பெங்களூர் இலக்கிய விழா

சர்வதேச , தேசிய இலக்கிய விழாக்களில் ஒரு பை கொடுப்பார்கள். அதில் பலவகை பரிசுப்பொருட்கள், நிகழ்ச்சி நிரல், சில புத்தகங்கள், குறிப்புதவி நோட்டுப்புத்தகம் இருக்கும். தோளில் போட்டுக்கொள்ள ஒரு அடையாள அட்டையும் உண்டு.

கே.ஜி.சங்கரப்பிள்ளை இப்படி இலக்கிய விழாவில் இருந்து இலக்கிய விழாவுக்கு சென்றுகொண்டிருப்பவர்களைப் பற்றி ‘சஞ்சிகள்’ என்னும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சஞ்சி என்றால் பை. சம்ஸ்கிருதத்தில் தொகுப்பு என்றும் பொருளுண்டு. சச்சிதானந்தனை சச்சி என அழைப்பார்கள். அதையொட்டிய பகடி என்றும் சொல்லப்படுவதுண்டு.

நானும் சஞ்சி ஆகிவிட்டேனா என்னும் ஐயத்தை 2 ஆம் தேதி பெங்களூருக்குக் கிளம்பும்போது அடைந்தேன். மலேசியா ஜார்ஜ்டவுன் இலக்கியவிழாவிலிருந்து வந்து பழைய சட்டைகளை வெளியே எடுத்துப்போட்டு புதிய சட்டைகளை உள்ளே வைத்து பெட்டியை மூடி கிளம்பிவிட்டேன், ரயிலில்தான் நல்ல தூக்கம்.

3 டிசம்பர் 2022 காலையில் பெங்களூர் வாசகர் நாகராஜன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி நடக்கும் அசோக் ஓட்டலிலேயே மாடியில் அறை. ஏற்கனவே அங்கே பிரியம்வதா வந்திருந்தார். அவரே எனக்கு அறை பெற்றுத் தர உதவினார்.

அசோக் முழுக்க ஒரே வைணவக்கூட்டம். பெரும்பாலும் வெள்ளையர். ஏதோ வைணவ அமைப்பின் கருத்தரங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது – இஸ்கான் நிகழ்ச்சி அல்ல. இன்னொன்று. தாவணி கட்டிய வெள்ளைக்காரப் பெண்கள் அழகாக இருந்தனர். எக்கணமும் ‘ஓய் மாமோய், கஞ்சி கொண்டாந்திருக்கேன்’ என்று கூவிவிடுவார்கள் போல தோன்றியது.

முதல்நாள் எனக்கு நிகழ்ச்சி ஏதுமில்லை. பார்க்கவந்திருந்த பெங்களூர் நண்பர்களுடன் ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சில பிறமொழி எழுத்தாளர்களைப் பார்த்தேன். விவேக் ஷன்பேக் என் நண்பர். அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம். அவர் கொங்கணி எழுத்தாளர்  தாமோதர் மௌஸோ (Damodar Mauzo) நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அரங்கில் பார்வையாளனாக இருந்தேன்.

வெவ்வேறு அரங்குகள். அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்வது கடினம். இத்தகைய பெருவிழாக்கள் அகன்று அகன்று கூர்மையற்றுவிடுகின்றன. சினிமாநடிகர்கள் மட்டுமல்ல சினிமா தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பதன் சிக்கல்களைப் பேசும் ஓர் அரங்கும் இருந்தது ( வழக்கம்போல அரசு உதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கை) பெருங்கூட்டம் கிரிக்கெட் எழுத்தாளர்களின் அரங்குக்குத்தான்.

