புரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி

கார்க்கி

தாய் – மாக்ஸிம் கார்க்கி

சமீபத்தில் கார்க்கியைப்பற்றி நினைக்கவேண்டியிருந்தது. ஊட்டியில் குருகுலத்துக்குள் நித்யாவின் அறையைப்பார்க்க நண்பர்கள் விரும்பினார்கள். உள்ளே செல்லும்போது ஒருவர் நான் நித்யாவைச் சந்தித்த நாட்களைப்பற்றிச் சொல்லும்படி கோரினார். நான் நித்யாவைச் சந்திக்க வந்த நாளைப்பற்றி விவரித்தேன்.

சாமியார்கள்மேல் பெரும் சலிப்பு இருந்த காலகட்டம். நிர்மால்யா  கட்டாயப்படுத்தியும்கூட நான் ஊட்டி குருகுலத்துக்குச் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் அவர் சொன்னார், நித்யா கார்க்கியைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பதாக. ஒரு சின்ன ஆர்வம் ஏற்பட்டது. குருகுலம் வந்தேன். நான் உள்ளே நுழைகையில் அவர் காவிநிறக் குளிருடையும் குல்லாவும் அணிந்து குனிந்து புதிதாகப்பூத்த ரோஜாக்களைப் பார்த்துக்கொண்டு புத்தம் புதியதாகப் பிறந்தவர் போல வந்து கொண்டிருந்தார்.என்னைப்பொறுத்தவரை அது ஒரு தரிசனம்.

நித்யா,கார்க்கியைப்பற்றி எழுதிய நூல் பின்னர் வெளியாகியது. அதில் அவர் கார்க்கியை ஒரு பேரன்பின் சித்திரமாகவே காட்டியிருந்தார். தினமும் ஒருமணிநேரம் அவர் சொல்வதை ராமகிருஷ்ணன் எழுதிக்கொள்வார். நான் அந்த சபையில் இருந்து அவரிடம் கார்க்கியைப்பற்றி விவாதிப்பேன். கார்க்கியை நான் முழுமையாக நிராகரிக்கும் மனநிலையில் இருந்தேன்.

தமிழ் நாவல்களை மிக அதிகமாகப் பாதித்த அன்னியமொழி நாவல் எது என்ற கேள்விக்குக் கணிசமான பேர் மாக்ஸிம் கார்க்கியின் `தாய்’ என்று கூறக்கூடும். அது உண்மையும் கூட. பல தமிழ் எழுத்தாளர்களின் குழந்தைகளுக்குக் கார்க்கி என்று பெயர் உண்டு (உதாரணம் பாவண்ணன்).கார்க்கியின் நாவல் மிகத்தொடக்க காலத்திலேயே 1950களில், ரகுநாதன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்து பரவலாகப் படிக்கப்பட்டது. அந்த நாவலை ஒட்டி ஆழமான விவாதங்களும் நடந்தன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 1960, 70களில் `தாய்’, ராகுலசாங்கிருத்தியாயனின் `வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற `அரை’ நாவல் ஆகியவற்றைப் படிக்காத இலக்கியவாதிகளே இருக்க மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

தமிழக முற்போக்கு இலக்கிய அலையை உருவாக்கியவை இவ்விரு படைப்புகளும்தான் என்றால் அது சற்றும் மிகையல்ல. இன்னும் கூறப்போனால் தமிழ் அறிவுலகம்,சித்தாந்த விவாதங்கள், தத்துவ நூல்கள் மூலம் மார்க்ஸியத்தின் இலட்சியவாதத்தையும் வரலாற்றுப் பார்வையையும் புரிந்து கொண்டது என்று கூறுவதைவிட இவ்விரு இலக்கியப் படைப்புகளின் வழியாகப் புரிந்து கொண்டது என்பதே முறையாகும். இன்றும் இவ்விரு நூல்களும் நம்ப முடியாத செல்வாக்குடன்தான் திகழ்கின்றன.

