பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

1

தமிழிலக்கியத்தில் சாரு நிவேதிதா என்ற பெயருடன் சேர்ந்தே வரும் சொல் ’பிறழ்வெழுத்து.’ வாசகர்களும், விமர்சகர்களும் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு அடையாளத்தை உருவாக்குவதை நாம் காணலாம். அதுவே அவ்வெழுத்தாளனை வாசிக்க அவனது புனைவை மேலும் அணுகி அறிய வழிவகுக்கும். அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு ஒரு முகவாயிலாக அந்த அடையாளப்படுத்தல் அமையும். அதன் எதிர் எல்லையில் அப்படி ஒரு எழுத்தாளனை அடையாளப்படுத்தும் போது அவன் மூர்க்கமாக தன் புனைவின் மூலம் அந்த அடையாளத்தை தவிர்க்க விரும்புவான் அல்லது அந்த அடையாளத்தை ஏற்றுக்கொண்டு அதன் உச்சபட்ச சாத்தியங்களை தன் புனைவில் நிகழ்த்திக் காட்டுவான். ஒரு எழுத்தாளன் தன் வாசகர்களோடு முட்டி மோதி சென்றடையும் இரண்டு சாத்தியங்கள் இவை. சாரு நிவேதிதா இரண்டாவது பாதையை தேர்ந்தெடுத்தார் என்றே எனக்குப் படுகிறது.

சாருவின் எழுத்தை பிறழ்வெழுத்து எனச் சொன்னதுமே அவர் எழுத்திற்கு புதிய வாசகனாக உள்ளே செல்ல என் மனதிற்கு தடை ஏற்பட்டுவிட்டதை இப்போது உணர்கிறேன். அது தான் அவர் புனைவை நான் வாசிக்காமல் இருந்ததற்கு முதல் தடையாக இருந்தது என இப்போது யோசிக்கும் போது தோன்றுகிறது. இது சாருவின் புனைவுடன் நான் வாசகனாக மனதளவில் முரண்பட்ட முதல் கட்டம் என்றால் அதற்கு அடுத்த காலகட்டம் அவரை நான் அணுக்கமாக உணர்ந்த கட்டம்.

அதுவே சாரு என்ற ஆளுமையை நான் அறிய தொடங்கிய முதல் படி. அதற்கு முன் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பிம்பத்தை நானும் தொற்றிக் கொண்டு அவரை வாசிக்காமலே நிராகரித்து வந்திருக்கிறேன்.

2020 ஆம் ஆண்டு அரூ மின்னிதழ் நிகழ்த்தும் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு சாரு நிவேதிதா நடுவராக இருந்தார். அதுவே அவர் எழுத்தில் நான் வாசித்த முதல் கட்டுரை. அக்கட்டுரையின் நேர்த்தியும், கறார் தன்மையும் என்னை வசீகரித்தது. அதற்குக் காரணம் சாரு நிவேதிதா என என் மனதில் ஏற்றி வைத்திருந்த பிம்பம் முழுவதும் உடைந்து நொறுங்கிய முதல் தருணம் அது என்பதால் இருக்கலாம்.

அக்கட்டுரையை தொடங்கும்போதே ஆர்த்தர் சி. கிளார்க் எழுதிய கடவுளின் தொள்ளாயிரம் கோடி நாமங்கள் கதையிலிருந்து தொடங்குகிறார். தொடர்ந்து சமகால தமிழிலக்கியத்தின் இளம் படைப்பாளிகள் படைப்பில் வெளிப்படும் இலக்கணப் பிழைகளை வாக்கியப் பிழைகளை விமர்சகனாக மறுக்கிறார். அரூ கதைகள் அதனை எப்படி மீறி வந்தது எனக் குறிப்பிடுகிறார்.

அவருக்கு வழங்கப்பட்ட பதினைந்து கதையில் ஆறு கதைகளை அதன் கட்டுரைத் தன்மைக்காக நிராகரித்துவிட்டேன் இன்னும் ஒரு கதை சேர்த்தால் பத்து கதை வந்துவிடும் ஆனால் அதன் கட்டுரை தன்மை என்னை வெளியேற்றும் காரணத்தால் அதனை நிராகரித்துவிட்டேன் என சாரு எழுதிய இடத்தில் தமிழிலக்கிய விமர்சகனாக தன் கறார் தன்மை மூலம் எனக்கு அறிமுகமாகினார். அவர் அக்கட்டுரையில் திரும்ப திரும்ப கதை சொல்ல வேண்டும், கதையில்லாத கட்டுரைகள் எனக்கு உவப்பில்லாதவை என நிராகரிக்கிறார். இரண்டு, இவ்வாண்டின் தொடக்கத்தில் எழுத்தாளர் அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை நூல் வெளியீட்டு விழாவில் சாரு பேசியது. அதிலும் மேற்கூறிய விமர்சகனின் கறார் தன்மை வெளிப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வும் சாருவை ஒரு கறாரான, நேர்த்தியான ஆளுமையாக என் மனதில் நிலைநிறுத்தியது.

