படைத்தலின் இனிமை

பிரதமன் கதை எழுதும் அக்காலகட்டத்தில்  நான் இனித்துக் கொண்டிருந்தேன். கல்பற்றா நாராயணன் ஓர் உரையில் சொன்னார். குழந்தையாக இருக்கையில் சுவைத்த கட்டை விரல் போல வேறொன்றும் பின்னர் சுவைப்பதில்லை என்று. அது நம்மில் ஒரு பகுதி. நம்மை நாமே சுவைப்பது. எல்லா பகற்கனவுகளும் அத்தகையவையே. இலக்கியமென்பது அழகான, ஆன்மிகமான ஒரு பகற்கனவு.

நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதிய கதைகள் இவை. அன்று ஒவ்வொரு முறை ஓர் அரிய புனைவுத்தருணம் நிகழும்போதும் என்னில் ஓர் எக்களிப்பு நிகழும். எப்படி நிகழ்ந்தது இந்த இனிமை? இந்த முழுமை எங்கிருந்து வந்தது? திட்டமிடவில்லை. வகுத்துச்செய்யவுமில்லை. அதுவே நிகழ்கிறது.

அத்துடன் அது நிகழ்வதை நாம் உணர்வதுமில்லை. ஒரு மாயப்புள்ளியில் அது முழுமையுடன் நிகழ்ந்துவிட்டிருக்கிறது. பின்னர் பின்னால் சென்று அது திரண்டுவந்த பாதையை நம்முள் கண்டடைய முடியும். ஆனால் அனைத்தும் ஒன்றுகூடி புதிய ஒன்று நிகழும் அக்கணம் முன்னர் இல்லாதது, எவ்வகையிலும் ஊகிக்க முடியாதது.

வெண்முரசுக்குப்பின்னர் எழுதிய பல கதைகளில் இந்த இனிய மர்மத்தை சொல்லிவிட முயன்றிருப்பேன். அதில் முதன்மையான கதை பிரதமன். பிரதமன் என்பது பாயசத்தில் ஒரு வகை. தேங்காய்ப்பாலும் வெல்லமும் போட்டு செய்வது. அச்சொல்லின் பொருள் முதன்மையானது என்பது. இனிப்பே சுவைகளில் முதன்மையானது என அறியாதோர் எவர்?

இந்த தொகுப்பு அவ்வகையில் எனக்கு மிக அணுக்கமான ஒன்று. சிறுகதை உத்திகள், நாடகீய தருணங்கள் ஏதுமில்லாமல் தூய கவித்துவத்தின் பலத்திலேயே நிலைகொள்ளும் கதைகள் இதிலுள்ளன.

இந்நூலை முதலில் வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்

ஜெ

முந்தைய கட்டுரைசொ.முருகப்பா
அடுத்த கட்டுரைஇரு முகில்களின் கதை -கடிதம்