தி.சா.ராஜூ,கடிதம்

தி.சா.ராஜு

நான் பள்ளிக்கூடத்தில் மாணவனாக இருந்த காலக் கட்டத்திலிருந்து – அங்கு பள்ளிக்கூட நூலகத்திற்கு வந்து கொண்டிருந்தது தினமணி நாளிதழ். பொறுப்பாசிரியர் ஐராவதம் மகாதேவன் என்றிருக்கும், நடுப்பக்க கட்டுரைகள் அடிக்கடி தி.சா.ராஜு பெயரில் வந்து கொண்டிருந்தன. அதன் பிறகும் அடுத்து வந்த பத்து ஆண்டுகள் வரை தி.சா.ராஜு எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகளை, சிறுகதைகளை படித்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு ஈராயிரமாவது ஆண்டிலிருந்து இந்த இருபது ஆண்டுகள் கிட்டத்தட்ட அவர் எதையுமே எழுதவில்லை, அல்லது பிரசுரமாகவில்லை

சுத்தமாக மறந்து போன பெயராகிப் போன தி.சா.ராஜுவை இன்று தமிழ் விக்கியில் பார்க்கும்போது நினைவுகள் எதுவும் முற்று முழுவதுமாக காணாமல் போய்விடுவதில்லை, தமிழ் விக்கி இதுபோல ஒவ்வொருவரைப் பற்றியும் தேடித் துருவி ஆவணப்படுத்தும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர் இன்றைய புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது நம் பெருமிதங்களில் ஒன்று.

கொள்ளு நதீம்

அன்புள்ள ஜெ

தி.சா.ராஜூ இன்று எத்தனைபேரால் படிக்கப்படுவார் என்று தெரியவில்லை. ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது. சில எழுத்துக்கள் காலம் கடந்து நிற்கும். பெரும்பாலும் மறைந்துவிடும். ஆனால் ஓர் எழுத்தாளரின் படைப்புகளில் சிறந்தவை என சில இருக்கும். அவற்றை தேர்வுசெய்து தொகுப்புகளாகக் கொண்டுவரவேண்டும். அவ்வாறு தொகுப்புகளைக் கொண்டுவரும் வழக்கம் உலகம் முழுக்க உண்டு. தி.சா.ராஜூ போன்று ஒரு சில நல்ல கதைகள் எழுதி மறக்கப்பட்டவர்களின் படைப்புகள் அப்படி தொகுக்கப்பட்டால் வரலாற்றில் அவர் நீடிப்பார். அப்படிப்பட்ட தொகுதிகளை வெளியிட நம் பதிப்பகங்கள் ஆர்வம் காட்டவேண்டும்

ஜெயராமன்

முந்தைய கட்டுரைஆரோக்ய நிகேதனம்
அடுத்த கட்டுரைகிருஷ்ணன் நம்பி