நினைவுப்பெட்டகம், கமலதேவியின் கதைகள் – ரம்யா

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்புறுத்திக் கொள்ளும் கருவியாக அன்பு உள்ளது. அன்பு எவ்வகையிலும் இவ்வுலகம் கருதும் கூறுள்ள மனிதனாக ஒருவனை ஆக்குவதில்லை. அது மனிதர்களின் மேலான கரிசனத்தையும், பித்தையுமே பிரதானமாகக் கை கொண்டதுகூறுள்ள மனிதனாக வாழ்வதற்கான ஒன்றை இந்த சமூகம் அதுவல்லாதவனுக்காக தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறது. நேர்த்தியாக வாழ்வது, வெற்றிகரமாக வாழ்வது, மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்வது, உரிய காலத்தில் எல்லாம் சரிவர வர நடப்பது என்ற வரையறைகளை நோக்கி அப்படியெல்லாம் வாழத் தெரியாத மனிதனின் கேள்விகளாக கமலதேவியின் பெரும்பான்மைக் கதைகள் அமைந்துள்ளன

கமலதேவியின் புனைவுலகத்தில் புறத்தை விடவும் அகப்பிரபஞ்சம் விசாலமானது. நிதர்சன வாழ்க்கையிலும் கூட அவருடைய புறவுலகம் எல்லைக்குட்பட்டது தான். அந்த எல்லையை தன் புனைவுகளில் அக உரையாடல்களால் விரித்து விரித்து விசாலமாக்கிக் கொண்டே செல்கிறார். உறவுகளுக்கிடையேயான பிணைப்புகளில் எழும் உறவுச் சிக்கல்களில் எழும் கேள்விகளை உரையாடல்கள் வழியாக இக்கதைகளில் அகவிசாரணை செய்கிறார். சிக்கல்களுக்காகத் தான் நம்பும் தீர்வுகளை அவ்வுரையாடலிலேயே படிமமாக வைக்கிறார். வாசித்தபின் அப்படிமங்களே மனதில் எஞ்சுகின்றன. மீட்டெடுத்துப் பார்க்கையில் அப்படிமங்களே அவரின் கதைகளுக்கான வாசலாக அமைந்துள்ளது. இரு கேள்விகளுக்கான ஊசலாட்டமாக உரையாடல்கள் நிகழ்ந்தாலும் தான் தீர்க்கமாக நம்புபவற்றைத் தவிர்த்து பெரும்பாலும் இரண்டின்மையையே ஊசலாட்டத்திற்கான தீர்வாக முன்வைக்கிறார். கமலதேவியின் கதைகளில் மனதிற்கு நெருக்கமான கதைகளாக நெடுஞ்சாலைப்பறவை, சொல் பேச்சு கேட்காத கரங்கள், மித்ரா, புதையல் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

மறக்க முடியாத ஒன்ன துறக்கறது எப்படி? முழுசா மறந்தா அது அல்சைமர் மாதிரி ஏதோ ஒன்னுஎதில இருந்தும் கொஞ்சம் தள்ளி இருக்கத்தான் மனுசங்களால முடியும்என்ற வரிகள் நெடுஞ்சாலைப்பறவை சிறுகதையில் ஜென்ஸியின் வரிகளாக வருகிறது. அறுபது வயதில் ஆசிரியராகப் பணியாற்றியபின் ஓய்வு பெறும் ஜென்ஸியின் ஒட்டு மொத்த வாழ்க்கையே துறத்தலுக்கும், தள்ளி நிற்பதற்குமான ஊசலாட்டமாக அமைந்துள்ளது. தன் வாழ்நாளின் கண்டடைதலாக அவள் சொல்லும் இவ்வரிகள் துறந்து சென்றவர்களும், தள்ளி நின்றவர்களுக்கும், உலகியலில் புழங்குபவர்களுக்கும் கூட பொருத்தமானதாக உள்ளது. அப்படியாக உறவுகளிலிருந்து தள்ளி நின்று ஆசிரியப்பணி செய்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஒருவர் தான் இனி அமையுப்போகும் கூட்டைப் பற்றிய சிந்தனையில் சாலையோரத்து மரத்தின் உச்சிக் கிளையில் ஒரு கூட்டைப் பார்க்கிறார். “எந்தப்பறவையினுடையது!? இந்த இடம் எந்தவகையில் அதற்கு பாதுகாப்பானது?“ என்ற கேள்வியை தன்னுள் எழுப்புகிறார். “வானத்துப் பறவைகளைக் கூர்ந்து பாருங்கள். அவை நம்மைப் போல் விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை. ஏன், களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை.” என்ற பைபிளின் வரிகள் நினைவு படுத்தும் இடமது. ஓரளவுக்கு மட்டுமே மனிதனால் பாதுகாப்பைப் பற்றி ஊகித்து செயலாற்ற முடியும். அதற்கு அப்பால் அது இயற்கையை, பெருங்கருணையையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