உதிரி உதிரியாக வெவ்வேறு அரங்குகளுக்குச் செவிகொடுத்தேன். மிகப்பொதுவான பேச்சுக்கள்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. இப்போது நாளிதழ்களில் சாதாரணமாக அடிபடும்  ‘இலக்கியக் கைப்பிடிகள்’ ஆன அரசியல் -சமூகவியல் கருத்துக்கள். அவற்றைக்கொண்டே நம் இதழாளர்களால் இலக்கியத்தை பற்றவோ தூக்கவோ மதிப்பிடவோ முடியும்.  அழகியல், தனிப்பட்ட உணர்வுநிலைகள், உலக இலக்கிய மரபு உருவாக்கும் உளநிலைகள் ஆகிய மூன்றும் அவர்களுக்கு அன்னியமானவை.

Marxism, Feminism, Post-colonial, Oppression, Struggle, Resistance, Marginalized, decolonization, Oriental, Hegemony, Ideology, Social impact என சில சொற்களை எல்லா அரங்குகளிலும் கேட்க முடிந்தது. அவற்றைச் சொல்பவர்கள் அவற்றை அவ்வாறே ஒரு வாய்ப்பாடு போல வெவ்வேறு அரங்குகளில் சொல்லிச் சொல்லித் தேர்ந்தவர்கள். ஆகவே சரளமான ஊடக ஆங்கிலத்தில் அவற்றைச் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகளாக தீவிர இலக்கியம் வாசிக்கும் ஒருவருக்கு அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை.

இலக்கியத்தின் முதன்மைக் கலைச்சொற்களே பலருக்கு தெரியவில்லை. ஒரு புகழ்பெற்ற கவிஞர் – கவிதைகளை தொகுப்பவர் modernism – modernity இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட கலைச்சொல் குளறுபடிகள் பெரும்பாலும் எல்லா உரைகளிலும் இருந்தன.

ஏனென்றால் மேடைகளில் தோன்றியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில், ஆங்கில நாளிதழ்களில், எழுதும் இதழாளர்கள். ஆகவே புகழ்பெற்றவர்கள். புத்தக மதிப்புரையாளர்கள் என்னும் வகையில் அவர்கள்மேல் அனைவருக்கும் அச்சம் கலந்த மதிப்பும் இருந்தது. ஆனால் இலக்கிய வாசிப்பு குறைவானவர்கள். பெரும்பாலும் சமகால புகழ்பெற்ற புனைவுகளையே வாசித்தவர்கள். நாளிதழ்களில் வரும் இலக்கிய அரட்டைகளையே இலக்கியக் கொள்கைகளை அறிந்துகொள்ளும் ஊடகமாகக் கொண்டவர்கள்.

இலக்கியவிவாதங்களில் தீவிரமான இலக்கிய விமர்சன வாசிப்பின் அடித்தளம் என்பது எந்த அளவுக்கு இன்றியமையாதது என்னும் எண்ணம் ஏற்பட்டது. அது இத்தகைய இலக்கியவிழாக்களில் எல்லாம் நான் உணர்வது. இந்திய ஆங்கில இலக்கியவாதிகள் மட்டுமல்ல இத்தகைய இலக்கிய விழாக்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் இலக்கியவாதிகளும் இதேபோல மேலோட்டமான இலக்கியப்பேச்சுகளையே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

தீவிரமான இலக்கியவாதிகள் இத்தகைய விழாக்களில் ஒரு விலக்கம் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புகொண்டு விழாக்கள் தோறும் சென்றுகொண்டே இருப்பவர்களே அதிகம் தென்படுகிறார்கள்.

அதிலும் அண்மைக்காலத்தில் இலக்கியவிழாக்கள் விரிவடையுந்தோறும் மையம் பொழுதுபோக்கு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து பயனுறு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து இன்று சினிமாநடிகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பொது ஆளுமைகள் நோக்கி குவிவதாக ஆகிவிட்டிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நடிகர்களே நட்சத்திரங்கள், இந்திய ஆங்கில பல்ப் எழுத்தாளர்களான ‘செலிபிரிட்டி’க்கள்கூட இரண்டாமிடம்தான் என்று இலக்கிய நண்பர் சொன்னார்.

