மலேசியா வாரம்-3

Jeyamohan: The Free and Ferocious Elephant of Tamil Literature

Stories Of the True

இலக்கியப் பெருவிழாக்களில் கலந்துகொள்வது பற்றிய ஒரு தயக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. அவை பெருவிருந்துகள், களியாட்டங்கள். அங்கே ஆழமான இலக்கிய விவாதங்களுக்கு இடமில்லை. பெரும்பாலும் அதற்கான பொழுதும் அளிக்கப்படுவதில்லை. பல விழாக்களில் ஒரே சமயம் வெவ்வேறு அரங்குகள் நடைபெறும். எவற்றிலும் ஆளிருக்க மாட்டார்கள். பெரும்பாலும் அடுத்த அரங்குக்கான பங்கேற்பாளர்களே அமர்ந்திருப்பார்கள்.

அத்துடன் இந்தவகையான விழாக்களில் அதிகக் கவனம்பெறுபவர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும், பிரபல ஆங்கில ஊடகங்களில் தொடர்ந்து இடம்பெறும் ஆளுமைகள்தான். அதுவும் இயல்பானதே. விருந்துகள், உரையாடல்கள் என தன்னை புறவயமாகத் திறந்துகொள்ளாதவர்களுக்கு இந்த விழாக்களில் பெரிய இடமிருப்பதில்லை.

அ.பாண்டியன்

ஆனால் இலக்கியவிழாக்களால் ஒரு நன்மை உண்டு, அவை இலக்கியவாதிகளை அறிமுகம் செய்கின்றன. பொதுப்பெருக்காக வந்துசெல்லும் பார்வையாளர்கள் நடுவே இலக்கிய ஆர்வமும், பயிற்சியும் கொண்ட சிலர் இருந்தால் அவர்கள் புதிய இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்துகொள்ள முடியும்.

அதேசமயம் இத்தகைய இலக்கியவிழாக்களில் பங்குபெறவேண்டும் என்றால் நம் கதை ஆங்கிலத்தில் கிடைக்கவேண்டும். ஓரளவேனும் வாசிக்கப்பட்டிருக்கவும் வேண்டும். நான் பல விழாக்களில் கலந்துகொண்டிருந்தாலும் அஸிம்டோட் இதழின் விருது பெற்ற பின்னரே என் இருப்பு சற்றேனும் கவனிக்கப்பட்டது.

பினாங்கில் நடைபெற்ற ஜார்ஜ்டவுன் லிட் பெஸ்ட் உலகளாவிய புகழ் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேயத்தமிழர்கள் அதில் பங்கெடுப்பது நின்றுவிட்டது. தமிழ்நூல்கள் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் கிடைக்காதது ஒரு காரணம். அதற்குரிய ஆளுமைகள் அமையவில்லை என்பது இன்னொரு காரணம்.

இம்முறை நவீன் அதன் அமைப்பாளர்களில் ஒருவர். அண்மையில் அவருடைய கதைகள் மலாய் மற்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தமையால் அவருடைய இலக்கிய அறிவும் இடமும் ஏற்பு கொண்டன. அவர் மலேசிய, மற்றும் தமிழ்நாட்டு இலக்கியத்திற்கும் இடம் உருவாக்கினார்.

காலை பத்துமணிக்கு என்னுடைய நிகழ்வு. நவீன் என்னை பேட்டி எடுப்பதாக திட்டம். ஆனால் அமைப்பாளர் பாலின் அந்நிகழ்வு ஆங்கிலத்தில் நிகழவேண்டும் என்றார். ஆகவே கனகலதா கேள்விகளை மொழியாக்கம் செய்வதென்றும் நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவதென்றும் முடிவாகியது.

ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல் நிகழ்ந்தது. நான் பதில்களை முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலுமாக கூறினேன். வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். அதன்பின் என்னுடைய Stories Of the True நூல் அங்கே வெளியிடப்பட்டது. அந்நூல் மலேசிய சிங்கைச் சூழலில் கவனிக்கப்படவேண்டும் என்பதே நான் அந்நிகழ்வுக்கு விரும்பிச் சென்றமைக்கான காரணம்.