ஒத்த ஊத்தும் அத்து போன கேணிய பாத்ததில்ல. எங்கயாச்சும் கண்ணுக்கு அகப்படாமயாச்சும் இருக்கும். உள்ளுக்குள்ளவே ஊறி காயற ஊத்தாவது இல்லாத கேணி பின்னால எந்த மழைக்கும் சுரக்காதும்பாங்கஎன்றசொல் பேச்சு கேட்காத கரங்கள்சிறுகதையில் வரும் வரி ஆழமானது. உள்ளிருந்து ஊறி வராத உணர்வுகளை ஒரு போதும் செயற்கையாச் செய்து விட முடியாது. அன்பு சிறு தொடுகைகளால் தன்னைத் தெரிவிக்கிறது. தொடுதலின் மேலான, ஐயம் பரவியிருக்கும் காலகட்டத்தில் அதன் மேலான கேள்விகளை எழுப்பும் மனப்போராட்டமாக கதை சொல்லிச் செல்கிறது.

புதையல் சிறுகதை காதல் முறிந்த ஆசிரியருக்கும், அவளின் மாணவிக்கும் இடையேயான இணக்கமான உறவு இழைந்தோடும் கதை. “காற்று கடந்து சென்றது. எப்போதும் சூழ்ந்திருக்கும் காற்று கடந்து சென்றுகொண்டேயிருப்பதும் தானே. கடந்துகடந்துகடந்துஅந்த மரத்தை, அதிலுறங்கும் புள்ளை, அடியில் நின்று இருட்டைத் துழாவும் நாய்களை, கடந்து சென்று புல்வெளியின் தலை கோதி கடந்து கொண்டேயிருந்தது. எதனாலும் தடுக்கவோ, தவிர்க்கவோ இயலாத காற்று. அது கடந்து செல்வதையும் ஒன்றும் செய்வதற்கில்லைஎனக் காதலும், பிரிவும் உலகில் நடந்து கொண்டே இருக்கும் ஒன்றென அந்த ஆசிரியர் ஏற்றுக் கொள்ளும் மன நிலையை காட்சியாக சித்தரித்திருக்கிறார்.

ஏண்டா ருசியில்லாம போறஅது அப்படியே உன்ன இழுத்துக்கிட்டு போய் சலிப்பில நோயில் தள்ளிரும்…” என்ற மழை இரவு சிறுகதையில் வரும் சிவகாமி அம்மாளின் இந்த வரியே அவளின் மகனின் இறப்பிற்கான காரணத்தைச் சொல்கிறது. இழந்த மகனின் இறப்பைத் தாழாமல் அதை ஏற்றுக் கொள்ளாமல், இல்லாத அவனுடன் உரையாடும் தாயின் அன்பையும், இயலாமையையும் சொல்லும் கதை.

மனுசங்கள அசஸ் பண்ற விட்டுட்டு யூஸ் பண்ணிக்கப்பாரு. சும்மா காரணமில்லாத செண்டிமெண்டல் இடியட்டா இருக்காத. கனவு இல்ல லைஃப். எதுவும் வந்து குதிக்காதுஎன மித்ரா சிறுகதையில் வரும் வரியே ஒட்டுமொத்த சிறுகதையின் மையமாக உள்ளது. இரு தோழிகளில் ஒருவர் மனிதர்களை நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்ப்பதும் இன்னொருவர் அப்படியல்லாமல் இருப்பதும் என வரும் கதையில் இருவருக்குமிடையேயான உரையாடல் வழியாக அவர்களின் வாழ்க்கையின் தற்போதைய நிலையை விவரிக்கிறார். அன்பினால் மட்டுமே மனிதனை அணுகுவதால் கிடைப்பது கண்களுக்கு புலப்படாத அக நிறைவு மட்டுமே. அத்தகைய தருணங்களை காட்சியாக மட்டுமே வைத்துஅஸஸ் பண்ணாத. யூஸ் பண்ணுஎன்பவர்களின் முன் காண்பிக்கிறார்.

