நீலம் செம்பதிப்பு வாங்க
நீலம் மின்னூல் வாங்க
(விஷ்ணுபுரம் வெளியீடாக வெளிவரவிருக்கும் நீலம் நாவலின் நான்காம் பதிப்புக்கான முன்னுரை)
வெண்முரசு அதன் இறுதியை நெருங்கும்போதே நான் அந்தப் புனைவுலகிலிருந்து வெளிவந்து, மொழிநடையிலும் விவரணையிலும் உள்ளடக்கத்திலும் முற்றிலும் வேறான ஒரு புனைவுலகிற்குள் நுழைந்தேன். நூற்று முப்பத்தாறு சிறுகதைகளாக அது விரிந்தது. உலகஅளவில் வேறெந்த எழுத்தாளராவது இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை கதைகளைம் இவ்வளவு படைப்பூக்கத்துடன், இத்தனை நுண்ணிய கலைஒருமையுடன் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நிகழ்ந்திருக்கலாம். மனிதகுலத்தின் சாத்தியங்கள் அளவிறந்தவை.
ஆனால் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று என்னால் இப்போது சொல்ல முடியும். அந்த நூற்று முப்பத்தாறு கதைகளுமே மென்மையான, இனிய உளநிலையை வெளிப்படுத்துபவை. வாழ்க்கை மீதான நம்பிக்கையை, மானுட எதிர்காலம் பற்றிய கனவை விரித்து வைப்பவை. மனிதர்களுக்கு இடையே உருவாகும் கனிவின் நுண்தருணங்கள், மனிதர்கள் தங்களைத் தாங்களே கண்டடையும் உச்சங்கள், இவ்வாழ்க்கை மனிதர்களுக்கு அளிக்கும் அரிய பரிசுகள் அக்கதைகளில் உள்ளன.
இன்னொரு வகையிலும் சொல்லலாம். உலகில் எந்த எழுத்தாளராவது இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை நேர்நிலையான படைப்புகளை எழுதியிருக்கிறார்களா என்று. அதுவும் அரிதானதே. அத்தனை கதைகளையும் எழுத வைத்தது அவற்றில் எல்லாம் இருந்த பொதுவான நேர்நிலையும் அதன் அள்ள அள்ளக் குறையாத இனிமையும்தான்.
இத்தனைக்கும் அது பெருந்தொற்றுக்காலம். உலகமே வாசல்களை அடைத்துக்கொண்டு அறைகளுக்குள் முடங்கியிருந்தது. உலகப்பொருளியல் என்ன ஆகும், பழைய நிலைக்கு மீள முடியுமா என்ற ஐயங்கள் ஒவ்வொரு உள்ளத்திலும் எழுந்து கொண்டிருந்தன. நான் பணியாற்றிக் கொண்டிருந்த திரைத்துறை முழுமையாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்றும், திரைஅரங்கு என்னும் வடிவமே இருக்கப்போவதில்லை என்றும் அப்போது ஆரூடங்கள் கூறப்பட்டன. அப்போது நான் சில பொருளியல் சிக்கல்களிலும் இருந்தேன்.
ஆனால் நான் அந்த இனிமையில் திளைத்துக் கொண்டிருந்தேன். அவ்வினிமையின் ஊற்றுமுகம் என்பது நீலம் என்னும் நாவல். நீலம் இனிமையே உருவான படைப்பு. ஆனால் இனிமையே மேலும் மேலும் என செறிவு கொண்டால் கடும் கசப்பாக ஆகிவிடுகிறது. அதிமதுரம் போல. சங்கப்பாடல்களில் அதிமதுரம் தின்ற யானை என்ற ஒரு உவமை உண்டு. நாவில் பட்டதுமே கடும்கசப்பாக உணரப்பட்டு, சுவைக்கும் தோறும் இனிமையாகி, இனிமை திகட்டலாகி, இனிமையென்பதே பெரும் வதையென்றாகும் அனுபவத்தை அதிமதுரம் அளிக்கும். கசப்பும் இனிப்பும் ஒன்றேதானோ என்ற எண்ணம் எழும்.
