பெங்களூர் இலக்கியவிழா, மொழி -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் தளத்தில் நீங்கள் பெங்களூர் இலக்கிய விழாவிற்கு வருவதாக வெளியானவுடன், கண்டிப்பாக இந்த தடவை தயக்கங்களை மீறி எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். நான் இங்கு கணிப்பொறி துறையில் (ஆப்பிள் நிறுவனத்தில்) பணி புரிகிறேன். உங்கள் எழுத்துக்களையும், தளத்தையும் கடந்த பதினைந்து  வருடங்களுக்கும் மேலாக நாள் விடாமல் படித்து வருகிறேன். என்னுடைய புத்தக சேகரிப்பில் பாதிக்கு மேல் நீங்கள் எழுதிய புத்தகங்களே உள்ளன. அல்லது நீங்கள் எங்காவது குறிப்பிட்ட வேறு புத்தகமாவே இருக்கும். உங்கள் புத்தகங்கள் இல்லாமல் என் வேலையையோ, வாழ்க்கையையோ இப்போது இருக்கும் ஒரு தெளிவுடன் எதிர் கொண்டிருக்க முடியாது. நன்றி சார்.

தங்களை இன்று நேரில் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. என் பையன், பெண், மனைவியையும் தங்களைப் பார்க்க கூட்டி வந்திருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் உங்களை நேரில் சந்தித்தது மிக மகிழ்ச்சி. குறிப்பாக நீங்கள் பேசி முடிந்தவுடன், எல்லோருக்கும் பொறுமையாக மகிழ்வுடன் கையெழுத்திட்டத்தையும்,  அரை மணி நேரத்திற்கும் மேலாக எல்லோரையும் புகைப்படம் எடுக்க அனுமதித்ததையும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நீங்கள் எல்லோரிடமும் அவர்கள் சொல்வதை கவனித்து, அவர்களுக்கு ஏற்றவாறு  கையெழுத்துப் போட்டுக்கொண்டே எளிமையாக நகைச்சுவையுடன் பேசினீர்கள்.

உங்களுடனான முப்பது நிமிட நிகழ்ச்சி மிக கச்சிதமாக ஒரு கார்பொரேட் மீட்டிங் போல நடந்து முடிந்தது என நினைத்தேன். உங்களிடம்  பிரியம்வதா அவர்களும் மிக முக்கியமான கேள்விகளையே கேட்டார். முதல் கேள்வியில் நீங்கள் அறம் கதைகளை ஏன் எழுதினீர்கள் எனச் சொல்லி, பின் super  truth – என்றைக்குமான உண்மைகளைக் கூறும் கதைகள் இவை என்று  சொல்லி அழகாக முடித்தீர்கள்.

பின்னர் ஏன் தன்னிலையிலேயே எழுதினீர்கள் என்ற கேள்விக்கு நூறு நாற்காலிகளை உதாரணம் காட்டி, ஒரு தலித் பட்ட அவமானங்களை நீங்கள் அதை தன்னிலையில் எழுதும்போது மட்டுமே உணர்ந்ததாக கூறினீர்கள். இங்குதான் நிறைய பேர் கை தட்டினார்கள் என நினைத்தேன்.

இரண்டு மூன்று  முறை ஆங்கில மொழி பெயர்ப்பின் தலைப்புகளை பிரியம்வதாவிடம் கேட்டிர்கள். முதலில் நூறு நாற்காலிகள், ஒரு முறை மயில் கழுத்து பற்றி சொல்லும்போது, கடைசியில் கோட்டிக்காக. இது மிக இயல்பாய் அமைந்தது என நினைத்தேன். உங்கள் பதில்கள் முழுதும் extempore -ஆக இருந்ததிற்கு இதுவும் ஒரு உதாரணம். பின் இலக்கியத்தில் சமநிலை பற்றி பேசினீர்கள். அறத்தில் உள்ள கதைகளில் நாடகத் தருணங்கள் இல்லை, சமநிலை உள்ளது எண்டு சொன்னீர்கள். கேள்வி முடிவில், மிகை நாடக தருணங்கள் உள்ளவை பிரச்சாரங்கள் என்று கூறீனீர்கள். கை தட்டு எழுந்தது.

இலக்கியம் என்பதன் அடிப்படை  மொழி, இட வேறுபாடு இல்லாமல் உணர்வுகளைக் கடத்துவதே என்பதை எஸ்கிமோவின் உணர்வுகளை ருஷ்ய ஆங்கில மொழி பெயர்ப்புகள் வழி அடைந்தேன் என்றீர்கள்.

கடைசியில் தமிழ் விக்கியைச் சொல்லி இன்னும் 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் பக்கங்கள் என்று மற்றுமொரு முறை மேடையில் சொன்னீர்கள்.

