கன்னியின் காலடியில்

கன்யாகுமரி வாங்க

கன்யாகுமரி மின்னூல் வாங்க

கன்யாகுமரி நாவல் வெளிவந்த காலகட்டத்தில் கடுமையான விவாதங்களை உருவாக்கியது – ஆனால் இணையம் இல்லாத அந்தக்காலகட்டத்தில் எல்லா விவாதங்களுமே தேனீர்க்கோப்பை புயல்கள்தான். அல்லது தேனீர்க்கரண்டிப் புயல் என்றுகூடச்  சொல்லலாம். நான் விமலா என்னும் கதைநாயகியை ஒழுக்கமில்லாதவளாகக் காட்டி, பெண்ணியம் பேசும் பெண்களை இழிவுசெய்கிறேன் என்பது குற்றச்சாடு. இன்றைக்கு எந்த சிந்திக்கும் பெண்ணும் அப்படிச் சொல்ல மாட்டாள் என நான் நினைக்கிறேன்.

விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் என்னும் இரு நாவல்களுக்குப் பின் நான் எழுதிய சிறு நாவல். உண்மையில் ஒரு சிறுகதையாக உத்தேசிக்கப்பட்டது. நண்பர் லக்ஷ்மி மணிவண்ணன் சொன்ன ஓர் உண்மைநிகழ்வை ஒட்டி என்னுள்ளத்தில் வளர்ந்த கரு. ஆனால் எழுத எண்ணியபோதே என்னுள்ளத்தில் இந்நாவலின் அடிப்படைக் கேள்வி வந்து நின்றது. நமக்கு நிகழும் ஒரு வன்முறை, ஒரு அவமதிப்பு உண்மையில் நம்மை ஏன் அந்த அளவுக்கு பாதிக்கிறது? நாம் எதையும் செய்யவில்லை, எனினும் நாம் ஏன் கூசிச்சுருங்குகிறோம்?

ஏனென்றால் அந்நிகழ்வினூடாக நாம் நம் எல்லைகளை உணர்கிறோம். நாம் எங்கே கட்டுண்டிருக்கிறோம் என்று உணர்கிறோம். சமூக நம்பிக்கைகள், மத ஆசாரங்கள், குடிமைச்சட்டங்கள் என வெளியே இருந்து வரும் தளைகள். நம் அச்சம், ஐயம், கசப்பு, தன்னலம், வஞ்சம், கோழைத்தனம் என உள்ளுறையும் தளைகள். அவற்றை அத்தகைய ஓர் அதீதக் கணம் நமக்கே காட்டிவிடுகிறது. நாம் அவற்றை மீற முயன்று நம் எல்லைச்சுவர்களில் மண்டை அறைபட்டு விழுகிறோம். குருதியும் வலியுமாக நமக்குள் கூச்சலிட்டுக் கொள்கிறோம். ஒரு வன்முறை, ஓர் அவமதிப்புக்கு பின் நம் அகம் அந்தனை வெறிகொண்டதாக, பித்தெழுந்ததாக ஆகிவிட்டிருப்பதற்குக் காரணம் அதுவே.

நாம் என்ன செய்கிறோம் என்று பார்த்தால் தெரியும். நாம் அந்த எல்லைகளை மீறுவதைப் பற்றி ஓயாமல் பகற்கனவு காண்கிறோம். நம்மை விதவிதமாகச் சித்தரித்துக் கொள்கிறோம்.நம்மை அவமதித்தவரை கொல்கிறோம், பலமடங்கு அவமதிக்கிறோம், மன்னிக்கவே போவதில்லை என அவர்களுக்குத் தெரிவிக்கிறோம். அவையெல்லாம் நம்மால் இயலாதவை, வெறும் பொய்கள் என நமக்கே தெரியுமென்பதனால் மேலும் மேலும் சீற்றம் கொள்கிறோம்.உச்சகட்டங்களிலேயே உலவுகிறோம். அதன் இடைவெளிகளில் அதலபாதாளத்தின் இருளுக்குள் விழுகிறோம். உளச்சோர்வும் உளக்கொந்தளிப்பும் மாறிமாறி அலைக்கழிக்கும் ஒரு அகநரகம்.

எனில் அதிலிருந்து விடுதலை எதன் வழியாக? கல்வி, அறிவு ஆகியவற்றினூடாகத் திரளும் ஆளுமையே விடுதலையை அளிப்பது என்று எழுதும்போது கண்டடைந்தேன். மேலும் முன்னகர்ந்து கருணை அதைவிட விடுதலை அளிப்பது என்று உணர்ந்தேன். நாம் அடைந்த  அவமதிப்புகளை நிகர்செய்வதனால் அல்ல, வன்முறையை திருப்பி அளிப்பதனால் அல்ல, அவற்றை மிகச்சிறியவை என ஆக்கும் அளவுக்கு வளர்வதனாலேயே விடுதலை இயல்வதாகும்.

அந்த விடுதலை விமலாவுக்கு இயன்றது, ரவிக்கு இயலவில்லை. ரவியும் சிக்கிக்கொண்டவனே. அவமதிப்பை அடைந்தவன், அதன் வழியாக தன் எல்லைகளை அறிந்தவன், அவ்வறிதலால் கூசிச்சுருங்கி அகம் கொதிப்பவன். ஆனால் அவன் மேலும் மேலும் கோழைத்தனத்தால் அதனுள்ளேயே சிக்கிக்கொண்டிருக்கிறான், அவனுக்கு மீட்பில்லை. அவனுள் எஞ்சிய ஒரு துளி அமுதம், நினைவில் இருந்த கன்னிமையின் தூய்மை மட்டுமே அவனுடைய மீட்புக்கான வழி. அதுவும் அடைபடுகிறது

இன்று, இந்ந்நாவல் வெளிவந்து கால்நூற்றாண்டு நெருங்கவிருக்கையில் இளமைக்கால பாலியல் ஆக்ரமிப்பும், அதன் உளவதையும் நான் நினைத்ததை விட பல பெண்களுக்கு இருப்பதை அறிகிறேன். வெவ்வ்வேறு பெண்கள் அதைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்நாவல் அந்தரங்கமாக பேசும் ஒரு செய்தி உண்டு

இந்நாவலை வெளியிட்ட தமிழினி வசந்தகுமாருக்கும், மறுபதிப்புகளை வெளியிட்ட கிழக்கு பத்ரி சேஷாத்ரிக்கும், இந்த மறுபதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஅருணன்
அடுத்த கட்டுரைதொலைதூரக் கல்வி, கடிதம்