அது நிகழ்ந்தது என தெரிந்தது. விற்பனைக்கிருந்த எல்லா பிரதிகளும் உடனே விற்றுமுடிந்தன. மேலும் பிரதிகளுக்கான கோரிக்கைகள் வந்துகொண்டிருந்தன. கிழக்காசியாவுக்கு மேலும் பிரதிகளுக்கான ஆணைகள் வந்தன என்றனர்.

நவீன் என்னிடம் கேட்ட கேள்விகள் பெரும்பாலும் மரபிலக்கியங்களையும் தொன்மங்களையும் மறு ஆக்கம் செய்வது குறித்தவை. அடிப்படை விழுமியங்களை உசாவுவதற்கு, மறுபரிசீலனை செய்வதற்கு அவ்விழுமியங்களை நிலைநிறுத்தியிருக்கும் செவ்விலக்கியங்கள் மேல் மறுவாசிப்பு நிகழவேண்டும் என்று நான் சொன்னேன்.

ஆனால் அவற்றை மாற்றிப் புனைவதில் எனக்கு ஆர்வமில்லை. நான்கு வகை மறுபுனைவுகள் இந்தியச் சூழலில் உள்ளன. ஒன்று அமிஷ், ஆனந்த் நீலகண்டன் பாணியிலான பொதுவாசிப்புக்குரிய மறுபுனைவுகள். அவை ஒருவகையான மிகைக்கற்பனையின் சுவாரசியத்துக்காகவே பேரிலக்கியங்களை அணுகுகின்றன.

இன்னொருவகை மறுபுனைவுகள் பிரதீபா ராய் போன்றவர்கள் எழுதுபவை. அவர்கள் தங்கள் சமகால, முற்போக்குக் கருத்துக்களை திரௌபதியைக் கொண்டு சொல்லவைக்கிறார்கள். வில்லன்களை நல்லவர்களும் நல்லவர்களை வில்லன்களுமாக ஆக்கி விளையாடுகிறார்கள்.

எஸ்.எல்.பைரப்பா போன்றவர்கலால் உருவாக்கப்படும் நவீனத்துவ மறு ஆக்கங்கள் மூன்றாவது வகைமை. அவையே இலக்கிய ரீதியாக முக்கியமானவையாக உள்ளன. எம்.டி.வாசுதேவன் நாயர், பி.கே.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அந்த வகை.

நான் உருவாக்குவது முற்றிலும் புதிய ஒரு எழுத்தை. இது செவ்வியல். வியாசன் எழுதியதுபோன்றே செவ்வியல், ஆனால் நவீன இலக்கியம். செவ்வியலுக்குரிய பரந்துபட்ட தன்மை, ஒவ்வொரு தருணத்திலும் உச்சம் தேடும் இயல்பு, ஒன்றை இன்னொன்றால் சமநிலைப்படுத்திக்கொள்ளும் போக்கு, தத்துவ – ஆன்மிக உசாவல் ஆகியவை கொண்டது.

வாசிப்பு பற்றி, பொதுவாசிப்புக்கான இடம் பற்றி மேலும் கேள்விகள் வந்தன. என் பதில்களை நான் கொஞ்சம் என்னை மறந்தபோது வழக்கம்போல சரளமாகவே சொன்னேன். அவை அரங்கிலிருந்த தமிழரல்லாத வாசகர்களை கவர்ந்திருப்பதை மறுநாள்தான் தெரிந்துகொண்டேன்.

டேவன் சாஸ்த்ரா என்னும் இலக்கிய இதழின் ஆசிரியரான ஃபடில் அலி தன் முகநூல் பக்கத்தில் அந்த உரையாடலைப் பற்றி இரு பதிவுகள் போட்டிருந்தார். “எழுத்தாளர் ஜெயமோகன் எனும் ஆளுமையின் தோற்றமே மொத்தக் கூட்டத்தையும் வசீகரித்தது. அவருடைய கருத்தாழமிக்க உணர்வுபூர்வமான கலந்துரையாடல் எனது சிந்தனையை ஒரு முகப்படுத்தியது.

