அகரமுதல்வனின் பான் கீ மூனின் றுவாண்டா தொகுப்பை முன்வைத்து

மக்களின் வாழ்க்கைத் துயரங்களை சொல்லும் கதைகளை இதற்கு முன் படித்திருந்த போதும், படுகொலைகளுக்கு நடுவே மீண்டு வந்து அகரமுதல்வன் எழுதும் கதைகள், படிக்கிறவாசகனை சல்லி சல்லியாய் துளைத்தெடுத்து விடுகின்றன. ஈழத்து மக்களின் நிலை குறித்துநாம் டிவியிலும், தினசரிகளிலும், இங்கிருக்கும் அரசியல்வாதிகளின் உணர்ச்சி மிக்க பேச்சுக்களின் வழியும் நாம் அறிந்தவற்றையெல்லாம் எண்ணும்போது நம்மை பார்த்து நமக்கே சிரிக்கத் தோன்றுகிறது. எழுத்தாளர் கதை வழியே நம்மை அந்நிலத்துக்கே அழைத்து செல்கிறார். பிணக்குவியலின் நடுவே, பதுங்கு குழிகளுக்குள்ளே, இடிந்து போன மருத்துவமனைகளை, கைவிடப்பட்ட ஊர்களை இடம்பெயர்வே வாழ்வாகி மக்களாக நாமும் மாறிப் போகக்கூடும்.

அவரது நாவல் மரம் கதையில் வரும் நாயகன் தன் காதலியின் கண்களை கன்னிவெடியோடு ஒப்பிடுகிறான். இந்த நிலத்தில் இடம்பெயரும் கால்கள் எங்க இளைப்பாறும், சாவைத் தவிரபோன்ற வலிகள். இனி நாவல் பழங்களை பார்க்கும் போதெல்லாம் ஆரணிதான் நினைவில் வருவாள். வீழ்ந்தவர்களின் புரவி கதையை படிப்பது விரல்களில் நகங்களை பிடுங்கி, கொஞ்சம் கொஞ்சம் சித்ரவதை செய்து கொள்வதற்கு சமம். படித்து கடந்து வருவது நேரம் எடுக்கும். அந்த துயரமே வாழ்வாகி போன பெண்களில் ஒருவர் தன் இரண்டு பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு செஞ்சிலுவை சங்கத்தினை சேர்ந்தவர்களிடம் தன் பாவாடை அவிழ்த்து காண்பிப்பாள், வெள்ளை நூலால் தைக்கப்பட்டிருக்கும் அவள் யோனி. அங்குள்ள பெண்கள் எல்லோரும் வெள்ளை நூலையும் ஊசியையும் தேடிக் கொண்டிருப்பார்கள். இவ்வளவு துயரை ஏன் எழுத வேண்டும் என்று எண்ணுகையில் உடல் சிதைக்கப்பட்டு இறந்து போன எனக்காகத்தான், கற்பழிக்கப்பட்டு ரத்த பெருக்கில் இறந்து போன பதினான்கு வயதான சிறுமியாகிய எனக்காகத்தான் என்று எழுதுகிறார்.

அந்த சின்னப் பிள்ளைகளை காப்பாற்றுங்கோ என்ற சிவகலையின் முனகல் உலகெங்கும் போர்களினாலும், கலவரங்களினாலும் கற்பழிக்கப்படும் சிறுமிகளுக்காகவும், பெண்களுக்காகவும் ஒலித்து கொண்டே இருக்கிறது. தீபாவளி கதை முழுவதும் வலி நிரம்பி கிடக்கிறது. சோதனையிடும் ராணுவக்காரனை, நிறைமாத கர்ப்பிணியின் பாவாடைக்குள் கைவிடுகிற இவனுகதான் பாஞ்சாலிக்கு கண்ணீர் விட்டவன். இந்த வரிகளை படித்து கடந்து வரவே முடிவதில்லை. சந்திராவின் பிரசவ வலியை கூட கறுப்பு அடிமையின் துயரிரைச்சல் என்கிறார். கதிர்காமன் தன் மனைவியை பற்றி சொல்கையில் இவள்தான் இந்திராவின் தாய் இவளை சுட்டதும் ஆர்மிக்காரன் என்று சொல்லி அழுவார்.

