கே.பி.வினோத், ராஜன் சோமசுந்தரம், நான்கு பருவங்கள்

எங்கள் விஷ்ணுபுரம் கும்பலைச் சேர்ந்த கே.பி.வினோத்தை பலர் அறிந்திருக்கலாம். பயணங்களில் உடனிருப்பார். ஆகவே பல பயணநூல்களின் கதாபாத்திரமும் கூட. அவர் ஒரு முக்கியமான கணினி மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரி. அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் இந்தியா திரும்பியது இங்கே ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன்.

அதற்கு காரணம் நான். ஒருநாள் இயல்பாக இணையத்தில் அலைந்தவர், தன் ஊரைப்பற்றி தேடினார். நான் குமரி உலா என்னும் கட்டுரையில் பத்மநாபபுரம் பற்றி சொல்லியிருந்தேன். வினோத்தின் ஊர் அது. அக்கட்டுரைக்கு வந்து சேர்ந்தவர் என் இணையதளத்தின் தொடர்வாசகர் ஆனார். அமெரிக்காவில் அவர் வெற்றிகரமான கணினிநிபுணர். ஆனால் அது தன் அடையாளம் அல்ல, தன் நிறைவுக்காக எதையாவது செய்யவேண்டும் என்னும்  எண்ணம் எழுந்தது.

இங்கே வந்தபின் இசை, இலக்கியம் என அலைந்தவர் சட்டென்று சினிமாவை தன் கலை என கண்டுகொண்டார். வீட்டில் ஒரு திரையை அமைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் சினிமா பார்த்தார். திரைப்பட நூல்களை பயின்றார்.

வேலைபார்த்துக்கொண்டே இயக்குநர் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். (ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் சிறுமியாக நடித்தவர் வினோத்தின் மகள்) விடியற்காலையில் அலுவலகம் சென்று காலை எட்டு மணிக்குள் வேலையை முடித்துவிட்டு படப்பிடிப்புக்குச் சென்று நள்ளிரவில் வீடுதிரும்பி மீண்டும் மறுநாள் காலையில் அலுவலகம் செல்வார். படப்பிடிப்பு அரங்கில் இருந்தபடியே அலுவலகத்தை நிர்வாகம் செய்வார்.

வினோத் மிஷ்கினி பிசாசு, சவரக்கத்தி உட்பட படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவர் முதலில் எடுத்த படம் ஞானக்கூத்தன் பற்றியது வெறும் 16000 ரூ செலவில்,  அஜிதனின் காமிராவை வைத்துக்கொண்டு, தான் ஒருவர் மட்டுமே இயக்கம் ஒளிப்பதிவு எல்லாமே செய்து அவர் எடுத்தபடம் அது. ஞானக்கூத்தன் அந்தப்படத்தை மிக விரும்பி டெல்லி உட்பட பல இடங்களில் அதை வெளியிட ஏற்பாடு செய்தார். தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களில் தலையாயது என்று அசோகமித்திரன் எழுதினார்.

அதன்பின் வினோத் விஷ்ணுபுரம் விருது பெற்ற ராஜ்கௌதமன், அபி ஆகியோரைப்பற்றிய ஆவணப்படங்களை எடுத்திருக்கிறார். கே.பி. வினோத்தின் ஆவணப்படங்கள் மிகச்சுருக்கமான முதலீட்டில் எடுக்கப்பட்டவை (எந்தப்படமும் மொத்தம் ஐம்பதாயிரம் ரூபாய் செலவை கடந்ததில்லை) தனக்கான காட்சி மொழி கொண்டவை. அந்த எழுத்தாளரின் இலக்கியப்படைப்புலகை புரிந்துகொண்டு, மிகநுட்பமாக அவற்றை விரிவாக்கம் செய்பவை.

உதாரணமாக அபி பற்றிய ஆவணப்படம். அபியின் புனைவுலகில் மாலை, மைதானம், நிழல் ஆகியவை எந்த இடம் வகிக்கின்றன என்று பார்த்தால் அந்த ஆவணப்படத்தின் அழகு புரியும். இலக்கிய ஆசிரியரின் உடல்மொழியை பதிவுசெய்வதில் தனிக்கவனம் செலுத்துவது வினோத்தின் வழி.

வினோத் பல திரைமுயற்சிகள் செய்தார். பலமுறை அவை கைகூடி,  அணுகும்போது விலகிச்சென்றன . ஆனால் உளம்தளராமல் முயன்றபடியே இருந்தார். இப்போது அவர் எழுதி இயக்கும் மலையாளப்படம் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. ஃபோர் சீசன்ஸ். ஓர் இனிய இசைக்காதல்.

ராஜன் சோமசுந்தரம் அமெரிக்க விஷ்ணுபுரம் வட்டத்தின் தீவிர உறுப்பினர். இசையமைப்பாளரான அவர் ஏற்கனவே யாதும் ஊரே என்னும் புறநாநூறு பாடலுக்கு இசையமைத்து உலகத்தமிழ் மாநாடுகளில் அப்பாடல் ஒலித்துள்ளது. சங்கப்பாடல்கள் பலவற்றுக்கு இசையமைத்துள்ளார். கமல் ஹாசன், ஶ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி பாடிய நீலம் இசைக்கோவை (என்னைப் பற்றிய ஆவணப்படத்தின் பகுதி) அவர் இசையமைத்தது.

ராஜன் சோமசுந்தரம் இந்தப்படம் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப்படமே ஒரு இசைப்படம் ஆகையால் அவருக்கான இடம் நிறையவே உள்ளது.

படம் வெற்றிபெறவேண்டும், அவர்கள் இருவருக்கும் பெருந்தொடக்கமாக அமையவேண்டும் என வாழ்த்துகிறேன்.

முந்தைய கட்டுரைமலேசியா வாரம்-2
அடுத்த கட்டுரைஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்தில் இரண்டாவது சந்திப்பு