இத்தகைய நேர்த்தியான, ஒழுங்கு தன்மை கொண்ட ஒருவர் எழுத்தில் பிறழ்வெழுத்து எப்படி உருவாக முடியும்? நேர்த்தி என்பது ஒழுங்கிலிருந்து வருவது, சாருவின் சொல்லிலும், செயலிலும் தோன்றிய நேர்த்தி அவரது புனைவு வெளிப்படும் தருணத்தின் நேர்எதிர்நிலையில் வெளிப்படுபவை என பட்டது. அது பிறழ்விற்கு நேர் எதிரான மனநிலை. அதற்காக புனைவாசிரியன் புனைவை போல் தன் அன்றாடத்தை தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென நான் சொல்ல வரவில்லை. ஒரு ஆளுமையின் அம்சத்தில் அதன் கூறுகள் இயல்பாக தென்படும், அவை எதுவும் நான் பார்த்த சாருவில் இல்லை என்பதே நான் கூற வருவது.

பிறழ்வெழுத்து என்பதே நாம் ஒழுக்கம், நெறி என வகுக்கும் எல்லா கட்டுக்களையும் கடந்து செல்வது தான். மானுடம் உருவாக்கி வைத்த உச்சநிலைகள், விழுமியங்கள், ஒழுக்கங்கள், அறம் ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்குகிறது பிறழ்வெழுத்து. அப்படி ஒரு விழுமியங்களும் மானுடனில் இல்லை எனப் புனைவின் மூலம் நிறுவ முயல்கிறது. இது ஒரு வகையில் இலக்கணத்தை உடைத்துச் செல்லும் ஒரு மனத்தின் வெளிப்பாடு தான். சாருவை நான் பார்த்த வரையில் அவரது கட்டுரைகள் மூலம் அறிந்த வரையில் அவர் அப்படிப்பட்டவராக வெளிப்படவில்லை. அப்போது அவரது புனைவின் அடி நாதமாக வரும் மானுட இலக்கணங்களுக்கு எதிராக நிறுத்தப்படும் எதிர் விழுமியங்களை புனைவாக்குவது யார்?

இந்த இரட்டை தன்மையையே சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் இத்தருணத்தில் நான் ஆராய முற்பட்டது. அதன் பொருட்டு அவரது புனைவுகளையும், அபுனைவுகளையும் வாசித்தேன். அதிலிருந்து முன்னர் என் மனதில் இருந்த சாரு நிவேதிதா என்ற ஆளுமையின் பிம்பத்தை மறுபரிசீலனை செய்ய முற்பட்டேன்.  அதனை தொகுத்து எனக்கான ஒரு பதிலைக் கண்டடைவதே இக்கட்டுரையின் முயற்சி.

ஒரு பிறழ்வெழுத்தின் மனம் சமூதாயம் நாகரீகம், ஒழுக்கம் எனக் கட்டமைக்கும் ஒன்றை மீறிச் செல்ல வேண்டும். ஒரு சமூகத்தில் ஓர் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வர இயலவில்லை என்றால் அது அந்த தனிமனிதனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அந்த தனிநபர் ஒழுங்கு எனச் சமூதாயம் உருவாக்கி வைத்திருக்கும் ஒன்று தனக்கு இல்லை என்றே சொல்கிறான். அந்த ஒழுக்க மீறலே பிறழ்வின் முதல் படியாக இருக்க முடியும்.

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் வரும் மைய கதாப்பாத்திரமான சூர்யா பாலாவிடம் தான் பத்து நிமிடம் காலத் தாமதமாக வந்ததற்கு பத்து பக்கத்திற்கு கடிதம் எழுதுகிறான். அதன் மூலம் தன் ஒழுங்கை நிலைநிறுத்தவே விரும்புகிறான். சூர்யா அக்கடிதத்தின் ஆரம்பத்திலேயே, “பத்து நிமிட தாமதம் பற்றி அப்போது என் மனதில் குற்ற உணர்ச்சியே மிகுந்திருந்தது” எனத் தொடங்குகிறான்.

அதே சூர்யா நீரஜாவை பார்த்த போது, “அவள் பம்பாய் வாசியாக இருந்த போதும் கையுள்ள ரவிக்கையே அணிந்திருந்தாள்” எனக் குறிப்பிடுகிறான். அதே நீரஜாவை சூர்யா அணுக்கமாக உணரும் தருணம் அவள் சூர்யாவின் சிகரெட் பெட்டியைப் பார்த்து, “எடுத்துக் கொள்ளலாமா?” எனக் கேட்கும் இடம்.

நீரஜா தன் பாவனை மொழிகள் மறந்து சூர்யா முன் தன்னை காட்டும் போதே அவளை அணுக்கமாக உணர்கிறான். அதே வேளையில் சூர்யா பாலாவிற்கு தன் பக்க நியாயத்தை பத்து பக்கத்திற்கு கடிதமாக எழுதிகிறான். இந்த இரட்டை மனநிலையை இக்கதாப்பாத்திரம் சூட காரணம் என்ன?

