காதலின் நிலம்

கன்னி நிலம் வாங்க

கன்னி நிலம் மின்னூல் வாங்க

நான் எல்லாவகை நிலங்களைப் பற்றியும் எழுதவேண்டும், எல்லாவகை கதைகளையும் எழுதவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவன். பிறப்பாலும் தொழிலாலும் வாழநேர்ந்த நிலத்தையும் வாழ்க்கைச்சூழலையும் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளனின் குறுகலுக்கு எதிரான ஒரு மனநிலை அது. அவ்வகையில் என் முன்னோடியும் வழிகாட்டியும் புதுமைப்பித்தன் தான். எந்த நிலத்தை எழுதினாலும் எழுத்தாளன் முன்வைப்பது தன் அகத்தை, தன் கனவை.

என்னுடைய முதன்மைக் களியாட்டு புனைவுதான். புனைவுகளை எழுதுவதும் வாசிப்பதுமே என் உள்ளத்தின் கொண்டாட்டங்கள். நான் எல்லாவற்றையும் வாசிப்பேன். எளிமையான மில்ஸ் ஆண்ட் பூன் வகை கதைகள். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் வகை விரைவுக்கதைகள். இயான் ஃப்ளெமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை வாசித்த ஒரே தமிழ் எழுத்தாளன் நானாகவே இருப்பேன். க.நா.சு எல்லாவற்றையும் வாசிப்பவர் என அவரே எழுதியிருக்கிறார். அவர் வாசித்திருக்கலாம். க.நா.சுவுக்கு பெரிமேசன் துப்பறியும் கதைகள் மிகவும் பிடிக்கும்.

எல்லா வகையிலும் எழுதிப்பார்க்கவேண்டும் என்னும் பேராசை தனக்கு உண்டு என்று க.நா.சு சொல்லியிருக்கிறார். எழுதியும் பார்த்திருக்கிறார். நான் வெறுமே உள்ளத்திலேயே கற்பனையால் உருவாக்கி அப்படியே மறந்துவிட்ட பல கதைகள் உண்டு. அவற்றில் ஒன்றின் எழுத்துவடிவம் இது என்று சொல்லலாம். சும்மா உற்சாகமாக ஒரு கதையை புனையலாம் என ஒரு காலையில் தோன்ற உடனே மூன்றுநாட்களில் எழுதியது இந்தச் சிறிய நாவல். என் இணையப்பக்கத்தில் தொடராக வெளிவந்தது.

இலக்கியம் என இதைச் சொல்ல முடியாது. இது பொதுவாசிப்புக்கான நாவல். பொதுவாசிப்பினூடாக என் எழுத்தை நோக்கி வருபவர்கள் இதை வாசிக்கலாம். இதில் சாகசமும் காதலும் ஒரு புதிய நிலமும் உள்ளது. பல புதிய வாசகர்கள் என்னை நோக்கி வர இந்நாவல் வழியமைத்துள்ளது.

கயல்கவின் பதிப்பகம் இதை முதலில் நூலாக்கியது. மறுபதிப்பு கிழக்கு பதிப்பகம் வழியாக வெளிவந்தது. அவர்களுக்கும் இப்போது புதுப்பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

ஜெ

09.12.2022

முந்தைய கட்டுரைஏ.ஏகாம்பரநாதன்
அடுத்த கட்டுரைகுருகுலங்களை அணுகுதல்