மனோகர் தேவதாஸ்- குக்கூ சிவராஜ்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யாவின் தன்னனுபவப் பகிர்தல் காணொளி இதுபத்மஸ்ரீ மனோகர் தேவதாஸ் அய்யா நேற்று (07.12.22) காலமாகிவிட்டார். தூக்கத்தில் பிரிந்திருக்கிறது அவர் நல்லுயிர். எல்லோரும் போற்றும்படியான ஒளிவாழ்வை வாழ்ந்துமறைந்த மனிதர். அவரை முதன்முதலாக நண்பர்களோடு சேர்ந்து சென்று சந்தித்த நாட்கள் ஞாபகத்தில் எழுகிறது.

எல்லாமே இருண்டுபோனதுக்கு பிறகுதான்நான் அவளை நேசிக்க ஆரம்பிச்சேன்என்று சொல்லியே அச்சந்திப்பில் அவர் பேசத் தொடங்கினார். தன்னுடைய இரண்டு கண்களிலும் பார்வை இல்லாமல்போன நிலையிலும் பதினோராயிரத்து எண்ணூறுக்கும் மேலான மனிதர்களுக்கு கண்கள் கிடைக்கச்செய்த மனோகர் தேவதாஸ் அய்யாவுடனான சந்திப்பின் முதல்வரி அதுவாகவே இருந்தது. காலந்திரும்பிப் பார்த்தால்பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த எனது பத்தொன்பது வயதில் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில்அவருடைய மனைவி ஒரு சக்கர நாற்காலியில் கத்திரிப்பூநிற நைட்டி அணிந்து உட்கார்ந்திருப்பார். வெள்ளைச்சட்டைகண்கண்ணாடி போட்டு பக்கத்தில் மனோகர் தேவதாஸ் அய்யா நின்றிருக்கும் புகைப்படம் முழுப்பக்க அளவில் அச்சாகியிருந்தது.

கண்பார்வையற்ற ஒருவரிடமிருந்து விரியும் ஓவியக்கலையின் கோடுகளால் நிறைய மனிதர்களுக்கு வாழ்க்கை கிடைக்கப்பெற்றதைப் பற்றியும்அவருக்கும் அவரின் மனைவிக்கும் நடுப்பட்ட காதலையும் பற்றியதான அழகான மென்னுணர்வையும் தாங்கியிருந்தது அந்த கட்டுரைப்பதிவு. மேலும்மறைந்துபோன இயக்குநர் திருப்பதிசாமி மாணவ நிருபராக இருந்த காலகட்டத்தில் எழுதிய நேர்காணல் கட்டுரை. வாசித்தபிறகு கணக்கில்லாமல் அதை நகலெடுத்து நகலெடுத்து அறிந்த மனிதர்கள் அத்தனைபேருக்கும் நான் கொடுத்துக்கொண்டே இருந்தேன். அதுமாதிரியான ஒரு காதலும்அதுமாதிரியான ஒரு வாழ்க்கையும் எனக்கு மிரட்சியாக இருந்தது அச்சிறுவயதில்.

அதன்பின் குக்கூ குழந்தைகள் வெளியின் பலவருடப் பயணத்திற்குப் பிறகு, நண்பர்கள் ராஜாராம்திரிபுரசுந்தரிவிஷ்ணுப்பிரியா ஆகியோரோடு யதேச்சையாக உரையாடுகையில் மனோகர் தேவதாஸ் அய்யாவைப்பற்றி பேச்சு எழுந்தது. அவருடைய ஓவியங்களை பல்வேறு மட்டங்களில் நாங்கள் வடிவமைப்பில் பயன்படுத்தி வந்திருக்கிறோம். அவரைப் பார்க்கச்சென்ற அச்சந்திப்பில்தான் தெரியவந்ததுஅந்த ஒரு மனிதர் வரைந்த ஓவியங்களால் மட்டுமே இதுவரை பதினோராயித்து எண்ணூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கண்பார்வை கிடைத்திருக்கிறது என்று.