ஒரு வேளை பிறழ்வெழுத்து என சாரு உத்தேசிப்பது காமமும் அது சார்ந்த பிறழ்வும் தானா? என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. நாவலில் பிறழ்வு காட்டும் கட்டற்ற தன்மை சூர்யாவிடம் வெளிப்படவே இல்லை. மாறாக அவன் சந்திக்கும் பெண்களிடமே வெளிப்படுகிறது.

சூர்யா தன் சின்ன நைனா வீட்டில் தங்கி படிக்கும் போது அவனிடம் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண் வந்து வழி கேட்கிறாள். சூர்யாவும் அதே வழியில் செல்வதால் அவளை உடன் அழைத்துச் செல்கிறான். சூர்யா ஹிப்பிகளுடன் சேர்ந்து அலைகிறான் என சின்ன நைனா கடிதம் எழுதி ஊருக்கு அனுப்புகிறார். சூர்யாவின் அம்மா அவனை விசாரித்ததும் சென்னை பல்கலைகழகத்திலிருந்து தஞ்சை பல்கலைகழகத்திற்கு மாற்றலாகி வந்துவிடுகிறான்.

மாறாக சூர்யா காணும் பெண்களான நீரஷா, கிரண், நளினி ஆகியோரிடம் ஒரு மீறல் தென்படுகிறது. அந்த மீறலை அவர்களை சூர்யாவிற்கு அணுக்கமானவர்களாக மாற்றுகிறது. கிரண் சூர்யா தன்னிடம் காட்டும் அன்பால் அவனை தந்தை என்றே நினைக்கிறாள். ஒரு நாள் அவள் அறையிலிருக்கும் போது ’Fuck me dad’ என சூர்யாவுடன் புணர்கிறாள்.

இக்கதையைக் கொண்டு சாருவின் நாவல்களில் வரும் ஆண் ஒழுக்கமானவன், பெண்கள் மீறல்கள் கொண்டவர்கள் என நான் சொல்ல வரவில்லை. நிறைய ஆண் கதாப்பாத்திரங்களும் இதே பிறழ்வு தன்மையுடனே வருகிறது. தன் பாம்படத்தை தர மறுக்கும் மனைவியை அடித்து வீட்டை விட்டு வெளியேறி மறுநாளே தற்கொலை செய்து கொள்ளும் ராமசாமி கதாபாத்திரம். சூர்யாவின் தாத்தாவான கோவிந்தராஜுலு நாயுடுவின் எட்டு குழந்தைகளின் வீழ்ச்சி, கிரணின் அப்பா கபூர், மையகதாப்பாத்திரமான சூர்யா என அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே சாருவின் எழுத்தில் ஆண், பெண் என்ற இருண்மையை கண்டடையாமல் விழுமியம், பிறழ்வும் என்ற இருண்மையை நோக்கியே நாம் பேச முடியும். நான் மேற்சொன்ன சூர்யா கதாப்பாத்திரம் போலவே சாருவின் எல்லா நாவல்களிலும் ஒரு கதாபாத்திரம் வருவதைக் காணலாம். ராஸ லீலாவில் வரும் பெருமாள் அத்தகையவர். இப்படி ஒவ்வொரு நாவலிலிருந்தும் ஒரு கதாப்பாத்திரத்தை சுட்ட முடியும். அப்போது முற்றிலும் பிறழ்வெழுத்தில் இந்த முறைமை பேசும் அல்லது விழுமியத்தின் ஒரு கூற்றை முன்வைக்கும் இவர்கள் யார்? அவர்களும் தன்னை முற்றிலும் பிறழ்வெழுத்தாளன் என அறிவித்துக் கொண்ட சாருவின் புனைவிற்கு என்ன சம்பந்தம் என்ற குழப்பத்துடனே ஸீரோ டிகிரி நாவலை அணுகினேன். அதற்கு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய முன்னுரையிலேயே எனக்கான விடை கிடைத்தது,

“படைப்பாளியின் தத்துவார்த்தக் குழப்பம் (Philosophical dilema) புரிகிறது. நிஜ வாழ்க்கை வேறாக இருக்க, பண்பாட்டுப் போர்வையில் மதிப்பிட்டு பதிவிரதா தர்மம் காக்கும், தமிழ்ச் சமூகத்தின் இரட்டை வேஷத்தைக் கலைக்க, எதிர்க்கலாச்சாரத்தை ஒரு கருவியாக அவர் பயன்படுத்தத் தயங்கவில்லை என்றாலும், ஆதார நிலையில் அவர் ஒரு ‘Moralist’ தான் என்ற உண்மையினின்றும் அவரால் தப்ப முடியவில்லை. இவர் ஒரே சமயத்தில் டாக்டர் ஜெகிலாகவும், டாக்டர் ஹைடாகவும் இருக்க முயல்வது தான் இவருடைய Tragedy” என்கிறார்.

ஸீரோ டிகிரி படிக்கும் போது எனக்கு அந்த குழப்பங்கள் அகன்றது. சாருவின் புனைவில் ஒரு Moralist உண்டு, அது சாரு என்ற ஆளுமையின் பிரதிபலிப்பு. மற்றவை, சாரு புனைந்த பிறழ்வுகளின் வெளிப்பாடுகள். தி.ஜானகிராமனில் இந்த Moralist அம்சம் ஓங்கி இருப்பதை நாம் காணலாம். தி.ஜானகிராமனிலிருந்து பிறழ்வு வாழ்வை நோக்கி சாரு புனைவு சென்ற தூரத்தை நான் பார்க்கலாம். ஆனால் அவருள்ளும் ஒரு அம்சம் Moralist ஆக வெளிப்படுவது தெரிகிறது.

