கார்த்திக் புகழேந்தியின் ‘கல்மனம்’

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்.

தங்கள் தளத்தில் விஷ்ணுபுரம் விருந்தினர் பட்டியல் வெளிவர ஆரம்பித்ததுமே, புதுவையில் எங்கள் சிறுகதைக் கூடலின் நண்பர்கள் சிலர் இனிவரும் வாரங்களில் நாம் விருந்தினர் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களின் கதைகளையே தெரிந்தெடுத்து விவாதிக்கலாம் என்ற போது அதனை அனைவரும் வரவேற்றனர்.

அதன்படி முதலாவது கதையைத் தேர்ந்தெடுக்கும் பணி என் பங்கிற்கு விடப்பட்டது.பொதுவாக எங்கள் குழுமத்திற்கு ஒரு கதையைப் பரிந்துரைப்பது என்றாலே பதட்டம் நிறைந்ததுதான்.விவாதத்தின்போது கதையின் குறை நிறைகள் பற்றிக் காரசாரமான விவாதம் ஓடிக்கொண்டிருக்கும்போது, கதையை அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து மேயும்போது எழுதியவர் எங்கோ ஒரு மூலையில் நிம்மதியாகத் தன் அடுத்த கதைக்கான கருவை சமைத்துக் கொண்டிருப்பார்.ஆனால் இங்கு கதையைப் பரிந்துரை செய்தவர்தான் பிரசவ அறையின் முன் குறுக்கும் நெடுக்குமாக கையைப் பிசைந்துகொண்டு நடக்கும் புதுத் தகப்பன் ரேஞ்சுக்கு முகத்தை வைத்துக் கொண்டிருக்கவேண்டும். என்னாகுமோ? ஏதாகுமோ? என்று.

ஆனால் இந்தமுறை எனக்கு அந்தத் தவிப்பு நேரவில்லை.காரணம் நான் தேர்ந்தெடுத்தது கார்த்திக் புகழேந்தியின் ‘கல் மனம்’ என்ற சிறுகதையை. அது நிச்சயம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் என்று தெரிந்துவிட்டது.

தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய விவரக் குறிப்புகளை வாசித்து முடித்ததும் உசாத்துணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் எல்லாம் சென்று கிடைத்த சிறுகதைகளையெல்லாம் வாசித்தேன்.வாசிக்க வாசிக்க பிரமிப்பு கூடிக்கொண்டே போனது.’தல புராணம்’ என்ற கதையை வாசித்து மிரண்டு விட்டேன்.(என்ன இதுகள் இப்போல்லாம் நூற்றுக் கிழமாட்டம் எழுத ஆரம்பித்து விட்டதுகள் – மைண்ட் வாய்ஸ்).அவரது ’ஆரஞ்சு மிட்டாய் கதைகள்’ எல்லாமே மனோபாரதி விக்னேஸ்வரின் குரலில் கேட்கக் கிடைக்கிறது. அனைத்தையும் கேட்டேன்.அவரது தொகுப்புகளை வாங்கி வாசிக்க இன்னும் நேரம் கூடிவரவில்லையாயினும் இணையத்தில் படித்தது கேட்டது வரை அவரைப் பற்றிய ஒரு சித்திரத்தை வரைந்து கொள்ளமுடிந்தது.’அபாரம்’. ஆம் இந்த ஒற்றை வார்த்தையைத் தவிரவும் மேற்கொண்டு எழுத நான் வார்த்தைகளைத் துழாவத் தேவையில்லை.

நான் படித்து சிலாகித்த கார்த்திக் புகழேந்தியின் ’கல்மனம்’ என்ற சிறுகதையை ஒரு சோற்றுப் பதமாக  இங்கு முன் வைக்க விரும்புகிறேன்.

இக்கதையில் அவர் ஒரு சிறு புள்ளியை மையமாக வைத்து சம்பவங்களையும் பாத்திரங்களையும் கோர்த்துக் கோர்த்து, முக்கிய கதாபாத்திரமான சந்திராவின் எண்ண ஓட்டங்களாக சம்பவங்களை முன்னும் பின்னுமாக வைத்து  ஒரு நான்லீனியர் வடிவத்தில் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். .சந்திராவின் அக்காவான மாரீஸ்வரியும் கணவனான சுப்ரமணியும் கதை நகர்த்தலுக்கு துணை செய்கிறார்கள்.மற்றபடி சந்திராவின் பாட்டியான கோமு ஆச்சியும், அவளது இரு பெண் பிள்ளைகளும் கதை ஓட்டத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.சந்திராவும் மாரீஸ்வரியும் அப்படியொரு அன்னியோன்யமாக, நகமும் சதையுமாகப் பழகுகிறார்கள்.என்ன நிறத்தை வைத்து இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.அது கோழிக்குஞ்சு சண்டைதான்.அடுத்த நிமிஷமே சகஜமாகிவிடும்.