 “நீங்க வரைஞ்ச ஓவியங்கள் எல்லாத்தையும் அரவிந்த் கண் ஆஸ்பித்திரிக்கு கொடுத்துட்டீங்களேஉங்களுக்கு கடைசிவரை கண்ணு கிடைக்கலயேஏன் அப்படி செஞ்சீங்க?” என்ற கேள்வியை கேட்டபொழுது, “இல்லஇல்லஎனக்கு கண்ணு கிடைக்க அவங்க என்மேல எடுத்துக்கிட்ட அக்கறை என்னை நிலைகுலைய செஞ்சிடுச்சு. அதான்…” எனச் சர்வசாதாரணமாகச் சொன்னார். மேலும், “நான் இறந்த பிறகு என்னுடைய இரண்டு கண்களும்எங்கோ இருக்கிற ஒரு குழந்தைக்கோஒரு வயதானவருக்கோ போய்ச்சேரும்போதுதான் என் வாழ்க்கை முழுமையடையும்” என உணர்வுகலங்கிச் சொன்னார்.

நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது அவருக்கு எண்பது வயதுஅப்பவரையில் தொடர்ந்து புத்தகங்கள் எழுதிவந்தார். புதுப்புது நண்பர்களோடு உரையாடி வந்தார்இவ்வாழ்க்கை குறித்து எந்தவொரு குற்றச்சாட்டோ சலிப்போ அவரிடமில்லை. அவரிடத்தில் வேலைசெய்கிற ஒரு அம்மாவுக்கு காதுகேட்காது; ஒருவருக்கு கண்தெரியாது; இன்னொருவருக்கு கால் ஊனம். அவர் வீட்டில் அவ்வளவு கள்ளிச்செடிகளை வளர்த்துகிறார்! விதவிதமான கள்ளிச்செடிகளும் பூச்செடிகளும் பசுங்கொடிகளுமாக அவரது வாழ்விடம் நிறைந்துகிடக்கிறது. நேர்த்தியாகவும் அழகியலாகவும் பார்த்துப் பார்த்து தன் வீட்டை அவர் நேசித்துப் பாதுகாத்தார். தனது கால்களாலும் சத்தங்களாலுமே வீட்டை துல்லியமாகத் தனக்குள் பதிந்து வைத்திருந்தார்.

வளர்ப்பு பிராணிபோல அவ்வீடு அவரிடம் பழகியிருக்கிறது என்பதை அன்று நேரில் கண்டோம்.நண்பர் பூபாளன் ராகவன்அடிக்கடி மனோகர் தேவதாஸ் அய்யாவைப்பற்றி பேசுவதுண்டு. தன் அப்பாவின் வழி அய்யாவை அறிமுகமடைந்திருக்கிறான் அவன். அந்தச் சந்திப்பில் அவரிடம்ஜே.சி. குமரப்பாவின் காந்தியத் தொழில்முறைசார்ந்து இயங்குபவனாகத் தெரியப்படுத்தியவுடன்அவர்குமரப்பா என்னுடைய மனைவியின் உறவினர்தான். அவர் மூன்று கடிதங்கள்கூட எழுதியிருக்கிறார்எனக் கண்மகிழச் சொல்லியிருக்கிறார்.  ஒரு நல்லதிர்வின் சுழற்சியையும்ஒன்றடுத்து ஒன்றாக, அந்த விடுபட்ட புள்ளிகளை மையஅச்சு இணைப்பதையும் கண்கூடாக எங்களால் பார்க்கமுடிந்தது. அன்றைய சந்திப்பில் நூற்பு ஆடைகருப்பட்டி கல்லமிட்டாய்தும்பி இதழ் எனக் கையில் கொண்டுபோனதை எல்லாம் அவரிடம் அளித்தோம். அவைகளை வாங்கித் தடவிக்கொண்டே காந்தி குறித்தும்குமரப்பா குறித்தும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.