நீலத்தின் அந்த இனிமை இப்புவியின் மொத்த எடையாலும் அழுத்தப்பட்டு, மொத்த வெப்பத்தாலும் ஒளியூட்டப்பட்டு, வைரமென ஆகிவிட்ட ஒன்று. உயிர் கொல்லும் இனிமை அது. பிறிதொரு முறை அத்தகைய ஓர் உலகத்திற்குள் நான் நுழைவேனா என்றால் மாட்டேன் என்றுதான் இப்போது சொல்லத்தோன்றுகிறது. ஆனால் அது என் கையில் இல்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
வண்ணக்கடல் முடிந்ததும் கண்ணனின் பிறப்பு பற்றி அடுத்த நாவலில் ஒரு பகுதியில் சொல்லவேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால் ஒரு பயணத்திற்காக கிளம்பி, இமயமலை அடிவாரம் வழியாக அலைந்து, மீண்டு வருகையில் சட்டென்று மதுராவுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நண்பர்களுடன் ஒரே பயணத்தில் சண்டிகரிலிருந்து மதுரா வரைச் சென்றோம். நண்பர்கள் சலித்திருந்தார்கள், திரும்ப விழைந்தார்கள். எனக்கும் மதுரா மேல் பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. ஆனால் ஒருமுறை சென்றுவிட்டுப்போகலாம் என்ற சிறு உட்குரல் அரித்துக்கொண்டே இருந்தது.
மதுரா வழக்கம்போல வாகனப்புகையும், தூசியும், அகழ்வாய்வு நிகழுமிடங்களின் இடிபாடுகளு,ம் பலவகையான மக்கள்திரள் செறிந்த தெருக்களும், வணிகக்கூச்சல்களுமாக நுரைத்து நிறைந்திருந்தது. மதுராவில் கண்ணன் பிறந்த இடத்தை பார்த்து விட்டு மேலே சென்றேன். மதுரா எப்போதுமே பித்து நிறைந்த இடம். ஆண்கள் கோபிகைகளாக தங்களை உணர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்.
என் உள்ளத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த உணர்வுமின்றி அகம் உறைந்திருப்பதாகவே தோன்றியது. ஆனால் என் கைகளை சுருட்டி முறுகப் பற்றியிருந்தது நினைவிருக்கிறது. மறுகணம் ஓங்கி எதையோ கூச்சலிட்டுவிடுவேன் என்பது போல, எவரையோ தாக்கத்தொடங்கிவிடுவேன் என்பது போல, வலிப்பு வந்து மூர்ச்சையாகி விழுந்துவிடுவேன் என்பது போல. மேலே சென்று ராதா கிருஷ்ணன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி அங்கிருந்த ஓவியங்களைப்பார்த்தபடி சுற்றிவந்தோம்.
சற்று அப்பால் ஓர் ஓவியத்தைப் பார்த்தபடி நான் நின்றேன். ராதா கிருஷ்ணா ஆலயத்தின் முன் பக்தர்கள் செறிந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள். உள்ளிருந்து வந்த பூசகர்கள் பக்தர்கள் ராதைக்கும் கண்ணனுக்கும் போட்ட மாலைகளை பெரிய தாலத்தில் அள்ளிக்கொண்டு வந்து கூட்டத்தை நோக்கி வீசினார்கள். தற்செயலாக ஒரு மாலை என் கழுத்திலேயே விழுந்தது.
