சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – காயத்ரி. ஆர்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

சாருவின் புனைவெழுத்தில் இதுவரை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை இங்கு சொல்ல முயற்சிக்கிறேன்.

தமிழில் உள்ள மற்ற புனைவுகளைப்போல் சாருவின் புனைவுகளை அணுகினால் ஒன்றும் புரியாது. ஏமாற்றம்தான் மிஞ்சும். சாரு தன்னுடைய கட்டுரை ஒன்றில்: “மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade), வில்லியம் பர்ரோஸ்(William Burroughs), கேத்தி ஆக்கர் (Kathy Acker), ரொனால்ட் சுக்கேனிக் (Ronald Sukenik), ஜார்ஜ் பத்தாய் (George Bataille), ஜார்ஜ் பெரக்(Georges Perec), ஆலன் ராப் க்ரியே (Alain Robbe- Grillet), சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி (கவிதைகள் மட்டும்) போன்றவர்களைப் படித்தால்தான் என் எழுத்தைப் புரிந்து கொள்ள முடியும்” என்று சொல்கிறார்.

ஒரு தமிழ் எழுத்தாளரை வாசிப்பதற்கு இத்தனை மெனக்கெட வேண்டுமா? சாரு மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் அனைவருமே வாசிப்பதற்குத் தோதான ஆட்கள் அல்ல. பர்ரோஸின் நேக்கட் லஞ்சையெல்லாம் படிப்பதற்கு மிகுந்த பொறுமை வேண்டும்.

அவர் ஒரு கட்டுரையில் தான் மொழிபெயர்த்த ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதை (Histoire de l’oeil) என்ற நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்தக் கதையை ஜார்ஜ் பத்தாய் தன் சொந்தப் பெயரில் எழுதாமல் பயந்துகொண்டு புனைப்பெயரில் எழுதினார். (Lord Auch என்ற பெயரில். இதற்கு ரகளையான அர்த்தம் உண்டு. Aux chiottes என்பதன் பேச்சு வழக்கே auch. அதன் அர்த்தம் கழிவறைக்குச் செல்). நம்மூரில் சரோஜாதேவி கதைகள் என்று அறியப்படுகிற மொழியில் எழுதப்பட்ட கதை அது. கொஞ்ச நாளிலேயே ரொலாந் பார்த்தும் (Roland Barthes) சூசன் சொண்டாகும் (Susan Sontag) அந்த நாவலுக்கு நாவலை விடப் பெரிதாக முன்னுரை எழுதினார்கள் (இங்கே ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்தாளருக்கு அந்தக் கொடுப்பினை கிடையாது). அப்புறம்தான் தன் ‘நிலவறை’யிலிருந்து வெளியே வந்த பத்தாய் அந்த நாவலைத் தன் பெயரில் வெளியிட்டார், இருவரின் முன்னுரையோடு.

ரொலாந் பார்த் உலகப் புகழ் பெற்ற தத்துவவாதி. பார்த் மட்டும் அல்ல, ஜார்ஜ் பத்தாயுமே ஃப்ரான்ஸ் வெகுவாக மதித்த தத்துவவாதிதான். பத்தாய்க்கே இப்படி ஒரு நிலை என்றால் சாரு எம்மாத்திரம்? கடைசியில் சாரு மொழிபெயர்த்த பிரதி வெளிவரவில்லை. நீண்ட காலம் அவரிடம் இருந்த பிரதியும் தொலைந்து போய் விட்டதாகச் சொன்னார். Story of the Eye என்ற அந்த நாவலை இன்று நீங்கள் இணையத்திலேயே இலவசமாக வாசிக்கலாம். ஆனால் எடுத்த எடுப்பில் புரியாது. முதல்முறை பத்தாயை படிக்கும்போது வேர்த்துவிட்டது. ஏன் இத்தனை ஆபாசமாக எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. அதைப் புரிந்து கொள்ள நாம் சூசன் சொன்டாக் எழுதிய முன்னுரையைப் படிக்க வேண்டும்.

சாரு Story of the Eye மொழிபெயர்ப்பை அவர் மேஜையின் மீது வைத்திருக்கிறார். அப்போது சாருவைப் பார்க்க வந்த ஒரு நண்பர் – சக எழுத்தாளர் – பத்திரிகை ஆசிரியர் – அதன் முதல் பக்கத்தைப் படித்து விட்டு, வேர்க்க விறுவிறுக்க பிறகு வருகிறேன் சாரு என்று ஓடி விட்டாராம்.