அக்கா இருக்க தங்கை திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் குடும்பம் நடத்துகிறாள்.வயசுக்கு வரும் பக்குவத்தில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.அக்கா மாரீஸ்வரி நல்ல நிறமும் அதற்கேற்ற அழகும் கொண்டிருந்தாலும் தன் போலியோ பாதித்த கால்களைக் காரணம் காட்டி திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக ஒற்றைக் காலில் நின்று( நின்று அல்ல உட்கார்ந்து – இதுவும் எழுத்தாளரின் அடிக்குறிப்பாக வருவதுதான்) தன் தையல் மெஷினின் உதவியால் தங்கையின் திருமணத்தை நடத்தி வாழ்க்கையை அர்த்தப் படுத்திக் கொள்கிறாள் .தங்கை சந்திரா இடையில் தலைப் பிரவசத்துக்கு வீட்டுக்கு வந்தவள்தான்அதன் பிறகு இடைப்பட்ட பதினான்கு வருடங்களில் அவளால் பிறந்த வீட்டிற்கு வர சந்தர்ப்பம் நேரவில்லை.(ஏன் நேரவில்லை என்பதுதான் கதையின் மையக் கரு).சந்திராவின் பிரவசத்தின் போது அவள் புருஷன் சுப்ரமணியமும் வந்திருந்தான்.இரண்டாவது பிரசவம் கூட திருப்பூரிலேயே நடந்தது.

அதன் பிறகு என்றோ ஒரு நாள் கலவி முடித்து வசமாக அவள் மேல் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு “ஆனாலும் உங்கக்கா நல்ல கலர்ல..தப்பா எடுத்துக்க மாட்டேன்னா ஒண்னு சொல்றேன்.கால் மட்டும் நல்லா இருந்திருந்தா அவங்களையே கட்டியிருப்பேன் தெரியுமா’ என்று அவன் கூறிய வார்த்தைகள் அவளது நெஞ்சை ராவிக் கொண்டே இருக்கிறது.அந்தச் சொல் அவள் மனதில் நட்டு வைத்த கல்லாக நின்று கனத்துக் கொண்டே இருக்கிறது.ஆம் அதுதான் ’கல்மனம்’.

இதை ஒரு வாசகனாக அசை போட்டுப் பார்க்கையில் ஆமாம் அவளை அச்சொல் எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.அதுவும் அந்த வார்த்தையை அவன் ஒரு சந்தோஷமான சந்தர்ப்பத்தில் வேடிக்கையாக கூறியிருப்பானாக இருந்திருந்தால் இந்த அளவிற்கு ஆழம் கொண்டிருக்க முடியாது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கலவியை முடித்த தருணத்தில் உச்ச கட்ட இன்பத்தை அனுபவித்த திருப்தியில் கண்கள் லயித்திருக்கும் போது இப்படியொரு வார்த்தையை காதருகே கேட்க நேர்ந்த எந்தப் பெண்ணால்தான் சீரணித்துக்கொள்ள முடியும்? அப்போ.. இவன் இத்தனை நேரமும் முயங்கிக் கொண்டிருந்தது அக்கா மாரீஸ்வரியோடுதானா? என்கிற நினைப்பு அவளைப் படுபாதாளத்தில் தள்ளி விட்டதுபோல் இருந்தது. அவனை  மட்டுமல்ல அக்கா மாரீஸ்வரியையும் சேர்த்தே அவள் மனதிலிருந்து விலக்கி வைக்கிறாள்.இது காரணம் கொண்டே அவள் தலைப் பிரசவத்திற்குப் பிறகு கடந்த பதினான்கு  வருடங்களில் ஒரு முறை கூட பிறந்த மண்ணை மிதிக்கவோ அக்காவைப் பார்க்கவோ எண்ணம் கொண்டாளில்லை. மனதைக் கல்லாக்கிக் கொள்கிறாள்.அதுதான் ‘கல்மனம்’.