அருகிருந்த நண்பர் விஜயராகவனும் மற்றவர்களும் உணர்ச்சிப் பரவசம் அடைந்தனர். ஆனால் நான் அப்போதும் அகம் உறைந்து என்ன செய்வதென்று அறியாமல்தான் நின்று கொண்டிருந்தேன். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, அது ஒரு தற்செயல்தான் என்று சொல்லிக்கொண்டேன். அதைப் பற்றி பேச மறுத்தேன். திரும்பி வருகையில் விஜயராகவனின் மூக்குக் கண்ணாடியை ஒரு குரங்கு கவர, அதை மீட்கும் போராட்டத்தின் வேடிக்கையில் உள்ளம் மாறிவிட்டது.
உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் என்னை முற்றிலும் பின்னிழுத்துக்கொள்வதே என்னுடைய வழக்கம். அது ஒரு சமநிலையை அளிக்கிறது. வாழ்க்கையைப்பற்றி பொய்மைகளை சூடிக்கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கை எப்போதும் என்னிடம் உண்டு. எப்போதுமே கேடயமாக தர்க்கபுத்தியை தூக்கி நிறுத்துவது சுந்தர ராமசாமி எனக்குப் பயிற்றுவித்த போர்முறையாக இருக்கலாம்.
ஆனால் திரும்பி வந்து ஓரிரு நாட்களுக்குள் நான் அந்நாட்களை மிகத்தீவிரமாக மீண்டும் நிகழ்த்திக்கொள்ள ஆரம்பித்தேன். என்னுள் விசை கொண்டு கொப்பளித்தவை என்னென்ன உணர்வுகள் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. உச்ச கட்ட வெறியுடன் திரும்பத் திரும்ப எதையெதையோ எழுதிப்பார்த்தேன். பொருளற்ற சொற்கள். நான் எழுதி வெளியாகின்றவை நூறு சொற்களென்றால் அவற்றை திரட்டிக்கொள்ள நூறு பொருளில்லா சொற்களையும் எழுத்தில் உளறித்தள்ளுவது என் வழக்கம்.
நான் எழுத எண்ணியது கண்ணனின் வாழ்க்கையை. பாகவதத்தை எடுத்து அதற்காக படித்தேன். ஒரு பத்தி கூட படிக்க முடியவில்லை அந்தச் சொற்கள் அனைத்தையுமே அந்நியமாகத் தெரிந்தன. கண்ணன் எனக்கு மிக அருகில் இருக்கையில் அவரைப்பற்றி எவரோ எழுதியது எனக்கு எதற்கு என்று தோன்றியது. ஆனால் அருகிருப்பவன் அறியக்கூடுபவனாக இல்லை. அருகிருப்பதொன்று தன்னை அத்தனை செறிவுடன் உணர்த்தியும் கூட அது என்னவென்று உணரவும் முடியவில்லை.
எழுதி எழுதி அழித்து, வெறிகொண்டு வெளியே கிளம்பி, பித்தனைப்போல் நாகர்கோவிலின் இந்தப் புறநகர்ப் பகுதிகளிலும் ஏரிகளிலும் தனித்த சாலைகளிலும் அலைந்து ,களைத்து திரும்பி வருவேன். துயில் கனக்கும் வரை பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன். திரும்பத் திரும்ப அஷ்டபதி தான். ”யா ரமிதா வனமாலினா!” அல்லது பஜனை. ’ராதே ராதே ராதே பர்ஸானவாலி ராதே!”
பின்னிரவில் உடல் களைத்து, மெல்ல எழுந்து சென்று படுக்கையில் படுப்பேன். அரைமணி நேரத்திற்குள் விழித்துக்கொள்வேன். அப்போது மிக அருகே ஓர் இருப்பை உணர்வேன். கைநீட்டினால் தொட்டுவிடலாம், கண்விழித்தால் மறைந்துவிடும். எழுந்து அமர்ந்து உலர்ந்த வாயும் கலங்கிச்சிவந்த விழிகளுமாக என்னைச் சுற்றி இரவு நிகழ்ந்துகொண்டிருப்பதை பார்ப்பேன். கதவைத் திறந்து வெளியிலிறங்கி பின்னிரவின் பனிக்குளிரில் இந்த மலையடிவாரப் பகுதியைச் சுற்றிவருவேன். தெருநாய்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ளும். என் காலடி பட்டு தவளைகள் சிதறும். இருமுறைக்குமேல் பாம்புகளை காலால் தொட்டிருக்கிறேன்.