என்னது, ஓடி விட்டாரா?

ஆமாம், நிஜமாகவே ஓடி விட்டார் என்றார் சாரு.

ஆனால் ஜார்ஜ் பத்தாயின் Histoire de l’oeil கதையைப் படித்தவள் என்ற முறையில் சொல்கிறேன், பத்தாயின் அளவில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட சாருவின் எழுத்தில் பாலியல் இல்லை.

சரி, அந்த ஐந்து சதவிகிதம் கூட ஏன் எழுதுகிறீர்கள் என்று ஒருமுறை கேட்டதற்கு:

“இவ்வுலகில் பல பிரச்சினைகளுக்கு அடிப்படை செக்ஸாக இருக்கிறது. நான் பாலியலைத் தொட்டதன் காரணம் அதுதான். அப்படியும், ஒரு ஐநூறு பக்க நாவலில் ஐம்பது பக்கம்தான் பாலியல் இருக்கும். ”

சாருவின் எழுத்து பற்றி சில நண்பர்களின் வாதம் இது: “நாங்கள் ஒன்றும் பாலியலை எழுதக் கூடாது என்று சொல்லவில்லை. தி. ஜானகிராமனும், லா. ச. ரா. வும், கு. ப. ரா. வும் பாலியலை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் எழுதியது கலை. சாரு எழுதுவது குப்பை. ”

மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் கத்தி மேல் நடப்பது போல் நடந்தார்கள். ஆனால் சாருவோ கத்தியையே உடைத்தார். தஞ்சை ப்ரகாஷ் கொஞ்சமாக உடைத்தாரென்றால் சாரு அடியோடு. காரணம், சாரு ஒரு குழந்தை அல்லது ஞானியைப் போல. குழந்தைகளும் ஞானிகளும்தான் நிர்வாணமாக நிற்க முடியும். அவர்களுக்குத்தான் எது ஒன்றைப் பற்றியும் கூச்சம் இருக்காது. அப்படியானால், ஒருவர் சாருவின் புனைவு எழுத்தை அணுக வேண்டும் என்றால், அவரும் சாருவின் மனோதர்மத்தை ஏற்றாக வேண்டும். குறைந்த பட்சம், அவருடைய எழுத்தை வாசிக்கும் நேரத்திலாவது.

அதற்கு செய்ய வேண்டிய காரியம், இதுவரை படித்ததையெல்லாம் கொஞ்ச நேரம் வெளியே எடுத்து வைக்க வேண்டும். This is transgressive writing. You have to learn to unlearn. அதாவது, இலக்கியம் என்றால் என்ன என்ற நமது நம்பிக்கைகளையும் அனுபவத்தையும் சாருவைப் படிக்கும் சமயத்தில் எடுத்து தூர வைத்து விட வேண்டும். பிறகு அவருடைய ராஸ லீலா, அடுத்தது எக்ஸைல், அதை அடுத்து ஸீரோ டிகிரி என்று போக வேண்டும். முக்கியமாக அவருடைய நேநோ என்ற சிறுகதைத் தொகுப்பையும் படிக்க வேண்டும். அதில் உள்ள உன்னத சங்கீதம் என்ற கதையைப் படிக்கும்போது அதிர்ச்சி அடையாமல் ஷேக்ஸ்பியரின் ஜூலியட்டின் வயது பதின்மூன்றுதான் என்றும், நொபகோவின் லொலிதாவின் வயதும் பதின்மூன்றுதான் என்றும் அதன் தொடர்ச்சியாகவே சாரு உன்னத சங்கீதத்தை அமைத்திருக்கிறார் என்றும் ஞாபகம் கொள்ள வேண்டும்.