இதில் வாசகன் தானே இட்டு நிரப்பிக் கொள்ளும் இடம் வேறொன்றும் இருக்கிறது.மணமான புதிதில் சந்திராவின் கணவனை குடிப்பழக்கம் உள்ளவனாகக் காட்டாத எழுத்தாளர் பின்னர் அவன் எந்நேரமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருபவனாகவும் குடிமயக்கத்திலேயே கலவியில் ஈடுபடுபவனாகவும் காட்டுகிறார்.அவளும் இயந்திரத்தனத்துடன் கடமையே என்று படுத்துக் கிடக்கிறாள். இது அவன் அச்சொல்லை உதிர்த்த நாளிலிருந்து தொடர்வதாகவும் அவன் குடிப்பழக்கமும் அதன் பிறகுதான் தொடங்கியதாகவும் பொருள் கொள்ள முடிகிறது.

கார்த்திக் புகழேந்தியின் இக்கதையில் வரும் சில அழகியல் தருணங்களையும்,உவமைகளையும்,  நுண்சித்தரிப்புகளையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சந்திரா தன் மகள்களின் வளர்ச்சியைக் கண்டு கவலை கொள்ளும் இடத்தில் ‘பனங்கிழங்கு தரைக்கடியில் பருவங்கண்டது மாதிரி எப்போ விடைத்தது என்றே தெரியாமல் திம்மென்று வளர்ந்து நிற்கிறாள் பெரியவள்’ என்ற உவமை நயமாக இருக்கிறது. தன் அக்காவின் நிறத்தைப் பற்றிக் கூறும்போது ‘சிவப்பு முள்ளங்கிக்குப் பக்கத்தில் வைத்து ஒத்திக் கொள்ளும் நிறம்’ என்று வியப்பதும் நல்ல ஒப்புமை.

’அக்கா இருக்குமுன்ன தங்கச்சிக்குக் கல்யாணமா’ என்று கேட்காதவர்கள் யார்தான் ஏழுவீட்டுக் காம்பவுண்டைக் கடந்து போனார்கள்.மாரீஸ்வரி எல்லாரின் வாய் ஒழுக்கையும் தையல் மெஷின் சத்தத்தில் மடித்துத் தைத்துவிட்டாள் – என்ற வரிகளைப் படித்ததும் அடடா! என்று சொல்லாமல் கடந்து செல்ல முடியாது.

“ஏ ரேணு,உமா..டீவி பார்த்தது போதும்,ரெண்டுபேரும் வாங்கடீ.”

“ஏ அம்மா கூப்புடறாங்க வா..” தோள்பட்டை வரைக்கும் இறங்கிக் கிடந்த பனியனைக் கழுத்தை ஒட்டித் தள்ளிக் கொண்டு சின்னக் குட்டி ரேணுகா முதல் ஆளாக ஓடி வந்து சந்திராவின் காலைக் கட்டிக் கொண்டாள் – என்ற இடத்தில் வரும் அந்தச் சித்தரிப்பை ஒரு புன்னகையுடனே வாசிக்கமுடியும்.

சிறுகதையின் ஆரம்பத்தில் சந்திராவின் இடுப்பொடிக்கும் வீட்டுக்காரியங்களை வரிசையாகக் கூறிவரும் எழுத்தாளர் ‘வாசலில் ஊடுபுள்ளியில் தரதரவென நாலு கம்பிகளை இழுத்து முடித்து நிமிர்ந்தபோது’ – என்ற வரிகளைப் படித்ததும் எழுத்தாளரும் அப்போதே நம் மனதில் நிமிர்ந்து நின்றுவிடுகிறார்.

வாழ்க்கையைப் படம் பிடித்தது போல் அமைந்த கதைகளும் சரி, நாட்டரியல் கதைக் களன்களானாலும் சரி, அபுனைவான கட்டுரை வடிவிலான ஆக்கங்களானாலும் சரி இவரது கூறு முறைகளும் இவரது வார்த்தைக் கிடங்கின் விஸ்தீரணமும் வியக்குபடி இருக்கிறது என்பதை உரக்கச் சொல்லியே ஆகவேண்டும்.

இத்தளத்தில் இவரைப் பற்றி வரும் வரை தேடியறியாமல் இருந்துவிட்டோமே என்ற ஆதங்கம் மனதை உறுத்துகிறது.பரவாயில்லை இப்பொழுதுதான் அவர் குன்றிலிட்ட விளக்காகிப் போனாரே.இனி அவரது வாசகர் வட்டம் பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

’வாழ்த்துக்கள் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி’

விஜயன் வேலுச்சாமி

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
முந்தைய கட்டுரைபனிநிலங்களில்- 2
அடுத்த கட்டுரைஊற்றுமலையும் உ.வே.சாவும் – கடிதம்