அதன் நடுவே இங்கிருப்பதன் எல்லா சடங்குகளையும் செய்துகொண்டும் இருந்தேன். நண்பர் வசந்தகுமாரின் மகனின் திருமணம். அதற்கு நானும் அருண்மொழியும் நாகர்கோவிலிலிருந்து கிளம்பி மதுரை சென்றோம். செல்லும் வழியெல்லாம் அவளிடம் எரிந்து விழுந்துகொண்டிருந்தேன். எவரென்றில்லாமல் உள்ளம் ஒவ்வாமை கொண்டிருந்தது. இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றுமே அர்த்தமிழந்து பொலிவிழந்து சிதறிக்கிடந்தன என்னைச்சுற்றி. இவை அனைத்திற்கும் அர்த்தம் கொடுக்கும் ஒன்று வேறெங்கோ இருக்க ,அனைத்தும் உயிரற்ற வெறும் சடங்குகள் என்று தோன்றியது.
இங்கிருக்க விரும்பவில்லை நான். வேறெங்கு செல்வது என்றும் தெரிந்திருக்கவில்லை. அத்திருமணம் முடிந்து அன்று அறைக்குத் திரும்பி தனிமையில் கணினியைத் திறந்து அர்த்தமின்றி எதையோ தட்டிக்கொண்டிருந்தேன், பின்னிரவு வரை. படுத்து அரைமணி நேரம் துயின்றபோது ஒரு கனவில் இந்நாவலின் முழுவடிவத்தையும் பார்த்துவிட்டேன். குழந்தைகளுக்கான ஜப்பானியப் படக்கதை போல. ஒரு சேவலின் குரலைக்கேட்டேன். விடிந்துவிட்டதென்று எண்ணினேன். மணி மூன்று கூட இருக்காது ஆனால் சேவலின் குரல் கேட்டது. எங்கிருந்தோ ஏதோ ஒரு விழிப்பென கணிப்பொறியில் அமர்ந்து சேவலின் குரலாகவே முதல்வரியை எழுதினேன்.
பின்பு அவ்வரிகள் ராஜன் சோமசுந்தரத்தால் இசை அமைக்கப்பட்டு கமலஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோரின் குரல்களில் மேலெழுந்து ஒலிக்க கேட்கையில் வேறெங்கோ இருந்து அத்தொடக்கத்தை நினைவு கூர்ந்தேன். முதல் அத்தியாயத்தை எழுதி முடித்து ஈரோடு கிருஷ்ணனுக்கும் ,அரங்கசாமிக்கும், தொடர்ந்து வெண்முரசை வாசித்துக்கொண்டிருந்த பல நண்பர்களுக்கும் ’தொடங்கிவிட்டது’ என்ற செய்தியை அனுப்பினேன்.
அது இன்று வரையிலான என் வாழ்க்கையின் மிக உச்ச தருணங்களில் ஒன்று. என் தலை வான் நோக்கி வெடித்து திறந்துகொண்டது போல. உடல் எடை இழந்துவிட்டது போல. என் இருப்பு உருகி மறைய அதன் எச்சத்தில் இருந்து நான் மீண்டும் புதியவனாக பிறந்து எழுந்தது போல.
யானையைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். தன் செவிகளால் அது ஒவ்வொரு கணமும் பறவையென ஆக முயன்றுகொண்டிருக்கிறது என்று. அத்தனை எடையுடன் அந்த விழைவு அதனுடலில் ஒருகணமும் ஓயாமல் இருந்துகொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று அதை தொட்டு எழுப்ப அது சிறகடித்து பறக்கத் தொடங்கிவிடுமெனில் என்னவாக இருக்கும்? அக்கணம் அதுதான். யானை பறக்கத்தொடங்கிவிட்டது.
