தமிழ் விக்கி எழுத்தாளனுக்குக் கொடுப்பது என்ன?
இருபத்து ஐந்தாம் தேதி காலையில் எழுந்து எட்டு மணிக்கெல்லாம் தயாராகிவிட்டோம். எனக்கு எப்போதுமே பிடித்தமான வெந்நீர்க் குளியல். காலை மிக அற்புதமாக தொடங்குகிறது என்னும் உணர்வை அது உருவாக்குகிறது.
எங்களை அழைத்துச்செல்ல பிரம்மவித்யாரண்யத்தில் இருந்து கார் வந்திருந்தது. அங்கே ஏற்கனவே ஜி.எஸ்.எஸ்.வி.நவீனும் அவர் மனைவி கிருபாலட்சுமியும் வந்திருந்தனர். நியூசிலாந்துக்கு இலக்கிய விழாவுக்காகச் சென்றிருந்த ம.நவீன் வந்திருந்தார். ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் கிருபாவும் அங்கிருந்தார்கள்.
பிரம்மவித்யாரண்யம் முழுக்க ஆட்கள். ஈப்போ, கொலாலம்பூர், சுங்கைப் பட்டாணி, பினாங்கு என வெவ்வேறு ஊர்களிலிருந்து வண்டிகளிலும் பேருந்துகளிலும் வந்திருந்தார்கள். பிரம்மவித்யாரண்யம் இன்று மலேசியாவின் எல்லா தமிழ்ப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் மையம் என ஆகிவிட்டிருக்கிறது.
முதல்நாள் மதியத்திற்கு மேல் வல்லினம் ஒருங்கிணைத்த தமிழ்விக்கி சிறப்புவிழா. வல்லினம் மலேசிய அணி தமிழ்விக்கியில் இரண்டு மாதக் காலத்தில் 200 பதிவுகள் என இலக்கு வைத்துக்கொண்டு செயல்பட்டு செய்து முடித்தது. பதிவுகள் எல்லாமே மிக விரிவானவை, முழுமையானவை. அவை ஒவ்வொன்றும் ஒரு தனி நூல் என்றே சொல்லத்தக்கவை. தமிழில் அது ஒரு சாதனை.
மலேசியாவில் இருந்து தமிழ் விக்கியில் முதன்மைப் பங்களிப்பாற்றியவர்களுக்கு பாராட்டும், தமிழ் விக்கி பற்றிய கல்வியாளர் கலந்துரையாடலும் நடைபெற்றது. ம.நவீனுடன் பதினொருவர் தமிழ்விக்கி பணியில் ஈடுபட்டனர். கோ.புண்ணியவான், சுப்புலட்சிமி ஆகியவர்கள் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர்கள்.
அரவின் குமார், பரிமித்தா, சாலினி, திலிப் ஆகிய நால்வரும் மிகவும் இளையவர்கள், வருங்காலத்தில் பரவலாக அறியப்படவிருப்பவர்கள். சல்மா தினேசுவரி ,குமாரசாமி, மீரா, அ.பாண்டியன் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியமானது.
இவர்கள் எழுதிய கட்டுரைகளில் விரிவும் பரப்பும் ஆச்சரியமூட்டுவன. சரவாக், போர்னியோ பகுதி பழங்குடிகளைப் பற்றிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகள் உள்ளன. மலேசியாவில் நிகழ்ந்த பண்பாட்டு போராட்டம் பற்றிய முழுமையான செய்திகள் உள்ளன. தமிழில் ஒரே இடத்தில் இத்தனை தரவுகள் இதற்குமுன் திரட்டப்பட்டதே இல்லை.
ஆர்வமுள்ளவர்கள் சயாம் மரணரயில்பாதை பற்றிய ஒரு கட்டுரையை மட்டும் எடுத்துப் பார்க்கலாம். அதிலிருந்து எத்தனை நூல்களுக்கு, எத்தனை ஆளுமைகளுக்கு தமிழ்விக்கி கொண்டுசெல்கிறது என்று கவனிக்கலாம். பூஜாங்க் சமவெளி அல்லது கோ.சாரங்கபாணி கட்டுரைகள் எல்லாமே பெரும் கட்டுரைக்கொத்துக்கள்.