முடிவில் ஆங்கிலத்திற்காக அசோகமித்திரனைச் சொல்லி, ஆங்கிலத்தில் பேசுவதில்லை என்று மன்னிப்பு கேட்டீர்கள். ஆனால் கடைசி பதினைந்து நிமிடம் நீங்கள் ஆங்கிலத்தில் பிளந்து கொண்டிந்தருந்தீர்கள் என்றே நினைத்தேன். முதலில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு யோசித்தீர்கள். ஆனால் கடைசியில் அடித்து ஆடினீர்கள் என்றே நினைத்தேன். பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாட்டில் ‘காட்டு முள்ளு வீட்டுக்குள்ள மாட்டிக் கொள்வதா’ என்று ஒரு வரி வரும். இதையே நினைத்து கொண்டேன்.

தங்களைச்  சந்தித்தது மிக மகிழ்ச்சி சார், முக்கியமான நாள் . இன்னும் இலக்கிய விழாக்களில் பங்கு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறேன்.

உங்களுக்கு இதுவே எனது முதல் கடிதம். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

அன்புடன்,

முத்து

*

அன்புள்ள முத்து,

மொழி என்பது நாவுக்கும் மூளைக்குமான ஒரு தன்னியல்பான தொடர்பு. யோசிக்காமலேயே நாவில் நிகழ்வது அது. பயிற்சியினால் கைகூடுவது. எல்லா உடலசைவுகளையும்போல.

நான் ஆங்கில மொழியை பயிற்சி செய்யவில்லை. நானே வாசிப்பினால் அடைந்த ஆங்கிலப்பயிற்சிதான். 1992 ல் பிரிட்டிஷ் கௌன்ஸிலில் நடந்த ஒரு சந்திப்பில் நான் ஆங்கிலத்தில் பேசினேன். அசோகமித்திரன் என்னை அங்கே சேர்த்துவிட்டவர். அவரும் அன்று பேசினார்.

என் பேச்சுக்குப்பின் அசோகமித்திரன் என்னிடம் சொன்னார். “நீ நன்றாகவே பேசினாய். உன்னிடம் நிறையச் சொற்கள் இருக்கின்றன. உச்சரிப்பு, இலக்கணம் ஆகியவற்றை கொஞ்சம் செம்மை செய்து கொண்டால் சிறப்பான பேச்சாளர் ஆகிவிடலாம். இந்திய அளவில் கருத்தரங்குகளில் சுற்றலாம். ஆனால் அதைச் செய்யக்கூடாது என்றுதான் சொல்வேன்”

நான் ”ஏன்?” என்று கேட்டேன். அன்று என் பேச்சை தலைமை வகித்த வெள்ளை தூதரக அதிகாரி மேற்கோள் காட்டியதன் போதையில் இருந்தேன்.

அசோகமித்திரன் சொன்னார். ”இலக்கியம் என்பது அடிப்படையில் மொழிநடைதான். மற்ற எல்லாமே இரண்டாம்பட்சம். உன்னுடைய ஸ்டைல் இப்போதே சிறப்பாக இருக்கிறது. வெவ்வேறு சாதிகளுக்குரிய மொழிவேறுபாடுகளைக் கூட எழுதுகிறாய். நாட்டுப்புறப்பாடலில் இருந்து ஒரு நடையை உருவாக்குகிறாய். இன்னொரு கதை புராணம் சார்ந்ததாக உள்ளது. உன் மொழிநடையில் உள்ள நுண்ணிய அம்சங்கள் எல்லாமே நீ ஒரேமொழியில் மூழ்கிக்கிடப்பதனால் உருவாவது. நீ ஆங்கிலம் பேசினால் அதை இழந்துவிடுவாய்.”

“ஆங்கிலத்தில் வாசிக்கலாமா?” என்று நான் கேட்டேன்

“வாசிக்கலாம். ஆனால் பேசும்போதுதான் நம் மனம் அந்த மொழியில் சிந்திக்க ஆரம்பிக்கிறது” அசோகமித்திரன் சொன்னார்.

அசோகமித்திரன் நன்றாக ஆங்கிலம் எழுதுபவர். நேரடியாக ஆங்கிலத்தில் நிறைய எழுதியிருக்கிறார். தமிழில் இருந்து பிறருடைய கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அதெல்லாமே பிழைப்புக்காகச் செய்தவை என்று சொன்னார். அவர் கூடுமானவரை ஆங்கிலத்தில் பேசமாட்டார். அத்தனைபேரும் ஆங்கிலம்பேசும் இடத்தில் அவர்கள் தமிழர் என்றால் அவர் தமிழிலேயே பேசுவதை கேட்டிருக்கிறேன். பின்னாளில் தன் படைப்புகளையே அவர் பிறரை மொழியாக்கம் செய்ய வைத்தார். தன் நூல்களின் மொழியாக்கத்தை ஆசிரியன் படித்துப் பார்க்கலாகாது என்றுகூட ஒருமுறை சொன்னார்.

