ஊற்றுமலையும் உ.வே.சாவும் – கடிதம்

ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்

உ.வே.சாமிநாதையர்

அன்புள்ள ஜெ.,

ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பத்தேவரைக் குறித்த தமிழ்விக்கி பதிவு படித்தேன். புலவர்களைப் புரக்கும் அவருடைய தமிழ்ப்பணி மிகவும் வித்தியாசமானதும் போற்றத்தகுந்ததும் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஆதரித்த புலவர்கள் வரிசையில் உ.வே.சாவின் பெயர் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. உ.வே.சா ‘என் சரித்திரத்’தில் ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பரைச் சந்தித்தது குறித்து விரிவாக எழுதியுள்ளார். அவருடைய சிந்தாமணிப்பதிப்பின் போதும், அவர் மகனின் உபநயனத்தின்போதும் அவர் பணஉதவி செய்ததைக் குறிப்பிடுகிறார். அவருக்கும் ஜமீன்தாருக்கும் தொடர்ந்த கடிதப்போக்குவரத்து இருந்திருக்கிறது. அதில் பழந்தமிழ் நூல்களிலிருந்து சந்தேகங்களைக் கேட்பாராம் மருதப்பர். ‘மற்றெதெல்லாம் மட்டும் புரிந்து விட்டதாமா?’ என்று ஐயருக்கு ஒரு சந்தேகம். தன் மகனுடைய உபநயனம் முடிந்தபிறகு 1891 ஜூலை மாதம் மருதப்பரைச் சந்திக்கும்பொருட்டு அவர் ஊற்றுமலைக்குப் பயணமாகிறார்.

ஊர் எல்லையில் தான் வருவது தெரிந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஜமீன்தார் துப்பாக்கி, வேட்டைநாய்கள் சகிதம் ராணுவ உடையில் வந்துநிற்கவும் சற்றே பயந்துவிடுகிறார் உ.வே.சா. ‘குளியல், சாப்பாடெல்லாம் முடித்து பொறுமையாகத் தயாராகுங்கள். ஒருவரைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று சென்று விடுகிறார்   மருதப்பர். அரண்மனையில் அவரைச் சந்திக்கச் செல்லும்போது திருவானைக்காப் புராணம் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் புலவர்களிடம் மருதப்பர்  உரையாடிக்கொண்டிருப்பதிலேயே அவர் தமிழறிவு மீதிருந்த உ.வே.சா வின் சந்தேகங்களெல்லாம் தெளிந்துவிடுகின்றன. புலவர்களிடம் உரையாடி முடித்தபின் உ.வே.சா வைப்பார்த்து ‘உத்தரவாக வேணும்’ என்கிற அந்த அரசரின் பணிவை நெகிழ்கிறார் உ.வே.சா.

உ.வே.சாவின் தமிழ்ச்சுவையில் மருதப்பரும், மருதப்பரின் உபசரிப்பில் உ.வே.சாவும் திளைத்திருப்பதாக சில நாட்கள் கழிகின்றன. ‘ராஜஉபசாரம் என்றால் என்னவென்று கண்டேன். நான் ராஜன் அல்ல என்பதுதான் குறை’ என்கிறார் உ.வே.சா. கடைசியில் ‘எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இங்கு வரவேண்டும்’ என்ற உத்தரவோடு பிரியாவிடை தருகிறார் மருதப்பர். அதுமட்டுமல்லாமல் உ.வே.சா வின் சுவடிவேட்டைக்கு உறுதுணையாக மாட்டுவண்டி, சமையல்காரனோடு, பாத்திரங்கள் எல்லாம்  அனுப்புகிறேன் என்று கூறிய மருதப்பரின் காலில் விழாத குறையாக இவற்றைப் பராமரிக்கும் தன் சக்தியின்மையைக் காரணங்காட்டி மறுத்துவிடுகிறார் உ.வே.சா. அந்நாளைய வழக்கப்படி மருதப்பர்மேல் பத்து வாழ்த்துப்பாடல்களைப் பாடி அளித்து, விடைபெற்றுக் கொள்கிறார்.

உ.வே.சா  ‘காலப்போக்கு’ என்ற வார்த்தையால் அவருடைய நேர மேலாண்மையைப் பற்றி ஆச்சரியமாகக் குறிப்பிடுகிறார். காலை நடையிலேயே – சிறந்த சாலைகளை ஊர்நெடுக அமைத்திருக்கிறார் – மக்கள் குறை கேட்டல், மாடு, குதிரை, யானைகள் பராமரிப்பு என்று எல்லாவற்றையும் நேரடியாகச் செய்கிறார். காலை 8 முதல் 10 வரையும், மறுபடியும் மாலை 2 முதல் 4 வரையும் புலவர்களுடன் தமிழில் தோய்தல் என்று நேரத்தை வீணடிக்காத நிகழ்ச்சிநிரல். உ.வே.சா தன் ‘நான் கண்டதும் கேட்டதும்’ புத்தகத்தில் ஒரு கட்டுரையில் பெரிய கோயில்களுக்கு இணையாக ஊற்றுமலை நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் கொடுக்கப்படும் நைவேத்யங்களைப் பற்றிக் கூறுகிறார்.

 “புத்துருக்கு நெய்யில் செய்யப்பட்ட வர்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேன்குழல் முதலிய பஷியவகைகளும் ஒவ்வொரு நாளும் அங்கே நவநீத கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்யப்படுவதைக் காணலாம். அதற்குரிய நித்தியப் படித்தரம் பத்து வராகனென்று கேள்வி. ஒரு லாடு உரித்த தேங்காயளவு இருக்கும். பெரிய சந்தனக் கல்லளவு தேன்குழல். உத்ஸவ காலங்களில் இவை பன்மடங்கு சிறப்பாக இருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

புலவர்களுக்குத் தகுந்த சன்மானங்கள் செய்ததோடு அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் பிரசாதங்களை தினந்தோறும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் மருதப்பர். தமிழ்வளர்ப்பவர்களை வளர்ப்பது தமிழ்வளர்ப்பதும்தானே? இதுபோலப் புரவலர்களின் ஆதரவினால்தான் புதிய பதிப்பக முயற்சிகளில் உ.வே.சா வால் தொடர்ந்து ஈடுபட முடிந்தது. கலைகள் பொலிந்தது உபரியின் விளைவால்தான் என்று நீங்கள் கூறுவதற்கு நேரடி உதாரணம்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைகார்த்திக் புகழேந்தியின் ‘கல்மனம்’
அடுத்த கட்டுரைவிடுதலை எனும் கொண்டாட்டம் – ரம்யா