மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர் அமைந்திருக்கிறது. உலகில் ஒரு தேசத்தின் பெயரைக்கொண்ட ஒரு பேரிலக்கியம் வேறெங்கும் உண்டா?
மகாபாரதம் அப்பெயரை தனக்கு சூட்டிக்கொள்ள அனைத்துத் தகுதிகளும் கொண்டது. அது இப்பாரதப் பெருநிலம் போலவே முடிவற்ற வண்ண வேறுபாடுகளுடன் பெருகி விரிந்திருப்பது. மலைகளும், ஆறுகளும், பாலை நிலங்களும், வயல்வெளிகளும், அடர்காடுகளும், பெருநகரங்களும் என ஒரு பயணி தன் வாழ்நாளெல்லாம் பார்த்தாலும் தீராதது.
இந்நிலத்தில் தணியா வேட்கையுடன் நான் அலையத்தொடங்கி இன்று நாற்பதாண்டுகளுக்கும் மேலாகின்றன. இன்னமும் இது நான் பார்க்காத நிலமாக, தன் மாபெரும் மர்மங்களில் சிறிதைக்கூட விட்டுக்கொடுக்காத ஒன்றாக, மாயம் காட்டி அடிமைப்படுத்தி அமர்ந்திருக்கும் பெருந்தெய்வமாகவே உள்ளது.
மகாபாரதத்துக்கு அப்பெயர் வந்தது இந்தியாவின் அப்பெருங்காவியத்தில் மட்டுமே மொத்த இந்தியாவின் சித்திரமும் எவ்வகையிலோ அமைந்துள்ளது என்பதனால்தான். பின்னர் காளிதாசன் ரகுவம்சத்திலும், கம்பன் கம்பராமாயணத்திலும் முயன்றது அந்த பாரத தரிசனத்தை எவ்வகையிலேனும் தங்கள் பெருங்காவியத்தில் கொண்டு வருவதற்காகத்தான். ஆயினும் மகாபாரதத்தின் அந்த முழுமை பின்னர் எந்தப் பேரிலக்கியத்திலும் நிகழவில்லை. மகாபாரதம் சொல்லாத நிலமொன்று இந்தியாவில் இல்லை என்று ஒரு கூற்றுண்டு. ”வியாசோச்சிஷ்டம் ஜகத் சர்வம்” என்று அதை விளக்குவர்கள்.
மகாபாரதத்தின் அந்த பாரத தரிசனம் ஒருவகையிலேனும் திகழும் நாவல் வெண்முரசு வரிசையில் வண்ணக்கடல்தான். மகாபாரதத்தில் பாரத தரிசனம் பல இடங்களில் நிகழ்கிறது. குறிப்பாக பாண்டவர்களின் வனவாச காலத்தில் அவர்கள் கேட்டு அறியும் வெவ்வேறு நூல்கள் வழியாகவும், கதைகள் வழியாகவும். அதன் பின்னர் அவர்கள் நிகழ்த்தும் திசை வெற்றிப்பயணங்களின்போது. ஆனால் ஒரு நவீன நாவலின் கட்டமைப்பிற்குள் அம்மாபெரும் போர் நிகழ்ந்து, அதன்பின் அவர்கள் அடையும் அகஎழுச்சிகளும் கண்டடைதல்களும் அமைந்தபின் பாரதசித்திரம் வரமுடியாது. ஆகவே மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளாகக் கூறப்படும் பாரத சித்திரத்தை பாண்டவர்களின் பிறப்புத் தருணத்திலேயே வண்ணக்கடலில் கொண்டு வந்தேன்.
எனது நிலத்திலிருந்து ஒருவர் கிளம்பி அஸ்தினபுரி நோக்கித் தன்னை செலுத்திக்கொள்வதுதான் இந்நாவலின் கட்டமைப்பு, அது என்னுடைய பயணமும் கூட. உண்மையிலேயே குமரியிலிருந்து நான் மகாபாரதம் நிகழ்ந்த நிலங்களை நோக்கி கிளம்பிச் சென்று அலைந்து கண்டடைந்திருக்கிறேன். இளநாகன் நான்தான் என்று வாசகர் எவரும் உணர முடியும். ஆகவே ஒருவகையில் இந்த இருபத்தாறு நாவல்களில் எனக்கு மிக அணுக்கமானது இது. இதில் மட்டுமே எவ்வகையிலேனும் என் இருப்பை நான் உணர்கிறேன். மற்றவை முழுக்கவே என்னிலிருந்து அகன்று நிகழ்ந்தவை.
வண்ணக்கடல் எனது இணையதளத்தில் வெளிவந்தபோது ஷண்முகவேல் அதற்கு வரைந்த மாபெரும் நிலக்காட்சிகள் நகரச்சித்திரங்கள் வழியாக ஒரு கனவென வாசகர்களை ஆட்கொண்டது. பின்னர் நற்றிணை பதிப்பகம் இதை வெளியிட்டது. கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக மறுபதிப்பு வந்தது மூன்றாம் பதிப்பாக விஷ்ணுபுரம் பதிப்பகம் இதை வெளியிடுகிறது. செம்பதிப்பாகவும் மக்கள் பதிப்பாகவும் வெளிவந்து பல ஆயிரம் வாசகர்கள் இதை வாசித்திருக்கிறார்கள். இது மீண்டும் ஒரு பதிப்பு முன்னர் இதை வாங்கி வாசித்தவர்களுக்கும் இனி இதற்குள் வரப்போகிறவர்களுக்குமாக.
இத்தகைய படைப்புகள் அனைவருக்கும் உரியவை அல்ல. அன்றாடத்தில், நிகழ்காலத்தில் தொடங்கி இங்கேயே நின்றுவிடுபவர்களுக்குரியவை அல்ல. தங்கள் வாழ்க்கைக்கு அப்பால் இப்பிரபஞ்சம் முழுக்க பரந்திருக்கும் எதையோ ஒன்றை எவ்வகையிலேனும் உணர விரும்பும் உளம் கொண்டவர்களுக்குரியவை. அத்தகையோர் என்றுமிருப்பார்கள். அதுவரை இச்சொற்களும் இருக்கும். அவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்நாவலை முதலில் மெய்ப்பு பார்த்து சீர்படுத்தி உதவிய ஸ்ரீனிவாசன் சுதா இணையருக்கும், பின்னர் மெய்ப்பு பார்த்த ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், ஹரன்பிரசன்னா இருவருக்கும், இப்பதிப்பை மெய்ப்பு பார்த்த மீனாம்பிகை, செந்தில்குமார் ஆகியோருக்கும் எனது நன்றிகள். இந்நாவலை முன்பு வெளியிட்ட ’நற்றிணை’ யுகன், ’கிழக்கு’ பத்ரி சேஷாத்ரி ஆகியோருக்கும் என் நன்றி.
இது நிகழ வழி வகுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் என் அடிபணிதல்.
ஜெ
09.11.2022
விஷ்ணுபுரம் வெளியீடாக வந்திருக்கும் வண்ணக்கடல் மூன்றாம் பதிப்பின் முன்னுரை