இந்த இரண்டு எல்லைகளுக்குமான ஊடாட்டமே சாருவை புனைவு எழுத தூண்டும் அம்சமாக நான் பார்க்கிறேன்.

2

சாருவை மேலும் புரிந்து கொள்ள அவர் மொழிபெயர்த்த உலக சிறுகதைகள் தொகுப்பான ‘ஊரின் மிக அழகான பெண்’ தொகுப்பை வாசித்தேன். மரீயா லூயிஸா போம்பல் (Maria Luisa Bompal) எழுதிய மரம் என்ற சிறுகதை அதில் எனக்கு முக்கியமான கதையாக பட்டது. மரீயா லூயிஸா போம்பலின் வாழ்வே பிறழ்வு தன்மைக்கு சான்று. போம்பல் திருமணத்திற்கு பின் அதீத மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார். போம்பலின் கணவர் யுலோஹியோ சாஞ்செஸிற்கு போம்பலின் இலக்கிய வாழ்க்கை பிடிக்கவில்லை. அவரை வதைக்கிறார், துன்புறுத்துகிறார். அதன் காரணமாக போம்பல் தீவிர மன அழுத்தத்திலும், தற்கொலைக்கான முயற்சியிலும் ஈடுபடுகிறார். ஒரு முறை தன் கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் அவரை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். அதில் சாஞ்செஸ் பிழைத்தார். பின் போம்பல் ஜோர்ஜ் லார்கோ (Jorge Larco) என்னும் ஒருபால் சேர்க்கையாளருடன் திருமணம் செய்துகொள்கிறார். அதன்பின் சீலேயிலிருந்து தப்பி அர்ஜெண்டினா செல்கிறார். போம்பல் அங்கிருந்து அமெரிக்கா அங்கே ரபேல் டி செயிண்ட் பால் என்பவரை மணந்துக் கொள்கிறார். இதற்கு இடைப்பட்ட காலங்களிலேயே முதல் கணவர் சாஞ்செஸை மறைந்திருந்து கையில் மூன்று முறை சுடுகிறார், சுட்டுவிட்டு, “என் வாழ்வை சீரழித்தது இவன் தான். இவன் தான் என் வாழ்வை அழித்தான்” எனப் புலம்புகிறார். பின் அமெரிக்காவிலிருந்து அர்ஜெண்டினா, சீலே என நாடுகள் மாறி தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்கிறார்.

போம்பல் எழுதி சாரு மொழிபெயர்த்த கதை மரம். அக்கதையை படித்தவுடன் போம்பல் அடிப்படையில் ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்றே படுகிறது. அதற்கான காரணங்களும் அவர் தனி வாழ்வில் இருக்கிறது. மரம் சிறுகதையில் பிரிகிடா என்ற இளம்பெண்ணின் துயர வாழ்வு மூன்று அடுக்கு கதையாகச் சொல்லப்படுகிறது. அதுவே அக்கதையை முக்கியமானதாக மாற்றுகிறது. கதையில் இசை ஒரு பின்னிணைப்பாக வருகிறது. அதில் வரும் இசை, கலைஞர்களின் இசையோடு பிரிகிடாவின் குழந்தைப் பருவத்தின் உக்கிரங்கள், அதன் குதூகலங்களைக் குறிக்க வருகிறது. பீத்தோவனின் ரொமாண்டிக் இசை இளம் பிரிகிடாவின் நிறைவேறாத காதலைச் சொல்ல வருகிறது என சாரு தன் பின்னுரையில் குறிப்பிடுகிறார். பிரிகிடா ஆறு பெண் குழந்தைகளில் இளையவள். ஆறாவதாக பிறந்ததாலேயே மற்ற ஐவர் கொண்ட சகஜமான வாழ்வை பிரிகிடாவால் பெற முடியவில்லை. வீட்டிலிருக்கும் அவள் தந்தையே தன் மகளை மனம்பிறழ்ந்தவள் எனச் சொல்லி வளர்க்கிறார். அதன் காரணமாக லூயிஸ் என்ற மத்திய வயது கடந்தவனை திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்திற்கு பின்பாக பிரிவிடா உண்மையில் எப்படி தன் நிறைவேறாத காதல் மூலம் மனம் பிறழ்கிறாள் என்பதே கதை. அதில் பிரிகிடாவை குறிக்க மரம் ஒரு குறியீடாகவே வந்து கொண்டிருக்கிறது.

