ரப்பர் மின்னூல் வாங்க
ரப்பர் வாங்க
ரப்பர் நாவலுக்கு மிகப்பெரிய பலவீனம் அதன் தலைப்புதான் என அது வெளிவந்தபோது சுந்தர ராமசாமி சொன்னார். அந்நாவலின் கைப்பிரதியை வாசித்துவிட்டு “நாவல் கலை என்பது ஒரு மிகப்பெரிய கப்பல் கட்டுவது போன்றது. அது உங்களுக்குக் கைவந்துள்ளது” என்று அவர் எழுதினார். அந்த தலைப்பு அந்நாவல் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் அவலம், ரப்பரை ஒட்டிய வாழ்க்கையின் அல்லல்களை பேசுவது என பொருள் கொள்கிறது. ஏற்கனவே தேநீர் என ஒரு நாவல் அவ்வாறு வெளிவந்திருந்தது
ரப்பர் நாவலில் ரப்பர் ஓர் உருவகம் மட்டுமே. வாழைக்கும் ரப்பருக்குமான போர் என அதிலுள்ள வாழ்க்கை உருவகிக்கப்பட்டுள்ளது. எவருக்கும் உணவாக ஆகாத மரம். நவீனத் தொழிவளர்ச்சியின் அடிமை அது. மௌனமாக வெண்குருதி வடிய நின்றிருக்கிறது. ரப்பர் போல ஒவ்வொரு நாளும் வதைக்கப்படும் மரம் பிறிதொன்றில்லை. அதைப்போல வதைபடும் வாழ்க்கையே ரப்பரின் நவீன உலகக் கதைமாந்தருக்கு உள்ளது. உள்ளே நீர் பெருகி ஓடி, இலையும் தளிரும் குளிர்ந்த வாழையென வாழ்பவர் கண்டன் காணி மட்டுமே.
நான் எழுத நினைத்தது என் மண்ணில் நான் இழந்ததை. எழுதியது மண்ணின் உயிர்ப்பென இருக்கும் நீரை. ஒவ்வொரு வாழையும் ஒரு சுனை. ஒரு குளிர்க்கரம். 1990ல் இந்நாவலை நான் எழுதினேன். முப்பத்திமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று குமரிநிலம் முழுமையாகவே ரப்பர்க் காடாக ஆகிவிட்டிருக்கிறது. நான் பிறந்து வளர்ந்த ஊர் அடையாளமே தெரியாமல் ரப்பரால் சூழப்பட்டு விட்டது. வாழையின் கனிவு எங்குமில்லை.
ஆனால் ரப்பரும் இன்று பயனற்றதாகிவிட்டது. ரப்பர்த்தோட்டங்கள் வெறுமைகொண்டு இருண்டு நின்றுள்ளன. ரப்பருக்கு விலை இல்லை. ரப்பர் தொழில் லாபகரமாக இல்லை. ஒரு காலத்தில் செல்வ மிதப்பாக இருந்த ரப்பர்க்கிராமங்கள் உருமாறிக்கொண்டிருக்கின்றன. இன்னொன்று வரலாம். அனேகமாகச் சில ஆண்டுகளில் எண்ணைப்பனை கூட வந்துவிடலாம். அவையெல்லாம் வெறும் காலச்சின்னங்கள். நான் எழுதியது மண்ணில் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றி. அதன் ஆடல் மானுடரிலும் நிகழ்கையில் உருவாகும் உணர்வுநாடகம் பற்றி. அதனூடாகத் திரண்டு வரும் மெய்மை பற்றி.
1990 ஆம் ஆண்டுக்கான அகிலன் நினைவுப்பரிசு பெற்ற நாவல் இது. இந்நாவலின் முதல்பதிப்பை வெளியிட்ட தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணனுக்கும், தொடர்ந்து வெளியிட்ட கவிதா பதிப்பகம் சொக்கலிங்கத்திற்கும், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரிக்கும் இப்போது புதிய பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி
ஜெ