அசோகமித்திரனுக்கு கருத்தரங்குகள், இலக்கிய விழாக்கள் ஆகியவற்றின்மேல் உள்ள ஒவ்வாமை ரகசியமல்ல. அவர் கதைகளில் அவருடைய கண்டனமும், நையாண்டியும் வந்துகொண்டே இருக்கும். ஒற்றன் நாவலில் ஓரிடத்தில் அவர் சொல்கிறார். “மகத்தான எழுத்தாளர்கள் ஒரே மொழியில் மூழ்கியிருப்பார்கள்” இன்னொருவர் கேட்கிறார். “அப்படியென்றால் பெக்கட்?” அசோகமித்திரன் சொல்கிறார் “நான் பெக்கட்டை சிறந்த எழுத்தாளராக நினைக்கவில்லை”

நான் அதை ஒருவகையில் முழுமையாக ஏற்றுக்கொண்டேன். கூடுமான வரை ஆங்கிலத்தில் பேசுவதில்லை. அதைவிட என் தாய்மொழியான மலையாளத்திலும் கூடுமானவரை பேசுவதில்லை. மலையாள மேடையுரைகள், மலையாள எழுத்துக்கள் ஆகியவற்றையே முடிந்தவரை தவிர்ப்பேன். தமிழிலேயே என் மூளை செயல்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆகவே மலையாளத்தில் பேசினால்கூட தமிழில் யோசித்து உடனடியாக மொழியாக்கம் செய்தே பேசுகிறேன். ஆங்கிலத்தில் பேசும்போதும் அப்படியே. இது ஒரு தடுமாற்றத்தை அளிக்கும். முக்கியமாக இலக்கணத்தில். தமிழின் இலக்கணக்கட்டமைப்பே வேறு. ஆங்கில உச்சரிப்புக்கு பயிற்சி எடுத்தாலே தமிழ் விலகிச்செல்லத் தொடங்கும். நான் ‘நல்லதமிழுக்கே’ பயிற்சி எடுக்கக்கூடாதென்னும் கொள்கை கொண்டவன். குமரிமாவட்ட வட்டாரநெடி என் அடையாளம். அது போகக்கூடாதென நினைக்கிறேன்.

ஆயினும் அண்மையில் நிறையவே ஆங்கிலத்தில் பேசவேண்டியிருக்கிறது. இலக்கியவிழாக்கள், சந்திப்புகள். ஓரளவு சமாளிக்கிறேன் என நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் நிகழும் இலக்கிய உரையாடல்களைப் பார்க்கிறேன். அவை இரண்டு வகை. ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் மிகச்சரளமாக, நல்ல உச்சரிப்புடன் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவதெல்லாமே தேய்வழக்குகள். திரும்பத்திரும்பப் பேசும் சொற்றொடர்கள். அவற்றை தவிர ஒரு புது கருத்தை சொல்லமுற்பட்டால் திக்குவார்கள். புதியதாக ஒன்றைச் சொல்லும் எழுத்தாளர்கள் தயங்கியும் யோசித்தும்தான் பேசுகிறார்கள். இந்தியாவின் இலக்கிய அரங்குகளில் பொதுவாகப் பேசப்படும் ஆங்கிலத்திற்கு என்னுடையது மேல்.

ஆனால் பேசிமுடித்தால் ஒரு பயிற்சியை முடித்த களைப்புதான் வருகிறது. தமிழில் பேசுவதன் திளைப்பு இல்லை. ஆனால் இன்னொரு ஆச்சரியமென்னவென்றால் தமிழில் பேசுவதை தவிர்த்தால் ஆங்கிலத்தில் பேசுவதே எளிதாக இருக்கிறது. மலையாளம் இன்னும் கஷ்டம். கலைச்சொற்களுக்கு ஆங்கிலத்தில் துழாவவேண்டியிருக்கிறது.

பெங்களூர் இலக்கிய விழாவில் என் காதில் விழுந்த பேச்சுக்கள் பெரும்பாலும் இலக்கிய தேய்வழக்குகள்தான். ஆகவே நான் புதியதாக, சரியான கலைச்சொற்களுடன் பேசுவது ஒரு படி மேலானதாக ஒலிக்கிறது. பலர் நிகழ்வுக்குப்பின் மிகநல்ல உரையாடல் என பாராட்டினர். கீதா ராமசாமி அவர் கேட்ட மிகச்சிறந்த உரையாடல் என சொன்னார். மகிழ்வதா என்று தெரியாமல் தலையாட்டி வைத்தேன்

ஜெ

முந்தைய கட்டுரைசாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – காயத்ரி. ஆர்
அடுத்த கட்டுரைசிங்காரவேலர்