ஆனால் அது எத்தனை பெரிய அவஸ்தை என்று அடுத்தடுத்த நாட்கள் காட்டின. ஆங்கிலத்திலே ’ரோலர் கோஸ்டர்’ அனுபவம் என்பார்கள். அதி உச்சங்களிலிருந்து அதி பாதாளங்களை நோக்கி விழுந்து எழுந்துகொண்டிருந்தேன். தற்கொலையின் முனையில் ஒவ்வொரு கணமுமென நாட்கள் கடந்து சென்றிருக்கின்றன. உடம்பே ஒரு நாவென ஆகி இப்பிரபஞ்சமெனும் இனிப்புப் பெருக்கில் திளைத்திருக்கிறேன்.
அன்றெல்லாம் சாலைக்கு செல்வதில்லை. உருளும் சக்கரங்களுக்கு அடியில் நானே குதித்துவிடுவேன் என்று அஞ்சினேன். பற்கள் கிட்டித்துக்கொண்டு எலும்புகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கிரீச்சிடும் மெய்விதிர்ப்புகளை அடைந்திருக்கிறேன். தலைக்குள் விந்தையான ஒரு பறவைக்குரல் தொடர்ந்து ஒலிக்க, உடம்பு முழுக்க புல்லரிப்புகள் ஓடிக்கொண்டே இருக்க, பெரும்புயலுக்கு காத்திருக்கும் சிறுகாட்டுச்சுனையென தருணங்களைக் கடந்தேன்.
இவை அனைத்துமே சொற்கள். அத்தருணங்களை நீலம் வழியாக மட்டுமே ஒரு வாசகரால் உணர முடியும் – அவர் மொழியை அனுபவமாக ஆக்கும் இலக்கிய நுண்ணுணர்வுடையவர் என்றால். அந்நிலையைச் சொல்லிவிட முடியாதென்று மெய்யியலும், சற்றேனும் உணர்த்திவிட முடியுமென்று இலக்கியமும் தொடர்ச்சியாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. என் வரையில் தமிழில் அவ்வுச்சநிலையை நவீன இலக்கியத்தில் நீலம் மட்டுமே நிகழ்த்தியிருக்கிறது.
அவ்வினிமையிலிருந்து மீண்டு வந்தவனுக்கு அதன்பின் எல்லாமே சாதாரணமானவை. நீலம் இந்திரநீலத்திலும் ஓரளவு நிகழ்ந்திருக்கிறது. நீலம் அடைந்த இனிமையின் உச்சங்களின் நேர்மறுபகுதியென வன்முறையும் வஞ்சங்களும் வெறிகளும் கொந்தளிக்கும் பல ஆயிரம் பக்கங்களாக வெண்முரசு விரிந்தது. இன்று எண்ணுகையில் நீலம் என்னும் மறுஎடை இல்லாமல் இருந்திருந்தால் அப்போர்க்காட்சிகளை எழுதும்போது நான் கசந்து இருண்டு என்னை அழித்துக்கொண்டிருப்பேன் என்று தோன்றுகிறது. நீலம் என்னில் நிகழும்படி ஆக்கியது ஒரு நல்லூழ்தான். நீலம் ஓர் உயிர் காக்கும் சட்டை என என் உடலில் படிந்து அப்பெருங்கடலின் அலைகளில் மூழ்காமல் மிதக்க வைத்தது.
