மமங் தாய் கவிதைகள்

மமங் தாய் – தமிழ் விக்கி

மமங் தாய் 2022 விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். அவர் எழுதிய கவிதைகள்

பிறப்பிடம்

அந்த மழைக்கும் மேகப்பெண்ணுக்கும்
பிறந்த பிள்ளைகள் நாங்கள்,
கற்களுக்கும் பாறைகளுக்கும் சகோதரர்கள்,
எங்கள் பெரிய வீடுகளில்
மூங்கில்களாலும், கொடிகளாலும் ஆன   தொட்டிலில்
நாங்கள் உறங்கினோம்,
காலைநேரம் வந்தபோது
புத்துணர்வுடன் எழுந்து கொண்டோம்.

அந்நியர்கள் என்று எங்கள்
பள்ளத்தாக்குகளில் யாரும் இல்லை.
சிறு சிறு குடிகளாக நாங்கள் பெருகியதால்
ஒருவரையொருவர் பார்த்தவுடனேயே உணர்ந்துகொள்வோம்
இலக்கு எங்களுக்கு  எளிதானதாக இருந்தது
திசை நோக்கி பயணிக்கும் சூரியன் சந்திரனைப் போல,
முளை விடும் பச்சைத்தளிர் போல.

தண்ணீரின் முதல் துளி
மனிதனை பிரசவித்தது.
செந்தண்டில் இருந்து
பச்சை தண்டில் இருந்து
எங்கும் பரவும் காற்றில் இருந்து

நாங்கள் வந்திறங்கினோம்
தனிமையில் இருந்தும் அதிசயங்களில் இருந்தும்.

*

தொலைந்துபோன தொடர்பு

அப்போது எனக்கு நினைவில் இருக்கும்
வளைந்த போது அந்த பெரும் நதி
ஆதி சூரியனின் நெருப்போடு வளைந்ததை.

சிவப்பு கம்பளக்காரர்களின் நிலத்திலிருந்தும் அந்த விஷச் சடங்கிலிருந்தும் வெளியேவந்த அந்த ஏழு சகோதரர்கள் தெற்கு நோக்கி தப்பியோடினர், இருவாய்ச்சிப் பறவைகளின் கோடைக்கால கூட்டின் அமைதியைக் குலைத்து விட்டு.

நினைவிருக்கிறது பறக்கும் தூசியும்,
ஒரு நெடிய பேரொலியாக வீசும் காற்றும்
ஆற்று வண்டின் பயணத்தை தடுத்துக் கொண்டும்,
ஆண்களும் பெண்களும் வாழ்ந்த குகைகளின் விஷச் சூழலில்
இரவை எதிர்கொண்டு மூடிய விஷத்தைக் காத்துக் கொண்டும்

எந்த ஆவணமும் இல்லை.
இந்த ஆறு தான் எங்களின் பச்சையும் வெள்ளையுமான நரம்பாக இருந்தது
புதிய நிலங்களை இணைக்க,
நிலத்தின் மீது கொண்ட மோகத்திற்காக சகோதரனும் சகோதரனும்
சூரிய உதயத்திற்கும் அதன் மறைவிற்கும் உரிமை கொண்டாடி
அது கற்களால் தீர்மானிக்கப்பட்டது
மறைந்து விட்ட  நிலத்தில் எங்கோ பதியப்பட்டிருக்கிறது.

அந்த செவிட்டுப்பெண்கள் ஒளியின் வேர்களை கட்டும்போது தேய்ந்து மறையும் குரல்கள் என்  நினைவிலிருக்கும்
பழங்குடி குழந்தைகளின் முதல் கதைகளில்
நதியின் குரல் நினைவிருக்கும் ;
வேறெங்கு நாங்கள் பிறந்திருக்க முடியும்
வேறு எந்த மக்களாக நாங்கள் இருக்க முடியும்
நினைவுகளில் இருந்து அல்லாமல்
அமைதியில் இருந்து உயிர்த்தெழுந்த உயிரும் உடலுமாக
நீர் மற்றும் பனி, இரட்டை கடவுள்கள் நீர் மற்றும் பனி
அந்த பள்ளத்தாக்கில் இருக்கும் வனத்திலிருந்து
அந்த மேகப்பெண்  எப்போதும் அழைக்கிறாள்

