ஒரு கண்டனக் கடிதம்

திரு ஜெமோ,

விஷ்ணுபுரம் இலக்கியவிழா நடக்கப்போகிறது. இணையப்பிச்சைக்காரன் என்று புகழ்பெற்ற ஒருவருக்காக நடைபெறும் விழா. அதற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மலம் சிலருக்கு நறுமணமாக இருக்கும் என்பது புரிகிறது.

எழுத்து என்பது வாசகனுடன் ஆத்மார்த்தமாக உரையாடுவது. அதைவைத்து கூட்டம் சேர்ப்பதும் ஆள்பிடிப்பதும் கேவலமான செயல். நீங்கள் உங்களை தூக்கிக்கொள்ள செய்யும் இந்த முயற்சிகள்மேல் எனக்கு இருக்கும் அருவருப்பை பதிவுசெய்கிறேன்.

நன்றி

ஞா.அருள்

அன்புள்ள அருள்,

உங்கள் குரல்போலவே ஒலிக்கும் பல கடிதங்கள் வந்துவிட்டன. உங்கள் தரப்பின் பிரதிநிதியாக இதை வெளியிடுகிறேன். மகிழ்ச்சிதானே?

இந்த விழாவே என் வாசகர்களிடம் பிச்சை எடுத்து நான் நடத்துவதுதான். ஓர் இணையப் பிச்சைக்காரனுக்கு இணையத்தில் பிச்சை எடுத்து நடத்தப்படும் விழா. சரிதானே? இதில் எனக்கு எந்த கேவலமும் இல்லை. என்றுமே தமிழிலக்கியம் வாசகனை நம்பியே இருந்துள்ளது. அது கௌரவம் என்றே நினைக்கிறேன். உங்களுக்கு கௌரவக்குறைவு ஒன்றும் இல்லையே? இருந்தால் நீங்கள் விழா நடக்கும் கோவைப் பக்கமாகவே வரவேண்டியதில்லை.

சில மாதங்களுக்கு முன் விஷ்ணுபுரம் விருதுபெற்ற ஓர் எழுத்தாளர் சொன்னார். அவர் விஷ்ணுபுரம் விருது பெற்றபோது அவரிடம் இலக்கிய நண்பர் சொன்னாராம். ‘ஜெயமோகன் தன்னை முன்னிறுத்தவே உனக்கு பரிசு தருகிறார். இது இலக்கிய மோசடி. இதை நீ மறுத்திருக்கவேண்டும்’

எழுத்தாளர் சொன்னாரம். ‘அந்த விருதை ஒட்டி என் மேல் இத்தனை ஆய்வுகளும் விமர்சனங்களும் வந்துள்ளன. என் ஒட்டுமொத்த எழுத்துவாழ்க்கையில் ஒரே ஒரு முழுமையான விமர்சனக் கட்டுரை கூட அதற்கு முன் வந்ததில்லை. நீ கூட எழுதவில்லை. சரி, இனி நீ எழுதுவாய் என்பதற்கும் வாய்ப்பு இல்லை. அப்படியென்றால் நீ சொல்வதை நான் எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்? எனக்கு இலக்கிய கவனம் கிடைக்கக்கூடாது என நீ விரும்புகிறாய் என்றுதானே நீ சொல்வதற்கு அர்த்தம்?”

நண்பர் கோபித்துக்கொண்டு ஏதேதோ சொன்னார். பின்னர் கொஞ்சநாள் கழித்து மீண்டும் அதையே சொன்னார். “ஜெயமோகன் விருதுகொடுத்து உன்னை அவமதித்துவிட்டார்….”

இந்த மனநிலைகள் என்ன என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால் சொல்பவர்கள் சலிப்பே அடையமாட்டார்கள். அவர்களுக்கு வேறுவழியில்லை.

என் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளில் மிகப் பெரும்பகுதி தமிழில் எழுதும் பிற படைப்பாளிகள் பற்றிய அறிமுகங்களும் ஆய்வுகளும் பாராட்டுக்களும்தான். தமிழில் வேறெந்த எழுத்தாளராவது பிற எழுத்தாளர்களை முப்பதாண்டுகளாகச் சலிக்காமல் அறிமுகம் செய்துகொண்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டும் இருந்திருக்கிறார்களா? சரி, அப்படி எழுத்தாளர்களை அறிமுகம் செய்து, ஆய்வுசெய்த விமர்சகர்களாவது இங்கு உண்டா?

தமிழ் எழுத்தாளர்கள் எவரைப் பற்றியானாலும் விரிவான கட்டுரைகளுக்கு ஓர் வாசகன் இந்த தளத்திற்கே வந்தாகவேண்டும். இது எனக்கான தளம் அல்ல, தமிழிலக்கியத்திற்கான தளம். நான் முன்வைப்பது நவீனத்தமிழிலக்கியத்தை. நான் ஆள் திரட்டுவது அதற்காகவே. அது என் வாழ்நாள் பணி. இங்கே ஏதேனும் வகையில் பொதுச்சேவை செய்பவர்கள் அனைவரையும் நான் அறிமுகம் செய்து முன்னிலைப்படுத்தியிருக்கிறேன். அதுவும் என் வாழ்நாள் பணியே.

ஆகவே அதைப் பற்றியும் நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. உங்களை நான் அழைக்கவில்லை.உங்களைப் போன்றவர்களை திரட்டவில்லை. இங்கே ஏதேனும் செய்யவேண்டும் என்றால் ஒத்த கருத்துள்ளோர் திரளவேண்டும். அவ்வாறு ஒத்த கருத்துள்ளோர் சிலர் இங்குண்டு, அவர்கள் எனக்குப் போதும்.

கடைசியாக, உங்களைப் போன்றோர் மௌன வாசகர்கள் அல்ல. அப்படி சில ஆயிரம் மௌனவாசகர்களை எனக்குத் தெரியும். மௌனவாசகர்கள் இதேபோல பொதுவெளியில் புழுங்குவதும் எரிந்துகொண்டிருப்பதும் இல்லை.

உங்களைப் போன்றோர் இயல்பான எதிர்மறைத் தன்மை கொண்டவர்கள். அதற்குக் காரணம் உங்களை நீங்கள் மிகையாக மதிப்பிட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஓர் இலக்கியவாசகன், இலக்கிய நுண்ணுணர்வுகொண்டவன் என்றெல்லாம். ஆனால் அந்த தகுதி உங்களுக்கு இருப்பதாக சூழலில் எவரும் ஏற்க மாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் எதையுமே செய்யவில்லை, எதையும் எய்தவில்லை. அந்த ஏமாற்றம் உங்கள் ஆணவத்தை புண்படுத்துகிறது. உங்களை நாளும் எரியச் செய்கிறது.

நீங்கள் நாற்பது வயதுக்கு குறைவானவர் என்றால் ஓர் ஆலோசனை. இந்த எரிதலின் வதையை வாழ்நாள் முழுக்க அனுபவிக்கப்போகிறீர்களா என்ன? அது எவ்வளவு பெரிய நரகம். எதையாவது எழுதுங்கள், செயல்படுங்கள். உங்கள் அடையாளத்தை ஈட்டுங்கள். விடுபடுவீர்கள். நாற்பது கடந்துவிட்டீர்கள் என்றால் ஒன்றும் செய்வதற்கில்லை. உங்கள் ஊழ் அது.

ஜெ

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

முந்தைய கட்டுரைதேகம் ஓர் எளியவாசிப்பு – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா தொகுப்பு