ஜெயமோகன் முன் வைக்கும் தமிழ் இலக்கியம்  அதன் பண்பாட்டுக்கு  (பண்டைய இலக்கியங்கள் மற்றும் புராதான கதைகள்) மிகவும் நெருக்கமாக உள்ளது.  அவரது பார்வையில் இருந்து தற்போதைய புனைவுலகம் ஒரு தத்துவ பிரதிபலிப்போடு விவாதிக்கப்பட்டது.

(தமிழ் விக்கி மலேசியா விழா உரை)

பண்பாடும் மொழியும் ஒருங்கே இணைந்திருந்த தோற்றம் அதனுள் இருக்கும் இலக்கியத்தை இன்றைய நிலையில் அறிந்துக் கொள்ள பேருதவியாக அமைந்தது.

சமகால இந்தியாவின் தலை சிறந்த படைப்பாகக் கருதப்படும் இந்த நூல், பண்பாட்டு பொக்கிஷமாகவும், சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்கும் அடித்தளம் அமைக்கும்.

இந்திய கலாச்சாரத்தையும், ஜெயமோகனின் நூலையும் ஒவ்வொருவரும் கொண்டாட்டமாக்கி மகிழும் தருணம்”

பின்னர் டேவன் சாஸ்த்ரா இதழில் விரிவான கட்டுரை ஒன்றும் வெளியாகியது. (டேவன் சாஸ்த்ரா இதழ் கட்டுரை)

இந்த வகையான விழாக்களின் பெறுபயன் இதுவே. எங்கோ எவரோ இலக்கியமறிந்த ஒருவர் கவனிக்கிறார். அவர் நம்மை கொண்டுசெல்கிறார். இன்று உலக இலக்கியமே விற்பனை சார்ந்ததாக ஆகிவிட்டது. Stories of The True விற்பனையாவதனால்தான் அதற்கு மதிப்பு. விற்பனையாகவேண்டும் என்பதனால்தான் அறம் முதலில் வெளியிடப்பட்டது. எடுத்த எடுப்பில் கொற்றவையோ விஷ்ணுபுரமோ வெளிவந்திருந்தால் காணமலாகியிருக்கும். ஆனால் விற்பனைக்கும் அப்பாலிருப்பது இத்தகைய சில ஏற்புகள்.

மாலையில் பினாங்கில் ஒரு நடை சுற்றிவந்தோம். ஜார்ஜ் டவுன் கீழைநாடுகளில் என் மனம் கவர்ந்த நகரப்பகுதியாக ஆகிவிட்டிருக்கிறது. இங்கே எதன்பொருட்டு தங்குவதென்றாலும் கிளம்பி வந்துவிடுவேன் என நினைக்கிறேன்.

மறுநாள் மீண்டும் பிரம்ம வித்யாரண்யம். அங்கே ஒரு தத்துவ வகுப்பை நடத்தமுடியுமா என்று சுவாமி பிரம்மானந்தர் கேட்டிருந்தார். காலையில் கிளம்பி கூலிம் சென்று ஓர் உணவகத்தில் சாப்பிட்டோம். ஆச்சரியமான சமையல்.காலையிலேயே பொரித்த மீனும் மீன்கறியும் தயாராக இருந்தது. தமிழர் உணவகம்.

பிரம்ம வித்யாரண்யத்தில் மூன்று ஒருமணிநேர அமர்வுகளாக இந்திய தத்துவ மரபின் ஒட்டுமொத்த வரைபடத்தை அறிமுகம் செய்யும் வகுப்புகளை நடத்தினேன். மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிந்தது. கொரோனாவுக்கு முன் சந்தித்த நண்பர் சு.யுவராஜனையும் அவருடைய மனைவியையும் பையன்களையும் சந்தித்தேன். ஓர் இடைவெளியில் எழுதாமலாகிவிட்டிருந்தவர் தீவிரமாக எழுதவிருப்பதாகச் சொன்னார்.

