உலகம் முழுக்க ஜெர்மானிய கலை- கலாச்சார அமைப்பு கதே இன்ஸ்டிடியூட் என்னும் பெயரில் நிகழ்கிறது. சென்னையில் அதன் பெயர் மாக்ஸ்முல்லர் பவன். அங்கே தொடர்ச்சியாக இலக்கியச் சந்திப்புகள் முன்னொரு காலத்தில் நடைபெற்று வந்தன. நான் அதில் கலந்துகொண்டதில்லை.
இந்த ஆண்டு எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸி எழுதிய சித்தார்த்தா நாவல் வெளிவந்த 100 ஆவது ஆண்டு. அதை உலகமெங்கும் கொண்டாடுகிறது ஜெர்மானிய அரசு. அதன் ஒரு பகுதியாக கதே இன்ஸ்டிடியூர் ஓர் உரையாடல் அரங்கை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. ஜெர்மானிய எழுத்தாளர் கிறிஸ்டோபர் க்ளோபிள் (Christopher Kloeble) என் மொழிபெயர்ப்பாளர் பிரியம்வதா மூவரும் உரையாடுவது. உடன் கோதே இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் காதரினா கோர்ஜென் (Katharina Görgen) வழிநடத்துவார்.
தொடர்ச்சியாக இப்போது இலக்கிய விழாக்களில் இருந்து இலக்கிய விழாக்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்.பெங்களூர் இலக்கியவிழாவில் இருந்து திரும்பி இரண்டுநாட்கள் கழித்து இந்த விழா. சென்னைக்கு ரயிலில் வந்திறங்கினேன். சென்னை குளிர்ந்திருந்தது. சென்னையில் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு ஆட்கள் நடமாடுவதைக் கண்டேன்.
காலையில் ஒரு சினிமா சந்திப்புக்குச் சென்றேன். நடிகை ஷோபனாவை அவருடைய பிரம்மாண்டமான இல்லத்தில் சந்தித்தேன். ஒரு திரைப்படம் உருவாக்குவது பற்றி பேசி முன்வரைவை உருவாக்கினோம். நடனமங்கையர் பேசும்போது கவனிப்பது ஒரு நல்ல அனுபவம். அவர்களின் அசைவுகளில் எப்போதும் கொஞ்சம் நடனம் இருந்துகொண்டிருக்கும்.
மாலை ரத்தசாட்சி இயக்குநர் ரஃபீக் இஸ்மாயீல் வந்திருந்தார். ரஃபீக் கலைப்பட உருவாக்கத்தில் நம்பிக்கையுடன் நாற்பது வயது வரை உழைத்தவர். அதன்பொருட்டு வாழ்க்கையைச் செலவிட்டவர் என்றே சொல்லவேண்டும். இங்கே கலைப்பட உருவாக்கத்தின் எல்லைகளை அவரே முட்டி மோதி கண்டடைந்தார். இங்கே மாற்று சினிமா அல்லது சுதந்திர சினிமா அல்லது கலைப்படம் இயக்குநரின் சொந்தக் காசில் எடுக்கப்படவேண்டும். அதற்கு அரைக்கோடி பட்ஜெட் கிடைத்தால் அதிகம்.
ஆனால் அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல கீழைநாடுகளிலும் அரசு உதவி, அல்லது பல்வேறு கலாச்சார அமைப்புகளின் நிதியுதவியுடன் எடுக்கப்பட்ட படங்களுடன் போட்டியிடவேண்டும். ஒளிப்பதிவு படத்தொகுப்பு தரத்தாலேயே நம் கலைப்படங்கள் கவனிக்கப்படாமலாகிவிடும்.
மலையாளப் படங்கள், உருது மற்றும் இந்திப்படங்களுக்கு இன்று கொஞ்சம் நிதியுதவி உள்ளது. அரசு நல்ல திரைப்படங்களை ஆதரிக்கும் போக்கு இந்தியாவில் அறவே நின்றுவிட்டது. இந்திய திரைவிழாக்களே வணிகமயமாகி, வணிகசினிமாக்களையும் நட்சத்திரங்களையும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. ரஃபீக் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார். வணிகசினிமா வெற்றி வழியாக கலைப்படம் எடுக்கும் நிதியை பெற்றுவிடமுடியுமென நம்புகிறார். ரத்தசாட்சி அவ்வகையில் அவரது தொடக்கம்.
பிரியம்வதாவும் கணவர் விஜய் ரங்கநாதனும் வந்து என்னை அழைத்துச் சென்றனர். கதே இன்ஸ்டிடியூட்டுக்கு ஐந்து மணிக்குச் சென்று சேர்ந்தேன். அங்கே நம் நண்பர்கள் பலர் வந்திருந்தனர். நிலைய இயக்குநருடனும் ஜெர்மானிய எழுத்தாளருடனும் கொஞ்சநேரம் உரையாடினேன். காதரின்னா திரைப்படவியலில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். கிறிஸ்டோபர் திரைப்படங்களுக்கு எழுதுகிறார். அதன் வணிகச்சூழலில் இணைந்து பணியாற்றுவது எவ்வளவு கடினம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் எளிதாக என் நண்பர்களான பாலா, வசந்தபாலன் வழியாக உள்ளே நுழைந்தேன். நான்கடவுள், அங்காடித்தெரு இரண்டுமே வெற்றிப்படங்களாக ஆனமையால் எங்கும் தேக்கம் நிகழவில்லை.
உரையாடல் ஆங்கிலத்தில் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. ஹெர்மன் ஹெஸ்ஸியில் தொடங்கி இலக்கியத்திற்கு ஒரு நிலத்தின் தேவை, அன்னிய நிலங்களைச் சார்ந்து எழுத முடியுமா என்ற வினாக்களுடன் முன்னகர்ந்தது. சிறப்பான உரையாடலாக அமைந்தது. அதன்பின் உரையாடல்கள், புகைப்படம் எடுத்தல்கள். என் நூல் Stories Of the True பிரதிகளில் கையெழுத்திட்டு கொடுத்தேன். நான் தமிழிலக்கியத்தில் ஹெஸ்ஸியின் இடம், அவருடைய நூல்களின் மொழியாக்கம் ஆகியவற்றைப் பற்றிச் சொன்னேன்.
அமெரிக்காவில் இருந்து நண்பர் ரஜினிகாந்த் வந்திருந்தார். அவரும், செல்வேந்திரனும், வழக்கறிஞர் செந்திலும், வழக்கறிஞர் சக்தி கிருஷ்ணனும் அறைக்கு வந்திருந்தார்கள். இரவு பதினொன்று மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இனி நேராக அடுத்த இலக்கிய நிகழ்வு. திருவனந்தபுரம் திரைவிழாவில் டி.பி.ராஜீவன் பற்றி 13 ஆம் தேதி பேசுகிறேன். 18 அன்று விஷ்ணுபுரம் விழா. அப்படியே பல இலக்கிய விழாக்கள். நான் ஆங்கிலம் பேசி உலகுசுற்றும் ‘பையர்’ ஆக மாறிவிடுவேன் போலிருக்கிறது.