போம்பல் பெண்ணை இயற்கையின் ஒரு வடிவாகவே காண்கிறார். பெண்களுக்கென்று இயற்கையிலிருந்து உணர்ச்சிகளும், உள்ளுணர்வுகளும் கிடைக்கின்றன. பெண்கள் தனித்துவமானவர்கள் என்பது போம்பலின் தத்துவம். ஆண்களை புத்தி கூர்மையுடைவர்களாகவும், பலசாலிகளாகவும் போம்பல் பார்க்கிறார். பலசாலி என்பதாலே போம்பலின் பார்வையில் உணர்ச்சியற்றவனாகவும் ஆண் இருக்கிறான். மரம் கதையில் உண்மையில் பிரிகிடாவின் நிலைக்கு முதலில் அவள் தந்தை காரணமாகிறார். இரண்டாவது லூயஸ் அவள் கணவன் காரணமாகிறான். இத்தகைய ஆண்களால் பிரிகிடா ஒரு வெட்டுண்ட ரப்பர் மரமாகவே மாறிப் போகிறாள்.

இந்த தொகுப்பில் அதிதீவிர பிறழ்வு தன்மையுடன் எழுதப்பட்ட கதை என நான் நினைப்பது தலைப்பு கதையான ‘ஊரின் மிக அழகான பெண்’. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி ஒரு அமெரிக்க எழுத்தாளர். லாஸ் ஏஜெல்ஸ் நகரில் அவர் வாழ்ந்த கண்ட மனிதர்களின் வாழ்வையே கதையாக்கியவர். அவர் கதைகள் அடித்தள மக்களின் உறவுகள், உறவு மீறல்கள், போதைகள், பிறழ்வுகளைப் பற்றி பேசுபவை.

இத்தொகுப்பில் உள்ள ‘ஊரின் மிக அழகான பெண்’ சிறுகதை காஸ் என்ற அழகிய பெண் வருகிறாள். அவள் தான் ஊரிலேயே மிகவும் அழகானவள், இளையவளும் கூட. அவள் பிறழ்வு காமத்தில் உள்ளது. மனிதர்கள் தன்னை காமத்தோடு அணுகும் போது தன்னை சுயவதை செய்து கொள்கிறாள். அந்த சுயவதையில் இன்பம் காண்கிறாள். கதை சொல்லியை காஸ் சந்திக்கிறாள். அவனிடம் வெளிப்படும் அன்பை விரும்புகிறாள். ஆனால் அவனோடு காஸால் இயந்து வாழ இயலவில்லை. தன்னை சுயவதை செய்தே அழிந்து போகிறாள்.

நான் மொழிபெயர்ப்பு கதைகளைப் பற்றி இங்கே அதிகம் பேச விரும்பவில்லை. மேலும் அடிப்படையில் எனக்கு இந்த வகை கதைகள் மீது எந்த ஈர்ப்பு ஏற்படவில்லை என்றாலும் இவ்வகை கதைகள் உலக முழுக்க எழுதப்படுவதன் பின்னணியை பற்றி அறிய முற்படுகிறேன். அதனைக் கொண்டு சாருவை என்னளவில் வரையறுக்கப் பார்க்கிறேன்.

இந்த இரு கதைகளும் பிறழ்விலக்கியத்தின் இரு எல்லைகள். போம்பல் தன் சுய வாழ்க்கையிலிருந்து இந்த வகைமையை தெரிவு செய்தார் என்றால் ப்யூகோவ்ஸ்கி தன்னை சூழ்ந்துள்ள சமூகத்திலிருந்து இதனை தெரிவு செய்கிறார். நான் இதிலிருந்து போம்பலையோ, ப்யூகோவ்ஸ்கியையோ அறிய முற்படவில்லை. இதனை தெரிவு செய்து தொகுத்த சாருவை அறிய விரும்புகிறேன். சாருவின் இத்தொகுப்பில் இருப்பது தான் எழுதிக் கொண்டிருக்கும் இலக்கிய வகைமையின் உலக இலக்கிய ஆதாரங்கள்.

அதனைக் கொண்டு தன் இலக்கியத்தை மேலும் ஆணித்தரமாக முன்னிறுத்துகிறார். சாருவின் சிறுகதைகளான முள், பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி ஆகிய கதைகள் மேலே சொன்ன போம்பல், ப்யூகோவ்ஸ்கி ஆகியோரின் கதை வரிசையில் சென்று நிற்பதை நாம் அறிய முடியும். முள் சிறுகதையில் கதை சொல்லியின் தொண்டையில் அவன் அத்தை வருமன்று ஒரு மீன் முள் மாட்டிக் கொள்கிறது. அது அவள் திரும்பும் வரை அவன் தொண்டையிலேயே இருக்கிறது. பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி டில்லியில் இந்திரா காந்தி படுக்கொலைக்கு பின் நிகழ்ந்த சீக்கிய இனப்படுக்கொலையின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை.

சாருவின் மனம் பிறழ்ந்து செல்லும் காமத்திலும், சமூதாயத்தின் மீது நம்பிக்கையற்ற மிருகத்தனமான படுகொலைகளின் பின்னணியையும் கதைக்கருவாக எடுப்பதைக் காணலாம். ராஸ லீலா, எக்ஸிஸ்டென்ஷியலியமும் ஃபேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரி என அவர் நாவல்கள் பெரும்பாலும் பிறழ்வு காமத்தை முன் வைக்கின்றன.