ராகுல்ஜியின் நூல்,தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக (மொழி பெயர்ப்பு கண முத்தையா) சமீபத்தில் மறுபதிப்பு வந்தது. சராசரியாக இரண்டு வருடத்திற்கு ஒரு பதிப்பு என்ற கணக்கில் இருபது பதிப்புகள் வந்துள்ளன. இப்போதும் தமிழ்நாட்டு இடதுசாரி இயக்கங்கள்,தங்கள் புதுத்தேர்வு உறுப்பினர்களுக்கு வாசிக்கத்தரும் நூல்களாக இவை இரண்டும் உள்ளன.

என் கருத்தில் இலக்கியம் மூலம் ஒரு புது சித்தாந்தம், ஒரு வாழ்க்கைத் தரிசனம் ஒரு சமூகத்துக்கு அறிமுகமாவது மிகச் சிறந்த விஷயம்தான். சித்தாந்தம் எப்படியோ `மனித’ அம்சத்தை `வாழ்வனுபவ’ அம்சத்தைத் தவிர்த்து விடுகிறது. ஏதோ ஒரு இடத்தில் அது வெறும் மூளை விளையட்டாகவும் அகங்காரப் பிரகடனமாகவும் சுருங்கி விடுகிறது. இலக்கியம் அப்படியல்ல. கூறப்பட்டவற்றை விட அதிகமாக அளிக்க இலக்கியத்தால் முடியும்.’

புரட்சிகரக் கருத்தொன்றை `அறிய’ நேரும் தமிழ் மனம் அதனை ஓர் அன்னியக் கருத்தாகக் கண்டு பிறகுதான் ஏற்கிறது. `தாய்’ போன்ற ஒரு நாவல் வழியாக அதை அடைய நேரும் போது அது அக்கதாபாத்திரங்களுடன், சூழலுடன் மெதுவாகத் தன்னையும் அடையாளம் கண்டு கொள்கிறது. தன் சொந்தப் புரட்சிகரத்தையே அது கண்டடைகிறது.

மார்க்ஸியத்தின் அரசியல் ரீதியான பாதிப்பு, தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியமானது. சங்கம் சேர்ந்து உரிமைக்குரல் எழுப்பும் எந்தத் தருணத்திலும் _ எந்தக் கருத்தியல், கட்சி சார்ந்து ஆனாலும் – மார்க்ஸியத்தின் சொற்கள் ,வழிமுறைகள்,மனோபாவங்கள் இங்கு வெளிப்படுவதைக் காணலாம். ஆனால், அதை விட முக்கியமானது மார்க்ஸியத்தின் சமூகப் பங்களிப்பு. என் தனிப்பட்ட கணிப்பில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூக மனத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பாதிப்பு, மார்க்ஸியம் மூலம் உருவானதேயாகும்.

காந்தியம் ஒரு விலகிய தளத்தில் (அன்றாட வாழ்வுக்குத் தொடர்பற்ற புனித தளத்தில்) இயங்கிய கருத்தியலாகவே இங்கு இருந்தது. மேலும் காந்தியம் தொடர்ந்து இங்கிருந்த சமூக மனக்கட்டுமானத்துடன் சமரசம் செய்தபடியே இருந்தது. ஆகவே அது பெரிய அதிர்வுகளை உருவாக்கவில்லை. திராவிட இயக்கங்கள் மார்க்ஸின் தரிசனங்களில் எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்களைப் பிரகடனங்களாக மாற்றின. மேலோட்டமான அலையை மட்டுமே அவை உருவாக்கின.

தன் தளர்வற்ற தொண்டர் வரிசையாலும், தொடர்ச்சியான கருத்தியல் பிரச்சாரத்தாலும் ,படிப்படியாக இயக்க வடிவம் கொண்டு சமூகப் போராட்டங்களாக மாறிய அமைப்பு வல்லமையினாலும், மார்க்ஸியம் தமிழ் மனதில் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கியது. ஒரு தமிழ் மனதில் இன்று காணக் கிடைக்கும் மானுடசமத்துவம் சார்ந்த எண்ணங்கள், மனிதனின் உரிமைகள் பற்றிய பிரக்ஞைகள், வரலாறு குறித்த புரிதல் அனைத்துமே மார்க்ஸியத்தால் உருவாக்கப்பட்டவை என்பதை அவர்கள் உபயோகிக்கும் சொற்கள் மூலமே அறியலாம்.