வண்ணதாசன் அய்யாவைப்பற்றி பேசிஅவருடைய சில கவிதைகளை அவருக்கு அன்று சொன்னோம். அவைகளைக் கேட்டுநினைவுகளை அசைபோட்டுஎன்னுடைய கனவுகளில் எப்பவுமே வருகிற சிற்றுயிர் தும்பிதான்” என அமைதியாகச் சொன்னார். மேலும், “அந்தப் புத்தகத்தின் பதினேழாவது பக்கத்தில் ஆனைமலைக்கு கீழே ஒரு மண்சாலை இருக்கும். அந்த மண்சாலையில் சின்னதாக ஒரு குடிசை இருக்கும். அந்த குடிசைக்கு அருகில் இரண்டுபேர் பர்தா அணிந்து நடந்துபோவார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் சின்னதாக ஒரு நீர்குட்டை இருக்கும். அதற்கு நெருக்கமாக ஒரு புதர் இருக்கும். அப்புதர் நாணல் புதர். அந்நாணல் புதரில் ஒன்றிரண்டு பூ பூத்திருக்கும். அந்த பூவுக்கு மேலே பட்டாம்பூச்சி பறக்கும். அந்த பூவுக்கு கீழேஅந்தப் புதருக்குள் இரண்டு தும்பி இருக்கும். நான் வரைந்திப்பேன், பாருங்கள்” என்று தன்னுடைய ஓவியக்கோடுகளை அவ்வளவு துல்லியமாகச் சொற்படுத்தினார்.

அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு தருணமும் முக்கியம்தான். அதற்கான நன்றியோடே அவர் வாழ்வை அணுகி வந்தார். தன் எந்நிலையிலும் இந்த முடிவை அவர் கைவிட்டதே இல்லை. நண்பர் தியாகுஅச்சந்திப்பை புகைப்படங்களாக எடுத்துக்கொண்டிருக்ககிளம்பும் நேரத்தில் தயங்கித்தயங்கி அவரிடம் கையெழுத்து கேட்டான். மனோகர் தேவதாஸ் அய்யாவால் கையெழுத்திட இயலுமா என்ற தயக்கம் எங்கள் நெஞ்சுக்குள் இருக்கஅவர் தியாகுவைப் பார்த்துஉங்களை என்னவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்குத் தியாகுபுகைப்படக்கலைஞன்” என்றான். கையெழுத்துக்காக கொடுத்த புத்தகத்தில், ‘புகைப்படக்கலைஞன்என்று எழுதி அதில் சின்னதாக ஒரு கேமிரா வரைந்து கையொப்பமிட்டு புத்தகத்தைத் தந்தார்.

அனைத்துக்கும் மேலானதாக அவருக்கும் அவருடைய மனைவி மஹிமாவுக்குமான காதல் அத்தனை அன்பு நிறைந்தவொன்று. அவர்கள் இருவரது மணவாழ்வு பற்றி பல புத்தகங்கள்  எழுதும் அளவுக்கு காதல்மிகு தருணங்களால் நிறைந்தது. முதல்சந்திப்பு முடிந்து அவரிடம் விடைபெற்று அவ்வீட்டுத் தெருவின் தேநீர் கடையில் ஒதுங்கிய நேரம்இரண்டு அரசுப்பள்ளிச் சிறுவர்கள்நம்ம புத்தகத்துல வர ஓவியர் தாத்தா வீடுடாஎன்று அந்த வீட்டை விரல்காட்டிச் சொல்லிப் போனார்கள். பாடப்புத்தகத்தில் மனோகர் தேவதாஸ் அய்யா பற்றிய தகவல்குறிப்பு இருக்கக்கூடும். “நான் இறந்தபிறகு என்னுடைய சாம்பலைஎன மனைவியின் சமாதியிலுள்ள சிறிய துளைக்குள் போட்டுவிடுங்கள்என்று தன் கடைசி ஆசையை வெளிப்படுத்திய அவர் குரல் காலத்துக்குமான கனிவையும் காதலையும் கொண்டிருந்தது.