3

சாருவின் எழுத்தில் எந்த வித இலட்சியவாத நம்பிக்கையும், சமூக விழுமியங்களும் தென்படவில்லை. சாரு சார்த்தரின் இருத்தலியல் கோட்பாட்டையே தன் கதைகளில் முன் வைக்கிறார். அதற்கான உலக இலக்கிய ஆதாரங்கள் மூலம் தன் தரப்பை தீவிரமாக நிறுவவும் செய்கிறார்.

ஈரோடு இலக்கிய சந்திப்பின் போது ஈரோடு கிருஷ்ணன் சாருவின் 7th Seal கட்டுரையை முன்வைத்து ஒரு கருத்தை சொன்னார். இக்கட்டுரையில் சாரு இந்த படத்தில் எந்தெந்த காட்சிகளை முன்னிறுத்துகிறார் எனப் பார்த்தால் நமக்கு அவர் சொல்லும் பிறழ்விலக்கியம் புரியும். இந்த படத்தில் நடைமுறையிலிருந்து பிறழ்ந்து செல்லும் மனிதர்களே சாருவிற்கு முக்கியமாக படுகின்றனர். மாறாக படத்தில் வேறு சில இடங்களும் உள்ளன. அவை சாருவின் கட்டுரையில் இடம்பெறவில்லை. இக்கட்டுரைகளை அவரது புனைவை நோக்கி செல்லும் ஒரு பாதையாகவே நான் பார்க்கிறேன் என்றார்.

இப்படி தன் புனைவின் மூலம், கட்டுரைகளின் மூலம், மொழிபெயர்ப்பின் மூலம் சாரு முன்னிறுத்த நினைப்பது பிறழ்வெழுத்து இலக்கியத்தை மட்டுமே. இதில் வாசகனாக ஒருவனுக்கு அதில் ஏற்றுக்கொள்ள கூடிய அம்சங்கள் இல்லை என்றால் அதனை வாசகனே நிராகரிக்கும் பின் அமையியல்வாத பாணி கதைகளே சாருவினுடையவை.

“Author is Dead” வாசகனும் பிரதியும் மட்டுமே உள்ளது. வாசகன் அந்த பிரதியை தன் கற்பனை சாத்தியத்தின் மூலம் விரித்துக் கொள்ள வேண்டியது அவன் கடமை என்னும் பின் நவீனத்துவ கொள்கையின் அடிப்படையில் அமைந்தவை அவரது கதைகள்.

ஆனால் எனக்கு அக்கொள்கை உவப்பானதாக இல்லை. வாசகனாக நான் மீண்டும் ஆசிரியன், பிரதி இரண்டையும் கருத்தில் கொண்டே முன் செல்ல விழைகிறேன். அவர் பிரதி மூலம் சாரு ஏன் ஒரே தரப்பை, எழுத்து வகைமையை திரும்ப திரும்ப பேச விழைகிறார் எனப் பார்க்கிறேன்.

நான் மேலே உதாரணமாக சொன்ன கோம்பலை போலோ, ப்யூகோவ்ஸ்கி போலோ சாரு தன் சுயவதை மூலமோ, தன் வாழ்வியல் சார்ந்தோ பிறழ்வெழ்த்தினுள் சென்றவரோ, சமூதாயத்தில் உள்ள அடித்தள மக்களின் வாழ்வியலை சொல்ல இவ்வெழுத்து வகைமையை எடுத்துக் கொண்டவரோ அல்ல.

மேலே சொன்ன சீலே எழுத்தாளரோ, அமெரிக்க எழுத்தாளர்களோ சாருவின் முன்னோடியாகவும் கொள்ள முடியாது. அப்படி இங்கே இந்நிலத்தில் இல்லாத ஒன்றை அமெரிக்கா முன்னுதாரணமாக கொண்டு எழுதினால் என்னளவில் அது ஒரு Fake Literature தான். ஆனால் சாரு நிவேதிதா தமிழ் நிலத்தில் முன் வைக்கும் பிறழ்வெழுத்து எந்த வகையில் மேலே சொன்னவற்றோடு வேறுபடுகிறது, எந்த வகையில் இங்கிருந்து எழும் இலக்கியமாகிறது என யோசித்து பார்க்கிறேன்.

ஒன்று, சாரு நிவேதிதா தன் வாழ்வியல் களங்களான மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையே இலக்கியமாக்குகிறார். அவர்களில் பிறழ்ந்தவர்களே அவரது பேசு பெருளாக உள்ளது. அதில் நான் மேலே சொன்னது போல் நூற்றில் ஒருவர் Morality யோடு காணப்படுகிறார். அந்த ஒருவர் மற்ற தொண்ணூற்றி ஒன்பது பேரின் வாழ்வையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டு, முன்னர் சொன்னது போல் சாருவிற்கு உக்கிரமான தனி வாழ்க்கை கோரங்களோ, சமூக கோரங்களோ இல்லை. ஆனால் இந்த வகை எழுத்திற்கு நம் சமூகத்தில் எப்போதும் இடமிருந்து கொண்டே இருந்திருக்கிறது. அந்த மரபில் ஒருவராக சாரு நிற்கும் போதே இங்கிருந்து எழும் புனைவாகிறது.

