறிந்திருக்கிறேன்.
ஓரு புனைவெடுத்தாளன் இப்படி சிந்தனைகளை, அனுபவங்களை நேரடியாக எழுதலாமா என்னும் கேல்வி எழலாம்.இலக்கியவாதிகள் சிலர் ஓர் கதையாசிரியன் கதையினூடாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வதுண்டு. என் எண்ணம் அது அல்ல. நான் எல்லாவற்றையும் முடிந்தவரை நேரடியாக, முடிந்தவரை வெளிப்படையாக, முடிந்தவரை எளிதாகப் பேசவே விரும்புகிறேன். இடைவிடாமல் அதற்கு முயல்கிறேன். அவ்வண்ணம் சொல்லிவிட முடியாதவை, சொல்லிச் சொல்லி எஞ்சுபவை மட்டுமே உயர்ந்த புனைவாக வெளிப்பட இயலும் என நினைக்கிறேன். என் படைப்புகளின் மர்மங்கள், முடிவிலி வரை செல்லும் ஆழ்தளங்கள் எல்லாமே இந்த வகையில் என்னால் தெளிவாகச் சொல்லிவிட முடியாதவற்றால் ஆனவையே.
பொன்னிறமான பாதை என ஒன்று உண்டா? அவ்வண்ணம் இயற்கை நிகழ்கிறதா? இல்லாமலிருக்கலாம். ஆனால் நம்மால் பொன்னிறமான பாதையை நம் அகத்தின் ஒளியால் உருவாக்கிக் கொள்ள முடியும். நம்மை மீறி இருள் வருமென்றால் அது நம்மை மீறியது என்னும் நிம்மதியேனும் நமக்கு எஞ்சும்.
இக்கட்டுரைகள் காட்டும் தெளிவு அன்றாடத்தின் பல்வேறு கருத்துச்சிடுக்குகளில் சிக்கி உளச்சோர்வடைந்த இளம் நண்பர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. அவ்வகையில் நான் நிறைவடைகிறேன்
ஜெ