குக்கூ குழந்தைகள் வெளி மற்றும் தன்னறம் நூல்வெளியின் பெரும்பானமையான நிகழ்வுகளில் மனோகர் தேவதாஸ் அய்யா அவர்கள் தந்தைக்கு நிகரான இடத்தில் இருந்துவந்தார். அவருடைய ஆசியைப் பெற்று ஒரு காரியத்தைத் துவங்குதல் என்பது எங்களுக்கான நம்பிக்கைக் குறியீடாகவே மாறிப்போனது. தும்பி சிறார் இதழின் பிரெய்ல் அச்சுப் புத்தகத்தையும், அரவிந்த் கண்மருத்துவமனை நிறுவனர் கோவிந்தப்ப வேங்கடசாமி பற்றிய சிறுநூலான ‘வெளிச்சத்தின் சந்நிதியையும் மனோகர் தேவதாஸ் அய்யாவே அவர் வீட்டில் தொட்டு ஆசீர்வதித்து வெளியிட்டார்.

இறுதியாக, இருபத்தைந்து நாட்கள் முன்னதாக அவருடைய வீட்டில் iGene VFX பயிற்சி வகுப்பைத் துவங்கி வைத்து ஆசிவழங்கி பேசுகையில்கூட, “மரணத்துக்கு நான் தயாராகத்தான் இருக்கேன். மஹிமாவோடு கைகள் கோர்த்து பேசிக்கொண்டிருக்கும் கனவில் என் உயிர் பிரியணும். அவ்வளவுதான்என்றார். தன் மரணத்தைக்கூட அம்மனிதர் மனதுக்குள் ஓவியப்படுத்தி வரைந்துகொண்டார் என்றே எண்ணித் தொழத் தோன்றுகிறது. தனது ஓவியக்கோடுகளாலும் ஒளியுயிர்க்கும் நினைவுகளாலும் மனோகர் தேவதாஸ் அய்யா நெடுங்காலத்திற்கு நம் அகத்தில் எஞ்சுவார். வீட்டில் அவரை காதுகேளாத ஒரு அம்மா கவனித்துக்கொண்ட சூழ்நிலையில், அவர் பங்கேற்க விரும்பிய எல்லா நிகழ்வுகளுக்கும் இடங்களுக்கும் உறுதுணையாக உடனின்று அவரை அழைத்துச் சென்ற தாயுள்ளமான தோழமை திரிபுரசுந்தரியை இக்கணம் அகத்தில் நிறைக்கிறோம்.

ஆம்வாழ்க்கை அல்லவாழ்க்கையின் சாரமென ஊறும் தேன் மட்டும் போதும் அவனுக்கு. காட்டை அதன் தேன் வழியாகவே அறிய அவனால் முடியும். அந்தக்காடு அவன் வழியாகவே காய்த்துக் கனிகிறது. ஒரு செடியின் ஆன்மாவை மகரந்தமாக ஆக்கி இன்னொரு செடிக்குக் கொண்டுசெல்லக்கூடியவன் அவன் இல்லையா?” என்கிற உங்களது வரிகள்தான் ஆளுமைமிகு ஓர் படைப்பாளியைக் கண்டுணரும்போதெல்லாம் எங்கள் நெஞ்சில் தோன்றும். கனிந்து சாய்ந்த முதுவாழை போல மனோகர் தேவதாஸ் அய்யா இவ்வாழ்வைவிட்டு நீங்கி இயற்கையோடு சேர்ந்திருக்கிறார். அவரது ஒளிக்கோடுகள் நம்மை வழிநடத்தும். மனோகர் தேவதாஸ் அய்யாவுக்கு நம் நெஞ்சார்ந்த அஞ்சலிகள், அவரது நல்லான்மா அமைதியில் இறைநிழல் அடைக!

நன்றியுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி 

முந்தைய கட்டுரையாருக்காக ?
அடுத்த கட்டுரைமலேசியா உரைகள்