ரொலாந் பார்த்தின் A Lover’s Discourse என்ற நூலையும் எடுத்துக் கொள்வோம். புனைவு, அ-புனைவு ஆகிய இரண்டு பிரிவிற்குள்ளும் வர முடியாத அந்த நூலைப் போன்றதுதான் சாருவின் பெரும்பாலான அ-புனைவு நூல்களும். லவர்ஸ் டிஸ்கோர்ஸில் இப்படி ஒரு இடம் வருகிறது:

I take a seat, alone, in a cafe; people come over and speak to me; I feel that I am sought after, surrounded, flattered. But the other is absent; I invoke the other inwardly to keep me on the brink of this mundane complacency, a temptation. I appeal to the other’s “truth” (the truth of which the other gives me the sensation) against the hysteria of seduction into which I feel myself slipping. I make the other’s absence responsible for my worldliness: I invoke the other’s protection, the other’s return: let the other appear, take me away, like a mother who comes looking for her child, from this worldly brilliance, from this social infatuation, let the other restore to me ” the religious intimacy, the gravity” of the lover’s world. (X once told me that love had protected him against worldliness: coteries, ambitions, advancements, interferences, alliances, secessions, roles, powers: love had made him into a social catastrophe, to his delight. )

இதை நாம் புனைவில் சேர்ப்பதா, அ-புனைவில் சேர்ப்பதா? ரொலாந் பார்த் தன் ‘சொல்லாடலை’ புனைவு மற்றும் அ-புனைவு என்ற இரண்டுக்கும் இடையில் உருவாக்குகிறார். இதுவரையிலான எழுத்து வரலாற்றில் யாரும் கண்டிராத ஒரு புதுவகை எழுத்து ரொலாந் பார்த்துடையது. ஆனால் இதைச் செய்தது பார்த் மட்டுமே அல்ல. அது ஒரு கலாச்சார சூழலில், வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சிறிய குழுவினால் நிகழ்ந்த ஒரு செயல்பாடு. இதில் பங்கேற்றவர்கள் என ஜார்ஜ் பத்தாய், ரொலாந் பார்த், ஆலன் ராப் க்ரியே போன்ற எழுத்தாளர்களையும் ஆலன் ரெனே (Alain Resnais) போன்ற இயக்குனர்களையும் குறிப்பிடலாம். ஆலன் ரெனேயின் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் ஆலன் ராப் க்ரியே.

நீங்கள் ரொலாந் பார்த்தின் லவர்ஸ் டிஸ்கோர்ஸ் படித்திருக்கிறீர்களா என்று சாருவிடம் தயக்கத்துடன் கேட்டேன். பார்த்தின் தத்துவம் குறித்த நூல்களை மட்டுமே படித்திருப்பதாகவும் இதைப் படித்ததில்லை என்றும் கூறினார்.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஃப்ரான்ஸிலும் எண்பதுகளில் தமிழிலும் நிகழ்ந்த ஓர் அற்புதமே இது என்று நான் நினைக்கிறேன். சென்னை பல்கலைக்கழகத்தில் ஃபிரஞ்ச் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தபோது தமிழில் ஏன் இப்படி யாரும் எழுதுவதில்லை என்று நினைத்த சமயத்தில் ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி ஷங்கர் எடுத்துக் கொடுத்த பொக்கிஷம் சாரு.

இதுவரையிலான கதை சொல்லல் முறை, இதுவரையிலான அறிதல் முறை ஆகிய இரண்டிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவை சாருவின் புனைவும் அ-புனைவும். உதாரணமாக, சாரு குமுதத்தில் எழுதிய சொல் தீண்டிப் பழகு, அவருடைய தளத்தில் எழுதிய பூச்சி என்ற இரண்டு தொடர்களையும் அ-புனைவிலும் சேர்க்க இயலாது புனைவிலும் சேர்க்க இயலாது. இரண்டுக்கும் இடையிலான ஊடாடலே அவ்விரண்டும்.

அடுத்து, சாருவைப் படிக்கும் சக எழுத்தாளர்களும் பல வாசகர்களும் ஏன் கோபம் அடைகிறார்கள்? ஏன் சாருவை வெறுக்கிறார்கள்? அவர் எழுத்து பற்றி நல்லதாக ஏதாவது எழுதலாம் என்று நினைப்பவர்கள் கூட பகடி செய்யாமல் எழுதுவதில்லை.