இவர் கதையை படிப்பவர்கள் போர் நிலத்தில் வீரனாக, குவிந்த பிணங்களின் நடுவே பிணமாக, உடல் சிதைந்து உயிருக்கு போராடுபவராகவும் மாறிப் போவார்கள். இவன் என்கிறகதை இயக்கத்தின் சட்டங்களையும், குற்றங்களுககான தண்டனையையும் பற்றி சொல்கிறது. இறக்கும் நிலையிலும் தன் நிலத்தை வீட்டு நீங்காத பாட்டியும் கதையில் வந்து போகிறார்கள். போரில் குண்டு மழை கதையெங்கும் உவமை மழை. எல்லோருக்கும் ஆச்சியின் கதைகள் உண்டு. இங்கிருக்கும் பாட்டிகள் விவசாய வேலையிலோ, டிவியிலோ, ஊர்க்கதைகளை பேசிக்கொண்டு இருப்பார். இவர்கள் ஆச்சியை விட்டு, தங்கள் தெய்வங்களை விட்டு, தங்கள் மூதாதையர்களின் தொல் பொருளையெல்லாம் விட்டு புலம்பெயர்ந்து பெயரற்ற அகதிகளாய் வாழ்ந்து மடிகின்றனர். பான் கீ முனின் றுவாண்டா என்றதலைப்பு உலக போர் குற்றங்களுக்கெதிரான கண்டனம். இவ்வளவு துயரை ஏன் எழுத வேண்டும். முடிந்து போன போரை பற்றி ஏன் எழுதுகிறார் என்று தோன்றினாலும், இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கும், இனி நடக்க போகும் போர்களில் அல்லல்படும் மக்களுக்காகவும் இந்த கதைகள்போல.

பான் கீ மூனின் றுவாண்டா கதைகள் முழுவதுமே பெண் பாத்திரங்களாலே எடுத்துச் செல்லப்படுகிறது. பெயர் கதையில் வரும் பெண் பாத்திரம் ஈழத்தில் தன்னுடைய கணவனைஇழந்து பின்பு புலம்பெயர்ந்து சென்னையில் வாழும் போது நண்பர் ஒருவனால் அறிமுகமான வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் வாழ்வாள். வெளிநாட்டு இருந்து வந்தவன் திருமணம்செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வெளிநாடு சென்று விடுவான். பின்பு இளம் அகதியுடன்காமத்தை தீர்த்துக் கொள்வாள். அகதியானவள் யாரையும் எந்த குறையும் சொல்வதில்லை அவளுக்கு துயரங்கள் இருந்த போதும் மிச்ச வாழ்வை எதிர்கொண்டு வாழ்வாள். கள்ளு என்கிற கதையில் வரக்கூடிய பெண் தன்னுடைய குடிகார கணவனின் எல்லா கொடுமைகளையும் பொறுத்துக் கொள்வாள். ஆனால் அவள் மகனை கணவன் தூக்கிஎறிகையில் தன்னுடைய கணவனை அடித்து கீழே தள்ளுவாள். இன்னொரு கதாபாத்திரமான தெய்வானை தன் உறவு வைத்திருந்த இருவரும் விட்டுச் சென்ற போதும் தன்னுடைய மகளுக்காய் வாழ்வாள் ஊரே வேசி என்று திட்டிய போதும் கண்டி வீரன் என்பவன் தன்னோடு உறவு வைத்துள்ளதாக வதந்தி பரப்பிக் கொண்டிருக்கையில் அதனை இயக்கத்தாரிடம் முறையிட்டு அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பாள். இரண்டு பேருடன்படுத்த நான் வேசை என்றால் என்னோடு படுத்த ஆம்பளைகள் யாரென்று இயக்கத்தாரிடம் கேட்பாள்.

கரை சேராத மகள் என்ற கதையில் வரும் பூரணி என்ற கதாபாத்திரமும் , தன் கணவர்விட்டுச் சென்ற போதும் தன் மகளுக்காக வாழ்ந்து கொண்டிருப்பாள். தன் உடல்நிலைமோசம் அடைந்த பின்னும் மருத்துவமனையில் தன்னுடைய மகள் எரிகணைகள் விழுந்து இரண்டு கால்களையும் ஒரு கண்ணையும் இழக்க நேரிட்ட போதும் தன் உயிர் உள்ளவரைதன்னுடைய மகளுக்காக வாழ்ந்து தீர்ப்பாள். இவரின் எல்லா கதைகளிலும் பெண் பாத்திரங்களே வலிமை மிக்க பனையாகவும் கருகிய பனையாகவும் இருக்கிறார்கள். ஆண் கதாபாத்திரங்கள் அவர்களுக்கு துணையாகவே வந்து செல்கிறார்கள். மாபெரும் தாயின் எஞ்சி நிற்கும் மகனுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை அவர் கரங்களை இறுகப் பற்றி கொள்வதை தவிர.

நண்பர் மலர்கண்ணன் தூண்டுதலே இந்த வாசிப்பனுவத்தை எழுத தூண்டியது இதற்கு முன் இதுபோல் முயன்றதில்லை.

நன்றி

விக்னேஷ்

திண்டுக்கல்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

முந்தைய கட்டுரைஅம்மாவின் பேனா – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசாரு நிவேதிதா ஏன் இப்படி  எழுதுகிறார் ?- அனீஷ் கிருஷ்ணன் நாயர்