ம.நவீன் தமிழ்விக்கி (மலேசியாவின்) இடம் மற்றும் பங்களிப்பு பற்றி ஒரு நல்ல கட்டுரையை வல்லினம் இதழில் எழுதியிருக்கிறார். இந்தியாவுக்கு வெளியே தமிழ் விக்கிக்கு இப்படி ஒரு உத்வேகமும் ஒருங்கிணைப்புத் திறனும் கொண்ட குழு அமையவில்லை. குறிப்பாக இலங்கையில் இருந்து குறிப்பிடும்படியான பங்களிப்பே இல்லை. (தமிழ் விக்கி எழுத்தாளனுக்குக் கொடுப்பது என்ன?)
தமிழ் விக்கி எனக்கு அளிப்பது என்ன? எனக்கு அறுபது வயது. தமிழிலக்கியத்தில் நாற்பதாண்டுகாலமாக ஈடுபாடு. ஆனால் இன்றுவரை தமிழகம் பற்றி, தமிழ்ப்பண்பாடு பற்றி எனக்கிருந்த சித்திரம் இன்றுதான் முழுமையடைகிறது. ஒரு கலைக்களஞ்சியம் அளிக்கும் முழுமையான அறிதல் என்பது ஈடிணையற்றது. பண்பாட்டின் எல்லா தளங்களையும் தொட்டு ஒட்டுமொத்தமான சித்திரத்தை அது அளிக்கிறது. வாசித்து அதை அடையலாம், ஆனால் பங்களிப்பாற்றுவது என்றும் மறக்காமல் வாசிப்பதற்கு நிகரானது.
நவீனக் கதைகளை வாசிக்கையில் எழுத்தாளர்களுக்குக் கதைக்கருக்கள் மிகக்குறைவாக இருக்கின்றனவா என்னும் ஐயம் எழுகிறது. ஆகவேதான் கதைகள் நினைவில் நிற்பதே இல்லை. காரணம் வாழ்க்கையின் சிறிய வட்டம். அனுபவங்களின் எல்லைக்குட்பட்ட தன்மை.
எழுத்தாளன் தன் வாழ்க்கையை, தான் கண்டதையும் அறிந்ததையும் மட்டும் எழுதினால் சுருங்கிவிடுவான். அவன் எழுதவேண்டியது பண்பாட்டை. சொந்த அறிதல்களைக் கூட விரிந்த பண்பாட்டுப் புலத்தில் வைத்து பார்ப்பவனே உண்மையான எழுத்தாளன். அதற்கு எழுத்தாளனுக்கு பண்பாட்டுக் கல்வி, வரலாற்றுக் கல்வி நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும்.
தன் வரலாறு, பண்பாடு பற்றிய தொடர்வாசிப்பு இல்லாத எழுத்தாளனுக்கு இந்தியாவில் நிகழும் மாபெரும் வீழ்ச்சி என்பது ஒன்றுதான். அவன் மேலைநாட்டு படைப்புகளை வாசித்து அறியாமலேயே நகலெடுக்க ஆரம்பிப்பான். அது ஓர் இலக்கியத் தற்கொலை.
எழுத்தாளனாக எனக்கு இன்னும் இருபதாண்டுகள் ஒவ்வொரு நாளும் எழுதினாலும் தீராத கதைக்கருக்களை தமிழ் விக்கி அளித்துள்ளது. அவை சங்க காலம் முதல் இன்றுவரை விரிந்து கிடக்கின்றன. பன்னிருபாட்டியலில் ஒரு நூலாகிய அவிநயத்தை உதிரிவரிகளில் இருந்து மீட்டெடுத்த மயிலை சீனி வேங்கடசாமியில் இருந்து ராமலிங்க வள்ளலாருடன் தொழுவூர் வேலாயுத முதலியாருக்கு உருவான முரண்பாடு வரை நான் எழுதுவதற்கு எண்ணும் கருக்களை எழுத எனக்கு இன்னும் நூறாண்டு தேவை.