ஏனென்றால் சாரு செய்யும் காரியம் அப்படிப்பட்டது. ஆங்கிலத்தில் decanonization என்பார்கள். புனிதத்தைக் குலைத்தல். இன்னும் சுலபமாகச் சொன்னால், anti-deification எனலாம். Deify என்பதன் பொருள் ஆராதனை. அதற்கு எதிரான செயல்பாட்டைத் தன் எழுத்தின் மூலம் நிகழ்த்துகிறார் சாரு. (நேர் வாழ்விலும் அப்படித்தான். தன்னை ஆராதிப்பவர்களையும் வெகு சீக்கிரம் பகைத்துக் கொள்ளும் கலை அவருக்கு மட்டுமே உரித்தானது. ) இதைத்தான் ஒரு கட்டுரையில் அபிலாஷ் “நவீனத்துவ புனைவின் பவித்திரத்தை காலி செய்தல்” எனக் குறிப்பிடுகிறார்.

ஆக, சாருவின் புனைவு, அ-புனைவு எழுத்துகள் அனைத்தும் மனிதத்தின் சாராம்சம் (essence) என்பதைக் கட்டுடைத்தவை (deconstruct), சிதைத்தவை எனலாம். (சிதைவு என்ற பெயரில் சாரு ஒரு சிறு பத்திரிகை நடத்தியிருக்கிறார். அதில்தான் அவருடைய புகழ் பெற்ற சிறுகதையான நேநோ வெளிவந்தது. )

நம்முடைய இரண்டாயிரம் ஆண்டு நம்பிக்கைகளையும், கனவுகளையும் சாரு தன்னுடைய எழுத்தின் மூலம் சிதைக்கிறார். அதனாலேதான் சாருவின் எழுத்து மீது ஒருவித ஒவ்வாமை உண்டாகி அவரை வெறுக்கத் தொடங்குகிறோம்.

சாரு அடிக்கடி மிஷல் ஃபூக்கோவைப் பற்றிக் குறிப்பிடுவதை அவர் எழுத்தோடு பரிச்சயம் கொண்டவர்கள் அறிந்திருக்கலாம். ஷங்கண்ணா என்ற பெயரில் சாருவின் சக எழுத்தாளர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு “ஃபூக்கோவின் பிரேதத்தைத் தமிழ்நாட்டின் தெருக்களில் இழுத்துக் கொண்டு செல்பவர் சாரு” என்று எழுதியிருக்கிறார். சாரு ஏன் அப்படி ஃபூக்கோவின் பிரேதத்தைத் தமிழ்நாட்டுத் தெருக்களில் இழுத்துக் கொண்டு செல்ல நேர்ந்தது?

காரணம், ஃபூக்கோதான் அதிகாரம் பற்றிப் பேசியவர். கல்வி, மதம், அரசியல், குடும்பம் என்ற எந்தத் துறையிலும் உள்ள எந்த ஒரு நிறுவனமும் அதிகார அமைப்பையே கட்டமைத்துத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. ஆண் பெண் உறவிலேயே கூட அதிகாரம்தான் முதன்மையாக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இங்கே சாரு ஒரு நூறு முறை தன்னை ஒரு பெண் என்று கூறுவதை கவனம் கொள்ள வேண்டும். ஸீரோ டிகிரியை அவர் ஒரு பெண்ணியப் பிரதி என்கிறார். அதாவது, ஆண் மைய வாதம் என்பது (Phallocentrism) முக்கோண வடிவானது என்று விளக்குகிறார் சாரு. முக்கோணத்தின் உச்சியிலே இருப்பவர்தான் தந்தை, மதகுரு, மருத்துவர், அதிபர், அதிகாரி, குடும்பத் தலைவர், எழுத்தாளர் எல்லாம். தலைவர் தருகிறார், நாம் பெற்றுக் கொள்கிறோம். தலைவர் சிந்திக்கிறார். நாம் அவர் வழி நடக்கிறோம். இதுதான் ஆண் மைய வாதம். இங்கே உரையாடலுக்கு வழியில்லை. எல்லாமே முடிந்து விட்டது. எல்லாமே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. பின்பற்ற வேண்டியது மட்டுமே நம் கடமை.

இதற்கு எதிரான ஒரு வஸ்துவை நம் முன்னே காண்பிக்கிறார் சாரு. அது சுருள் சுருளான ஒரு வளையம் (Spiral). சுருள் வளையத்துக்குத் தொடக்கம் இல்லை, முடிவு இல்லை. நீட்டித்துக் கொண்டே போகலாம். அதைப் பெண் உடலோடும் பெண்ணின் காமத்தோடும் இணைக்கிறார். அதனால்தான் சாருவின் புனைவுகளில் ஆரம்பம் இல்லை. முடிவு இல்லை. எந்தப் பக்கத்திலிருந்தும் நீங்கள் ஆரம்பிக்கலாம்.