வெண்முரசை எழுதி முடித்து; அது அளித்த அனைத்து கசப்புகள், கொந்தளிப்புகள், சலிப்புகள், நாட்கணக்கில் நீளும் மாபெரும் வெறுமைகள் அனைத்தையும் கடந்து வந்தேன். அந்நாட்களில் நானிருந்த நிலை கண்ணனைப் பற்றிக்கொண்டு; அறியாத கொடுங்காட்டில், முற்றிலும் விழி இருண்ட கூரிருளில், உள்ளமே வழி தேடிக் கண்டடைய, கால்கள் துழாவி துழாவி அதை அடையாளம் காண, கடந்து வந்த ஒரு பயணம் தான்.
இன்று எண்ணுகையில் திகைப்பு வருகிறது. என்னில் இருந்த அனைத்து இருளையும் நானே பார்த்தேன். கட்டுக்கடங்காத பெரும் காமத்தை, கீழ்மையிலிருந்து கீழ்மைக்கு செல்லும் பெரும் அகந்தையை, ஒவ்வொன்றையுமே தொட்டு வெறுமையாக்கும் பெரும் வெறுமையை, எடைதாளாமல் மண்டையை வெடிப்புறச் செய்யும் மாபெரும் தன்னிலைமையத்தை.
அந்நாட்களில் ஒரு விரும்பத்தகாத செயல் நடந்தது. ஒரு தெரு ரவுடியால் நான் தாக்கப்பட்டேன். அவனிடம் இந்த ஊர்க்காரர்கள் அனைவருமே மிகுந்த எச்சரிக்கையாகவே இருப்பார்கள். மிகுந்த விலக்கம் கொண்டிருப்பார்கள். அவ்வெச்சரிக்கைகளை நினைவில் கொள்ளுமிடத்தில் அப்போது நான் இல்லாமலிருந்தேன். அது அவனுக்கு அவனுடைய உள்ளூர் அதிகாரத்தை சீண்டும் செயலாக தென்பட்டது.
அதை தொடர்ந்து இங்கிருக்கும் மானுடக்கீழ்மை அனைத்தையுமே கண்டேன். இணையவெளியில் என் சக எழுத்தாளர்கள் பலர் நான் அடிபட்டதை மகிழ்ந்து கொண்டாடினார்கள். என் அரசியல் எதிரிகளாகத் தங்களை நினைத்துக்கொள்பவர்கள் அதை பல மாதங்களுக்கு பேசிப்பேசி மகிழ்ந்தனர்.என்னிடம் இருந்து கடந்த காலங்களில் உதவி பெற்றுக்கொண்டவர்கள், அதன் பிறகும் கொரொனாக் காலத்தில் உதவிக்காக வந்து நின்றவர்கள் கூட அக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
பிறிதொருவரராக இருந்தால் அத்தருணத்தில் பெருங்கசப்பை தன்னில் திரட்டிக்கொண்டிருக்க முடியும். என் நண்பர்கள் பலருக்கு அக்கசப்பிலிருந்து இன்னும் கூட மீளமுடியவில்லை. ஆனால் நான் அவர்களில் பலருக்கு இன்றும் நெருக்கமானவனே. காரணம் அன்று நான் முற்றிலும் நேர்நிலை மனநிலையில், முற்றிலும் அகக்கொண்டாட்டத்தில் இருந்தேன். என்னை அங்கு கொண்டு சேர்த்தது நீலம் தான்.
அந்நாட்களில் ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பரும் கேரளத்தின் புகழ்பெற்ற சோதிடருமான ஒருவர் என்னை அழைத்து ”செய்தி வாசித்தேன், என்ன நடந்தது?” என்று கேட்டார். நான் அதை விவரித்தேன். எனது ஜாதகம் அவரிடம் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து என்னை மீண்டும் கூப்பிட்டு ”பெரிய வீடு கட்டுகிறாயா?” என்று கேட்டார். ”இல்லை” என்று சொன்னேன். ”அப்படித்தான் காட்டுகிறது. அரண்மனை கட்டுகிறாய் அல்லது பெரிய வேள்வி மாதிரி எதையோ நடத்துகிறாய். அதன் விளைவான எதிர்நிகழ்வுதான் இது” என்று சொன்னார். நான் ”இல்லை” என்று சொன்னேன்.