மலேசிய தமிழ் விக்கியில் பங்களிப்பாற்றிய ஆகியோருக்கு பாராட்டுச்சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. அந்த குழுவினருடன் இணைந்து நின்றபோது ஒரு பெருநிறைவை அடைந்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில், மே மாதம் அமெரிக்காவில் தமிழ்விக்கி தொடங்கப்பட்டது. ஆகஸ்டில் தமிழ்விக்கி விழா ஈரோட்டில் நடைபெற்றது. இவ்வாண்டு நிகழும் மூன்றாவது விழா இது. தமிழ் விக்கி ஓர் இயக்கமாக ஆகிவிட்டிருப்பதை, என் கைகளில் இருந்தும் சென்றுவிட்டிருப்பதை எனக்குக் காட்டியது அந்நிகழ்வு.
தமிழ் விக்கியை பொறுத்தவரை அடுத்த ஐந்தாறாண்டுகளில் அது இவ்வாறு என்னைவிட்டு விலகி, முற்றிலும் இளையோர் கைகளுக்குச் செல்லுமென்றால் அதுவே என் வெற்றி எனக் கருதுவேன். அந்த வாய்ப்புகள் இந்த முகங்கள் வழியாகத் தெரிகின்றன என்பது அளிக்கும் நிறைவுணர்வை அடைந்தேன்.
இந்த விழாவில் பி.கிருஷ்ணன் அவர்களை கௌரவித்தது ஓர் நிறைவூட்டும் விஷயம் என்று தோன்றியது. தமிழில் தொடர்ச்சியாக எழுதிய மூத்த படைப்பாளி. முதுமையிலும் இலக்கியம் மீதான பெருநம்பிக்கையுடன் தன் பணியை தொடர்கிறார். அடுத்த ஆண்டு தனக்கு 91 அகவை நிறைவடைவதாகவும், அதற்குள் ஷேக்ஸ்பியரின் அடுத்த நாடகத்தின் மொழியாக்கத்தை முடித்துவிட திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார்.
ஆனால் இன்னொரு கோணமும் உண்டு. பி.கிருஷ்ணன் அவருக்கு வானொலி அளித்த வேலைக்காக பெரிதும் முயன்று அதை அடைந்தவர். அவ்வேலையை முழுமையாக தன்னை ஈடுபடுத்திச் செய்தவர். அதில் வெற்றியையும் அடைந்தவர். அதன்பொருட்டு அவர் தன் இலக்கியப் பணியை ஒத்திவைத்தார். ஓய்வுபெற்றபின்னரே இளமைக்கால கனவாகிய ஷேக்ஸ்பியர் நாடக மொழியாக்கங்களைத் தொடங்கினார்
பெரும்படைப்பாளிகள் பெருந்தியாகங்களில் இருந்தே உருவாகிறார்கள். அவர்கள் தங்கள் படைப்பியக்கத்தையே முதன்மையாகக் கொண்டிருக்கிறார்கள். அதன்பொருட்டு எதையும் துறப்பார்கள். அவர்கள் தங்கள் படைப்பை உருவாக்குவதில் இருந்து நோய், வறுமை, ஒடுக்குமுறை எதுவும் தடுத்ததில்லை.
இன்றும் நம் அனைவர் முன்னிலையிலும் ஒரு தெய்வம் வந்து நின்று உனக்கு உலகியல்வெற்றியா இலக்கியமா எது தேவை என கேட்கிறது. நம் பதிலே நாம் யார் என்பதைக் காட்டுகிறது. அவ்வகையில் நான் என்றும் அசோகமித்திரனின் தரப்பே. சமரசமே இல்லாமல் தன் படைப்புடன் நின்றவர், அதன்பொருட்டே வாழ்ந்தவர், பிற அனைத்தையும் அதன்பொருட்டு தியாகம் செய்தவர் அவர்
வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரிலும், இலங்கையிலும் இதேபோல விழாக்கள் ஒருங்கமைக்கப்படவேண்டும் என்றும், அமெரிக்காவில் ஓராண்டுக்குப் பின் பல்கலைக்கழகங்களில் தமிழ் விக்கியை கொண்டுசென்று சேர்க்கும் விழாக்கள் நடைபெறவேண்டும் என்றும் எண்ணுகிறேன்.