பெங்களூர் இலக்கிய விழாவுக்கு கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் இருந்து ஒரு மாணவர்குழு கல்லூரி செலவில் அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் என்னை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நான் பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுதியவன் என அறிந்திருந்தனர். மற்றபடி கோவை விஷ்ணுபுரம் நிகழ்ச்சி பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரியாது. அந்தக்கல்லூரி ஆசிரியர்களுக்கே ஜெயமோகன், விஷ்ணுபுரம், கோவை விழா பற்றியெல்லாம் எந்த அறிமுகமும் இல்லை என்று நண்பர் சொல்லி அறிந்திருக்கிறேன்.பெங்களூர் விழாவுக்கு இப்படி கூட்டம் வருவதே மேலே சொன்ன ‘பொது ஆளுமைகள்’ வழியாகத்தான்.

இந்த விழாவிலும் இந்தியச் சூழலில் தீவிர இலக்கியத்திற்கு எந்த அளவுக்கு இடமிருக்கிறதோ அதே விகிதாச்சாரத்தில்தான் இடமிருந்தது. ஆனால் இருந்தது என்பதே பெரிய விஷயம். சில அரங்குகள் சுவாரசியமானவை. புதிய இலக்கிய முகங்களை அறியத்தந்தவை. இந்தி எழுத்தாளர் அக்ஞெய்யின் வாழ்க்கைவரலாற்றை எழுதிய எழுத்தாளரின் பேச்சு கொஞ்சம் கேட்டேன். முக்கியமான நூல் என தோன்றியது.

தெலுங்கில் பிரசுரநிறுவனம் ஒன்றை நடத்தும் கீதா ராமசாமியை சந்தித்தேன். இடதுசாரி தீவிர இயக்கங்களில் பங்கெடுத்த போராளி. அதன்பொருட்டு இல்லத்தை துறந்து ஓடியவர். பின்னர் வெளியேறி கலாச்சாரச் செயல்பாட்டாளராக ஆனவர். அவருடைய சுயசரிதை Land, Guns, Caste, Woman: The Memoir of a Lapsed Revolutionary அண்மையில் மிகவும் கவனிக்கத்தக்க நூல்.

இரவு வரை அங்குமிங்குமாக அலைந்து அரங்குகளை கேட்டுவிட்டு அறைக்குச் சென்றேன். சென்றபின் ஒரு தமிழ் விக்கி பதிவு போட்டேன். அதன்பின் தூக்கம். காலையில் எட்டுமணிக்கு கீழே சென்று காலையுணவு. இலக்கியத் தொகுப்பாளரான கனிஷ்காவைச் சந்தித்தேன். பதிப்பாளர் ரவி டிசியை சந்தித்தேன். அவருக்கு ஒரு நூல் அளிப்பதாகவும், டிசி இலக்கிய விழாவில் பங்கேற்பதாகவும் ஒப்புக்கொண்டேன்.  பத்து மணிக்கு அரங்குகள் தொடங்கின.

ஒன்பது மணிமுதல் என் வாசகர்கள் பலர் வந்து கூட தொடங்கியிருந்தனர். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். கூடவே அரங்குகளையும் கவனித்தோம். தமிழச்சி தங்கபாண்டியன் பேசிய ஓர் அரங்கை கேட்டேன். சிவகாமியை வழியில் சந்தித்தேன். அம்பை பேசிய அரங்குக்கு போகும் வழியில் இன்னொரு அரங்கால் ஈர்க்கப்பட்டேன்.