சாரு சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை பற்றிக் குறிப்பிடும் போது, ”ப்யூகோவ்ஸ்கியின் கதைகளில் தமிழ்ச் சூழலில் மொழி பெயர்க்கக்கூடிய அளவுக்கு என்னால் தேர்ந்தெடுக்க முடிந்த கதை இது ஒன்று தான். வேறு கதைகளை மொழிபெயர்த்தால் ஆபாச தடை சட்டம் என் மேல் பாயும்” எனக் குறிப்பிடுகிறார். எனக்கு அதில் முற்றிலும் மாற்று கருத்து உள்ளது.

நம் நிலம் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை விட முற்றிலும் பிறழ்வு காமத்தை, போகத்தை அனுமதிக்கும் நிலமாகவே இருந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 1980 வரை கப்பல் பாட்டு என்னும் கரகாட்டத்தின் துணை ஆட்டம் நிகழ்ந்துள்ளது. இது ஊருக்கு ஒதுக்குபுறமாக பெண்கள் அதிகம் வராத இடமாக பார்த்து நிகழ்த்தப்படும்.

ஒரு கப்பலில் ஒரு முனையில் மருமகனும், மறுமுனையில் மாமியாரும் அமர்ந்திருப்பார். அவர்கள் இருவருக்கும் நேர் எதிர் முனையில் கோமாளி அமர்ந்திருப்பான். கோமாளி, மருமகனும், மாமியாருக்கும் உள்ள உறவை ஊரறிய பாடத் தொடங்குவான். மருமகன் மாமியாரை ஏசி அவள் நடத்தைகளைப் பற்றி பாடுவான். பதிலுக்கு மாமியார் பாடுவாள். இது ஒரு இரவு முழுவதும் நிகழ்ச்சியாக நிகழும். இதில் வார்த்தைகளும், செய்கைகளும் எல்லை மீறிச் செல்லும் தருணங்கள் அடிக்கடி நிகழும்.

இதே போல் ஒவ்வொரு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நிகழ்த்து கலை இருந்திருக்கிறது. அவை காலப்போக்கில் கரகாட்டத்தின் துணையாட்டமாக மாறி பின் செல்வாக்கு இழந்து அழிந்து போகின. இவற்றை ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன் தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலை களஞ்சியத்தில் தொகுத்திருக்கிறார்.

இலக்கியத்தில் உதாரணமென்றால் கம்பனின் அகலிகை கதையில் சுட்டப்படுவது பிறழ்வு காமமே. அகலிகை தூயவளாக இந்திரனோடு புணர்ந்தது அகலிகையின் மாயை, அகலிகை கவுதமர் என நினைத்தே கூடினாள் என்ற கதைகள் கடந்து ஐநூறு ஆண்டுகளில் உருவாகி வந்தவை. பத்மபுராணத்திற்கு பின்பு உருவாகி வந்த அகலிகை கதை.

கம்பனில் அகலிகையின் காமம் ஒரு தீற்றலாக வந்து செல்கிறது. ”அவேளாடும் காமப் புது மண மதுவின் தேறல் ஒக்க உண்டு, இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்” உணர்ந்தாள் என கண நேர அகலிகையின் காமத்தையும் சேர்த்தே கம்பன் உருவாக்குகிறான். அகலிகை கதையில் வாய்மொழி மரபின் செல்வாக்கு அதிகம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்திரன் பூனையாய் போவதும், சேவலாய் வருவதும் கம்பன் வாய்மொழி மரபிலிருந்து பெற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அகலிகையின் காமத்தை கண நேர தீற்றலாய் கம்பன் சொல்லிச் செல்வதையும் அங்கிருந்து பெற்றிருக்கலாம் என நான் ஊகிக்கிறேன்.

ஜெயமோகன் ஒரு கட்டுரையில் கம்ப ராமாயணத்திலும், கலிங்கத்துபரணியிலும் போர் சூழலில் அறமும் விழுமியங்களும் பேசப்பட்டதற்கு நிகராக பிறழ்வு நிகழ்வுகளும் வருகிறது எனக் குறிப்பிடுகிறார்.

மகாபாரத போரே அத்தகைய பிறழ்வு நிலையில் நிகழ்ந்தது தானே. பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி கதையின் கரு உபபாண்டவர்களிடம் இருந்தே இம்மண்ணில் தொடங்கி விட்டதே. மகாபாரதமோ, கம்ப ராமாயணமோ அப்பிறழ்வு நிலைகளை மட்டுமே தன் பேசு பொருளாக கொள்ளவில்லை என்பதே வேறுபாடு.