சோதிடத்தின் அடிப்படையில் என்னை ஷத்ரியனாகக்கொண்டு அரண்மனை அல்லது வீடு என்று கணித்துவிட்டார். சற்றுத் தயங்கியபின் நான் மகாபாரதத்தை எழுதி முடிக்கப்போகிறேன் என்று சொன்னேன். அவர் திகைத்து ”அதுதானா?” என்றார். ”அதற்கான எதிர்வினையை நீ அனுபவித்து தான் ஆகவேண்டும், அதைக்கடந்து செல். இதனால் உனக்கு எந்த தீங்கும் இல்லை. ஆனால் நாவலை முடிக்கும்போது அது பாண்டவர்கள் விண்ணேறும் மகாபிரஸ்தானத்தில் முடியக்கூடாது. மீண்டும் கண்ணனைப் பற்றி பாடி முடி” என்றார். அவ்வண்ணமே வெண்முரசு நாவல் நிரை கண்ணன் பிள்ளைத்தமிழில் நிறைவுற்றது.
மீண்டும் நீலம். நீலத்தில் தொடங்கி நீலத்தில் முடிவுற்றது போல. அவ்வினிமை இன்றும் என்னில் நிறைந்திருக்கிறது. இன்று இரண்டு ஆண்டுகளாகின்றன. இப்போது கூட ஒரு முற்றிலும் எதிர்மறையான கதையை என்னால் எழுத முடியவில்லை. பெரும்பாலான கதைகள் இனிமையில் களிப்பில் தான் முடிகின்றன. வேண்டுமென்றே முயன்றபோதும் கூட கருணையாக வெளிப்படுகிறதே ஒழிய துயராக எதிர்நிலை வெளிப்படவில்லை. நீலத்தின் இனிப்பு என் நெஞ்சிலும் சொற்களிலும் எப்போதைக்குமென குடிகொண்டுவிட்டதென்று நினைக்கிறேன். இத்தருணத்தில் நீலம் என நிறைந்தவனுக்கு என் செல்ல முத்தங்கள்.
இந்நாவலை செம்பதிப்பாக வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரிக்கும் செம்மைசெய்த ஸ்ரீனிவாசன் -சுதா தம்பதியினருக்கும், மெய்ப்பு பார்த்த ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், ஹரன் பிரசன்னாவுக்கும் நன்றி. இப்போது மறுபதிப்புக்கு மெய்ப்பு பார்த்திருக்கும் மீனாம்பிகைக்கும், வெளியிடும் செந்தில்குமாருக்கும் நன்றி.
இந்நாவல் வாசகர்களுக்கு ஒரு கனவென சென்று சேர்ந்ததில் ஷண்முகவேலின் ஓவியங்களுக்கு பெரும்பங்குண்டு. வெண்முரசுக்கு அவர் வரைந்த ஓவியங்களிலேயே தலைசிறந்தவை இதில் தான் அமைந்தன என்று சொல்ல முடியும். தனியாக ஓவியத்தொகையாகவும் அவை வெளிவந்துள்ளன. இன்று பயணம் செய்கையில் அந்த ஓவியங்கள் அவருடைய பெயரில்லாமலும் சற்று மாற்றியும் வரையப்பட்டு இந்தியா முழுக்க புழக்கத்தில் இருப்பதை, பல இடங்களில் வழிபடப்படுவதைக் காண்கிறேன். நீலம் ஓவியங்களுடனான செம்பதிப்பு தமிழிலியே அழகான நூல் என்று வாசகர்களால் மதிப்பிடப்பட்டது.
இத்தருணத்தில் இவ்வினிமையின் ஒரு துளியை எங்கேனும் தானும் அறிந்த ஒவ்வொரு வாசகரும் என் நண்பரே என்று சொல்லிக்கொள்கிறேன் நன்றி.
ஜெ