(பி.கிருஷ்ணன் நூல் வெளியீடு, உரை)

மீண்டும் ஜார்ஜ் டவுன். சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த விஜியும் அழகுநிலாவும் கிளம்பிச் சென்றனர். மாலையில் நானும் அருண்மொழியும் கனகலதாவும் அருண் மகிழ்நனும் பினாங்கின் புகழ்பெற்ற தெரு உணவகச் சந்தைக்குச் சென்றோம். நான் அங்கே சீனமுறைப்படி பொரித்த ஆட்டிறைச்சியையும் பல்வகை பழங்கள்மேல் கருப்பட்டி சாறு ஊற்றிய ரோஜாக் என்னும் உணவையும் சாப்பிட்டேன்.

மெல்லிய மழைத்தூறல் இருந்தது. ஆகவே கூட்டம் குறைவு. அந்த இடத்தின் இனிமை என்பது விதவிதமான மனிதர்கள். கூடவே வெவ்வேறு வகைச் சமையல்கள். உணவு சமைக்கப்படுவதை கண்ணெதிரில் காணலாம். உலகமெங்குமே திறந்தவெளியில் அமர்ந்து உண்பது மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. வீட்டில் எப்போதுமே உள்ளே அமர்ந்து சாப்பிடுகிறோம். இது அதற்கு மாற்று.

இந்தியாவிலும் இந்தவகையான திறந்தவெளி உணவகங்களை அமைக்க அரசு முன்முயற்சி எடுக்கலாம். ஆனால் நம்மூர் கையேந்திபவன்கள் போல அசுத்தமான உணவாக இருக்கலாகாது. உணவின் தரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை. அரசின் கட்டுப்பாடும், அந்த அமைப்பே தனக்கு விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடும். மெரினாவை ஒட்டி அவ்வாறு ஓர் இடம் அமையும் என்றால் சென்னையின் முக்கியமான மையமாக அது மாறும்.

மறுநாள் அதிகாலை ஆறுமணிக்கு பினாங்கில் இருந்து விமானம். மூன்றரை மணிக்கு கார்வரும் என்றனர். மூன்றுக்காவது எழவேண்டும். அறைக்கு வந்தது பத்துமணிக்கு. நான் தூங்காமலிருக்க முடிவுசெய்தேன். விடிய விடிய தமிழ்விக்கி பதிவுகள் போட்டேன். 12 பதிவுகள் போட்டு முடித்தபோது மூன்று மணி. குளித்து உடைமாற்றி விமானநிலையம் கிளம்பினோம்.

அன்று பதினொரு மணிக்கு சென்னை. மாலை ஐந்தரைக்கு எனக்கு நாகர்கோயில் ரயில். தூங்கினால் சரிவராது. ஆகவே மீண்டும் தமிழ் விக்கி பதிவுகள். மூன்றுமணிக்கு கிளம்பி ரயிலை பிடித்தேன். ரயிலிலும் தமிழ்விக்கி. என்னை அறியாமல் என் வாசகர் எவரோ ஒரு படம் எடுத்து அதை நண்பர் ஷாஜி சென்னைக்கு அனுப்பி அவர் எனக்கு அனுப்பியிருந்தார்.

மறுநாள் நாகர்கோயில். பதினொன்றாம் தேதி தொடங்கிய பயணம். ஆர்ட்டிக் எல்லையில் இருந்து பூமத்தியரேகைப் பகுதிவரை இரு கண்டங்கள். மூன்றுநாடுகள். எவ்வளவோ முகங்கள். உலகைச் சுற்றிவந்த உணர்வு.

(நிறைவு)

முந்தைய கட்டுரைஅயோத்திதாசர்
அடுத்த கட்டுரைரத்தசாட்சி, ஓர் உரையாடல்