விழாவில் மலேசிய தமிழ் விக்கி பற்றிய ஓர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. கல்வியாளர்களான ப.தமிழ்மாறன் , முனீஸ்வரன் குமார், கோ.சாமிநாதன், முனைவர் கிங்ஸ்டன் ஆகியோர் உரையாடினர். தமிழ்விக்கியின் சாத்தியக்கூறுகள், மேலதிகமாக தேவையானவை ஆகியவை விவாதிக்கப்பட்டன. அ.பாண்டியன் வழிநடத்தினார்.
அதன்பின் நான் ஒரு ஏற்புரை ஆற்றினே. தமிழ்விக்கி போன்ற கலைக்களஞ்சியங்கள் அளிக்கும் முழுமைப்பார்வையைப் பற்றியே சொன்னேன். அதிலும் இணையக் கலைக்களஞ்சியம் தொடுப்புகள் வழியாக முழுமையை நோக்கி உந்திக்கொண்டே இருக்கிறது. எஸ்.வையாபுரிப் பிள்ளை பற்றி படித்தால் உடனே தேவநேயப் பாவாணர் நோக்கிச் சென்றாகவேண்டும். அந்த முழுமையான பார்வையை அளிப்பதனால்தான் கலைக்களஞ்சியங்களுக்கு எப்போதுமே அரசியலாளர்களின் அர்த்தமற்ற எதிர்ப்புகள் உருவாகின்றன.
சிங்கையின் மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணன் தன் மகள் மற்றும் மருமகனுடன் வந்திருந்தார். நீண்டகாலம் சிங்கை வானொலியில் பணியாற்றியவர். அவர் மொழியாக்கம் செய்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வல்லினம் ஆதரவில், ஜார்ஜ் டவுன் இலக்கியவிழாவின் துணைப்பகுதியாக மறுநாள் வெளியிடப்பட்டன. அதற்காகவே அருண்மொழியும், ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் வந்திருந்தார்கள்.
பி.கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த ஹாம்லெட், ரோமியோ ஆண்ட் ஜூலியர், ஓதெல்லோ ஆகிய மூன்று நாடகங்களின் உச்சகட்டக் காட்சிகளை மட்டும் நாடகமாக ஆக்கி மைஸ்கில்ஸ் என்னும் அறவாரியத்தின் மாணவர்கள் நடித்தனர். செம்மொழியாலான வசனங்களை சற்று விட்டுவிட்டுச் சொன்னாலும் நாடகம் நன்றாகவே இருந்தது.
வழக்கறிஞர் பசுபதி நடத்தும் மைஸ்கில்ஸ் அறவாரியம் பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். அது பெரும்பாலும் கல்வியை இடையில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்கானது. பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் அவர்கள். மறுவாழ்வுக்கான தொழில் மற்றும் கல்விப் பயிற்சியை அங்கே அளிக்கிறார்கள்.
அந்த மாணவர்கள் எப்படி கலை வழியாகத் தங்களைக் கண்டுகொள்கிறார்கள், எப்படி அவர்களின் வாழ்க்கை மாற்றமடைகிறது என பசுபதியும் அந்நாடகத்தின் இயக்குநரும் பேசினார்கள்.
விழாவுக்கு முத்து நெடுமாறன் வந்திருந்தார். முரசு அஞ்சல் என்னும் எழுத்துருவை உருவாக்கிய கணிப்பொறியியலாளர். 2000 த்தில் நான் நண்பர்களின் உதவியுடன் மருதம் என்னும் இணைய இதழை தொடங்கியபோது அவருக்கு கடிதமெழுதி இலவசமாக எழுத்துரு அளித்து உதவும்படி கோரியிருந்தேன் (அன்று யூனிகோடு இல்லை) அவர் அதை அளித்தார். அதை நினைவுகூர்ந்து பேசினேன்.