நினைவிருக்கட்டும், எதுவும் முடிந்து விடவில்லை,
ஆனால் மாறிவிட்டது.
நினைவுகளும் மாறிக்கொண்டே இருக்கும் வடிவம்தான்
வெளிறிக் கொண்டிருக்கும் இந்த உடைமைகளின் காட்சியில்
பெருங்கடலுக்கு அப்பால் இருக்கும் நிலத்தில்
எல்லாம் மாறிவிட்டது, ஆனால் எதுவும் முடிந்து விடவில்லை;

அந்த கிராமங்களில் இன்னும் அந்த அமைதியான மலைவாசிகள் காத்திருக்கிறார்கள்
வாக்களிக்கப்பட்ட அந்த காகிதங்களுக்கும் அதில் இருக்கும் சொற்களுக்கான அர்த்தங்களுக்கும்

***

சிறிய நகரங்களும் அந்த நதியும்

சிறிய நகரங்கள் எனக்கு எப்போதுமே மரணத்தை நினைவுறுத்தும்
என் சொந்த ஊர் அந்த மரங்களினூடே அமைதியாக வீற்றிருக்கிறது
எப்போதுமே ஒரே மாதிரிதான் இருந்தது
கோடையில், அல்லது புழுதி பறந்து கொண்டிருக்கும் குளிரில்
அல்லது பள்ளத்தாக்குகளில் ஊளையிட்டு இறங்கும் காற்றில்.

அன்றுதான் யாரோ இறந்திருந்தார்.
அந்த மயான அமைதியில் நாங்கள் அழுதிருந்தோம்
துயர் சுமந்த  சம்பங்கிமலர்  வளையத்தைப் பார்த்து.
ஜனனமும் மரணமும்,  ஜனனமும் மரணமும்
சடங்குகள் மட்டுமே நிரந்தரமானவை

நதிக்கு ஆன்மா உண்டு.
கோடையில் அது பெருந்துயரின் வெள்ளமென
நிலத்தை ஊடறுத்துப் பாய்கிறது. சில நேரங்களில்,
சில நேரங்களில் அந்த நதி சற்றே நிதானித்து
மீன்களையும் நட்சத்திரங்களையும் இந்த நிலத்தில்
தேடுவதாக நான் எண்ணுவதுண்டு.

நதிக்கு ஆன்மா உண்டு-
நீண்டு நகரைத் தாண்டிச் செல்லும் அதற்கு தெரியும்,
வறண்ட நிலம் ஏங்கியிருக்கும்
மழையின் முதல் துளியில் இருந்து
மலையுச்சியின் பனிமூட்டம் வரை
நதி அறியும்
நீரின் சாகாவரம்.

உற்சாகமான சித்திரங்களால் ஆனதாக
பாலியகாலமாக நிரம்பியுள்ளது.
சிறு நகரங்கள் பதற்றத்துடன் வளர்ந்து கொண்டிருக்கின்றன
எதிர்கால தலைமுறைகளுக்காக …..
இறந்தவர்கள் மேற்கு நோக்கி வைக்கப்படுகிறார்கள்
அந்த ஆன்மா எழும்போது

பொன்னிற கிழக்கை நோக்கி நடக்கும்
பகலவனின் இல்லத்திற்குள் செல்லும்.

அந்த குளிர்ந்த மூங்கிலில்
வெய்யோனின் ஒளியில்
உயிருக்கு பொருள் உண்டு, இப்படி…

ஆற்றங்கரையோரம் இருக்கும் சிறுநகரங்களில்
நாங்கள் எல்லோரும் அந்த தெய்வங்களுடன்
இணைந்து நடந்திடவே  விரும்புகிறோம்…

***

நினைவலைகள்

இதெல்லாம் சாதாரணம் என்று ஏன் எண்ணியிருந்தோம்
ஒவ்வொரு கோடையிலும்  மழை பெய்யுமென்றும்,
இரவுகள் உறக்கத்தால் நிறைந்திருக்குமென்றும்
சாலையின் ஓரங்களிலெல்லாம் முடிவற்று
அந்த பச்சைப் பெரணிச் செடிகள் நிறைந்திருக்கும்  என்று