இந்த அரங்குகளில் இரண்டுவகை உண்டு. கூட்டமர்வு (Panel Discussion) என்ற பேரில் நான்கு பேர் ஐந்துபேர் அமர்ந்து ஒருமணிநேரம் ஒரு தலைப்பில் உரையாடுவது ஒருவகை. இந்த கூட்டமர்வுகளில் வாயாடி ஒருவர் அமைந்துவிட்டால் அங்கே அதன்பின் அவர் குரல் மட்டுமே ஒலிக்கும். தயங்கி, யோசித்து பேசுபவருக்கு முனக மட்டுமே இடம் கிடைக்கும். இன்னொன்று ஓர் ஆசிரியருக்கு மட்டுமாக அமைந்த அரங்கு. அரைமணிநேரம். அவருடன் இன்னொருவர் கேள்விகள் கேட்பவராக மட்டும் அமர்வார்

பதினொரு மணிக்கு என் அரங்கு. பிரியம்வதா கேள்வி கேட்க நான் பதில் சொன்னேன். எனக்கு ஆங்கிலம் பேச பெருந்தயக்கம் உண்டு. என் ஆங்கில உச்சரிப்பு பற்றிய ஐயம்தான். நான் ஆங்கிலம் பேசுவதே இல்லை. நான் சொல்லும் ஆங்கிலச் சொற்கள் என் காதில் விழுந்தால் எனக்கே அன்னியமாக ஒலிக்கும். அத்துடன் நான் ஆங்கிலத்தில் பேசும்போது தன்னியல்பாகப் பேசுவதில்லை. தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பேசுகிறேன். அந்த மொழியாக்கம் எங்காவது தடைபட்டால் சிக்கல்தான்.

ஆனால் இந்த இலக்கிய அரங்குகளில் பேசும் புகழ்பெற்றவர்கள்டை விட நான் நன்றாகவே பேசுகிறேன் என்ற எண்ணம் எனக்கு அண்மையில் உருவானது. சரளமாக, நல்ல உச்சரிப்புடன் பேசுபவர்கள் மிகப்பொதுவான தளத்தில் பெரும்பாலும் எளிய தேய்வழக்குகளையே பேசுகிறார்கள். புதியதாக எதையாவது சொல்பவர்கள் என்னைப்போலவே யோசித்துத்தான் பேசுகிறார்கள். அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும்போதுதான் தன்னம்பிக்கையே வருகிறது. அங்கே எல்லா உச்சரிப்பும் நல்ல உச்சரிப்பே. சீனர்களை விட நாம் பலமடங்கு மேல். பேசும் விஷயத்தையே கவனிக்கிறார்கள்.

பிரியம்வதாவின் கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். அரைமணிநேர உரையாடல். அரங்கு நிறைந்து கூட்டம் சூழ நின்றுகொண்டும் இருந்தது. அரங்கில் இருந்து கைத்தட்டல்களும் ஏற்பொலிகளும் வந்துகொண்டே இருந்தன. கீதா ராமசாமி, இன்னொரு வங்காள வாசகி ஆகியோர் அவர்கள் கேட்டவற்றிலேயே மிகச்சிறந்த இலக்கிய உரையாடல் என்றனர். பொதுவாக நல்ல உரையாடல் என்றே அனைவரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் நான் பேசியவை வெறும் கல்வித்துறை கோட்பாடுகள் அல்ல, அதேசமயம் மேலோட்டமான இதழியல் தேய்வழக்குகளும் அல்ல என்பதே. உண்மையான உணர்வுகள் மற்றும் எண்ணங்களை அவற்றுக்குரிய கலைச்சொற்களுடன் சொன்னேன்.

மதியம் இரண்டுமணிக்கு உணவு. அதுவரை நின்றும் அமர்ந்தும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். நூறுபேருக்குமேல் என் வாசகர்கள் மட்டும் வந்திருந்தனர். நூல்கள் எல்லாமே விற்றுத்தீர்ந்தன என்றனர். எனக்கு ஐந்து மணிக்கு ரயில். இன்னொரு இலக்கியப் பயணம் நிறைவுற்றது. ரயிலில் ஏறியதும் சற்றும் தயங்காமல் தமிழ்விக்கியின் அடுத்த பதிவை தொடங்கினேன்.

முந்தைய கட்டுரைஅ.சிதம்பரநாதச் செட்டியார்
அடுத்த கட்டுரைதிருவனந்தபுரம் திரைவிழாவில்…