அன்று பிரம்மவித்யாரண்யத்திலேயே தங்கினோம். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு பி.கிருஷ்ணன் அரங்கு. பி. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பற்றி ஏற்கனவே அவருடைய மலரில் அருண்மொழி ஒரு கட்டுரை எழுதியிருந்தாள். அந்த மலர் அங்கே வெளியிடப்பட்டது. நான் பி.கிருஷ்ணனையும், எழுத்தாளர்கள் அத்தகைய பெருஞ்செயல்கள் செய்வதன் அவசியத்தையும் முன்வைத்து பேசினேன்
பி கிருஷ்ணன் பற்றி அருண் மகிழ்நன் பேசினார். அருண் மகிழ்நன் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாடு மற்றும் இலக்கியம் பற்றிய விரிவான கலைக்களஞ்சியங்களையும் ஆவணத்தொகுப்பையும் உருவாக்கியவர். சிங்கையின் கலாச்சாரச் செயல்பாடுகளின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவர்.
பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றி அருண்மொழி நங்கை பேசினார். ஷேக்ஸ்பியரின் நாடகத்தன்மை, மொழியில் வெளிப்படும் உணர்ச்சிகரமான கவித்துவம் ஆகியவற்றைச் சொல்லி அவை எப்படி கிருஷ்ணனின் மொழியிலும் மறுவடிவம் பெற்றிருக்கின்றன என்றார். கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த மாக்பெத் நாடகத்தின் ஒரு காட்சியை கிட்டத்தட்ட நடித்தே காட்டினார்.
ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் கிருஷ்ணன் எழுதிய துப்பறியும் நாவல்கள் பற்றி பேசினார். மலேசியாவில் கண்ட வெவ்வேறு நாட்டார் கலைவெளிப்பாடுகள் பற்றிபேசி அவற்றுடன் இணைத்து கிருஷ்ணனின் துப்பறியும் நாவல்களில் நகைச்சுவை ஓர் ஊடகமாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.
அழகுநிலா அவருடைய நகைச்சுவை நாடகங்கள் பற்றி பேசினார். கிருஷ்ணன் பெரும்பாலும் சிங்கை அரசின் கொள்கைகளை விளக்கி வானொலியில் எழுதவேண்டிய பொறுப்பில் இருந்தார். ஆகவே நகைச்சுவை நாடகங்களின் கருப்பொருட்கள் பெரும்பாலும் அரசால் அளிக்கப்பட்டவை. கம்பம் இல்லங்கள் எனப்படும் சிற்றில்லங்களில் இருந்து மக்களை அடுக்குமாடி வீடுகளுக்கு கொண்டுசெல்வதற்கான தூண்டுதலாகவே பல நாடகங்களை எழுதியிருக்கிறார்.
சிங்கப்பூர் எழுத்தாளர் கணேஷ்பாபு அவருடைய கதைகள் பற்றிப் பேசினார். கணேஷ்பாபுவின் மொழியும் உடலசைவுகளும் எஸ்.ராமகிருஷ்ணனை மிகவும் நினைவூட்டின. அவரும் எஸ்.ராமகிருஷ்ணனின் தீவிரமான வாசகர். அவருடைய எழுத்துக்கு ஊக்கமளித்தவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்று பின்னர் உரையாடலில் சொன்னார்
சிங்கப்பூர் எழுத்தாளர் லதா கிருஷ்ணனின்ய இலக்கியப் பணிகள் பற்றி பேசினர். அ.பாண்டியன், அர்வின்குமார் இருவரும் பேசினர். அ.பாண்டியனும் அர்வின்குமாரும் இப்போது வல்லினம் அமைப்பின் தீவிரமான செயல்பாட்டாளர்கள். இளைஞரான அர்வின்குமாரின் மொழியில் இருந்த உறுதியும், சொற்களின் தெளிவும் வியப்படையச் செய்தது. மலேசியாவில் அடுத்த தலைமுறையில் முக்கியமான ஆளுமையாக இருப்பார்
கிருஷ்ணனுக்கு இவ்வாண்டு 90 அகவை நிறைவடைகிறது. உடல்தளர்வால் கிருஷ்ணனால் விரிவாகப் பேச முடியவில்லை. தன் இலக்கியப் பயணத்தை பற்றிச் சுருக்கமாகப் பேசினார். இளமையில் போரில் பெற்றோரை இழந்து 14 வயதில் சிங்கப்பூருக்குச் சென்று அங்கே கடையில் வேலைபார்த்து, தன்முயற்சியால் படித்து வானொலியில் வேலைக்குச் சேர்ந்தவர். புதுமைப்பித்தனை ஆதர்சமாகக் கொண்டவர்.