உயிர்வாழ்வது எளிதானது என்று ஏன் எண்ணியிருந்தோம்
நதிகளும் நஞ்சைகளும் நிலைபெற்றிருக்கும் என்று எண்ணினோமே,
அந்நியர்களின் கனவுகளில் கூட இது அசைக்கமுடியாததாக இருந்ததே
சூரியன் எங்கு உறங்கும் என்று கூட அறிந்திருந்தோமே
அதோ அந்த மலை மடிப்புகளின் மெளனத்தில்தானே

காடு ஒரு பெருந்திண்ணி
அந்த பச்சைக் கம்பளத்திற்குள் அதிபயங்கரத்தை பதுக்கிவைத்திருந்தது.
சடங்குகளின்  தெய்வங்கள் பிழைத்திருக்கும் என்று ஏன் நம்பினோம்
நினைவில்கூட மரணமில்லா வாழ்வை கொண்டிருந்தனவே,
மரங்களில் கற்களில் மழலையின் உறக்கத்தில்
ஆனால் இப்போது
கண்களை மூடிக் கொள்கையில்
தெய்வங்களும் இறந்து போவதை நம்ப முடியவில்லை.

நீளும் நினைவின் எல்லை வரை
மனிதன் நெருப்பையும் நதியையுமே தானே பார்த்துக்கொண்டிருந்தான்.
நாங்கள் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
எங்களைப் பற்றி உலகம் என்ன தெரிந்துகொண்டிருக்கிறதென்று தெரியவில்லை

ஊழைத்தேடும் பயணிகள் நாங்கள்
எங்கள் வாழ்நாளின் எல்லா நாளும்
மலைகளின் எல்லைகளை வெறித்துப்பார்த்திருப்பவர்கள்
கண்களை உயர்த்தி அந்த எட்ட முடியாத ஆகாயத்தை நோக்கி.

***

நதி

நதியோரம் நீண்ட நேரம் இருக்க வேண்டாம்.
அது கட்டுப்பாடில்லாத தெய்வம்.
நதி ஒரு யானை, சிங்கம்
சில நேரங்களில் குதிரை என்றும் அழைப்பார்கள்
ஒரு கோடையில் அதை மயில் என்றுகூட எண்ணினோம்
மஞ்சள் தூசியை கொண்டு வந்து
எங்கள் கண்களை பொன்னால் நிறைத்தது.
மேகங்களால் மூடப்பட்ட மலையளவு பனிமூட்டத்திற்குள்
கொடிகளுடனும் மகரந்தங்களுடனும் பாயும் நீருடன்
அல்லி மலர் குளத்தில் ஒரு பெண் மிதந்துகொண்டிருப்பதை கண்டேன்

நதி ஒரு பெண் என்று நினைத்திருந்தேன்
ஒரு தேசம், ஒரு பெயர்
வெள்ளை நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் இசையின் நாதமாக
ரகசிய வரைபடத்தை சுமந்துகொண்டிருக்கும் ஒரு காகிதத்தாளாக.
தொடுவானில் இருந்துதான் தொடங்குகிறது
இருளுக்கும் மலை உச்சிக்கும் இடையிலிருந்து
தாகத்தின் பிறப்பிடத்திலிருந்து.

நதியோரம் நீண்ட நேரம் இருக்க வேண்டாம்
அது ஒரு மூழ்கடிக்கும் ஆன்ம உரு
கொடுங்கோல் தெய்வம்
பருவநிலைக்கு ஏற்றவாரு முண்டியும் திரும்பியும்
ஓடும் நதி,
நின்ற நிலை
நதி கடல், நதி சமுத்திரம்
எங்கள் எல்லா கோடை காலத்தின் நதி
எங்கள் வாழ்வின் உப்பை சேகரித்துக்கொண்டிருக்கிறது.

(தமிழில் ராம்)

முந்தைய கட்டுரைபனிநிலங்களில் -8
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் – மமங் தய்