இம்மாபெரும் பாதிப்பை உருவாக்கிய அலையின் ஊற்றுப்புள்ளியாக ஒரு இலக்கியப் படைப்பு இருந்திருக்கிறது என்றால் அதன் வரலாற்று முக்கியத்துவம் சாமானியமானதல்ல. ‘தாயை’த் தவிர்த்து இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று கூடக் கூறிவிடலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்நாவலின் பங்களிப்புக் குறித்து இதுவரை ஏதும் எழுதப்பட்டதில்லை. ஏன் இந்த இலக்கியப் படைப்பு குறித்து இதுவரை சுயமான ஒரு விமர்சனக் கணிப்பைக் கூடத் தமிழ்ச்சூழலில் எங்கும் முன்வைத்தது இல்லை. இதன் இருப்பு கிட்டத்தட்ட ஆழ்மன அளவிலேயே இருந்து கொண்டிருக்கிறது.

உணர்ச்சிகரமான நடையில் எழுதப்பட்ட நேரடியான கதை என்பது ‘தாயி’ன் முக்கியமான பலம். பிற ருஷ்ய பெரும் நாவல்களில் காணப்படும் மிக விரிவான கதைப்புலமும் விரிந்து விரிந்து பரவும் சித்தரிப்பும் இந்நாவலில் இல்லை. முரண்பட்டுச் செல்லும் சிக்கலான கருத்துச் சரடுகள் இல்லை. ஆகவேதான் இது இலக்கியப் பயிற்சியே இல்லாத எளிய வாசகனிடம் நேரடியாகப் பேச முடிகிறது.

அத்துடன் அவன் மனம் இலக்கியப் பயிற்சி இல்லாததனால் மிகுந்த நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் என்ற சாதக அம்சமும் சேர்ந்து கொள்கிறது. பதினெட்டு பத்தொன்பது வயதில், அறியும் ஆவலும் கற்பனைத்திறனும் இலட்சியக் கனவுத் தன்மையும் உச்சத்தில் இருக்கும் தருணத்தில், முதன்முதலாகப் படிக்கும் நாவலாக இது ஒரு வாசகனிடம் வந்து சேரும்போது மலைவெள்ளப் பெருக்குபோல அவனை அடித்துச்சென்று விடுகிறது.

இலக்கிய வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அறிந்தது இதன் கதை. கடுமையான சுரண்டல் சூழலில் வாழும் தொழிலாளர் காலனி. அங்கு படிப்படியாகப் புரட்சியின் விதைகள் முளைக்கின்றன. அடக்குமுறைக்கு எதிரான இயக்கம் தட்டியெழுப்பப்படுகிறது. அதில் ஈர்க்கப்படுகிறான் இளம் தொழிலாளியான பாவெல். படிப்பின் மூலமாக மெல்லப் புரட்சியாளனாகிறான்.

அவன் அன்னை அவனது மாற்றத்தைப் பீதியுடன் பார்க்கிறாள் `தன்னந்தனியாக நீ என்ன செய்து விடமுடியும்?’ என்று மீண்டும் மீண்டும் அவள் கேட்கிறாள். தன்மகன் அன்னியப்பட்டு விடுவான் என்றும், பிரம்மாண்டமான சக்திகளினால் தோற்கடிக்கப்பட்டு விடுவான் என்றும் அஞ்சுகிறாள். அவனைத் தடுக்க முயல்கிறாள். துயரமும் ஆற்றாமையும் கொள்கிறாள். படிப்படியாக அவளே பிரக்ஞை பெற்று ஒரு புரட்சிக்காரியாக மாறுவதுதான் நாவலின் மையச்சரடு. `இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது’ என்று அவள் கூவியபடி கைதாகும் போது நாவல் முடிகிறது.