சாருவிற்கு படைப்பாற்றல் இல்லை என்று சொல்பவர்கள் அவருடைய ‘நட்சத்திரங்களிலிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்’ என்ற கதையைப் படித்துப் பார்க்க வேண்டும். அதில் வரும் பாத்திரமான Jacques Didier என்ற ஆராய்ச்சியாளரை, சென்னைப் பல்கலையில் படிக்கும்போது நானும் என்னுடன் படித்த இரு தோழிகளும் நூலகத்திலும் இணையத்திலும் தேடிவிட்டு கிடைக்காமல் போகவே யார் என்று சாருவிடம் கேட்டோம். அது கற்பனைக் கதாபாத்திரம், அந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனை என்று சொன்னபோது ஸ்தம்பித்து விட்டோம்.

சாருவிடம் எழுத்தாளன் – லௌகீக மனிதன் என்ற இரு வேறு தன்மை இல்லை. அதனாலேயே அவருடன் பழகுவதும் கடினம். அப்படியே ‘சாருவிடம் படைப்பாற்றல் இல்லை, தன் வாழ்க்கையை நாட்குறிப்பு எழுதுவதுபோல் எழுதுகிறார்’ என்று சொல்லும் நம்மில் எவ்வளவு பேருக்கு தன் வாழ்க்கையை அப்படியே நிதர்சனமாக எழுத முடியும்? என்னால் எக்காலத்திலும் இயலாது. என் தனிப்பட்ட நாட்குறிப்பில் கூட எழுத முடியாது.

அதே சமயம், வாழ்க்கை அப்படி அப்படியே நிதர்சனமாக எழுதி விடுவதால் மட்டுமே ஒரு பிரதி இலக்கியமாகி விட முடியாது. வாழ்வுக்கும் எழுத்துக்கும் இடையே ஒருவித ’மாயாஜாலம்’ நிகழ வேண்டும். அப்படி நிகழ்ந்தால் அதை நாம் ஆட்டோஃபிக்‌ஷன் என்று அழைக்கலாம். எனக்குத் தெரிந்து அதை நிகழ்த்தியவர்கள் ஃப்ரெஞ்சில் துப்ரோவ்ஸ்கியும் (Serge Doubrovsky) தமிழில் சாருவும் மட்டுமே.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ரொலாந் பார்த்தின் லவர்ஸ் டிஸ்கோர்ஸில் பார்த் ஒரு பௌத்த உதாரணத்தைக் கூறுகிறார். உண்மையைக் கண்டடைவது எப்படி?

ஒரு குரு தன் சீடனின் தலைமுடியைப் பிடித்துத் தண்ணீருக்குள் அமிழ்த்துகிறார். தண்ணீரின் மேல்மட்டத்தில் தோன்றும் நீர்க்குமிழிகள் கொஞ்ச நேரத்தில் குறைகின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சீடனுக்குக் காற்று இல்லாமல் உயிர் போய் விடும் என்ற நிலை வரும் தருணத்தில் அவனைத் தண்ணீருக்கு மேலே தூக்கிக் காற்றில் நிறுத்துகிறார் குரு.

தண்ணீருக்குள் காற்று இல்லாமல் தன் பிராணனுக்காகக் காற்றைத் தேடுபவனின் தீவிரத்தோடு நீங்கள் உண்மையைத் தேட வேண்டும் என்கிறார் ரொலாந் பார்த்.

அப்படித்தான் நான் சாரு என்ற காற்றைத் தேடி மலை ஏறினேன். மலை உச்சியை சென்றடைந்தபோது அங்கே காற்றே இல்லை.

உயிர்ப் பயத்தில் திரும்ப ஓடி வந்து சாருவிடம் சொன்னேன்.

சீலே வைனை அருந்தியபடி புன்முறுவல் செய்தார் சாரு. அந்தப் புன்சிரிப்புக்கான அர்த்தத்தை மீண்டும் அவர் எழுத்துகளில் தேடிக் கொண்டிருக்கிறேன்…

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

முந்தைய கட்டுரைமத்துறு தயிர்,கடிதம்
அடுத்த கட்டுரைபெங்களூர் இலக்கியவிழா, மொழி -கடிதம்