எனக்கு சாரு நிவேதிதா கப்பல் பாட்டும், பிற செவ்வியல் ஆக்கங்களும் கொண்டுள்ள பிறழ்வு நிலையின் நவீன தொடர்ச்சி என்றே பார்க்கிறேன். அவை அனைத்திலும் உள்ள பிறழ்வு தருணங்களை மட்டும் தன் கதையில் எடுத்துக் கொள்கிறார். இன்னும் சொல்லப் போனால் கப்பல் பாட்டு என்னும் ஒரு நிகழ்த்து கலை முன்வைத்த பிறழ்வை விட சாரு தன் எழுத்தில் முன்வைத்து கம்மி தான். ராமாயணமும், மகாபாரதமும் சென்று தொட்ட பிறழ்வில் ஒரு சதவீதம் கூட சாரு எழுத்து தொடவில்லை என்றே படுகிறது. ஒரு நவீன எழுத்தாளனாக சாரு முன்னே சொன்னவைகளின் தீற்றலையே தன் எழுத்தில் மறு உருவாக்கம் செய்கிறார்.

எனவே சாரு தன்னியல்பாக கப்பல் பாட்டு கலைஞனின் நவீன மரபாகிறார். தன் தரப்பை வலுசேர்க்க கோம்பலையும், ப்யூகோவ்ஸ்கியையும் தன்னுடன் எடுத்துக் கொள்கிறார். உலக சினிமாக்களில் தன் தரப்பை காண்கிறார்.

இதனை சொல்லும் போதே இதற்கான எல்லைகளையும் சுட்ட வேண்டியுள்ளது. நான் முன்னர் சொன்னது போல் செவ்வியலக்கியங்கள் பிறழ்வை மட்டுமே பேசுபொருளாக கொள்ளவில்லை. கப்பல் பாட்டு போன்ற நிகழ்த்து கலைகள் இங்கே வில்லுபாட்டு போல் பெரும்போக்காக நிகழ சாத்தியமற்றவை. அவை அங்கே ஊர் எல்லையில் எந்த எதிர்ப்பும் இன்றி நிகழ்ந்துக் கொண்டிருக்கும். சாருவின் எழுத்தும் தொடர்ந்து வரும் இந்த மரபின் ஒரு கண்ணி என்பதால் முக்கியமானது. அதே போல் அதற்கான எல்லைகளை வகுத்துக் கொண்டது.

பிறழ்வு காமம், வன்மம் அருவருப்பு மட்டும் தன் பேசுபொருளாக கொள்ளும் போது அது வெகுவாசிப்புக்கு எதிரான ஒன்றாக தன்னியல்பிலேயே அமைந்து விடுகிறது. ஆனால் அவை எழுப்பும் கேள்வி நாம் சென்று தொட நினைக்காத நம் அடி மன ஆழத்தின் பிறழ்வுகளை அதன் காமங்களை, வன்மங்களை, அருவருப்பை நம் முன் சுட்டிக் காட்டுவதனாலேயே நாம் அதனை சென்று தொட தயங்குகிறோம் என வாசகனாக உணர வேண்டும். எனவே இவ்வகை எழுத்து எல்லோருக்கும் உவப்பானதல்ல. ஆனால் இவை இங்கே இப்போது முளைத்தது அல்ல, என்றென்றும் என இங்கே இருந்துக் கொண்டிருப்பது. அதன் இன்றைய கண்ணியாக சாரு உள்ளார்.

இறுதியாக, அழகர்கோவிலின் கிழக்கு கோபுரத்தை முற்றாக கண்டவர்களுக்கு ஒன்று தெரியும். அதன் மையத்தில் விஷ்ணு பாற்கடலில் பள்ளிக் கொண்டு அமர்ந்திருப்பார், கண்ணன் காளிந்தி நடனம் ஆடிக் கொண்டிருப்பான். முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும், அசுரர்களும் அதில் இருப்பார்கள். மும்மூர்த்திகளும், அவர்களின் துணைவியரும், திசை தேவர்களும் அதில் உண்டு. அதன் தெற்கு மூலையில் ஒரு பெண் மூன்று, நான்கு ஆண்களுடன் புணரும் சிற்பமும், ஒரு ஆண் நான்கு பெண்களுடன் புணரும், குரங்கு, குதிரையுடன் புணரும் சிற்பம் அங்கே உண்டு. ஆண் குரங்குடன் புணரும் சிற்பம் கூட அங்கே உண்டு.

அங்குள்ள அனைத்து சிற்பத்தையும் பார்த்த பின் அந்த பீபத்ஸ ரசம் தருணம் சிற்பங்களை பார்த்து ரசிப்பதும், அருவருத்து விலகி செல்வதும் அவரவருக்கானது. பெரும்பாலும் அச்சிற்பங்களை மனித மனம் தவிர்த்து செல்லவே விரும்பும். ஆனால் அச்சிற்பம் அங்கே என்றும் இருக்கும், அதன் பின்னால் உள்ள சிற்பியும் அச்சிற்ப வடிவில் இருப்பான். அங்கிருந்து நம்முள் இருக்கும் பீபத்ஸத்தை நமக்கு சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பான். அதுவே மொத்த கோபுரத்தில் அவனது பணி. சாரு அந்த பீபத்ஸ சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் நவீன தொடர்ச்சி என்றே நான் பார்க்கிறேன். விஷ்ணுபுரம் விருது பெறும் சாரு நிவேதிதாவிற்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைபோகனின் திகிரி
அடுத்த கட்டுரைராஜம்மாள் தேவதாஸ்