இலட்சியவாதத்தை ஒற்றைப்படையான தீவிரத்துடன் முன்வைக்கிறது இந்நாவல் .ஒரு வேளை இலட்சியவாதம் என்பதே ஒற்றைப்படையான தீவிரம்தானோ? பாவெல், அன்னை போன்ற எல்லா இலட்சியவாதிகளும் படிப்படியாக பிம்பமாக்கப் படுகிறார்கள். அவர்களுடைய அகமுரண்பாடுகளோ,அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் ஊடுபாவுகளோ கருத்தில் கொள்ளப்படவேயில்லை.

இந்நாவலின் முக்கியமான குறை என்பது இதன் புரட்சிகரத் தன்மையை உருவகித்திருக்கும் முறைதான். இந்நாவலில் சுரண்டலைத் தன் அடிப்படையான இயல்பாகக் கொண்ட அதிகார அமைப்பு `வெளியே’ உள்ளது. அது குறித்த ஒரு விழிப்புணர்வு உருவாகி விட்டால் அதை எதிர்த்துப் போராட ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்கிறது இது. சுரண்டப்படுபவர்களின் உள்ளத்தின் சிக்கல்களும் சவால்களும் இதன் பேசுபொருட்கள் அல்ல.

உண்மையில் ஒரு சுரண்டல்சார்ந்த அதிகார அமைப்பு நாம் அதற்கு அளிக்கும் சம்மதங்களின் மீது தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதன் இருப்பை நமது பயம், சுயநலம், நாம் மரபாகப் பெற்ற நெறிகள், நமது ஆழ்மனக் கூறுகளின் பலவிதமான தேவைகள் முதலிய எண்ணற்ற காரணங்களுக்காக நாமே ஏற்றுத் தக்கவைத்திருக்கிறோம். மிகமிக அபூர்வமான வரலாற்றுத் தருணங்களில் மட்டுமே பொது மக்களுக்கு இம்மிகூடப் பங்கில்லாத முற்றிலும் வெளியே உள்ள அடக்குமுறை அரசு இருக்க முடியும்.

ஆகவே சுரண்டலுக்கு எதிராகப் போராட்டம் என்பது நமது சமரசங்களுக்கு எதிரான போராட்டம்தான். அடிப்படையில் புரட்சிகரம் என்பது ஒருவன் தன் எல்லைகளுக்கு எதிராகக் கொள்ளும் விழிப்பு நிலைதான். அதிகார அமைப்பு வெளியே இல்லை உள்ளேதான் உள்ளது. அதிகாரம், புரட்சிகரம் இரண்டையும் இப்படி மேலோட்டமாகப் புரிந்து கொண்டதுதான் இந்நாவலின் மிகப்பெரிய சரிவு.

கார்க்கி இதன் கருத்தியல் சட்டத்தை `வெளியே’ பார்த்துச் சமகால மார்க்ஸியக் கருதுகோள்களில் இருந்து பெற்றுக் கொண்டார். தன் உள்ளே பார்த்திருந்தாரானால் புரட்சிகரத்தின் உண்மையான ஊற்றைக் கண்டடைந்திருப்பார். தல்ஸ்தோயியின் `நெஹ்ல்யுடோவும்’, தஸ்தயேவ்ஸ்கியின் `ரஸ்கால்நிகாப்பும்’ துர்கனேவின் `பசரோவும்’ அப்படித்தான் கண்டு கொள்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும்போது இன்னொன்றும் தெரியவரும் புறவயமான கொடிய அடக்குமுறை நிலவும் சூழலில் மட்டுமல்ல, இனிமையான வாழ்வுநிலை உள்ள சூழலில்கூட மோசமான சுரண்டல் நிலவக்கூடும். அச் சுரண்டலை எதிர்ப்பதே மேலும் சிரமமானது.