நண்பர்களுக்கிடையேயான கடித உரையாடலாக நிகழும்இப்படிக்குசிறுகதையில் திருமணத்திற்குப் பின்னான உறவு முறிவில் ஆணாதிக்கம் என்றே ஆண்களை நோக்கி சுட்டும் தொனி வந்துவிட்ட காலத்தில் அதற்கு இணையாக அவனின் மனப்பதிவை சொல்லும் குரலாக சிறுகதை அமைந்துள்ளது. “நேத்து மெரினா மணலில் அமர்ந்து கடல் பார்க்கையில் தழும்பிக் கிட்டேயிருக்கு சிந்தவே இல்லனு தோணுச்சி. ஒருவேளை அது இங்க சிந்த பாத்துதுன்னு தோணுச்சு. இல்ல அது மீறாத வரைதான் நமக்கு வாழ்க்கைன்னு நினைச்சேன். அதே நேரம் கட்டட்றதுன்னு ஒன்னு இங்க இல்லவே இல்லன்னு தோணுது.” எனச் சொல்லும் ஆணின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. அதுவாகக் கனிந்து பெய்யும் மழைக்காக மட்டுமே உறவில் தான் காத்திருப்பதாகச் சொல்லும் வரியையும் இணைத்து ஆண்பெண் உறவுச் சிக்கலுக்கான தீர்வாகப் பார்க்கலாம். ஒவ்வொன்றையும் அதனதன் இயல்பிலேயே நேசித்தால் மட்டுமே உறவு பூரணத்துவம் அடைகிறது. நேசிப்பதற்காகவென ஒன்றை மாற்றுவது என்பதுசில்வர் அயோடைடு மழைபெய்யச் செய்வது போலத்தான் என்ற சிந்தனையைத் தீர்வாக கதை முன்வைக்கிறது.

வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவனின் மன உளைச்சலை நண்பர்கள் அருகிருந்து போக்குவதான கதையாக சூழலில் மிதக்கும் பூ சிறுகதை சொல்கிறது. “கிணற்றில் ஊற்றுமுகம் வரை வற்றிய நீரை இறைப்பதைபோல நீண்டதொலைவு சென்றும், உள் நோக்கி  முகர்ந்தும், வெளியிழுக்கும் வேகத்தில் சிந்தியும் ஏதோவொரு பற்றுக்கயிறால் நினைவை இறைத்துக் கொண்டிருக்கும் ராமரை சொல்லாலும் சிரிப்பாலும், தொடுகையாலும் சூழ்ந்திருந்தான் பாலா.” என ராமரைப் பற்றியிருக்கும் நண்பர்களின் அன்பை வெளிக்காட்டுகிறார். “எந்நேரத்திலயும் முழுசா சிதறிடக்கூடாது. கற்பனையாவாவது எதையாவது பிடிச்சிக்கிடனும்என அதன் மையத்தீர்வாக வைத்து அவன் மீட்சியைப் பற்றிய கதையைச் சொல்கிறார்.

கமலதேவியின் கதையுலகம் எளிமையானது. கதையுலகம் பெரும்பாலும் பள்ளி, ஆசியர்பயிற்சிக்கல்லூரி, கல்லூரி, வீடு, கோயில் போன்ற இடங்களாகவே உள்ளன. சக்யை, ராதேயன் போன்ற சில கதைகளில் புராண காலத்தில் சென்று கதைக்களத்தை அமைத்திருக்கிறார். எளிமையான உணர்வு, உறவுச்சிக்கல்களைப் பேசுபவராக இருக்கிறார். யாவற்றுக்குமான தீர்வை ஒட்டுமொத்த உரையாடல் வழி, அதில் எழும் ஒரு படிமம், ஒரு வரியின் வழி சொல்லிச் செல்கிறார். ”ஏன் எழுதுகிறீர்கள்?” என்ற கேள்விக்குமறதியின் மேலான ஓர் இனம்புரியா பயம் உள்ளது. எல்லாத்தையும் மறந்துவிடுவேனோ என்ற பயம் உள்ளது. எனக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன்என்கிறார். இதிலிருந்து கமலதேவியின் புனைவுகத்திற்கான சாவி கிடைக்கிறது. தன் வாழ்க்கை, தான் சந்தித்த மனிதர்கள், உறவுகள், அக உலகம் என அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய, தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்ளக்கூடியவைகளை தன் புனைவுலகமாக உருவாக்குகிறார். அதன் உள் நுழைந்து நாம் தரிசிப்பது அவரின் நினைவுப்பெட்டகத்தைத்தான்.

ரம்யா.

விஷ்ணுபுரம் விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
முந்தைய கட்டுரைகதே இன்ஸ்டிடியூட் உரையாடல்
அடுத்த கட்டுரைவிஜயா வேலாயுதம், கடிதம்