மாலையில் மீண்டும் பினாங்கு திரும்பினோம். ஜார்ஜ் டவுனின் தெருக்களில் சுற்றிச் சுழன்று உணவகங்களைக் கண்டடைந்து சாப்பிட்டோம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துக் கட்டிடங்களை பெரும்பாலும் அழிக்காமல் பழுதுநோக்கி அப்படியே வைத்திருப்பதனால் சிங்கப்பூர், கொலாலம்பூர் என எந்த நகருக்கும் இல்லாத ஒரு பண்பாட்டுத்தனித்தன்மை பினாங்கு நகருக்கு உள்ளது.
பிரிட்டிஷ் பாணி கட்டிடங்களின் நிமிர்வு ஒரு செவ்வியல்தன்மை கொண்டது. செவ்வியல் என்பது தன் மரபை இழக்காதது, கூடவே எல்லாவகையான வெளிப்பாதிப்புகளையும் ஏற்றுக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டிருப்பது. உண்மையில் பிரிட்டிஷ் கட்டிட பாணி என ஒன்று இல்லை. இந்தோ சாரசனிக், இந்தோ சாக்ஸன் என்றெல்லாம் கலவை அடையாளங்களே அதற்குள்ளன. பினாங்கின் கட்டிடங்கள் மலாய்த்தன்மையும் கலந்தவை.
அப்படி ஒரு நகர்கூட இந்தியாவில் இல்லை. கோவா, பாண்டிச்சேரி, ஜெய்ப்பூர், உதய்பூர் எல்லாம் அவ்வாறு பேணப்பட்டிருக்கவேண்டிய ஊர்கள். அவற்றின் காட்சியொருமையும் காலப்பழமையும் புதிய கட்டிடங்களால் மூர்க்கமாக அழிக்கப்பட்டுவிட்டன.
மலேசியாவின் தமிழுணவுகளின் கலப்புதான் கொஞ்சம் விந்தையானது. மலேசியாவில் பரவலாக உண்ணப்படுவது சோயாபீன்ஸால் உருவாக்கப்படும் ஒருவகை செயற்கை இறைச்சி. ஒருவகை பாலாடைக்கட்டி எனலாம். அதை போட்டு சாம்பார், பொரியல் எல்லாமே செய்துவிடுகிறார்கள். நான் பொதுவாக எதையும் உண்பவனாயினும் எனக்கு பனீர் பிடிக்காது. கூடவே இந்த சோயாவும்.
எழுபதுகளில் பொள்ளாச்சி மகாலிங்கம் இந்தியாவில் சோயாவை அறிமுகம் செய்ய பெரும் முதலீட்டை செய்தார். சோயாவை புகழ்ந்து எழுதும் நாவல்களுக்கான ஒரு போட்டி ராணி வார இதழால் அறிவிக்கப்பட்டது – ’சக்தி சோயா’ நிறுவனத்தின் பரிசு அதற்கு. அன்று பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்த நான் ஒரு நாவல் எழுதி அனுப்பினேன். ஆறுதல்கடிதம் வந்தது. அப்போது சோயாவை நான் கண்ணால் பார்த்திருக்கவில்லை.
பின்னர் மகாலிங்கம் அவர்களை நேரில் பார்த்தபோது சொன்னார். அந்த திட்டம் தோல்வியடைந்தமைக்கு மக்களுக்கு அதன் சுவையோ மணமோ பிடிக்காமலிருந்தது மட்டும் காரணம் அல்ல. அன்றிருந்த சோட்டா நாட்டுமருத்துவர்கள் அது உடலுக்கு ஒவ்வாதது, சூடு என்று சொன்னதுதான் முதன்மைக் காரணம். ’கொஞ்சம் பணமிறக்கி சோயாவின் மருத்துவநன்மையை கற்பனையாகப் பிரச்சாரம் செய்திருக்கலாம்’ ஆனால் நேர்மையாகச் செல்வோம் என்று எண்ணினேன் என்றார் மகாலிங்கம் இன்று டிராகன் பழமும் டுரியனும் அமோகமாக விற்கின்றன. ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கிளப்பிவிட்டு காசுபார்க்கிறார்கள்.
(மேலும்)