இன்றைய வாசகர்களில் கணிசமானோர் தாய் நூலை எளிதில் கடந்து வந்து விடுகிறார்கள். பதினாறு வயதில் சாண்டில்யனையும் கல்கியையும் படித்துக் கச்சணிந்த கொங்கை மாதரையும் ஆதித்த கரிகாலனைக் கொன்ற கொடியவனையும் பற்றி யோசித்திருந்தது போலப் பதினெட்டு வயதில் உருவான ஓர் அசட்டு இளமைக்கனவாக அவர்கள் இந்நாவலைப் பிறகு கருதத் தலைப்படுகிறார்கள். ருஷ்யாவிலும், சீனாவிலும் `தாய்’ எப்படி ஒரு வேடிக்கைப் பொருளாக உள்ளது என்பதை இந்நாடுகளுக்குச் சென்று வந்த சச்சிதானந்தனும் கெ.ஜி. சங்கரப்பிள்ளையும் (மலையாளத்தில்) எழுதியுள்ளார்கள்.

ஆனால் அத்தனை எளிதில் நிராகரித்து விடமுடியாத சில அம்சங்கள் இப்படைப்பில் உள்ளன. ஒன்று: வன்முறையை எதிர் கொள்ளும் தருணங்களில் மானுட மனதில் வன்முறைக்கு எதிர்விசையாக உருவாகும் உச்சகட்டமான உறுதிப்பாட்டை பல தருணங்களில் இந்நாவல் காட்டித் தருகிறது. நீதிக்காக மனித மனம் கொள்ளும் ஆதி உத்வேகத்தின் சித்திரம் இது. நித்யா அதையே பெருங்கருணை என்றும் சொல்கிறார். இந்நாவலின் கலைவெற்றி அந்த இடங்களை அடைந்தமையில்தான் உள்ளது.

கருத்து என கொண்டால் இது பெண்ணை முன்வைப்பதைச் சொல்லலாம்.புரட்சி அரசியல் என்பது ஆண்களின் அதிகார விளையாட்டாக இருக்கும் போது அது எதையும் சாதிப்பதில்லை அது பெண்களிடம் வரவேண்டும், அன்னையரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இந்நாவல் கூறுகிறது. கம்யூனிச சித்தாந்தத்தில் மார்க்ஸ் முதல் ஸ்டாலின் வரை எவராவது பெண்களின் இத்தகைய முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதாக தெரியவில்லை. இந்த அம்சத்தால் தாய் மிக முக்கியமான ஒரு பெண்ணியப் பிரதி ஆகிறது.

’அன்னை’ யின் வரலாற்று முக்கியத்துவம் எதுவாயினும் அதன் இலக்கிய முக்கியத்துவம் குறைவுதான். காரணம் அது எளிமைப்படுத்துவதன் வழியாக ஒரு கருத்தை முன்வைத்து வாதிடும் பிரச்சாரப் படைப்பு. இலக்கியப் படைப்பின் அடிப்படை இயங்குமுறை என்பது சிக்கல் படுத்துவது, உள்ளிழைகளைத் தேடுவது. அந்த வகையில் கார்க்கியின் முக்கியமான நாவல் (தமிழிலும் வெளிவந்துள்ள) ‘அர்த்தமோனவ்கள்’ தான். ருஷ்யப் பெரும் நாவல்களின் விரிந்திறங்கிச் செல்லும் பார்வை உடைய முக்கியப்படைப்பு இது.

ரகுநாதனின் மொழிபெயர்ப்பே இந்நாவலின் பலவீனமான அம்சம். செயற்கையான ஆர்ப்பாட்ட நடையில் இதை பெயர்த்திருக்கிறார். 1975ல் முன்னேற்றப் பதிப்பகம் இதன் மறுபதிப்பை வெளியிட்டது. 1985ல் இறுதிப்பதிப்பு வெளிவந்துள்ளது.

 

மறுபிரசுரம். முதற்பிரசுரம்Jul 18, 2011 

முந்தைய கட்டுரைபனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்